Showing posts with label டாஸ்மாக். Show all posts
Showing posts with label டாஸ்மாக். Show all posts

Thursday, 12 March 2026

மாலை நேரங்களில் சாலை ஓரம் பந்தி விரிக்கும் குடிகாரர்கள்!

தமிழகத்தின் மாலைப் பொழுதுகள் ஒரு காலத்தில் தென்றலின் வருடலுக்காகக் காத்திருந்தன; ஆனால் இன்று, சாலையோரச் சாக்கடைகளின் ஓரம் விரிந்து கிடக்கும் 'குடிகாரர்கள் விரிக்கும் பந்திகளின்' மதுநெடியால் அருவருக்கத்தக்கச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

சாலையோரப் பந்தியும் 'கண்ணாடி'க் காடுகளும் சாராயக் குடுவைகள், நெகிழித் தண்ணீர் பைகள், ஊறுகாய் பொட்டலங்கள், கறி வருவல், நொறுக்குத் தீனிகள் என சாலையோரங்களில் விரிக்கப்படும் பந்திகள் வெறும் போதைக்கானவை மட்டுமல்ல; அவை ஒழுக்கத்தின் சீர்கேடுகள்.

குடித்துவிட்டு வீசப்படும் சாராயக் குடுவைகள், இந்தப் பூமியில் மனிதன் கால் வைக்க முடியாத அளவுக்கு 'கண்ணாடிக் காடுகளை' அன்றாடம் வளர்க்கின்றன. பூமியின் பசுமையைவிட, உடைந்த பாட்டில்களின் கூர்மையே இன்று சாலையோரங்களின் அடையாளமாகிவிட்டது.

எரியும் வயிறுகள் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 300 ரூபாய். இது வெறும் மதுவிற்கான செலவு மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் அடுப்பு எரிய வேண்டிய காசு. தங்களது ஈரலை எரித்துக் கொள்ளும் இந்தக் குடிகாரர்கள், வீட்டிலிருக்கும் மனைவி, குழந்தைகளின் வயிறுகளையும் பட்டினி போட்டு எரியவிடுகிறார்கள். மேட்டுக்குடிகள் நட்சத்திர விடுதிகளில், குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் குடிக்கும்போது, சாமான்யன் புழுதிபடிந்த சாலையோரம் ஒதுங்குகிறான். இடம் மாறினாலும், இந்த இரு தரப்பினரும் அழிப்பது தங்களை மட்டுமல்ல, இந்தச் சமூகத்தின் அறத்தையும்தான். போதை: அரசியலும் மௌனமும் இன்று இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக ஆட்சியாளர்களும், ஆளத் துடிப்போரும் மேடைதோறும் முழங்குகிறார்கள். உண்மைதான். ஆனால், கஞ்சாவிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்தத் தலைவர்கள், அரசாங்கத்திற்குப் பெரும் வருவாய் ஈட்டித் தரும் சாராயத்தைப் பற்றி மட்டும் மௌனம் காக்கின்றனர்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான ஆண்கள் ஏதோ ஒரு வகையில் போதையில் மிதக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. கஞ்சா என்பது பேசுபொருளாக இருக்கிறது, ஆனால் சாராயம் என்பது வாழ்வியலாகவே மாறிவிட்டது. வீழ்த்தப்பட்ட விழுமியங்கள்

ஒழுக்கமே உயிருக்கு நிகரானது என்றும், அதை உயிரைவிட மேலானதாகக் காக்க வேண்டும் என்றும் வள்ளுவன் கற்பித்தான்:
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்."
மேலும், நாணத்தையும் மானத்தையும் உயிராகக் கருதி வாழ்பவர்கள், அறிவை மயக்கிச் சீரழிக்கும் மதுவை விரும்ப மாட்டார்கள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
"நாணத்து வாழ்வார் நயந்தாரே பேணாது
கள்ளுண்டல் என்னும் களி."
ஆனால் இன்று, அந்த நாணத்தையும் ஒழுக்கத்தையும் போதையில் எரித்து, உயிரைச் சிதைத்து, சாலையோரம் சிதறிக் கிடக்கும் பாட்டில் துண்டுகளாக்கி வருகின்றனர்.
ஒரு காலத்தில் 'குடி' என்பது சமூகத்தால் அருவருக்கத்தக்கச் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அது ஒரு இயல்பான சடங்காக மாறிவிட்டது. மதுவைப் போலவே, தகாத உறவுகளும் இன்று சமூக அங்கீகாரம் பெறத் தொடங்கி விட்டதை அண்மைய 'விசில்' சப்தங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ஒழுக்கக்கேடுகளே இன்று நவீன வாழ்வியலின் அங்கமாகத் தரம் தாழ்ந்து போயினவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
“ஐயகோ! இந்தச் சமூகத்தைச் சீரழிவிலிருந்தும், போதை இருளிலிருந்தும் மீட்கப்போகும் அந்த மீட்பர் யாரோ?” என ஏங்குவதைவிடுத்து, நீயே மீட்பராக அவதாரம் எடு! புழுங்கிப்போன மாதர்கள் புடைசூழு நீ வாகை சூடுவாய்!
ஊரான்

Monday, 24 July 2023

குடிப்பவனும் திருந்த மாட்டான்! கொடுப்பவனும் மாற மாட்டான்!

காலை வேளை, 
ஜூலையிலும்
மோடம் பிடித்தது போல் 
சாரல் மழை.
காட்டோர கூட்ரோடு
பகலில் 
பயணிகளின் நிழற்குடை,
இரவில் 
குடிகாரர்களின் வாழ்விடம். 


பேருந்துக்காகக் காத்திருக்கும் 
பள்ளி மாணவர்களின்
கனவுகளை சிதைக்கும்
காலி பாட்டில்கள்!

குடிப்பவனும் திருந்த மாட்டான்
கொடுப்பவனும் மாற மாட்டான்.
வெஞ்சீற்றத்துடன்
ஊர் நோக்கிப் பயணிக்கிறேன்.

ஊரான்

Saturday, 8 August 2015

மூடு டாஸ்மாக்கை!

மதுக்கடைகளை மூடவேண்டும் என்கிற கோரிக்கை பல காலமாக பல்வேறு கட்சிகளால்  - இயக்கங்களால் எழுப்பப்பட்டாலும் அது தற்போது தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கையாக வலுப்பெற்றுள்ளது. சமீப காலத்தில் இந்தப் போராட்டம் ஏன் வலுப்பெற்றுள்ளது? அதற்காக உழைத்தவர்கள் யார்? உமைப்பவர்கள் யார்? என்கிற சுருக்கமான வரலாறு இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

மதுவுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறவேண்டும். இல்லையேல் தமிழகம் நாசமாயப் போவதை யாராலும் தடுக்க முடியாது. போராடிக் கொண்டிருக்கும் போராளிகள் அனைவருக்கும் பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டியது மனிதனாயப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.

24.12.2012: சென்னை, குரோம்பேட்டையில் பெண்கள் விடுதலை முன்னணியினர் டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டம்.


15.02.2013: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அழிவிடைதாங்கி கிராமத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தலைமையில் அக்கிராம மக்கள் டாஸ்மாக் சாராயக்கடையை அடித்து நொறுக்கினர். 9 பேர் கைது செய்யப்பட்டு 19 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு பிணையில் வெளியே வந்தனர். இன்று நடைபெறும் போராட்டங்களுக்கு வித்திட்டது அழிவிடைதாங்கி போராட்டமே!



25.09.2014: திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணியினர் டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டம்.


ஜீன் 2015 முதல் மூடு டாஸ்மாக்கை! என்கிற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம் தொடங்கி வைத்த பிரச்சாரம்.


26.06.2015: பதுச்சேரியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர்  சாராயக்கடையை அடித்து நொறுக்கினர்.




15.07.2015: திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் சாராயக்கடையை அடித்து நொறுக்கினர்.



01.08.2015: மார்த்தாண்டம்,உண்ணாமலைக்கடை டாஸ்மாக் சாராயக்கடையை மூடக்கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்திய வாதி சசிபெருமாளின் மரணம்.



டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என் கோரிக்கை மேலும் வலுவடைய சசிபெருமாளின் மரணம் மிக முக்கிய காரணமாக அமைந்தது.

02.08.2015: கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க தலைமையில் டாஸ்மாக் சாராயக்கடை அடித்து நொறுக்கப்பட்டது. மதுவுக்கு எதிரான போராட்டம் அறவழியில் சாத்தியமில்லை என்பதை கலிங்கப்பட் உணர்த்தியது.



03.08.2015: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தலைமையில்  டாஸ்மாக் சாராயக்கடை அடித்து நொறுக்கப்பட்டது டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை தமிழகம் முழுவதும் பெருங்காட்டுத்தீயாய் பரவ வித்திட்டது.



முழுமையான மதுவிலக்க கோரிக்கை இன்று தமிழக மக்களின் கொரிக்கையாக வலுப் பெற்றுவிட்டது. எத்தனை அடக்குமறைகளை ஏவிட்டாலும் போராட்டங்கள் தொடரும் என்பதைத்தான் இன்றை போராட்டங்கள் உணர்த்துகின்றன.

தற்போது நடைபெற்று வரும் போரட்டங்களிலிருந்து சில காட்சிகள்.













போராட்டம் தீவிரமடைவதைக் கண்ட தி.மு.க, வி.சி.க, தே.மு.தி.க, CPI, CPM, SDPI, காங்கிரஸ், பா.ஜ.க என பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன - இதில் பெரும்பாலான கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட முனைந்தாலும் -  இவர்களின் போராட்டங்களும் மதுவிலக்கு கோரிக்கைக்கு வலு சேர்க்கவே செய்யும்.


இதோ! புறப்பட்டுவிட்டது அடுத்தத் தலைமுறை. மதுவற்ற தமிழகம் காண தோள் கொடுப்போம். போராளிகளுக்கு!

Friday, 26 June 2015

“ஓடறான் புடி! ஓடறான் புடி!”

இப்பொழுது தமிழ் நாட்டில் பனங்கள்ளும் இல்லை; தென்னங்கள்ளும் இல்லை;; ஈச்சங்கள்ளும் இல்லை. முன்பெல்லாம் அரசுக்குத் தெரியாமல் கள்ளு இறக்கினால் கலால் பிரிவு நல்லாவே கல்லா கட்டும். இப்பொழுது சாராயத்தில் அரசாங்கமே கல்லா கட்டுவதால் கலால் பிரிவுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.

அடர்ந்த காடு-மலைகளுக்கு நடுவே கஞ்சாச் செடி வளர்த்தாலும் மோப்பம் பிடித்து கஞ்சாவை பொசுக்கி விடுகிறது அரசு. கஸ்டம்சைத் தாண்டி அவ்வளவு லேசில் ஹெராயின் உள்ளே நுழைந்து விட முடியாது. கஞ்சாவும், ஹெராயினும் அப்படியே கிடைத்தாலும் விற்பவன் திருட்டுத் தனமாக மிகவும் சாதுர்யமாகத்தான் விற்க வேண்டும். அதனால் கஞ்சாவும், ஹெராயினும் கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் அதற்கு பலியாகுபவர்கள் சிலரே.

ஆனால் அனைவருக்கும் மிக எளிதாக கிடைக்கும் ஒரே போதைப் பொருள் சாராயம்தான். சாராயம் நமக்குத்தான் போதைப் பொருள். நமது காசைப் பிடுங்கி நமது உடலை உருக்கி சுடுகாட்டுக்கு வழி காட்டும் டாஸ்மாக் நிறுவனம் அரசுக்கு ஒரு அட்சய பாத்திரம். டாஸ்மாக் அரசுக்குத்தான் அட்சய பாத்திரம். நமக்கோ பிச்சைப் பாத்திரம்.

இந்த லட்சணத்தில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி நாமக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றுள்ளது. இதை விட கேளிக்கூத்து வேறு என்ன இருக்க முடியும்?
 
“ஓடறான் புடி! ஓடறான் புடி!” என கூப்பாடு போடும் திருட்டுப் பயலுக்கும் சாராய போதையில் மக்களை மூழ்கடிக்கும் இந்த மானங்கெட்ட அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.

 வள்ளுவனும், அல்லாவும், ஏசுநாதருமே சொல்லிக் கேட்காத குடிமக்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் கொண்டாடி விட்டால் மட்டும் போதையை விட்டு விடுவார்களா என்ன?

நாம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தாமல் இருக்க வேண்டும் என்றால் அரசாங்கத்தின் அட்சயப் பாத்திரம் சுக்கு நூறாக நொறுக்கப்பட வேண்டும்.

அதற்கு….

டாஸ்மாக் கடை முன்னால் பெரிய பள்ளம் வெட்டப்பட வேண்டும். பெண்கள் தினமும் அங்கே குப்பைகளை கொட்ட வேண்டும். மாணவர்களும் இளைஞர்களும் கடையிலேயே ஒண்ணுக்கு அடிக்க வேண்டும். எதுவும் அசையவில்லை என்றால் டாஸ்மாக் கடை கக்கூசாக மாற வேண்டும். ஆற்று மணலை கொள்ளையடிக்கும் மணல் லாரிகளை மடக்குவது போல சாராயம் ஏற்றி வரும் லாரிகளை மடக்கி விரட்ட வேண்டும். புதுவைப் பெண்களைப் போல சாராயக் கடைகளை சூறையாடாமல்  போதையிலிருந்து மக்களை ஒரு போதும் மீட்க முடியாது.
 
வெல்லட்டும் மக்கள் அதிகாரம்!
 
புதுவை பெண்கள் சாராயக் கடையை சூறையாடிய படங்கள்.
 


 
 
 
 

 
தொடர்புடைய பதிவுகள்: