Showing posts with label தினமணி. Show all posts
Showing posts with label தினமணி. Show all posts

Sunday, 28 February 2016

ரூ.8 கோடியை விழுங்கிய ஆர்எஸ்எஸ் நிர்வாகி!

மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியைச் சுற்றியுள்ள பருத்தி விவசாயிகள்  400 பேர் தாங்கள் உற்பத்தி செய்த 20 ஆயிரம் குவிண்டால் பருத்தியை 2014 ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணா ஆலையின் நிர்வாகி சுனில் பிரபாகர் தலாதுலேவுக்கு விற்பனை செய்துள்ளனர். அதற்கான தொகை ரூ.8 கோடியை சுனில் பிரபாகர் தலாதுலே இதுவரை விவசாயிகளுக்குத் தரவில்லை. சுனில் பிரபாகர் தலாதுலே மீது வார்தா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அந்த நபரும் கைது செய்யப்பட்டார். ஆனால் பணம் மட்டும் இதுவரை விவசாயிகளுக்குப் போய்ச் சேரவில்லை. 

இதில் சராசரியாக ஒரு விவசாயிக்குச் சேர வேண்டிய தொகை ரூ2 லட்சம். இது ஒரு குடும்பத்தின் ஓராண்டு உழைப்பு மட்டுமல்ல அவர்கள் வாங்கிய கடனும் இதில் அடங்கும்.

உழைப்பின் பலன் தங்களுக்கு கிட்டவில்லை; அதனை ஒருவன் அபகரித்துவிட்டால் அவர்கள் எப்படி வாழ முடியும்? இது குறித்து மாநில - மத்திய அமைச்சர்களிடம் முறையிட்டும் பலன் ஏதும் இல்லை. கடைசியில் நாகபுரியிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் முன்பு இந்த 400 விவசாயிகளும் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகளின் போராட்டக் குழுத் தலைரவர் ராம் நாராயண் பாடக் அறிவித்துள்ளார்.

ரூ.8 கோடியை அபகரித்தவன் அந்த ஆலையின் நிர்வாகி மட்டுமல்ல. அவன் ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகி. அதனால்தான் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் முன்பு  போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

விவசாயிகளோடு விவசாயிகளாக இவர்களும் தற்கொலை செய்து கொள்ளாமல் சுனில் பிரபாகர் தலாதுலே ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகியாக இருந்த போதும்,  மகாராஷ்டிரா மாநிலத்திலும் மத்தியிலும் பா.ஜ.க ஆட்சிகள் நடந்தபோதும் சுனில் பிரபாகர் தலாதுலே வுக்கு எதிரான விவசாயிகளின் இந்தப் போராட்ட நடவடிக்கை பாராட்டக் கூடியது.

இப்பொழுது புரிகிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் விவசாயிகளின் தற்கொலைகள் ஏன் அதிகமாக நடக்கிறது என்று! ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகமும் அங்கேதானே இருக்கிறது!

ஆர்எஸ்எஸ் இருக்கும் வரை  சுனில் பிரபாகர் தலாதுலேக்கள் இருப்பார்கள்.  சுனில் பிரபாகர் தலாதுலேக்கள் இருக்கும் வரை விவசாயிகளின் தற்கொலைகளும் தொடரும்.

(செய்தி ஆதாரம்: தினமணி 28.02.2016)

தொடர்புடைய பதிவுகள்:

பிகார்: ‘பிலிக்கா பொலோனிக்கா’வை என்ன செய்ய?

Monday, 9 November 2015

பிகார்: ‘பிலிக்கா பொலோனிக்கா’வை என்ன செய்ய?

“இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியைத் தழுவினாலும், கட்சிகள் வாரியாக, பா.ஜ.க அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. அந்தக் கட்சி 24.4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது”

இப்படி தினமணி எழுதுகிறது. 160 தொகுதிகளில் போட்டியிட்டு அத்தொகுதிகளில் பெற்ற மொத்த வாக்குகளை சதவீத அடிப்படையில் கணக்கிடுவதே ஒரு மோசடி. போட்டியிட்ட மொத்த தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகளை ஒரு தொகுதிக்கு என கணக்கிட்டு சதவீதத்தை சொல்வதே சரியான சதவீத கணக்கு.

அதன்படி பார்த்தால் பா.ஜ.க பெற்றுள்ள வாக்கு சதவீதம் காங்கிரசைவிடவும் குறைவு என்பதுதான் உண்மை.

கட்சி
போட்டியிட்ட தொகுதிகள்
மொத்த வாக்கு சதவீதம்
ஒரு தொகுதிக்கான வாக்கு சதவீதம்
ராஷ்டீரிய ஜனதா தளம்
101
18.4
0.18
ஐக்கிய ஜனதா தளம்
101
16.8
0.16
காங்கிரஸ்
41
6.7
0.16
பா.ஜ.க
160
24.4
0.15
.
நிதிஷ்-லாலு தலைமையிலான மெகா கூட்டணியின் வெற்றியைக் கொண்டாடுவதைவிட பா.ஜ.க வின் தோல்வியைத்தான் நாடே கொண்டாடுகிறது.

தீபாவளி கொண்டாடுவதற்காவது புதுத்துணி-பலகாரம்-பட்டாசு வேண்டும்; அதற்கு பணமும் வேண்டும். ஆனால் பா.ஜ.க வின் தோல்வியைக் கொண்டாடுவதற்கு “பிகாரில் பா.ஜ.க படுதோல்வி!” என்கிற செய்தி ஒன்று போதுமே.

இந்தக் கொண்டாட்டம் பா.ஜ.க ஆதரவாளர்களின் அடிவயிற்றைக் கலக்கியுள்ளது. அதனால்தான் “முதல்வர் நிதீஷ்குமாருக்கு எந்த அளவுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும், நிதியுதவியும் கிடைக்கும், வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட முடியும், நல்ல நிர்வாகத்தைத் தந்துவிட முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறி”  ‘மவனே நீ எப்படி ஆட்சி செய்து விடுவாய் பார்க்கிறோம்!’ என சவால் விடுத்து சங்பரிவாரங்களின் குரலை பிரதிபலிக்கிறது தினமணி தலையங்கம். (09.11.2015)

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். மீசையில் ஒட்டியுள்ள மண்ணை வேண்டுமானால் தட்டி விடலாம். ஆனால் சிக்காகிப் போன ‘பிலிக்கா பொலோனிக்கா’வை என்ன செய்ய?

 (plica polonica-ஜடா முடி)

தொடர்புடைய பதிவுகள்:

Monday, 28 April 2014

டம்மி பீசு!



”குடியாத்தம் நகராட்சிக்கு உள்பட்ட 3,4,5வது வார்டுகளில் கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகம் சரிவர இல்லாததால் குடிநீர் வழங்கக் கோரி ஆளுங்கட்சியைச் சேர்ந்த குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் தலைமையில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனராம். அதனால் குடியாத்தம் நகரில் பரபரப்பு  ஏற்பட்டதாம். இம்மறியலில் நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் வி.ஜி. பழனி, தேவன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்களாம்.

அப்பகுதி மக்கள் கோரியதையடுத்து, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்குமாறு தலைவர் அமுதா சிவப்பிரகாசம் அதிகாரிகளிடம் கூறினாராம். அவர்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் 3 வார்டுகளின் மக்களுடன் சாலை மறியல் ஈடுபட்டாராம் தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையர் என். விஸ்வநாதன், பொறியாளர் ஜி. உமாமகேஸ்வரி, டிஎஸ்பி . விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களை சமரசம் செய்து அந்த வார்டுகளுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டதாம்.

பொதுமக்களுக்கு இடையூறு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், சாலை மறியலில் ஈடுபட்டதாக நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், 3 நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 100 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்களாம்”. 

இப்படி ஒரு செய்தி 16.04.2014 அன்றைய தினமணியில் வெளிவந்தது.

மக்களின் கோரிக்கையை நகர மன்றத் தலைவர் அதிகாரிகளிடம் கூறினாராம் ஆனால் அதிகாரிகள் நிறைவேற்றவில்லையாம் அதனால் மக்களோடு சேர்ந்து சாலை மறியல் செய்தாராம். வரும் மாதங்களில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியாது என்பதால் அதிகாரிகள் மீது பழியைப் போட்டுவிட்டு இவர் மக்களுக்காக இருப்பது போல நாடகமாடுகிறாரா? இல்லை உண்மையிலேயே இவர் அதிகாரம் ஏதுமற்ற டம்மி பீசா?

ஊராட்சி-நகராட்சி என்றால் தீர்மானங்கள் போடலாம். சட்டமன்றம்-பாராளுமன்றம் என்றால் சட்டமியற்றலாம். மாறாக இவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களையோ அல்லது இவர்கள் இயற்றிய சட்டங்களையோ இவர்களால் நடைமுறைப் படுத்த முடிகிறதா? தீர்மானங்களை-சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் முழுதும் அரசுத் துறை அதிகாரிகளிடம் குவிந்து கிடக்கிறபோது, “எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், குடிநீர் உள்ளிட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன்!” என பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை இப்படி வாக்குறுதிகள் கொடுத்துதுானே இவர்கள் வெற்றி பெறுகின்றனர். தாங்கள் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற்றால் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்பித்தானே மக்களும் வாக்களிக்கின்றனர். ஆனால், பதவியில் அமர்ந்த பிறகு நிதி பற்றாக்குறை, ஊழியர் பற்றாக்குறை, அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம் என காரணங்களைக் காட்டி அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதாக தொல்.திருமா முதல் குடியாத்தம் நகர மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் புலம்பித்திரிகின்றனர்.

மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளோடு கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கலாமே ஒழிய அவர்களால் மக்களின் கோரிக்கைகளை நேரடியாக நிறைவேற்றுகிற அதிகாரத்தை இந்த ஆட்சி முறை ஒரு போதும் வழங்காது. அதிகாரம் ஏதுமற்ற இத்தகைய டம்பி பீசுகளுக்கு வாக்களித்துவிட்டு ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டதாக கைவிரல் மையைக் காட்டி “இது ஆளு’மை!” என பெரு’மை’ப் பட்டுக்கொள்கிறோம்.



‘மை’ வைத்ததையே பெருமையாகப் பேசும் நாம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று என்றைக்காவது யோசித்ததுண்டா? வெற்றி பெற்றுச் செல்பவர்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டாலோ அல்லது செயல்படாமல் முடங்கி விட்டாலோ அல்லது கட்சி மாறினாலோ அல்லது இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டாலோ அல்லது குணக்கேடராக மாறினாலோ அல்லது ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் அவரால் மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்றாலோ நாம் வேடிக்கைதானே பார்க்கப் போகிறோம்.

மாறாக அவர்களின் பதவிக்காலம் முடியும் முன்பாகவே கூட மக்கள் பிரதிநிதிகள், மக்களால் திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்பது பற்றியோ அவர்களுக்கு கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்புவது பற்றியோ, பதவிக்காலம் முடியும் முன்பாகவே புதிதாகத் தேர்தல் நடத்தக் கோரும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்பது பற்றியோ, பாதை விலகிப் போகும் பிரதிநிதிகளைப் பொருத்தவரையில், அவர்களை மூட்டைக் கட்டி வீட்டுக்கு அனுப்பும் உரிமை வாக்காளர்களுக்கு வேண்டும் என்பது பற்றியோ, அப்படிப்பட்ட ஒரு சட்டம் நமது நாட்டில் கிடையாது என்பது பற்றியோ சிந்திக்காமல் டம்மி பீசுகளுக்கு மை வைத்ததையே கடந்த 66 ஆண்டுகளாகப் பெருமை பேசி பெருமை பேசி நாமும் டம்மி பீசாகி விட்டோமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!

தொடர்புடைமய பதிவுகள்:
தேர்தல் களம்-4: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-3: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

 

Tuesday, 27 December 2011

சனிப் பெயர்ச்சி! ஊரானின் கணிப்பு பலித்தது!

