Monday, March 30, 2020

ஹோமியோபதி: கரோனாவைக் குணப்படுத்துமா?


கரோனா நோய் உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில், பல்வேறு மருத்துவ முறைகள் மீதான, குறிப்பாக மாற்று மருத்துவ முறை ஹோமியோபதி மீதானத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த சந்தியா இரமேஷ் என்ற இதழியலாளர், மார்ச் 11 அன்று தபிரிண்ட் இணைய தளத்தில் எழுதியக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு ஹோமியோபதி குறித்தத் தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

அவரது கட்டுரை,

அவரது கட்டுரையின் தமிழ்வடிவத்தை முடிந்த அளவுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கரோனா மட்டுமல்ல, ஹோமியோபதி எதையும் குணப்படுத்தாது. அது வெறும் வெற்று உருண்டைகளின் விளைவே!

Forget coronavirus, homoeopathy can’t cure anything. It’s a placebo, at best

(குறிப்பு: Placebo effect என்பதைத்தான் வெற்று உருண்டைகளின் விளைவு என மொழி மாற்றம் செய்துள்ளேன்) 

ஹோமியோபதி இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தாலும் உலக அளவில் பல்வேறு வல்லுநர்கள், ஹோமியோபதியின் செயல் திறனை நிராகரிக்கின்றனர். ஹோமியோபதி பயனற்றது என்பதை ஒரு ஆஸ்திரேலிய ஆய்வு கண்டறிந்துள்ளது. மேலும் ஹோமியோபதியை தடை செய்வது குறித்து ஸ்பெயின் பரிசீலித்து வருகிறது.

சீனாவில் 3000 பேரைக் கொன்றக் கரோனா நோய், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டபோது, இத்தொற்று நோயைத் தடுக்க ஹோமியோபதி மருந்தை ஆயுஷ் (AYUSH) அமைச்சகம் பரிந்துரை செய்தது.

மாற்றுமருத்துவ முறைகளில், இந்தியாவைப் பொருந்தவரை ஹோமியோபதி மிகவும் பிரபலமானது. இதை இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறை என்றே பலரும் நம்புகின்றனர். அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி, அலோபதி (நவீன மருத்துவ முறையை இவ்வாறுதான் அழைக்கின்றனர்-மொ.பெ) மருத்துவ முறைக்கு அடுத்ததாக, இந்திய மக்கள் தொகையில் சுமார் 10% பேர் நம்பக்கூடிய மருத்துவ முறையாக ஹோமியோபதி உள்ளது.

அலோபதி மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத நீரழிவு மற்றும் சொரியாசிஸ் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதாகக் கூறுகிறது ஹோமியோபதி.

இது ஒரு இயற்கையான மருத்துவ முறை என்றும், கீழைத்தேச ஆன்மீக உணர்வைத் தூண்டி, வலி இல்லாமல் நிவாரணமளிப்பதாகவும் இதைப் பின்தொடர்பவர்கள் நம்புகின்றனர்.

ஹோமியோபதி இயற்கையானதும் அல்ல; இந்தியாவைச் சேர்ந்ததும் அல்ல; கீழைத் தேசங்களைச் சார்ந்ததும் அல்ல; இது 1796 ஆம் ஆண்டில் சாமுவல் ஹானிமன் என்ற ஜெர்மன் மருத்துவரால் உருவாக்கப்பட்டது.

ஹோமியோபதியின் இரு முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று “ஒத்ததை ஒத்தது குணமாக்கும்” (similia similibus curenter) என்பது. அதாவது எது ஒன்று உங்களுக்குக் காய்ச்சலை உண்டாக்குகிறதோ, அதுவே அது போன்றக் காய்ச்சலையும் குணமாக்கும்.

மற்றொன்று, மிகக் குறைந்த அளவிலான மருந்தைப் (minimum dose) பயன்படுத்தும் விதி. அதாவது ஒரு மூலப்பொருளை எடுத்து, அதன் ஒரு மூலக்கூறுகூட இல்லாத அளவுக்கு அதை நீர்த்துப் (dilute) போகச் செய்து பயன்படுத்துவது.

ஹோமியோபதி புகழ் வாய்ந்ததாக இருந்தாலும், அது சர்ச்சைக்குரியதாகவே நீடிக்கிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) முதல், அமெரிக்காவின் “சுகாதார மனித சேவைகள் துறை” மற்றும் “பிரிட்டன் தேசிய சுகாதார சேவை” வரை, உலகின் பெரும்பாலான சுகாதார வல்லுநர்கள் சில ஆராய்ச்சிகளை மேற்கோள்காட்டி, ஹோமியோபதி மீதான சந்தேகங்களை வெளிப்படுத்துகின்றனர். உயர்க்கொல்லி நோய்களுக்கு ஒரு மாற்று மருத்துவமாக ஹோமியோபதி பயன்படுத்துவதை அவர்கள் எதிர்க்கின்றனர்.

பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தத்துறைக்கு நிதி ஒதுக்குவதில்லை. மேலும், ஆஸ்திரேலியா ஒரு முழுமையான ஆய்வை நடத்தி, ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் என அறிவித்துள்ளது. ஸ்பெயின் இதை ஆபத்தானது என்று சொல்லி தடை செய்ய முன்வந்துள்ளது.

இருப்பினும், ஹோமியோபதியின் திறனை நிரூபிக்கும் நபர்களுக்குப் பஞ்சமில்லை. இந்தியாவில் இது பட்டப்படிப்புக்கான திட்டமாக முன்வைக்கப்பட்டு, ஒரு தனிச்சிறப்பான துறையால் மேற்பார்வையிடப்பட்டு, ஹோமியோபதியர்கள் பதிவு பெற்ற மருத்துவர்களாக பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

சகாதார நெருக்கடி காலகட்டத்தில், நிரூபிக்கப்படாத ஒன்றை ஆயுஷ் ஆலோசனைக்குழு பரிந்துரை செய்வது என்பது, “புறாக்களிடையே பூனையை அழைப்பது” போலுள்ளது என பலரும் குற்றம் சுமத்துகின்றனர். மறுபக்கம், மிகச் சரியான ஆலோசனை இது என ஹோமியோபதியை ஆதரிப்போரும் அதற்கு ஈடாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஹோமியோபதி என்றால் என்ன?

புற்று நோய், காது கேளாமை, கை-கால் வலிப்பு போன்ற பிற நோய்களின் அறிகுறிகள் என்பவை தடித்தல் (Syphilis), நமைச்சல் (Psora) மற்றும் அழிவு (Sycosis) என்ற மூன்று வகையான நோய்களுக்குள் அடங்கும் என ஹோமியோபதியைக் கண்டுபிடித்த ஹானிமன் கருதுகிறார்.

