Thursday, 12 March 2026

மாலை நேரங்களில் சாலை ஓரம் பந்தி விரிக்கும் குடிகாரர்கள்!

தமிழகத்தின் மாலைப் பொழுதுகள் ஒரு காலத்தில் தென்றலின் வருடலுக்காகக் காத்திருந்தன; ஆனால் இன்று, சாலையோரச் சாக்கடைகளின் ஓரம் விரிந்து கிடக்கும் 'குடிகாரர்கள் விரிக்கும் பந்திகளின்' மதுநெடியால் அருவருக்கத்தக்கச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

சாலையோரப் பந்தியும் 'கண்ணாடி'க் காடுகளும் சாராயக் குடுவைகள், நெகிழித் தண்ணீர் பைகள், ஊறுகாய் பொட்டலங்கள், கறி வருவல், நொறுக்குத் தீனிகள் என சாலையோரங்களில் விரிக்கப்படும் பந்திகள் வெறும் போதைக்கானவை மட்டுமல்ல; அவை ஒழுக்கத்தின் சீர்கேடுகள்.

குடித்துவிட்டு வீசப்படும் சாராயக் குடுவைகள், இந்தப் பூமியில் மனிதன் கால் வைக்க முடியாத அளவுக்கு 'கண்ணாடிக் காடுகளை' அன்றாடம் வளர்க்கின்றன. பூமியின் பசுமையைவிட, உடைந்த பாட்டில்களின் கூர்மையே இன்று சாலையோரங்களின் அடையாளமாகிவிட்டது.

எரியும் வயிறுகள் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 300 ரூபாய். இது வெறும் மதுவிற்கான செலவு மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் அடுப்பு எரிய வேண்டிய காசு. தங்களது ஈரலை எரித்துக் கொள்ளும் இந்தக் குடிகாரர்கள், வீட்டிலிருக்கும் மனைவி, குழந்தைகளின் வயிறுகளையும் பட்டினி போட்டு எரியவிடுகிறார்கள். மேட்டுக்குடிகள் நட்சத்திர விடுதிகளில், குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் குடிக்கும்போது, சாமான்யன் புழுதிபடிந்த சாலையோரம் ஒதுங்குகிறான். இடம் மாறினாலும், இந்த இரு தரப்பினரும் அழிப்பது தங்களை மட்டுமல்ல, இந்தச் சமூகத்தின் அறத்தையும்தான். போதை: அரசியலும் மௌனமும் இன்று இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக ஆட்சியாளர்களும், ஆளத் துடிப்போரும் மேடைதோறும் முழங்குகிறார்கள். உண்மைதான். ஆனால், கஞ்சாவிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்தத் தலைவர்கள், அரசாங்கத்திற்குப் பெரும் வருவாய் ஈட்டித் தரும் சாராயத்தைப் பற்றி மட்டும் மௌனம் காக்கின்றனர்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான ஆண்கள் ஏதோ ஒரு வகையில் போதையில் மிதக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. கஞ்சா என்பது பேசுபொருளாக இருக்கிறது, ஆனால் சாராயம் என்பது வாழ்வியலாகவே மாறிவிட்டது. வீழ்த்தப்பட்ட விழுமியங்கள் ஒழுக்கமே உயிருக்கு நிகரானது என்றும், அதை உயிரைவிட மேலானதாகக் காக்க வேண்டும் என்றும் வள்ளுவன் கற்பித்தான்:
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்." ஆனால் இன்று, அந்த உயிரையே போதையில் எரித்து, ஒழுக்கத்தையும் சாலையோரம் சிதறிக் கிடக்கும் பாட்டில் துண்டுகளாக்கி வருகிறனர்.
ஒரு காலத்தில் 'குடி' என்பது சமூகத்தால் அருவருக்கத்தக்கச் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அது ஒரு இயல்பான சடங்காக மாறிவிட்டது.
மதுவைப் போலவே, தகாத உறவுகளும் இன்று சமூக அங்கீகாரம் பெறத் தொடங்கி விட்டதை 'விசில்' சப்தங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
ஒழுக்கக்கேடுகளே இன்று நவீன வாழ்வியலின் அங்கமாகத் தரம் தாழ்ந்து போயினவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
“ஐயகோ! இந்தச் சமூகத்தைச் சீரழிவிலிருந்தும், போதை இருளிலிருந்தும் மீட்கப்போகும் அந்த மீட்பர் யாரோ?” என ஏங்குவதைவிடுத்து, நீயே மீட்பராக அவதாரம் எடு! புழுங்கிப்போன மாதர்கள் புடைசூழு நீ வாகை சூடுவாய்!
ஊரான்

No comments: