Showing posts with label labour law reforms. Show all posts
Showing posts with label labour law reforms. Show all posts

Monday, 12 April 2021

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இனி தனியாரிடம்! - இறுதிப் பகுதி

‘ஐடிஐ’ முடித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த எண்ணற்றோர் ‘பெல்’ போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்த காலம் ஒன்றிருந்தது. பத்தாவதோ, பட்டப் படிப்போ அது எந்தப் படிப்பாக இருந்தாலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தால் என்றைக்காவது ஒரு நாள் அரசு வேலை நிச்சயம் என்கிற நினைப்பு நேற்றுவரை இருந்தது. வேலை கிடைக்கும் என்ற நினைப்பே இனி வரக்கூடாது என்பதால்தான், தற்போதுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களையே (Employment Exchanges) வேலைவாய்ப்பு மையங்களாக (Career Centre) பெயர் மாற்றம் செய்து, தனியாரிடம் ஒப்படைக்கச் சட்டம் கொண்டு வந்துள்ளார் மோடி. இனி இத்தகைய மையங்கள் அடிமை வேலைக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் கங்காணி மையங்களாக மட்டுமே செயல்படும்.

”The appropriate Government may also enter into an agreement with any institution, local authority, local body or private body for running a career centre”. Rule 57(2)-Code on Social Security (Central) Rules 2020.


சில ஆபத்தானப் பணிகளிலும், இரவு நேரங்களிலும் பெண்களைப் பணியில் அமர்த்தக் கூடாது; கேந்திரமான பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என்கிற தடைகளை நீக்கி, வரைமுறையற்ற உழைப்புச் சுரண்டலுக்கு கதவைத் திறந்துவிட்டுள்ளது மோடி அரசு. பகல் நேரங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நாட்டில் இனி இரவு நேரங்களில் யார் பாதுகாக்கப் போகிறார்கள்? ஒருவன் ‘விஎம்சி மெஷினிஸ்டே’ ஆனாலும் வாழ்க்கை முழுக்க இனி அவன் ஒப்பந்தத் தொழிலாளியாய் அற்பக்கூலிக்கு காலத்தை ஓட்ட வேண்டியதுதான். (Sec 43-58: Occupational Safety, Health and working conditions code – பணியிடப் பாகுகாப்பு, சுகாதாரம் & பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு)


ஒரு ஆலை சட்டப்படி இயங்குகிறதா இல்லையா என்பதை சோதித்தறிய இனி தொழிலக ஆய்வாளர்கள் (factory inspectors) வரமாட்டார்கள். அதற்குப் பதிலாக ‘ஆன் லைனிலேயே’ ஆலைகளை ஆய்வு செய்து, அவற்றில் ஏதேனும் குறை கண்டால் அவற்றை எப்படி சரி செய்வது என்கிற ஆலோசனையை வழங்கி முதலாளிகளின் வேலைகைளை எளிதாக்கும் (facilitator) சேவகர்களாக இனி அரசு அதிகாரிகள் செயல்படுவார்கள். ஆலைகளில் குறைந்தபட்ச ஏற்பாடுகளை மட்டும் செய்து கொண்டு கம்யூட்டரில் எல்லாம் சரியாக இருப்பதாகக் காட்டுவார்கள். இனி பாதுகாப்பற்ற சூழலில் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. (Sec 34-42: Occupational Safety, Health and working conditions code – பணியிடப் பாகுகாப்பு, சுகாதாரம் & பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு).


பத்து பேருக்கும் கீழ் வேலை செய்யக்கூடிய 4.67 கோடி நிறுவனங்கள் மற்றும் இருபது பேருக்கும் கீழ் வேலை செய்யக்கூடிய 50 லட்சம் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய 13.1 கோடி தொழிலாளர்களுக்கும், சுய வேலையில் ஈடுபடும் 9.4 கோடி தொழிலாளர்களுக்கும் புதிய சட்டத் தொகுப்புகள் எதுவும் பொருந்தாது. 85% தொழிலாளர்களுக்குப் பொருந்தாது. 