21.12.2011 அன்று சனிபகவான் துலா ராசி வீட்டிற்கு குடி போயிருக்கிறார். அவர் பால் காய்ச்சிய சம்பவம் ஜோதிட நம்பிக்கைக்காரர்களுக்கு மிக முக்கியமான நாள். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ராசிக்காரருக்கும் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பற்றியும், பாதகமானவற்றிற்கான பரிகாரங்கள் பற்றியும் பிரபல ஜோதிடர்கள் சொல்லும் சனிப்பெயர்ச்சி பலன்கள் மீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்தச் சூழலில், சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்!, சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்! ........நேற்றைய தொடர்ச்சி! என்ற தலைப்புகளில் ஒரு தொடர் கட்டுரையை இரண்டு நாட்கள் வெளியிட்டிருந்தோம். நமது பார்வையில் சனிப் பெயர்ச்சி பலன்களை கணித்திருந்தோம்.


கட்டுரையின் இறுதியில்


"இறுதியாக, எல்லா ராசிகளிலும் இருக்கும் ஐயப்ப பக்தகோடிகளுக்கு! முல்லைப் பெரியரால் ஐயப்பனுக்கு இனி மாலை போட முடியாதோ எனக் கவலைப்படத் தேவையில்லை. இங்குள்ள முருகனே அங்கு ஐயப்பனாய் எழுந்தருளியிருப்பதால் முருகனுக்கு மாலை போட்டு, அறுபடை வீடுகளில் ஏதாவதொரு வீட்டில் இருமுடியை இறக்கி வைத்தாலே போதும் என புராண சாஸ்திரம் வழிகாட்டுவதால் இனி சொந்த மண்ணிலேயே இருமுடி இறக்கிக் கொள்ளலாம். இருமுடி செலவையும் அரசே ஏற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஐயப்ப பக்தகோடிகள் "சாமியேய்! சரணம் முருகப்பா!!" என இனி முழங்கலாம்"

என முடித்திருந்தோம்.

”ஊரான் அவர்கள் கணித்த ராசி பலன்கள் அருமையிலும் அருமை. இந்தக்கணிப்பு படிதான் நடக்கும். நடந்து கொண்டும் இருக்கும். வாழ்த்துக்கள்” என வலிபோக்கன் அவர்களும் வழி மொழிந்திருந்தார்.

ஒரு வாரம் கூட ஆகவில்லை. நமது கணிப்பு பலித்துவிட்டது.

முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக கேரள மாநிலத்தில் பதற்றம் நிலவுவதால் "தமிழக கோயில்களிலேயே ஐயப்ப பக்தர்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்' (http://www.dinamani.com/edition/Story.aspx?) என அகில உலக ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப  மிஷன் நிறுவனர் ராஜமங்கலம் கூறியுள்ளார்


"சபரிமலை செல்ல முடியாத நிலை தமிழக கோயில்களிலேயே பக்தர்கள் வழிபடலாம் திருவாவடுதுறை ஆதீனம் பேட்டி!"  (http://wap.dinakaran.com/District_detail_2011.asp?Nid=25288

"சபரி மலை செல்ல முடியாத நிலை உள்ளதால் தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே பக்தர்கள் வழிபடலாம் என்று திருவாவடுதுறை ஆதீனம் 23 வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்"

"கேரளாவில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் தமிழகத்தில் உள்ள கோயில்களில் வழிபாடு செய்யலாம். அதனை கடவுள் ஐய்யப்பனும் ஏற்றுக்கொள்வார்என மேலும் விளக்கமளித்துள்ளார்.

'மகான்'களும், 'பராமாச்சாரி'யர்களும் சொல்வதற்கு முன்பே நாம்தான் முதன் முதலில் சரியாக கணித்திருக்கிறோம். எனவே எல்லா ராசிக்காரர்களும் எமது கணிப்பை நம்பித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை! இனி எமது மற்ற கணிப்புகளும் பலிக்கும் என்பதால் அந்ததந்த ராசிக்கார்கள் தங்களுக்குரிய பரிகாரங்களைச் செய்ய தாயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.