இந்தக் கோட்பாடு ஹோமியோபதியர்களுக்கிடையிலேயே சர்ச்சையாக உள்ளது.

ஒரு நோய் அல்லது தொற்று என்பது, ஒருவருக்கு வெளியிலிருந்து வருகிறது என்கிற கோட்பாட்டை, ஹானிமன் மருத்துவ முறை நிராகரிக்கிறது. நோய் என்பது ஒருவருடைய சொந்த உடலுக்குள் இருந்தே வருகிறது என்பதாக அது கூறுகிறது.

“ஒத்ததை ஒத்தது குணமாக்கும்” என்கிற கோட்பாடு, ஹானிமன் நடத்திய ஒரு பரிசோதனையின் மூலமே உருவானது. இன்றும் மலேரியாவுக்குப் பயன்படும் குயினைன் என்ற பொருள், சின்கோனா பட்டையில் அதிகமாக இருக்கிறது. இந்தப்பட்டையை ஹானிமன் அதிகமாக உட்கொண்டதால், அது அவரிடையே உருவாக்கிய அறிகுறிகள், மலேரியாவுக்கான அறிகுறிகளை பிரதிபலிப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் மலேரியா நோயைக் குணப்படுத்த சின்கோனா பட்டைப் பயன்படுத்தப்படுகிறது.

ஹோமியோபதி பெரும்பாலும் இயற்கை மற்றும் தாவர அடிப்படையிலானவை என்று நம்பப்பட்டாலும், இம்மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருட்கள் விலங்கு அல்லது தாவர அடிப்படை மட்டுமன்றி, கனிம அல்லது செயற்கையான பொருட்களிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. இம்மருந்துகள் லத்தீன் மொழியிலான அல்லது லத்தீன் உச்சரிப்பைக் கொண்டவையாக உள்ளன.

மூலப் பொருளை நீர், ஆல்கஹால் அல்லது சர்க்கரையுடன் நீர்த்துப் போகச் செய்வதன் மூலம், ஹோமியோபதி மருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் மூலப்பொருளின் மூலக்கூறு ஒன்றுகூட எஞ்சி இருக்காது.

செரிமானக் கோளாறுகள், ஒவ்வாமை, கவலை மற்றும் தூக்கமின்மை போன்ற நிலைமைகளுக்கு, பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ஆர்சனிக்கம் ஆல்பம் என்று அமைக்கப்படும் ஆர்சனிக்கம் ஆக்சைடு என்ற மருந்தை கரோனா வைரஸ் தடுப்புக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

சோடியம் குளோரைடு என்று சொல்லக்கூடிய சாதாரண உப்பிலிருந்து தயாரிக்கப்படும் நேட்ரம் மூரியாடிகம், நச்சுத் தன்மையுள்ள மலரிலிருந்து தயாரிக்கப்படும் பெல்லடோனா, ஓபியம், மற்றும் நோயுற்ற மனிதனிடமிருந்து எடுக்கப்படும் இரத்தம், சிறுநீர், மலம், சீழ், சளி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் என்பவை பிற முக்கிய ஹோமியோபதி மருந்துகளாகும்.

எக்ஸ் கதிர்களிலிருந்தும் மற்றும் சூரிய ஒளியிலிருந்தும் சில மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக பால் சர்க்கரை உருண்டைகளில் சூரிய ஒளியினைப் பாய்ச்சுவதன் மூலம் இது சாத்தியமாகிறது.

கதிர்வீச்சினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய, எக்ஸ் கதிர்கள் புகுத்தப்பட்ட ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கையானது அல்ல என்பதை அறிக. பெரும்பாலும் கரையாத தன்மை கொண்ட கருங்கற்கள் (Granite) போன்ற பொருட்கள், பால்சர்க்கரையுடன் சேர்த்து நன்கு பொடியாக அறைக்கப்பட்டு, அதன் பிறகு நீர்மப்படுத்தப்படுகின்றன (diluted). பிரிட்டிஷ் அரசக் குடும்பத்திற்கு மருத்துவராக இருக்கும் ஒரு ஹோமியோபதியர், பெர்லின் சுவர்த் துண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை, மனச்சோர்வு மற்றும் ஆஸ்துமாவிற்கான மருந்தாகக் கடந்த ஆண்டு பரிந்துரை செய்துள்ளார்.

ஒவ்வொருபடிநிலையிலும், முந்தையப் படிநிலையைப் போல மடக்கை அளவுகோலின் அடிப்படையில் (logarithmic scales) பலமடங்குகளில் ஹோமியோபதி மருந்துகள் நீர்மப்படுத்தப்படுகின்றன. 10 இன் மடங்கைக் கொண்ட X வீரியமும், 100 இன் மடங்கைக் கொண்ட C வீரியமும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இரு நீர்மங்களாகும். 

2X வீரிய அலகு என்பது ஒரு பங்கு உள்ள ஒரு பொருள், 9 பங்கு உள்ள ஆல்கஹாலுடன் நீர்த்துப் போகச் செய்து, அவ்வாறு நீர்த்துப் போகச் செய்த கரைசலிலிருந்து ஒரு பங்கை எடுத்து, அதை 9 பங்கு உள்ள ஆல்கஹாலுடன் மீண்டும் நீர்த்துப் போகச் செய்வதன் மூலம் கிடைக்கும் நீர்மத்தின் வீரியமாகும்.

எனவே, ஒரு 10X வீரியம் என்பது இந்த செயல்முறையை 10 முறை செய்வதாகும். 15X என்பது 15 முறை செய்வதாகும்.

C வீரிய முறையும் இதைப் போன்றதுதான். இதில் 1 பங்கு உள்ள ஒரு பொருள் 99 பங்கு உள்ள ஆல்கஹாலுடன் நீர்மப்படுத்தப்படுகிறது.

30X அல்லது 300C, இவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் வீரியங்களாகும். 12C அல்லது 24X க்கு அப்பால் உள்ள நீர்மங்களில், மூலப்பொருளின் ஒரு மூலக்கூறுகூட இருக்காது.

ஒரு மருந்து எவ்வளவுக்கு எவ்வளவு நீர்த்துப் போகச் செய்யப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அம்மருந்து வீரியமிக்கதாகிறது என்பதை ஹோமியோபதி நம்புகிறது. காட்டாக, 100X என்பது 10X ஐ விட ஆற்றல் மிக்கது எனக் கருதப்படுகிறது. வேதியியலாளர்களுக்கு சவாலாக இருக்கும் உண்மை இது.

தான் தொடர்பு கொள்ளும் பொருள்களைப் பற்றியத் தகவல்களைத் தக்க வைத்துக் கொள்ளும் நினைவாற்றல் ஆல்கஹாலுக்கு இருப்பதால்தான், அது உடலை குணப்படுத்துகிறது என்கிற சர்ச்சைக்குரிய கருத்தை அடிப்படையாக் கொண்டது இது.
(கட்டுரையாளர் நீரை காட்டாகக் குறிப்பிட்டிருப்பார். மொ-ர்)

தயாரிக்கப்பட்ட நீர்மங்கள், இறுதியாக சர்க்கரை உருண்டைகளின் மீது ஊற்றப்பட்டு பிறகு அவை ஆவியாகிவிடும்.

மிகச்சரியாக கலக்கப்பட்ட ஹோமியோபதி மருந்துகள், மனித உடலுக்குத் தீங்கிழைக்காத நல்ல மருந்துகளாகும். தவறாக கலக்கப்பட்டதால் ஆர்சனிக் நச்சுத் தன்மை இருப்பதாக இந்தியாவில் வழக்குகள் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹோமியோபதி எவ்வாறு பரிணாம வளர்ச்சி பெற்றது? அது எப்படிப் பரவியது?

பல துன்பங்களை உள்ளடக்கிய நவீன மருத்துவம் தோன்றி வளர்ந்த 1800 களில்தான் ஹோமியோபதி பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அன்று புதிய புதிய நோய்கள் மக்களிடையே பரவியது. நவீன மருத்துவ அறிவியல், அதாவது அலோபதி மருத்துவம் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது.

வலியற்ற சிகிச்சை என்கிற வாக்குறுதியில் ஹோமியோபதி மிகவும் பிரபலம் அடைந்தது.

காலரா நோய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பயனற்றுப் போனதால் இறுதி காலகட்டத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஹோமியோபதிப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

மருத்துவத்தின்  செயல்திறனை மேம்படுத்துவதற்கான முறைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அது நவீன மருத்துவத்திலும் பிரதிபலித்தது.

நவீன மருத்துவம் சரியான முடிவுகளைக் காட்டியதால், 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், முன்னணி ஹோமியோபதியர்கள் தங்களது நடைமுறையை கைவிடத் தொடங்கினர். அமெரிக்காவின் கடைசி ஹோமியோபதிப் பள்ளி 1920 இல் மூடப்பட்டது.

பிறகு நாஜிகள் ஆர்வம் காட்டியதால், 1930 மற்றும் 1940 களில் ஹோமியோபதி மீண்டு எழுந்தது. ஆனால் விரைவிலேயே இந்த முறையை அவர்கள் கைவிட்டனர்.

பலவிதமான ஆன்மீக மற்றும் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, 1970 களில் உருவான மேற்கத்திய நிகழ்வின் ஆதரவைப் பெற்றது ஹோமியோபதி. மேலும் மனம், உடல் மற்றும் ஆன்மா அல்லது உயிராற்றல் (spirit) ஆகியவற்றிற்கான மையக் கொள்கையாக இயற்கை மருத்துவத்தை இணைத்துக் கொண்டது. 

தற்போதைய நவீன மருத்துவ கட்டமைப்புக்கு எதிர்வினையாக, ஜோதிடம் உள்ளிட்ட போலி அறிவியல் நம்பிக்கைகளை ஹோமியோபதி ஏற்றுக் கொள்வதாக அறியப்படுகிறது. மேலும் இதுவே இன்று ஹோமியோபதியில் பிரபலம் அடைந்து வருகிறது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோமியோபதி, வங்காளம் வழியாக நாடு முழுவதும் விரைவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முதல் இந்திய ஹோமியோபதி நிறுவனமான, கல்கத்தா ஹோமியோபதிக் கல்லூரி, 1881 இல் நிறுவப்பட்டது.

தேசிய மருத்துவ முறைகளில் ஒன்றாக, ஹோமியோபதியை மத்திய அரசு 1973 ஆம் ஆண்டு அங்கீகரித்தது. ஹோமியோபதிக் கல்வி மற்றும் நடைமுறையை ஒழுங்கபடுத்த மத்திய ஹோமியோபதிக் குழுமத்தை ஏற்படுத்தியது. அது தற்போது ஆயுஷ் அமைச்சகத்தின் மேற்பார்வையில் உள்ளது.

அறிவியலில் ஒத்த கருத்து

ஹோமியோபதி பயிற்சி முறை, அறிவியலுக்கு எதிரான பல நம்பிக்கைகளை உள்ளடக்கியது. எல்லா நோய்களும் மனிதனின் உள்ளிருந்தே தோன்றுகிறது என்பதை ஹோமியோபதி நம்புவதால் அது கிருமிக் (virus) கோட்பாட்டை நிராகரிக்கிறது. தடுப்பூசிகள் விஷத்தன்மை கொண்டவை எனவும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) பயன்பாடு ஒரு மோசடி எனவும், ஹோமியோபதியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

ஹோமியோபதி நிறுவப்பட்ட காலத்திலிருந்தே, அது நவீன மருத்துவர்களால் விமர்சிக்கப்பட்டே வந்துள்ளது. இதன் செயல்திறன், ஹானிமன் அவர்களால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு நோயாளி, ஒரு மருந்தை உட்கொண்டபின் ஏற்படும் அறிகுறிகளைப் பட்டியலிடும் முறையில் நம்பகத் தன்மை இல்லை.

நோய்கள் மற்றும் அவற்றின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதில், ஹோமியோபதி பயனற்றது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. எப்போதாவது நடைபெறும் வெற்று உருண்டைகளின் விளைவு (placebo effect) மட்டுமே இதில் உண்டு.

ஹோமியோபதியில் சாதகமான முடிவுகள் இருப்பதை நிலைநிறுத்தும் ஆய்வுகள், போதுமான அளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை அல்லது போதுமான ஆதாரங்கள் மூலம் அவை நிறுவப்படவில்லை.

ஒரு பிரிட்டிஷ் ஆய்வாளரால் 2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வை, முறையாக மதிப்பாய்வு செய்ததில், ஹோமியோபதியில் சாதகமான விளைவுகள் இருப்பதாக நிறுவ முடியவில்லை. ஹோமியோபதியில் சிறந்த மருத்துவச் சான்றுகள் (clinical evidence) இன்றைய தேதியில் இருந்த போதிலும் அதைக் கொண்டு மருத்துவப் பயன்பாட்டிற்கு (clinical practice) அதைப் பரிந்துரைக்க முடியாது.

கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.

"ஆராய்ச்சிக்கான தேசிய உயர்மட்ட நிதி அமைப்பு” என்பது ஆஸ்திரேலியாவின் “தேசிய சுகாதார மற்றும் ஆராய்ச்சிக் குழுமம்” ஆகும். அது சமீபத்தில், 2015 இல் மேற்கொண்ட விரிவான ஆய்வில், 1800 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மதிப்பீடு செய்தபோது, அதன் முடிவுகள் ஹோமியோபதிக்குச் சாதகமாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஆல்கஹால், தான் தொடர்பு கொண்ட பொருட்களின் நினைவை தன்னகத்தேக் கொண்டுள்ளது என்கிற ஹோமியோபதியின் அடித்தளம் மதிப்பிழந்ததாகக் கருதப்பட்டாலும்  அது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

ஹோமியோபதியை விஞ்ஞானிகள் பெருமளவில் கண்டித்ததைத் தொடர்ந்து, பல மருத்துவ மற்றும் சுகாதார அமைப்புகள் சுயேச்சையாக மேற்கொண்ட ஆய்வுகளுக்குப் பிறகு ஹோமியோபதியைப் பயன்படுத்தவதற்கு எதிராக ஆலோசனைகளை வழங்கி உள்ளன.

ஆய்வுகள் மூலம் ஹோமியோபதியின் செயல்திறன் நிறுவப்படவில்லை என அமெரிக்காவின் “சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் நிறுவனம்” மற்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை நிறுவனம்” ஆகியவற்றின் இணையப் பக்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடுமையான நோய்களுக்கு, ஹோமியோபதி முறையில் சிகிச்சை அளிப்பதை “உலக சுகாதார நிறுவனம்” (WHO) ஆதரிக்கவில்லை. மேலும், ஆபத்தான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, ஹோமியோபதி மீதான தரக்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்கிறது.

ரஷ்யாஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள “தேசிய மருத்துவ மற்றும் சுகாதார அமைப்புகள்” ஹோமியாபதிக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளன. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் ஹோமியோபதி மருத்துவத்துக்குச் செய்த செலவை திரும்பப் பெறுவதற்கான (reimbursement) வசதியை தடை செய்துள்ளன. ஹோமியோபதி மருத்துவ முறை ஆபத்தானது மற்றும் நெறிமுறையற்றது என்பதனால் அதனை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. 

பல நாடுகளில் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஹோமியோபதி மருத்துவமுறை செயல்பாட்டுக்கு உகந்ததாக இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை விஜயா மருத்துவமனையின் வஸ்குலர் (vascular) அறுவை சிகிச்சை நிபுணர் அமலோர்பவநாதன் ஜோசப் கூறுகிறார்.

கரோனா வைரசுக்கு, ஹோமியோபதி மருந்து என சமீபத்தில் அரசாங்கம் கொடுத்த ஆலோசனை பற்றி கருத்துக் கூறிய அவர் “நோய் எதிர்ப்புச் சக்தியை கட்டி எழுப்புவதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அது சொல்லப்பட்டாலும், அதில் குணமாக்குதல் இல்லை என்பதால், அது வேலை செய்யாது. நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்க ஒரு சில நாட்கள் போதாது; மாறாக அதற்குப் பல ஆண்டுகள் ஆகும்” என்கிறார்.

எல்லாவற்றிற்குமான சிகிச்சை

மேற்கத்திய மருத்துவ முறை குணப்படுத்த முடியாத சொரியாசிஸ், நீரிழிவு மற்றும் சினைப்பை நோய்க்குறி (polycystic ovary syndrome) உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து வகையான நோய்களையும் ஹோமியோபதியால் குணப்படுத்த முடியும் என்கின்றனர் ஹோமியோபதி ஆதரவாளர்கள்.

"தைராய்டு, சினைப்பை நோய்க்குறி (polycystic ovary syndrome), சொரியாசிஸ், நீரிழிவு, முடி உதிர்தல், கீல்வாதம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன” என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த “கேர் என் க்யூர் ஹெல்த் கிளினிக்”கில் பயிற்சி பெறும் ஹோமியோபதி மருத்துவர் ஜோசி ஜாய்.

ஜாய் கருத்துப்படி, அவரது நோயாளிகள் நவீன மருத்துவம் எதுவும் இல்லாமல், மேற்கண்ட நோய்கள் அனைத்திலும் ஹோமியோபதியின் மூலம் முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றனர்.

ஹோமியோபதி மருத்துவ முறைக்கு எதிரான விமர்சனங்களைப் பற்றி கேட்டபோது, “ஹோமியோபதி மருந்துகளில் பொருள் உள்ளடக்கத்தைத் தேடுகிறது மேற்கத்திய அறிவியல்; ஆனால் ஹோமியோபதி இயக்க ஆற்றல் (dynamic) முறையில் செயல்படுகிறது. மருந்துகளைப் பயன்படுத்தினால் பலன்களைக் காணலாம்” என்கிறார்.

மேலும், “எங்கள் நோயாளிகளிடம் உள்ள முன் கழுத்துக் கழலை (goiter), ஹோமியோபதி மூலம் கரைந்து போவதைக் கண்டிருக்கிறோம்; ஆனால், நவீன மருத்துவத்தில் அவற்றில் பெரும்பாலானோருக்கு அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்படுகிறது” என்கிறார் அவர்.

னால், நவீன மருத்துவ நிபுணர்கள் இந்தக் கூற்றை ஏற்க மறுக்கின்றனர்.

"எந்தவொரு கூற்றும் தரவு மற்றும் ஆதாரங்களால் நிறுவப்பட வேண்டும். ஹோமியோபதி வேலை செய்கிறது மற்றும் அதனால் நோய்களைக் குணப்படுத்த முடிகிறது என்பதற்கு, ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரம் எதுவும் இல்லை” என்கிறார் விஜயா மருத்துவமனையைச் சேர்ந்த ஜோசப்.

மேலும் “ஹோமியோபதி வேலை செய்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், அதை முதலில் ஏற்றுக் கொள்ள மருத்துவர்கள் தயாராக இருக்கின்றனர். எங்கள் நோயாளிகள் குணமடைந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றுதானே நாங்களும் விரும்புகிறோம்" என்கிறார் அவர்.

உண்மையைச் சரிபார்க்கும் இணையதளமான “ஆல்ட் நியூஸின்” அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் சுவீடனைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி சுமையா ஷேக், ஹோமியோபதி மற்றும் ஹோமியோபதி கல்வி குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார்.

ஹோமியோபதி பயனுள்ளதாக இருப்பதாகக் கருதும், தவறான புள்ளி விவரங்களை  அடிப்படையாகக் கொண்டுள்ள ஆய்வுகளே உள்ளன என்று அவர் கூறுகிறார்.

"மருந்தின் இயக்க ஆற்றல் குறித்து விவாதிப்பதற்கு முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை. மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்பது குறித்து குறைந்த பட்சம் ஒரு கோட்பாட்டைக்கூட (hypothesis) அவர்களால் உருவாக்க முடியவில்லை. பொதுவாக, சாதகமான முடிவுகள் அதில் கிடைப்பதில்லை. ஆய்வுகளை மிகக் கவனமாக பரிசீலிக்கும் பொழுது, ஹோமியோபதியின் முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் தரவுகள் இல்லை.” என்கிறார் சுமையா ஷேக்.

ஒரு மருத்துவமுறை ஆய்வுக்குள்ளாக்கப்படும் போது, கொடுக்கப்பட்டுள்ள மருந்து ஹோமியோபதியா அல்லது அலோபதியா என்பது நோயாளிக்குத் தெரியக் கூடாது. இதை ஆங்கிலத்தில் blinding என்பார்கள். மருத்துவருக்கேகூட தெரியாமல் கொடுக்கப்படுவதை double blinding என்பார்கள். ஒரு சிகிச்சையின் செயல்திறனை பாரபட்சமின்றி நிறுவ இம்முறை மிகமுக்கியமானது.

ஹோமியோபதியர்கள் தவறான ஆய்வுகளை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுவதன் மூலம், அதன் மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறுகிறார் சுமையா ஷேக்.

நம்பத் தகுந்த ஆய்வு முடிவுகள் ஹோமியோபதியில் இல்லை என்கிற குற்றச்சாட்டை ஹோமியோபதியர்கள் மறுக்கின்றனர்; அவ்வாறு சொல்வது மாற்று மருத்துவத்தின் மீது மேற்கத்திய உலகம் காட்டும் பாராமுகத்தின் வெளிப்பாடாகும் என்கின்றனர்.

"மேலை நாடுகளில், ஹோமியோபதி மருத்துவ முறை, மிக அரிதாகவே அணுகக்கூடியதாக இருப்பதால், அலோபதியை ஒப்பிடும் போது அது வளர்ச்சிக்கான போதியக் கவனத்தைப் பெறவில்லை” என்கிறார் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் “ஹோமியோபதி ஆய்வுக்கான மத்தியக் குழுமம்” என்கிற நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அனில் குரானா.

”ஹோமியோபதி மருந்துகளின் விலை மிகக் குறைவாக இருப்பதால், அது புரவலர்களிடமிருந்து முதலீடுகளைப் பெற முடிவதில்லை.  மேலை நாடுகளில் உள்ள அரசுகள், மாற்று மருத்துவத்தில் முதலீடு செய்வதில்லை.” என்கிறார் அவர். மேலும் “அலோபதிக்கு அவர்கள் ஆதரவாக இருப்பதால், ஹோமியோபதியின் செயல் திறனை ஆய்வுகள் மூலம் நிரூபிக்க முதலீடு செய்வதை அது தடுக்கிறது” என்கிறார் ஜெனரல் டாக்டர் அனில் குரானா.

"இருப்பினும், பிரேசில், கியூபா மற்றும் மெக்சிசோ போன்ற நாடுகள், ஹோமியோபதி மருத்துவ முறையை ஆதரிக்கின்றன. அமெரிக்காவில் இந்த மருத்துவமுறை வளர்ச்சி பெற்று வருவதோடு, அங்கு ஹோமியோபதி சிகிச்சைக்கு ஏழு மாநிலங்கள் சட்டரீதியாகவே அனுமதி அளித்துள்ளன. இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஹோமியோபதியை ஏற்றுக் கொள்வது தற்போது அதிகரித்துள்ளது” என்கிறார் அவர்.

“பிரான்சில், 60% மக்கள் ஹோமியோபதியைப் பயன்படுத்துவதோடு, வரும் 2021 ஆம் ஆண்டில், ஒட்டு மொத்த மக்களின் ஆதரவும் இம்மருத்துவ முறைக்கு உண்டு என்கிற முடிவுக்கு அரசு வரக்கூடும். ஸ்விட்சர்லாந்தில், மற்ற வழக்கமான மருத்துவ முறைக்குக் கொடுக்கும் அதேத் தகுதி, ஹோமியோபதிக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.”

ஜெனரல் டாக்டர் அனில் குரானா சொல்வது போல, ஓராண்டு மருத்துவப் பயிற்சிக்காலம் உள்ளிட்ட 5.5 ஆண்டு பாடத்திட்டத்திற்கு ஹோமியோபதியில் பயற்சி பெற விரும்பும் மாணவர்கள் உட்படுத்தப்படுகின்றனர். இது MBBS க்குச் சமமாக இருப்பதோடு, இங்கு ஹோமியோபதி படிப்போடு, அலோபதி மருத்துவக் கல்லூரிகளில் சொல்லித் தரப்படும் பிற பாடங்களும் சொல்லித் தரப்படுகின்றன.

"ஹோமியோபதியின் நன்மைகளை அனுபவித்த பொது மக்களிடமிருந்து, அதன் தேவை அதிகரித்துள்ள காரணத்தினால் இந்தியாவில் ஹோமியோபதிக்கு என மிகப் பெரிய உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன” என்கிறார் ஜெனரல் டாக்டர் அனில் குரானா.

இந்தியாவில் தற்பொழுது, 3 லட்சம் பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர். ஆண்டுதோரும், ஆயுஷ் கல்லுரிகளில் சேரும் 32,000 மாணவர்களில், 13,000 மாணவர்கள் ஹோமியோபதியைத் தேர்வு செய்கின்றனர்.

ஆனால், இந்தப் பாடத்திட்டம் இருண்ட பக்கத்தைக் கொண்டதாகவே உள்ளது.

“போதிய மதிப்பெண்கள் இல்லாததால், MBBS இல் சேரமுடியாத மாணவர்கள், மருத்துவத் துறையில் எளிதாக நுழைவதற்கு ஹோமியோபதி ஒரு சுலபமான நுழைவு வாயிலாகும்.” என்கிறார் ஹோமியோபதியில் பயிற்றி பெற்று, அதன்பிறகு, அது ஒரு ஏமாற்று என்பதை ஒப்புக் கொண்டு, தற்போது நவீன சிகிச்சை முறைக்கு மாறிய சாந்தனு அபயங்கர்.

MBBS இல் சேருவதற்கு போதிய மதிப்பெண்கள் இல்லாததால், தானே ஹோமியோபதியை தேர்வு செய்தவர் இந்த சாந்தனு அபயங்கர்.

ஹோமியோபதியில் வெறும் கோட்பாடு (theory) மட்டுமே போதிக்கப்படுவதாகவும், ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்வதில்லை என்பதை ஆய்வு முடிவுகள் குறித்து வெளியான கட்டுரைகள் நிரூபித்துள்ளதாகவும், மேலும் இதைத் தனது பயிற்சிக் காலத்தில் உணர்ந்ததாகவும் கூறுகிறார் அபயங்கர்.

“ஹோமியோபதியர்கள் தங்களது பெயருக்கு முன்னால் சட்டப்படி டாக்டர் எனப் போட்டுக் கொள்வதற்கு மட்டுமே இது வழிவகுத்துள்ளது” என்கிறார் அபயங்கர்

இறுதியில், அபயங்கர் திரும்பச் சென்று, MBBS பட்டம் பெற்று தற்போது 20 ஆண்டுகளாக மகளிர் மருத்துவ நிபுணராக பணியாற்றி வருகிறார்.

வெற்று உருண்டைகள் எவ்வாறு வேலை செய்கின்றன?

ஹோமியோபதி நோயாளிகளிடையே வேலை செய்வதாக நம்பப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளதாக அதை விமர்சிப்பவர்கள் கருதுகின்றனர்.

இதில் “சராசரிக்குத் தாழ்வுறுதல்” (regression to the mean) என்கிற கோட்பாடு முதன்மையானதாகும்.

ஒவ்வோரு நோயும், அதன் வளர்ச்சிப் போக்கில் ஏறி இறங்கி, இறுதியில் காணாமல் போகும். பொதுவாக நோய் தோன்றிய உடனேயே, நோயாளிகள் மருத்துவரிடம் செல்கின்றனர். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளோ (antibiotics) அல்லது பிற நவீன மருந்துகளோகூட உடனடியாக வேலை செய்வதில்லை. பிறகு ஒரு ஹோமியோபதியர் நீண்ட காலத்திற்கு மருந்துகளைப் பரிந்துரைக்கிறார். நோயாளி அம்மருந்தை எடுத்துக் கொள்ளும் அதே வேளையில், நோய் அதன் இயல்பான போக்கிலேயே குறையத் தொடங்கி, இறுதியில் நோயாளி குணமடைகிறார்.

பல்வேறு சமயங்களில், வெற்று உருண்டை பரிசோதனையின் தவறான முடிவுகளின் பின்னணியில் “சராசரிக்குத் தாழ்வுறுதல்” என்கிற கோட்பாடு ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது. ஹோமியோபதியை பின்பற்றும் போது, புற்று நோய் உள்ளிட்ட சில அபாயகரமான நோய்களிலிருந்து பல நோயாளிகள் தப்பி, நன்றாக இருப்பதாக நம்பப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக நம்பப்படுகிறது.

நுரையீரல் புற்று மற்றும் மார்பகப் புற்று உள்ளிட்ட அனைத்து வகையான புற்று நோய்களுக்கும் தாங்கள் சிகிச்சை அளித்துள்ளதாகக் கூறுகிறார் ஜாய் என்கிற ஹோமியோபதியர்.

“நோயாளிகளின் ஆயுட்காலத்தை ஹோமியோபதி நீட்டிக்கிறது. கீமோதெராபியில் புற்றநோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. (இந்தக் கூற்றிற்கு எந்த ஆதாரமும் கிடையாது - ஆசிரியர்) ஆனால் நோயாளிகள் முதலில் கீமோதெராபிக்குச் சென்றுவிட்டு, பின்னர்தான் ஹோமியோபதிக்கு வருகின்றனர்” என்கிறார் அவர்.

வெவ்வேறு நோயாளிகளுக்கு, வெவ்வேறு தேவைகள் உள்ளன என்பதனால், ஆர்சனிக்கம், பெல்லேடோனா உள்ளிட்ட வெவ்வேறு மருந்துகளைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார் அவர்.

எனினும், கீமோதெராபிக்குச் செல்லாமல் நேரடியாக ஹோமியோபதிக்கு வந்த நோயாளியை தான் பார்த்ததில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார்.

மருத்துவத்தின் உதவியின்றி இயற்கையாகவே நோயை எதிர்த்துப் போராடுவதற்கு, நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் அமைப்பு உருவாக்கிக் கொள்கிறது. இது “சராசரிக்குத் தாழ்வுறுதல்” என்கிற கோட்பாடு போன்றதாகும். இது ஹோமியோபதி மருத்துவ நடைமுறைப் போக்கோடு ஒத்துப் போகிற ஒன்றாகும்.

புதிய தியானப் பயிற்சி மூலம் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் முறை மற்றும் அவர்களின் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறை, ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நோயாளிகள் நன்றாக இருப்பதாக உணர்வதும் சாத்தியமே.

மருந்து எடுத்துக் கொள்ளும் போது, ஹோமியோபதியை கூடுதல் சிகிச்சை முறையாக (complementary) நோயாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மருத்துவரோடு ஆலோசிப்பதால் ஏற்படும் சிகிச்சையின் விளைவும் இதில் உள்ளது. ஹோமியோபதியில் ஆலோசனை நேரம் பொதுவாக இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும். மருத்துவரோடு கலந்தாலோசிப்பதால், கீல்வாத நோயாளிகள் மருத்துவப் பயன் அடைந்ததாக 2010 நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்ததாக ஒரு பரிட்டிஷ் இதழ் கூறுகிறது.

ஹோமியோபதி, ஒரு வெற்று உருண்டையின் விளைவுதான் என்று கருதப்பட்டாலும், அது குணப்படுத்துவாதாக மக்கள் நினைக்கின்றனர். அதனால், அது நீடிக்கிறது. இதற்கு வலுவான நம்பிக்கைத் தேவைப்படுகிற அதே வேளையில், இது அனைத்துப் பயனீட்டாளர்களுக்கும் பொருந்தும் என்று கருத முடியாது. வெற்று உருண்டைதான் தனக்கு கொடுக்கப்பட்டுள்ளது என நோயாளிகளே அறிந்துள்ள சூழலில், வெற்று உருண்டையின் விளைவை ஆய்வு செய்வது அவசியமாகின்றது.

நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, சாதாரண நோய்கள் மற்றும் வலியை கட்டுப்படுத்த மட்டுமே வெற்று உருண்டைகளின் விளைவு இருப்பதாகத் தெரிய வருகிறது. காட்டாக, ஒரு புற்றுக் கட்டி உள்ளவர் வெற்று உருண்டைகளின் விளைவாக வலி குறைந்துள்ளதாக உணருகிற அதேவேளையில், அந்தப் புற்றுக் கட்டி உடலை அழித்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

ஆனால், வெற்று உருண்டைகளின் விளைவுதான் ஹோமியோபதி என்று சொல்வது ஒரு கட்டுக் கதை என்கிறார் குரானா.

எய்ம்ஸ் (AIIMS), கொல்கத்தாவில் உள்ள “ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசின்” மற்றும் “போஸ் இன்ஸ்டிடியூட்” உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த நவீன மருத்துவத்திற்கான ஆய்வு நிறுவனங்கள், ஹோமியோபதி வெறும் வெற்று உருண்டைகளின் விளைவு என்கிற கட்டுக்கதை தவறு என்பதை நிறுவ, மனிதர்கள் மீதான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளன என்கிறார் அவர்.

மேலும் “இதை உறுதி செய்யும் வகையில் மேற்கண்ட ஆய்வு முடிவுகள் போதுமான அளவுக்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய ஆய்வு முடிவுகள் பல்வேறு சர்வதேசப் பத்திரிக்கைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.” என்று கூறுகிறார் அவர்.

இருப்பினும், ஹோமியோபதியின் செயல்திறனைப் பற்றி சில ஆய்வுகள் எதுவும் கூறவில்லை. மாறாக, போஸ் நிறுவனம் உள்ளிட்ட மேற்கு வங்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள், ஹோமியோபதி மருந்துகளின் “மின் மற்றும் அதிர்வுப் பண்புகள்” குறித்துப் பேசுகின்றன.

இது குறித்து அறிந்து கொள்ள எய்ம்ஸ் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர்களை “தபிரிண்ட்” அணுகிய போது, அவர்கள் பதில் ஏதும் அளிக்கவில்லை.

"ஹோமியோபதி நோய்க்குறிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது; மாறாக அலோபதி நோய்க்கான காரணங்களுக்குச் சிகிச்சை அளிக்கிறது” என்கிறார் அபயங்கர். “ஒரு நோயை கணிக்கவும், தடுக்கவும் அலோபதியால் முடியும்; ஆனால் நோய்க்குறிகள் வெளிப்பட்ட பின்னரே ஹோமியோபதியால் சிகிச்சை அளிக்க முடியும் என்கிறார் அவர்.

ஹோமியோபதி பக்கவிளைவுகள் இல்லாத வெற்று உருண்டைகளின் விளைவு போலத் தோன்றலாம்; ஆனால் அவை குறிப்பிடத்தக்க தீங்குகளை மறைமுகமாக விளைவிக்கின்றன” என்கிறார் ஜெர்மானிய கல்வி மருத்துவர் எட்ஸார்ட் எர்ன்ஸ்ட். அவர் மாற்று மருத்துவம் மற்றும் கூடுதல் சிகிச்சை முறையின் (complementary) அதிகாரப் பூர்வத் தலைவராகக் கருதப்படுகிறார்.

கடுமையாக நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு, பயனற்ற ஹோமியோபதி மூலம் சிகிச்சை அளிப்பது, முறையான சிகிச்சையை அவருக்கு மறுப்பதோடு தேவையற்றத் துன்பத்தை ஏற்படுத்துவதாகும்” என்கிறார் அவர்.  மேலும் “பல ஹோமியோபதியர்கள் சொல்வதைப் போல, நோயாளிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது என்று ஒரு ஹோமியோபதியர் கூறுவது, அவரின் உடல் நலத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். பயனற்ற சிகிச்சைக்கு ஒரு ஹோமியோபதியர் கட்டணம் வசூலிப்பது தனது நோயாளிகளின் நிதிநிலைமைக்கும் தீங்கு விளைவிப்பதாகும்” என்கிறார் எர்ன்ஸ்ட்
 
இருப்பினும், முறைசாரா சமூகப் பராமரிப்பிலும், இந்தியாவின் சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் ஹோமியோபதி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

”எங்களிடம் செவிலியர்கள், அதிசிறப்பு வாய்ந்த செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளனர்; ஆனால் முடநீக்கியல் நிபணர்கள் அல்லது ஆற்றுப்படுத்துநர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்.” என்கிறார் அபயங்கர். மேலும், “அவர்களும் ஹோமியோபதியர்களாகக் கருதப்படுவதால், அவர்கள் பெரும்பாலும் நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களாகவே உள்ளனர்” என்கிறார்.

இந்தியாவில் ஆயுர்வேதத்திற்கு அடுத்து, அதிக நிதி உதவியைப் பெறும் இரண்டாவது மருத்துவ முறையாக ஹோமியோபதி இருக்கிறது. ஆனால் அது அத்தகைய கவனத்திற்கு உரியதல்ல என்கிறார் எர்ன்ஸ்ட்.

“கிடைக்கக்கூடிய சிறந்த ஆதாரங்களின்படி, ஹோமியோபதி மருத்துவ ரீதியாகப் பயனளிப்பதாகவும் இல்லை; உயிரியல் ரீதியாக நம்பக் கூடியதாகவும் இல்லை; எனவே, ஹோமியோபதி குறித்த ஆராய்ச்சிக்கு அரசாங்கங்கள் ஒருபுறம் நிதி அளித்தாலும், புகழ் பெற்ற நிதி அமைப்புகள் நிதி வழங்கும் பட்டியலில் இடம் பெறக்கூடாது”  என்கிறார் அவர்.

“ஆராய்ச்சிக்கான நிதி எப்பொழுதும் அரிதாகவே ஒதுக்கப்படுகிறது. எனவே, ஆக்கப்பூர்வமான முடிவுகளைத் தரக்கூடிய திட்டங்களுக்கு, நெறிமுறை சார்ந்து, தார்மீக ரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும் செலவழிப்பதை அரசாங்கங்களும் நிதி அமைப்புகளும் கடமையாகக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

“ஒவ்வொருவரும் கண்காணிப்பதற்கு ஏற்பவும், சீராய்வு செய்வதற்கு ஏற்பவும் மாற்று மருத்துவ முறைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ முறைகளுக்குக் கடைபிடிக்கப்படும் ஆய்வுக்கான, அதே அளவுகோள்களை இவற்றிற்கும் கடைபிடிக்க வேண்டும்.” என்கிறார் ஷேக்.

“தூயதான, தனித்தன்மையதான காரணங்களுக்காக அதை யாரும் நெருங்க முடியாது என்பதனால் மாற்று மருத்துவம் ஒதுங்கியே நிற்கிறது. அழற்சி எதிர்ப்பு மூலிகைகளை ஆய்வுக்கள்ளாக்கும் போது, அதன் செயல்பாடு மற்றும் உயிர்வேதியியல் மதிப்புகளை கண்டுபிடிப்பதில் உயரிய மதிப்பு இருக்கக்கூடும். ஆனால், ஆராய்ச்சி எப்போழுதும் ஆதாரங்களை நம்பிக்கையோடு எடுத்துக் கொள்வதால், அதை நடைமுறைக்கு உகந்ததாக்குவதிலும், சந்தைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.” என்கிறார் அவர்.

சந்தியா ரமேஷ்
11.03.2020
தமிழில்: ஊரான்

மொழி பெயர்ப்பாளரின் கருத்து

ஹோமியோபதியின் சாதக பாதகங்களை அலசும் சந்தியா ரமேஷ், ஹோமியோபதி மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலேயே இக்கட்டுரையைத் தொகுத்துள்ளார்.

ஹோமியோபதி மருத்துவ முறை மூலம் பல்வேறு துயர்களிலிருந்து பலர் மீண்டுள்ளனர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஹோமியோபதி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டுமானால் இரண்டு கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும்.

முதலாவது, ஹோமியோபதி மருந்துகளை நீர்மப்படுத்தும் போது என்ன நடக்கிறது? பெரும்பாலும் மூலக்கூறுகளே இல்லாத நிலையில்தான் ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. “மூலக்கூறுகளே இல்லாத ஒன்றில், மருந்தின் ஆற்றல் எப்படி இருக்க முடியும்? இதை உட்கொண்டால் அது எப்படி வேலை செய்யும்?” என்று கேள்வி எழுப்புவதோடு, “இதை உட்கொண்டபின் ஏற்படுவதாகச் சொல்லப்படும் விளைவு வெறும் வெற்று உருண்டை விளைவு மட்டுமே” என்கின்றனர் ஹோமியோபதி எதிர்ப்பாளர்கள்.

மூலக்கூறுகள் மோதிக் கொண்டால் அவை தனிமங்களாக சிதைவுற்று பிறகு அணுக்களாக சிதைவுறாதா? சிதைவுற்ற அணுக்கள் மீண்டும் மீண்டும் மோதிக் கொள்ளும் பொழுது ஆற்றல் வெளிப்படாதா?

காட்டாக, “நேட்ரம் மூரியாடிகம்” என்கிற ஹோமியோபதி மருந்தைத் தயாரிக்கும்போது அதற்குப் பயன்படுத்தப்படும் NaCl (சாதாரண உப்பு) மூலக்கூறுகளும், CH3COOH (மெத்தனால் என்கிற ஆல்கஹால்) மூலக்கூறுகளும் ஒன்றை ஒன்று பல முறை மோதிக் கொண்டால் அதன் மூலக்கூறுகள் சிதைவுறாதா? மூலக்கூறுகள் சிதைவுறும் போது சோடியம், குளோரின், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரியாதா? தனித்தனியாக பிரிந்தத் தனிமங்கள் பல்வேறு அணுக்களாக சிதைவுறாதா? அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மீண்டும் மீண்டும் மோதிக் கொண்டால் ஆற்றல் வெளிப்படாதா? ஆற்றல் வெளிப்படும்பட்சத்தில் அந்த ஆற்றல் எத்தகையது? அதை அளவிட முடியாதா? ஒரு வேதியியல் மாணவனுக்கு எழக்கூடிய கேள்விகள்கூட கட்டுரையாளருக்கு எழாமல் போனதேன்?

அயனைசேசன், ஃபோட்டான் பற்றி எல்லாம் ஆய்வு செய்கிறோம். நீர்மப்படுத்துல் மற்றும் வீரியப்படுத்துதல் (dilution and potentisation) பற்றி ஏன் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது?

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்கிறது அறிவியல். அப்படியானால் மூலக்கூறுகளும் அணுக்களும் மோதிக் கொள்ளும் போது வெளிப்படும் ஆற்றல் எங்கே போனது? அது முற்றிலுமாக அழிந்து விட்டதா? அழிந்து விட்டது என்றால் அறிவியலே பொய்யானது என்றாகிறது? அத்தகைய ஆற்றல் அழியவில்லை என்றால் அது எங்கே உள்ளது? ஹோமியோபதியர்கள் கூறுவது போல அந்த ஆற்றலை ஆல்கஹால் மற்றும் பால் சர்க்கரை உருண்டைகள் ஏன் தக்கவைத்துக் கொள்ளக் கூடாது? இதுதான் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய கேள்வி. இதற்கு விடை காண முடியாது என்று அறிவியல் உலகம் கை விரித்துவிட முடியுமா? அப்படி கைவிரித்துவிட்டால் ஹோமியோபதியைக் குறை கூறுவதில் பயனேதுமில்லை. ஆற்றலும் பொருள் வகையினைச் சேர்ந்தது என்பது பொருள்முதல்வாத விதியாகும் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்ளும் பொழுது உடலில் என்ன நடக்கிறது? அவை வெறும் வெற்று உருண்டைகள் என்று புறம்தள்ளிவிட்டு நகர முடியாது. முதல் கேள்விக்கு விடை கண்டுவிட்டால் இரண்டாவது கேள்விக்கும் விடை கண்டாக வேண்டும். மின்சாரம், காந்தம், ஒலி, ஒளி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தற்போது அலோபதி முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யோகா மற்றும் தியானத்தைக்கூட மாற்று மருத்துவ முறையாக அறிவிக்கின்றனர். இவை மூலக்கூறு வடிவில் இல்லை என்பதால் வேலை செய்யாது; வெற்று உருண்டை விளைவு (placebo effect) எனக் கூறிவிட முடியுமா? எனவே, ஹோமியோபதி மருந்துகள் உடலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறிய வேண்டியது அறிவியலின் கடமை. இதற்கும் விடை காண முடியாது என்று அறிவியல் உலகம் கை விரித்துவிட முடியுமா?

எனவே மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் விடை காண வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்காக நிதி ஒதுக்குவதும் மிக மிக அவசியம். இதற்கான விடையைக் கண்டுவிட்டால் அது நோபல் பரிசுக்குரிய ஓர் ஆய்வாக அமையும் என்பதை கிரேக்க நாட்டைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதியர் வித்தல்காஸ் அவர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார். அதுவரை ஹோமியோபதி மீதான தாக்குதல்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

இத்தகைய சூழலில், “கரோனா மட்டுமல்ல, ஹோமியோபதி எதையும் குணப்படுத்தாது. அது வெறும் வெற்று உருண்டைகளின் விளைவு” என நீண்டதொரு கட்டுரையை சந்தியா ரமேஷ் அவர்கள் எழுதுவதன் மூலம், அவர் கார்ப்பரேட் மருந்துக் கம்பெனிகளுக்கு சாதகம் செய்கின்றாரோ என்ற ஐயம்தான் எழுகிறது.

ஊரான் 

5 comments:

 1. ஊரான்....சிறந்த விளக்கம்.

  ReplyDelete
 2. ஊரான்....சிறந்த விளக்கம்.

  ReplyDelete
 3. ஹோமியோதி என்றும் நன்மைளிக்கும்

  வெறும் சொற்களால் இல்லை என நிரூபணம் செய்ய முயல்வதைவிட அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி நிரூபணம் செய்ய முயற்சி செய்யுங்கள். இல்லையேல் நீங்கள் உங்கள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பின்பற்றுங்கள். சரியான நிரூபணம் இல்லாமல் தவரிழைக்க வேண்டாம்.

  ReplyDelete
 4. Homeopathy accepted as medical system in so many countries In india is widely accepted system next to allopathy .. reasearch says Pts undergoing homeo treatment is growing 31% without giving results to patients no one pts will come again ..

  ReplyDelete