Thursday, April 8, 2021

தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு மூடுவிழா! தொடர்-6

தொழிலகத்தில் ஏற்படும் தொழிற்தகராறுகளைைத் தீர்த்துக் கொள்வதற்கு பழைய சட்டப்படி சமரச அதிகாரியிடம் (conciliation) முறையிடலாம். அதன் பிறகு தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகலாம். ஆனால் தற்போது, சமரச அதிகாரியிடம் முறையிடுவதற்கு முன்பாக நடுவர்களை (arbitrator) ஏற்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாட்டை புதிதாகப் புகுத்தி உள்ளனர். தொழிற்தகராறு ஒன்றில் ஒரு முடிவைப் பெறுவதற்குப் பழைய நடைமுறையிலேயே தொழிலாளர்கள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டும். தற்போது தொழிற்தகராறை மேலும் இழுத்தப்படிப்பதற்கான ஏற்பாடாக இந்த நடுவர் முறை நுழைக்கப்பட்டுள்ளது. இது முதலாளிகளுக்குத்தான் சாதகம் என்பதை சொல்ல வேண்டுமா என்ன? (பிரிவு 42: தொழிலுறவு சட்டத் தொகுப்பு)

பழைய நடைமுறையில், சமரச அதிகாரியிடம் நியாயம் கிடைக்கவில்லை என்றால் அருகில் உள்ள மாவட்டத் தொழிலாளர் நீதிமன்றங்களில் முறையிட முடியும். இனி மாவட்டங்களில் தொழிலாளர் நீதிமன்றங்கள் இருக்காது. அதற்கு மாறாக மாநில அளவில் ஓரிரு தீர்ப்பாயங்கள் (tribunal) மட்டுமே அமைக்கப்படும். அதே போல தேசிய அளவிலும் ஓரிரு தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும். மாவட்டத் தொழிலாளர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் இனி மாநிலத் தீர்ப்பாயங்களுக்கு மாற்றப்படும். இதன் மூலம் மாவட்டங்களிலேயே உடனடியாக அணுகக் கூடிய வாய்ப்பைப் பறித்து விட்டது மோடி அரசு (பிரிவு 43-61: தொழிலுறவு சட்டத் தொகுப்பு).

 

நடுவர் முறையைப் புகுத்தியது மற்றும் மாவட்டத் தொழிலாளர் நீதிமன்றங்களைக் கலைத்துவிட்டு தீர்ப்பாயங்களை ஏற்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட தொழிலாளியை தொலை தூரத்திற்கு அலைய விடுவதோடு நீதியைத் தாமதப்படுத்தி அவனை நடைபிணமாக்குவதற்குத்தான் வழிவகுக்கும். மொத்தத்தில் "சொன்னதைக் கேட்டுக் கொண்டு அடிமை போல வேலை செய்யப் பழகிக் கொள்!” என்பதை சொல்லாமலேயே உணர்த்துகிறார் மோடி.


வேலை நிறுத்தம் மற்றும் ஆலை மூடல்

 

குடி நீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் எத்தனை முறை மனு கொடுத்தாலும் மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தினால்தான் அதிகார வர்க்கம் செவி மடுக்கிறது. அதுபோலத்தான் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டமும்.

 

வேலை நிறுத்தம் மற்றும் ஆலை மூடல் எதுவாக இருந்தாலும் 60 நாள் முன்னறிவிப்பின்றி, 14 நாட்களுக்கு முன்பாக, சமரசம் நிலுவையில் உள்ள போது செய்யக்கூடாது என பொதுவாகச் சொல்லப்பட்டாலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையைப் பறிக்கின்ற வகையிலேயே சட்டத் தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரும் அசம்பாவிதம் நடந்து விட்டது, நிர்வாகம் அதை அலட்சியப்படுத்துகிறது என்கிற சூழலில் திடீர் வேலைநிறுத்தம் மூலம்தான் நிர்வாகத்தைப் பணிய வைக்க முடியும். ஆனால் இனிமேல் இத்தகைய திடீர் வேலை நிறுத்தங்கள் (flash strike) எதையும் தொழிலாளர்கள் மேற்கொள்ள முடியாது. மேலும் வேலை நிறுத்தம் செய்வதற்கு 60 நாள் முன்னறிவிப்புத் தேவை என்பதே வேலை நிறுத்தப் போராட்டமே செய்யக் கூடாது என்பதுதான். (பிரிவு: 62-64, தொழிலுறவு சட்டத் தொகுப்பு). 


நீதியை எங்கே தேட?


சட்டத்தை  மீறிச் செயல்படும் ஒரு நிர்வாகத்தின் மீது பழைய சட்டங்களின்படி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியும். ஆனால் புதிய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றங்களில்கூட இனி  நீதிமன்றங்கள் தலையிட முடியாது. மாறாக சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது மத்திய மாநில அரசு அதிகாரிகளே விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவார்களாம். (பிரிவு: 85-89, தொழிலுறவு சட்டத் தொகுப்பு). 


ஆளும்வர்க்கத்தின் எடுபிடிகளான அரசுஅதிகாரிகளின் ஆசியோடுதான் எல்லா முதலாளிகளும் சட்டத்தை மீருகிறார்கள். ஆசி கொடுத்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த அதிகாரிகளே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டால் யாருக்கு நீதி கிடைக்கும்? தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் நான்கு புதிய சட்டத் தொகுப்புகளிலும் நீதி தேவதையின் காதுகள் செவிடாக்கப்பட்டுவிட்டன.


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வழுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.


தொடர்புடைய பதிவுகள்:

 

No comments:

Post a Comment