‘ஐடிஐ’ முடித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த எண்ணற்றோர் ‘பெல்’ போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்த காலம் ஒன்றிருந்தது. பத்தாவதோ, பட்டப் படிப்போ அது எந்தப் படிப்பாக இருந்தாலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தால் என்றைக்காவது ஒரு நாள் அரசு வேலை நிச்சயம் என்கிற நினைப்பு நேற்றுவரை இருந்தது. வேலை கிடைக்கும் என்ற நினைப்பே இனி வரக்கூடாது என்பதால்தான், தற்போதுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களையே (Employment Exchanges) வேலைவாய்ப்பு மையங்களாக (Career Centre) பெயர் மாற்றம் செய்து, தனியாரிடம் ஒப்படைக்கச் சட்டம் கொண்டு வந்துள்ளார் மோடி. இனி இத்தகைய மையங்கள் அடிமை வேலைக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் கங்காணி மையங்களாக மட்டுமே செயல்படும்.
”The
appropriate Government may also enter into an agreement with any institution, local
authority, local body or private body for running a career centre”. Rule
57(2)-Code on Social Security (Central) Rules 2020.
சில ஆபத்தானப் பணிகளிலும், இரவு நேரங்களிலும்
பெண்களைப் பணியில் அமர்த்தக் கூடாது; கேந்திரமான பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தக்
கூடாது என்கிற தடைகளை நீக்கி, வரைமுறையற்ற உழைப்புச் சுரண்டலுக்கு கதவைத் திறந்துவிட்டுள்ளது
மோடி அரசு. பகல் நேரங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நாட்டில் இனி இரவு
நேரங்களில் யார் பாதுகாக்கப் போகிறார்கள்? ஒருவன் ‘விஎம்சி மெஷினிஸ்டே’ ஆனாலும் வாழ்க்கை
முழுக்க இனி அவன் ஒப்பந்தத் தொழிலாளியாய் அற்பக்கூலிக்கு காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.
(Sec 43-58:
Occupational Safety, Health and working conditions code – பணியிடப் பாகுகாப்பு,
சுகாதாரம் & பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு)
ஒரு
ஆலை சட்டப்படி இயங்குகிறதா இல்லையா என்பதை சோதித்தறிய இனி தொழிலக ஆய்வாளர்கள் (factory
inspectors) வரமாட்டார்கள்.
அதற்குப் பதிலாக ‘ஆன் லைனிலேயே’ ஆலைகளை ஆய்வு செய்து, அவற்றில் ஏதேனும் குறை
கண்டால் அவற்றை எப்படி சரி செய்வது என்கிற ஆலோசனையை வழங்கி முதலாளிகளின் வேலைகைளை எளிதாக்கும்
(facilitator) சேவகர்களாக
இனி அரசு அதிகாரிகள் செயல்படுவார்கள். ஆலைகளில் குறைந்தபட்ச ஏற்பாடுகளை மட்டும்
செய்து கொண்டு கம்யூட்டரில் எல்லாம் சரியாக இருப்பதாகக் காட்டுவார்கள். இனி
பாதுகாப்பற்ற சூழலில் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுவதை யாராலும் தடுத்து
நிறுத்த முடியாது. (Sec
34-42: Occupational Safety, Health and working conditions code – பணியிடப் பாகுகாப்பு,
சுகாதாரம் & பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு).
பத்து பேருக்கும் கீழ் வேலை செய்யக்கூடிய 4.67 கோடி நிறுவனங்கள் மற்றும் இருபது பேருக்கும் கீழ் வேலை செய்யக்கூடிய 50 லட்சம் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய 13.1 கோடி தொழிலாளர்களுக்கும், சுய வேலையில் ஈடுபடும் 9.4 கோடி தொழிலாளர்களுக்கும் புதிய சட்டத் தொகுப்புகள் எதுவும் பொருந்தாது. 85% தொழிலாளர்களுக்குப் பொருந்தாது.
ஆண்டுக்கு 40000 மரணங்களை ஏற்படுத்தும் 90% ஆலைகள் புதிய சட்ட வரையறையின் பாதுகாப்பு வலையத்திற்குள் வரவில்லை. தொழிலாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பு குறித்து இனி நிறுவனங்களுக்குப் பொறுப்பில்லை. எட்டு மணி நேர வேலை என்பதெல்லாம் இனி கிடையாது. எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் தொழிலாளர்களின் உழைப்பை இனி முதலாளிகளால் சுரண்ட முடியும். பதினெட்டாம் நூற்றாண்டை நோக்கித் தொழிலாளர் வர்க்கத்தை பின்னுக்கு இழுத்துச் செல்கிறது மோடி கும்பல்.
புதிய
சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பாகவே நிரந்தத் தன்மை உள்ள வேலைகள் 74% லிருந்து 64% வீழ்ச்சி கண்டுள்ளது.
ஒப்பந்தத் தொழிலாளார் முறை 26% லிருந்து 36% அதிகரித்துள்ளது. ஏற்கனவே 54% தொழிலாளர்களுக்கு
ஊதியத்துடன் கூடிய விடுப்பு கிடையாது. 52% தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடையாது.
இத்தகைய சூழலில் ஏற்கனவே இருக்கின்ற சொற்ப உரிமைகளையும் பறிக்கும் புதிய சட்டத்
தொகுப்புகள் நடைமுறைக்கு வருமேயானால், இந்தியத் தொழிலாளி வர்க்கம் கை கட்டி சேவகம்
செய்யும் அடிமைகளாக, ஒரு வேலை சோற்றுக்காக முதலாளிகளிடம் மண்டியிட்டு கையேந்தும் அவல
நிலைதான் வரும்.
வேளாண் சட்டத்திருத்தங்களின் ஆபத்துகளைப் புரிந்து கொண்ட விவசாயிகள் தங்களது உயிரைக் கொடுத்து டெல்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகள் விழித்துக் கொண்டார்கள். அவர்களது போராட்டம் ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படாமல்கூட போகலாம். ஆனால் வஞ்சிக்கப்படுகிற மக்கள் எப்படிப் போராட வேண்டும் என்பதை அவர்கள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேளாண் சட்டங்களைவிடக் கொடிய தொழிலாளர்களுக்கான புதிய சட்டத் தொகுப்புகளின் ஆபத்தை இந்தியத் தொழிலாளி வர்க்கம் புரிந்து கொண்டு களமாடவில்லை என்றால் எதிர்காலம் உங்களை மன்னிக்காது.
நன்றி!
முற்றும்
பொன்.சேகர்
வழக்குரைஞர்
குறிப்பு:
இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த
தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.
தொடர்புடைய பதிவுகள்:
பறிபோகும் தொழிற்சங்க-கூட்டுபேர உரிமைகள்! தொடர்-5
மனுவின் வழியில் குறைந்த பட்ச ஊதியம்! தொடர்-4
கொல்லைப்புற வழியாக புகுத்தப்பட்ட நான்கு சட்டத் தொகுப்புகள்! தொடர்-3
அரசியல் அமைப்புச் சட்டத்தில் தொழிலாளர் உரிமைகள்! தொடர்-2
தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள்: யாருக்குச் சாதகம்? தொடர்-1
No comments:
Post a Comment