ஆண்டுக்கு 40000 மரணங்களை ஏற்படுத்தும் 90% ஆலைகள் புதிய சட்ட வரையறையின் பாதுகாப்பு வலையத்திற்குள் வரவில்லை. தொழிலாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பு குறித்து இனி நிறுவனங்களுக்குப் பொறுப்பில்லை. எட்டு மணி நேர வேலை என்பதெல்லாம் இனி கிடையாது. எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் தொழிலாளர்களின் உழைப்பை இனி முதலாளிகளால் சுரண்ட முடியும். பதினெட்டாம் நூற்றாண்டை நோக்கித் தொழிலாளர் வர்க்கத்தை பின்னுக்கு இழுத்துச் செல்கிறது மோடி கும்பல்.

 

புதிய சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பாகவே நிரந்தத் தன்மை உள்ள வேலைகள் 74% லிருந்து 64% வீழ்ச்சி கண்டுள்ளது. ஒப்பந்தத் தொழிலாளார் முறை 26% லிருந்து 36% அதிகரித்துள்ளது. ஏற்கனவே 54% தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு கிடையாது. 52% தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடையாது. இத்தகைய சூழலில் ஏற்கனவே இருக்கின்ற சொற்ப உரிமைகளையும் பறிக்கும் புதிய சட்டத் தொகுப்புகள் நடைமுறைக்கு வருமேயானால், இந்தியத் தொழிலாளி வர்க்கம் கை கட்டி சேவகம் செய்யும் அடிமைகளாக, ஒரு வேலை சோற்றுக்காக முதலாளிகளிடம் மண்டியிட்டு கையேந்தும் அவல நிலைதான் வரும்.

வேளாண் சட்டத்திருத்தங்களின் ஆபத்துகளைப் புரிந்து கொண்ட விவசாயிகள் தங்களது உயிரைக் கொடுத்து டெல்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகள் விழித்துக் கொண்டார்கள். அவர்களது போராட்டம் ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படாமல்கூட போகலாம். ஆனால் வஞ்சிக்கப்படுகிற மக்கள் எப்படிப் போராட வேண்டும் என்பதை அவர்கள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேளாண் சட்டங்களைவிடக் கொடிய தொழிலாளர்களுக்கான புதிய சட்டத் தொகுப்புகளின் ஆபத்தை இந்தியத் தொழிலாளி வர்க்கம் புரிந்து கொண்டு களமாடவில்லை என்றால் எதிர்காலம் உங்களை மன்னிக்காது.  


நன்றி!


முற்றும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.


தொடர்புடைய பதிவுகள்:

தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு மூடுவிழா! தொடர்-6
பறிபோகும் தொழிற்சங்க-கூட்டுபேர உரிமைகள்! தொடர்-5
மனுவின் வழியில் குறைந்த பட்ச ஊதியம்! தொடர்-4
கொல்லைப்புற வழியாக புகுத்தப்பட்ட நான்கு சட்டத் தொகுப்புகள்! தொடர்-3
அரசியல் அமைப்புச் சட்டத்தில் தொழிலாளர் உரிமைகள்! தொடர்-2
தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள்: யாருக்குச் சாதகம்? தொடர்-1

Tuesday, 16 March 2021

தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள்: யாருக்குச் சாதகம்? தொடர்-1

வறுமை ஒழிப்பு, கருப்புப் பண ஒழிப்பு, தொழில் வளர்ச்சி, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று வாய்ச் சவடால் அடித்த மோடிதான் கடந்த ஏழு ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக உலா வருகிறார். கடந்த ஏழு ஆண்டுகளில் எதைச் சாதித்திருக்கிறார்? சரக்கு மற்றும் சேவை வரி (GST), பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குறு தொழில்களை முடக்கினார். அதனால் தொழில் உற்பத்தி 38.1 சதவீதமாக சரிந்தது. வறுமை 23 சதவீதம் அதிகரித்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. இன்று நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு உத்தரவாதமான வேலை இல்லை.


கருப்புப் பணத்தை மீட்டுவந்து ஆளுக்கு பதினைந்து இலட்சம் அவரவர் வங்கிக் கணக்கில் சேர்ப்பேன் என்றார். ஆனால் குறைந்த பட்ச இருப்பு (minimum balance) இல்லை எனக் காரணம் காட்டி நம் கணக்கிலிருந்து பல ஆயிரம் கோடிகளை சுருட்டியதுதான் மிச்சம். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரூ.2.41 இலட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார் இந்த ஏழைத்தாயின் மகன்.

கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்றியதோடு புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகள் மூலம் தமிழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த சமூக நீதிக்குக் குழி பறித்தார். பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் சமூகநீதிக் கோட்பாட்டையே கேலிக் கூத்தாக்கினார். தமிழக வேலை வாய்ப்புகளை கொல்லைப்புற வழியாக வடவர்களுக்கு வாரிக் கொடுத்து தமிழக இளைஞர்களை வஞ்சித்து வருகிறார்..

பொங்கலுக்கு விடுமுறை கிடையாது, ஜல்லிக்கட்டுக்குத் தடை, எட்டு வழிச்சாலை, மீத்தேன்- ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மூலம் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

‘தூய்மை இந்தியா’ என்றார். நமது கையில் துடைப்பத்தைக் கொடுத்துவிட்டு ஆலை முதலாளிகளின் மாசு கட்டுப்பாட்டு விதி மீறல்களை அனுமதித்தார். அதனால் உலகின் மாசடைந்த முதல் 30 நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள 22 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. திருமலை கெமிக்கல்ஸ், அல்ட்ரா மெரைன், மல்லாடி உள்ளிட்ட 16 சிவப்பு வகை (red category industries) ஆலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் நச்சுக் கழிவுகளால் இராணிப்பேட்டை உலகின் மாசடைந்த நகரங்களில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, வேலூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்கள் சிவப்பு வகை மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகளால் இனி தூத்துக்குடியில் வாழ முடியாது என்பதை உணர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதி வழியில் போராடிய மக்களைத் தனது எடுபிடி எடப்பாடியைக் கொண்டு படுகொலை செய்தார்.

கரோனா நோய்த் தொற்று காலத்தில் மக்கள் சொல்லொனாத் துயரத்தில் இருந்த போது நம்மை விளக்கு ஏத்தி, கை தட்டி, மணி அடிக்கச் சொல்லிவிட்டு கார்ப்பரேட் நலன் காக்கும் பல்வேறு சட்டங்களைக் கொல்லைப்புற வழியாகக் கொண்டு வந்தார்.


விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டம், ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் இந்திய விவசாயிகளை கார்ப்பரோட் முதலாளிகளின் கொத்தடிமைகளாக மாற்றும் வேலையை மேற்கொண்டார். இருநூறுக்கும் மேற்பட்டோர் மாண்ட போதும் இச்சட்டங்களைத் திரும்பப் பெற விலியுறுத்தி நிரந்தரக் குடில் அமைத்துக் கொண்டு விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.


வங்கி, காப்பீடு, ரெயில், விமானம், துறைமுகம், பெல், கெயில், தொலைத் தொடர்பு என அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். “தொழில் நடத்துவது அரசின் வேலையல்ல, மாறாக சிறந்த நிர்வாகத்தைக் கொடுப்பதுதான் அரசின் கடமை” என்பதை நேரடியாக அறிவிக்கிறார். ஆலைகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் இனி தனியார் வசம் இருக்கும். தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கு ஏற்ப கரோனா காலத்தில் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றியமைத்துள்ளார். அரசின் கொள்கைகளுக்கு எதிராகவோ, முதலாளிகளுக்கு எதிராகவோ போராடினால், போராடும் மக்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத்தான் அவர் சிறந்த நிர்வாகம் என்கிறார் போல!


வேளாண் சட்டங்கள் எந்த அளவுக்கு இந்திய விவசாயிகளுக்குக் கேடானதோ அதைவிட இந்தியத் தொழிலாளி வர்க்கத்துக்குக் கேடானதுதான் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள். வேளாண் சட்டங்களின் ஆபத்தைப் புரிந்து கொண்டு விவசாயிகள் உயிரைக் கொடுத்துப் போராடி வருகின்றனர். தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் குறித்து இந்தியத் தொழிலாளி வர்க்கம் அமைதி காப்பதன் மூலம் இன்னும் அதைப் புரிந்து கொள்ளவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள் யாருக்கு பயனளிக்கப் போகிறது?


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை, BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை.