Showing posts with label தீண்டாமை. Show all posts
Showing posts with label தீண்டாமை. Show all posts

Thursday, 14 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-6

தீண்டாமை

தீண்டாமை என்பது, காலம் காலமாக இந்து மதத்தில் இருந்து வரும் ஒரு சமூக மரபு ஆகும். இந்த மரபுக்கு அடிப்படையாக இருப்பது மனுதரும சாஸ்திரம். சனாதன தருமத்தின் அடிப்படையான கூறுகளில் முதலிடத்தில் இருப்பது தீண்டாமை என்றால் அது மிகையல்ல.

தீண்டாமையை முதலில் அறிமுகப்படுத்தியது பார்ப்பனர்கள்தான் என்றாலும், சாதியப் படிநிலையில் அது மேலிருந்து கீழ்நோக்கிப் பரவி உள்ளது. தீண்டாமையைக் கடைபிடிப்பதை ஒரு சமூகக் கர்வமாக ஒரு இந்து பார்க்கிறான். 

எங்கே புனிதம் (purity) பேசப்படுகிறதோ, அங்கே தீண்டாமை (pollution) கடைபிடிக்கப்படுகிறது என்று பொருள். மாசு, அழுக்கு, களங்கம், அசுத்தம், கேடு, பாவம், தீட்டு இவை எல்லாவற்றின் பொருள் ஒன்றுதான். இவற்றின் எதிர்ப்பதம்தான் புனிதம்.

சனாதன தருமத்தின்படி ஒரு இந்து தனது அன்றாட வாழ்க்கையில், வாழ்வியல் தீட்டு, சாதியத் தீட்டு என இருவகைத் தீட்டுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

தீட்டுக் கழிப்புப் பரிகாரம்

தீட்டுக்கு ஆட்பட்ட ஒரு நபர் அல்லது ஒரு இடம்,  தலை முழுகுதல், தண்ணீர் தெளித்தல், சூரியனைப் பார்த்தல், கோமியம் தெளித்தல் / கோமியம் குடித்தல், சாணம் / மெழுகுதல், பசுவைத் தொடுதல் / தீட்டுப் பட்ட இடத்திற்கு ஓட்டிச் செல்லுதல், மந்திரம் ஓதுதல், பஞ்சகவ்யம் குடித்தல்  போன்ற பரிகாரங்கள் மூலம் தீட்டைப் போக்கிக் கொள்ள முடியும்.

அ).வாழ்வியல் தீட்டு

பெண்களின் பூப்பு-மாதவிலக்கு, கர்ப்பம், பிறப்புஇறப்பு, பிணம், முடிவெட்டிக் கொள்ளுதல், உடலுறவு ஆகியவை வாழ்வியல் தீட்டு என அழைக்கப்படுகிறது. இதில் தனிமனிதத் தூய்மை அடிப்படையானதாகும். எச்சில், வியர்வை, மலம், சிறுநீர், உடல் அழுக்கு, விந்து இவை எல்லாம்கூட தீட்டுக்குரியவை. இத்தகையத் தீட்டுகள் தற்காலிகமானவை, பரிகாரம் உடையவை என்பதால் தீட்டுக்கு உள்ளான அனைவருமே தீட்டிலிருந்து விடுபட்டு விடமுடியும்; அதாவது புனிதமடைந்து விடமுடியும்.

1.பெண்களின் பூப்பு-மாதவிலக்கு,

'மாதவிடாயான முதல் நாலு நாள் பெரியோர்களாலே நிந்திக்கப்பட்டிருக்கின்றது' (மனு 3:46),

'மாதவிடாயானவளுடன் பேசப்படாது' (மனு 4-57), 

மாதவிடாயானவளுக்குப் போட்டு மீந்த உணவை, (மனு 4: 208),  

பிரசவித்தவள் செய்த உணவை (மனு 4-212) 

உண்ணக் கூடாது என பெண்கள் பூப்பெய்வதையும், அதைத் தொடர்ந்து ஏற்படும் ஒரு இயற்கையான மாதவிலக்கு நிகழ்வையும், பிரசவிப்பதையும் தீட்டாக்கி, அவர்களை ஒதுக்கி வைக்கிறது சனாதனம். 

அதனால்தான், மாதவிடாய் காலத்தில் பெண்களை தனி அறையில் அடைத்து வைப்பது சமீபகாலம் வரை தமிழ்நாட்டில் நிலவியது. ஆனால், வட இந்தியாவிலும் நேபாளத்திலும் இன்றும் இந்த வழக்கம் தொடர்கிறது.

மாதவிடாய் தீட்டு என்பதனால்தான் சபரிமலை ஐயப்பனை வழிபடும் உரிமையும், மாதவிடாய்க்கு ஆட்படும் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.  

2.வளைகாப்பு

ஒரு தாய் கருவுற்றாலே அதை தோஷம் அல்லது தீட்டு என்கிறது சனாதனம்.

'கர்ப்பகால மந்திரத்தாலும், சீமந்த ஓமத்தாலும், மாதாவின் கர்ப்பத்தில் வசித்த தோஷம் நீக்கப்படுகிறது' என்கிறது சனாதனம் (மனு 2-27).

இது ஏதோ வளையல் போடுற விழா என நினைத்துக் கொண்டு, அநேகமாக, எல்லோரும் இந்தத் தீட்டுக் கழிப்பு நிகழ்வை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆணும் கர்ப்பத்திற்குக் காரணம் என்றாலும், பெண்ணை மட்டும் தீட்டுக்காரியாக்கி அவளை இழிவுபடுத்துவதுதானே வளைகாப்பு என்கிற சனாதன நிகழ்வு.


3.பிறப்பு

'பிறப்பில் தாய் தந்தையருக்கு மாத்திரம் தொடக்கூடாத தீட்டு, அதிலும் தாய்க்கு மாத்திரம் அதிகம், தகப்பனுக்கு பதினோராநாள் ஸ்நானத்தோடே நீங்கி விடுகிறது (மனு 5-62).

'பிரசவித்தவளைத் தெரியாமல் தொட்டால் ஸ்நானஞ் செய்தால் பரிசுத்தனாகிறான் (மனு 5-85)

மருத்துவமனைகளில், சனாதன தருமத்தைக் கடைபிடித்தால் சேயை வீட்டுக்கும், தாயை சுடுகாட்டுக்கும்தான் அனுப்ப  வேண்டும்.

4.இறப்பு

'பிணம், பிணத்தைத் தெரியாமல் தொட்டால் ஸ்நானஞ் செய்தால் பரிசுத்தனாகிறான் (மனு 5-85)

கர்பத்திலேயே இறக்கும் சிசு மற்றும் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் இறந்து போனால் யார் யாருக்கு எத்தனை நாள் தீட்டு என்பதையும், தீட்டு எப்படி, எப்போது கழியும் என்பதையும் வரையறுக்கிறது சனாதனம் (மனு 5: 58-109).

இன்றளவும் ஒவ்வொரு இந்துவும், மனு சொன்னதைத்தான் தங்களது வாழ்க்கையில் கடைபிடித்து வருகின்றனர். ஆனால்,  பார்ப்பனர்கள் தங்களுக்கு 10 நாட்கள் மட்டுமே தீட்டு என சலுகை எடுத்துக் கொண்டு, சத்திரியனுக்கு 12 நாட்களும், வைசியனுக்கு 15 நாட்களும், சூத்திரனுக்கு 30 நாட்களும் தீட்டு என, தீட்டுக் காலத்தை நீட்டித்து அவர்களை முடக்குகிறது சனாதனம் (மனு 5: 83).

'பங்காளிகள் இறந்து போனாலும், தினந்தோறும் அக்கினிஹோத்திரம் செய்பவனுக்கு ஒரு நாள் அல்லது மூன்று நாளைக்கு மேல் தீட்டில்லை' என பார்ப்பனர்கள் மேலும் சலுகை எடுத்துக் கொள்கின்றனர் (மனு 5: 84).

'சூத்திரன் இறந்து போனால் ஊருக்கு தெற்குப் பக்கத்தாலும், வைசியன் இறந்து போனால் மேற்குப் பக்கத்தாலும், சத்திரியன் இறந்து போனால் வடக்குப் பக்கத்தாலும், பிராமணன் இறந்து போனால் கிழக்குப் பக்கத்தாலும் எடுத்துக் கொண்டு போக வேண்டியது' (மனு 5-92) 

என பிணத்தை எடுத்துச் செல்வதற்கான பாதையை மனு வரையறுத்து விட்டதனால், கிராமங்களில் சுடுகாட்டுப் பாதைக்கான சச்சரவுகளும் மோதல்களும் இன்றளவும் நடந்து வருகின்றன. சுடுகாட்டுப் பாதை சச்சரவுகளுக்கு, சனாதனம்தானே காரணம் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

அடுத்து சாதியத் தீட்டு குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

Sunday, 2 October 2022

ஐயம் இருப்போர் ஆய்வு செய்க!

"இந்தியக் கிராமம் ஒரே ஒரு சமூக அலகாக இல்லை. அது பல சாதிகளைக் கொண்டது.

1.கிராமத்தின் மக்கள் தொகை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1).தீண்டத்தக்கவர்கள் (2).தீண்டத்தகாதவர்கள்.

2. தீண்டத்தக்கவர்கள் பெரிய சமுதாயமாகவும், தீண்டத்தகாதவர்கள் ஒரு சிறிய சமுதாயமாகவும் உள்ளனர்.

3. தீண்டத்தக்கவர்கள் கிராமத்தின் உள்ளேயும், தீண்டத்தகாதவர்கள் கிராமத்திற்கு வெளியேயும் தனித்தனிப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

4. பொருளாதார ரீதியில் தீண்டத்தக்கவர்கள் பலமான, சக்தி வாய்ந்த சமுதாயமாக உள்ளனர். தீண்டத்தகாதோர் ஏழைகளாக, சார்ந்து வாழ்கின்ற சமுதாயமாக உள்ளனர்.

5. சமூக ரீதியில், தீண்டத்தக்கவர்கள், ஆளும் இனம் என்ற இடத்தில் உள்ளனர். தீண்டத்தகாதவர்கள் பரம்பரையான, பிணை வேலைக்காரர்களைக் கொண்ட, ஆளப்படும் இனம் என்ற இடத்தில் உள்ளனர்.

இந்தியக் கிராமங்களில் தீண்டத்தக்கவர்களும், தீண்டத்தகாதோரும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இணைந்து வாழ்கின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும், அதற்கு சில விதிகளை வைத்திருக்கின்றனர். இவற்றை தீண்டத்தகாதவர்கள் பின்பற்றி நடக்க வேண்டும்.  எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எதைச் செய்தால் குற்றம், எதைச் செய்யத் தவறினால் குற்றம் என்பவை குறித்து அவை கூறுகின்றன.

அவற்றில்,

தீண்டத்தகாதவர்கள், இந்துக்கள் வசிக்கும் இடத்திற்கு அப்பால் தனியான பகுதிகளில் வசிக்க வேண்டும். இவ்வாறு பிரித்து வைக்கும் விதியை மீறுவது குற்றமாகும். (மனு: 10-51)

தீண்டத்தகாதோர் வசிக்கும் பகுதிகள் தெற்கு திசையில் இருக்க வேண்டும். ஏனென்றால், தெற்குதான் நான்கு திசைகளில் மிகவும் அமங்கலமானது. இந்த விதியை மீறி நடப்பது குற்றமாக கருதப்படும்.

தீண்டத்தகாதவர்கள் தீட்டு ஏற்படுத்தும் தூரம் அல்லது நிழல் தீட்டு பற்றிய விதியை பின்பற்ற வேண்டும். இந்த விதியை மீறுவது குற்றமாகும்."

-அமபேத்கர் நூல் தொகுப்பு-9.

இந்தியா முழுக்க இதுதான் விதி. ஐயம் இருப்போர் ஆய்வு செய்க!

தீண்டாமையின் தொடக்கப் புள்ளியே ஊரும் சேரியும் தனித்தனியாக இருப்பதுதான். இதற்கு விதி வகுத்தது சனாதன தர்மம். அந்த சனாதனத்தைப் போற்றிப் பாதுகாப்பது என்பது தீண்டாமைக்கு துணை போவதாகும். இதுதான் இந்து தர்மம். இதைத்தான் பார்ப்பனியம் பேசி வருகிறது; பாஜக ஏற்றிப் போற்றுகிறது, அதற்காகத்தான் மோடி ஓடோடி உழைக்கிறார். வானதி வால் பிடிக்கிறார். தமிழிசை தாளம் போடுகிறார். கிருஷ்ணசாமி ஜால்ரா அடிக்கிறார். 

-ஊரான்

Thursday, 31 December 2015

எனது புத்தாண்டு கோரிக்கையை ஆதரிப்போர் மட்டும் வாழ்த்து கூறலாம்!

இந்து மதத்தில் நான்கு வர்ணங்களும் பல்வேறு சாதிப்பிரிவுகளும் இருந்தாலும் இந்த மொத்தப்பிரிவு மக்களும் உயர்சாதியினர் தீண்டத்தக்கவர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் இரு பிரிவுகளாகப் பகுப்படுகின்றனர்.

இந்தியாவின் மிகப் பெரிய சாபக்கேடு இந்து மதமும் அதன் உயிர்மூச்சான தீண்டாமையும்தான் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. உயர்சாதியினரால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் போதெல்லாம் உயர்சாதியினரை ‘சாதி இந்துக்கள்’ என்தான் குறிப்பிடுகின்றனர். 'சாதி இந்துக்கள்' என்றால் அவர்கள் உயர்சாதியினர்; தீண்டத்தக்கவர்கள் என்பதும், தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதுதான் அதன் பொருள்.

தீண்டத்தக்கவர்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை தீண்டிக் கொள்ளலாம். ஆனால் தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தக்க சாதி இந்துக்களை தீண்டிவிடவும் கூடாது; சாதி இந்துக்கள் தங்களை தீண்டாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை.

அதனால்தான் பார்ப்பனப் பெண்ணை படையாச்சி பையன் காதலித்தால் கடுமையாக எதிர்க்கப்படுவதில்லை. ஆனால் படையாச்சிப் பெண்ணை பறையன் காதலித்துவிட்டால் கடித்துக்குதறுகிறார்கள். இந்த நடைமுறைதான் தீண்டாமை நிலவுவதை பறைசாற்றுகிறது.

சாதி ஒழிந்தால் தீண்டாமையும் ஒழிந்துவிடும் என்று எளிமையாகச் சொன்னாலும் அது அவ்வளவு விரைவில் நடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

தீண்டாமை ஒழிப்பில் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டுமானால் ஐயங்காரை மலம் அள்ளவும் அருந்ததியரை அர்ச்சகராகவும் ஆக்குவதற்கான கோரிக்கை முதலில் வெற்றி பெற வேண்டும்.

சாதிப்படிநிலையில் அருந்ததியருக்கு மேலே உள்ள அனைவரும் மலம் அள்ள வேண்டும். அதேபோல ஐயங்காருக்குக் கீழே உள்ள அனைவரும் அர்ச்சகராக வேண்டும்.

எனது இந்த புத்தாண்டு கோரிக்கையை ஆதரிப்போர் மட்டும் வாழ்த்து கூறலாம்!

தொடர்புடைய பதிவுகள்:
மலத்தால் திருப்பி அடி! துடைப்பத்தைக் கைமாற்று!

Sunday, 6 September 2015

எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

மற்ற நாட்டினரைவிட  தங்கள் உயர்வை வலியுறுத்த இந்துக்கள்  எடுத்துக்கூறும் சிறப்பம்சங்களில் ஒன்று இந்தியாவில் இந்துக்களில் அடிமைத்தனம் இருக்கவில்லை என்பதும் தீண்டாமையைவிட மிகக் கொடூரமானது அடிமைத்தனம் என்பதும் ஆகும்.

முதலில் கூறப்பட்ட கூற்றே உண்மையல்ல. அடிமை முறை மனுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதர மனுஸ்மிருதி ஆசிரியர்களும் இதை விரிவுபடுத்தி ஒழுங்குபடுத்தி உள்ளனர். 1843 ஆம் ஆண்டு வரை இந்திய வரலாற்றில் அடிமை முறையைத் தொடர்ந்து காண முடிகிறது. அந்த ஆண்டு பிரிட்டிஷ் அரசு அதை ஒழித்திராவிட்டால் இன்றும் தொடர்ந்து அது வழக்கத்தில் இருந்திருக்கும் அடிமைத்தனம் இருந்த வரை தீண்டப்படாதவர்கள், தீண்டப்படுபவர்கள் ஆகிய இருவரையுமே அது பாதித்தது.

அடிமைத்தனத்தை ஒப்பிடும் போது தீண்டாமை ஒன்றுமேயில்லை, அமெரிக்காவிலுள்ள் ஒரு நீக்ரோவும், இந்தியாவிலுள்ள தீண்டப்படாதவர் ஒருவரையும் ஒப்பிடும் போது தனது முடிவே சரி-யானது என்பதுதான் லாலா லஜபதிராயின் கருத்தாக இருந்தது.

அடிமைத்தனத்தைவிட தீண்டாமை தீங்கற்றதா? தீண்டாமையைவிட அடிமைத்தனம் வளர்ச்சியை பாதிக்கிறதா?  அடிமைத்தனத்துக்கும் தீண்டாமைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டால் மட்டுமே அடிமைத்தனம்  என்பதற்கான பொருளை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

கணவனின் முழு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கம் மனைவியை அடிமை என்கிறோம். நிலத்தில் பிணைக்கப்பட்டிருக்கும் வேலையாளை பண்ணையடிமை என்கிறோம். இங்கே இவர்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதால் இது அடிமைத்தனம் போலாகிறது. சாதாரண மனிதர்களின் பார்வையில் ஒரு நபர் மற்றவர்கள் உடமையாகும் போது அடிமை என்று அழைக்கப்பபடுகிறான் அடிமை ஒருவன் எஜமானனின் சொத்து என்றால், அதன் பொருள் எஜமானன் அடிமையிடம் அவன் விருப்பத்திற்கு மாறாக வேலை வாங்க முடியும் அவனை அடமானம் வைக்கவோ, குத்தகைக்க விடவோ முடியும் அவனைக் கொல்வதுகூட சாத்தியமே. சட்டத்தின் பார்வையில் அடிமை என்பவன் வெறும் ஜடப் பொருளே. அதை எஜமானன் எந்த விதத்திலும் தன் விருப்பம் போல கையாள முடியும்.

பார்ப்பதங்கு தீண்டாமையைவிட அடிமைத்தனம் மிகக் கொடூரமாகத்தான் காணப்படும். ஓர் அடிமையை விற்கவோ, அடகு வைக்கவோ, குத்தகைக்கு விடவோ முடியும். ஆனால், ஒரு தீண்டப்படாதவரை விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகை்கு விடவோ முடியாது.

அடிமை என்பவன் யார்?

ஓர் அடிமை என்பவன் யார் என்பதை சட்ட ரீதியாகவும், துள்ளியமாகவும் புரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தின் பார்வையில் அடிமை என்பவன் ஒரு நபர் என்று கருதப்படாத மனிதன் ஆவான். நபர் என்ற சொல் மனிதன் என்ற சொல்லுக்கு இணையானது. சட்டம் நபர்களாக அங்கீகரிக்காத மனிதர்கள் சட்டத்தில் இருக்கலாம். மாறாகச் சட்டத்தில் மனிதரல்லாத நபர்கள் இருக்க முடியும்.

ஓர் அடிமை மனிதனாக இருப்பினும் சட்டத்தின் பார்வையில் அவன் ஓர் நபர் அல்ல. ஆனால் சிலை மனிதனாக இல்லாவிடினும் ஒரு நபர் என்று சட்டம் அங்கீகரிக்கிறது.

ஜடப் பொருள் மீதான உரிமை

ஜடப் பொருள் மீதான உரிமை, அதைப் பெறுவதற்கான உரிமை, அதை அனுபவிப்பதற்கான உரிமை, அதை விற்பதற்கான உரிமை என்பது சொத்து சம்பந்தமான உரிமைகளாகும்.

ஜடப்பொருளின் மீதான இந்த உரிமைகளைவிட மேலும் அதிக முக்கியத்தவம் வாய்ந்த உரிமைகள் ஒரு நபர் என அங்கீகரிக்கப்படும் நபருக்கு உள்ளன.

ஒரு நபருக்கான உரிமைகள்

  1. சொந்த உடலின் மீதான உரிமை – சரியான சட்ட நடவடிக்கை இல்லாமல் ஒருவன் கொல்லப்படாமல், முடமாக்கப்படாமல், காயப்படுத்தப்படாமல் இருப்பதறகான உரிமையை அவனது வாழ்க்கைக்கான உரிமை என்கிறோம்..
சரியான சட்ட நடவடிக்கைகளில்லாமல் ஒருவன் சிறையில் அடைக்கப்படாமலிருப்பதற்கான உரிமையைச் சுதந்திரத்திற்கான உரிமை என்கிறோம்.
  1. நற்பெயர் தொடர்பான உரிமை – மற்றவர்களால் பரிகசிக்கப்படுவதிலிருந்தும் மற்ற மனிதர்களின் பார்வையில் அவன் மதிப்பு இழப்பு ஏற்படாமல் இருத்தல், அவனது நற்பெயருக்கான உரிமை – மற்றவர்கள் அவன் மீது கொண்டுள்ள நற்பெயருக்குக் கேடு அளிக்காத உரிமை.
  2. அதிகாரங்களையும் சுதந்திர நடவடிக்கைகளையும் தங்கு தடையின்றி செயல்படுத்தும் உரிமை - எல்லாச் சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எந்தவிதத் தடையுமின்றி நிறைவேற்றவும் ஒரு நபர் என்ற முறையில் தனக்குரிய எல்லாவிதச் சலுகைகளை அனுபவிக்கவும் ஒவ்வொரு நபருக்கும் உரிமையுள்ளது.
இதில் தன் வாழ்க்கைத் தேவைக்காகத் தேர்ந்தெடுத்துள்ள தொழிலைத் தங்குதடையின்றி நடத்தும் உரிமை மிகவும் குறிப்பிடத்தக்க உரிமையாகும்.
இதே போல் பொது போக்கவரத்துச் சாலைகள், நீர்வழிப் போக்குவரத்து, பொதுநலச் செவை மையங்கள் ஆகியவற்றை உபயோகிக்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மனிதர்கள் யாவரையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்ட எந்திரம், அவனுக்கு பாதகமாக விரோதமாக, தீயநோக்கத்துடன் செயல்படாமல் இருக்கும் உரிமை இதனுடன் அடங்கும்.
  1. வலுக்கட்டாயத்தினால் மற்றும் மோசடியினால் ஏற்படும் இழப்பிலிருந்து சட்டப் பாதுகாப்புக்கான உரிமை – மோசடியான செயல்கள் மூலம் ஒரு நடவடிக்கைக்கு இசைவு தெரிவிக்கத் தூண்டிவிட்டு அதன் மூலம் இழப்பு ஏற்படுத்துவது, விருப்பதிற்கு எதிராக செயல்பட பலாத்காரமாக ஒருவனைக் கட்டாயப்படுத்துவது ஆகியவைகளிலிருந்து சட்ட பாதுகாப்பு பெறவும் ஒருவனுக்கு உரிமை உண்டு.
  2. குடும்ப உரிமைகள் – திருமணம் தொடர்பான உரிமைகள், பெற்றோர் தொடர்பான உரிமைகள், பாதுகாப்பு தொடர்பான உரிமைகள் இதில் அடங்கும்.
வன்முறை மூலமோ, ஆசைகாட்டுவதன் மூலமோ மனைவியுடனான கணவனுடைய உறவைப் பறிப்பது, தீய நோக்கத்துடன் அவளுடன் நெருக்கம் கொள்வது ஆகியவைகளிலிருந்து பாதுகாப்பு முதலியவை கணவனின் உரிமையான குடும்ப உரிமையாகும்.

சட்டத்தைப் பொருத்தவரையில் ஓர் அடிமை ஒரு நபர் என்று கருதப்படாததால் இந்த உரிமைகள் எதையும் பெற முடியாது. சட்டத்தின் பார்வையில் தீண்டப்படாதவர் ஒர நபர் என்றெ கருதப்படுகிறார். எனவே ஒரு நபருக்கு சட்டம் அளிக்கும் இந்த உரிமைகள் எதுவும் தீண்டப்படாதவருக்கு இல்லை என்று கூற முடியாது.

சொத்துரிமை, தன் உயிரை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, செல்வாக்குக் கேடுவராமல் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, குடும்ப உரிமை, தன் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் தங்குதயைின்றிப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை ஆகிய எல்லா உரிமைகளும் தீண்டத்தகாதவர்களுக்கு உள்ளன.

ஒர் அடிமை வெறும் சொத்தாக அங்கீகரிக்கும்போது அல்லது நபராக அங்கீகரிக்கப்படாதபோது தீண்டப்படாதவர்களைவிட அவர்கள் நிலை மிகப் பரிதாபகரமாகத்தான் தோன்றும்.

(ஆதாரம்: பாபசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்:

ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!


எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

Friday, 31 July 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 5

தீண்டாமையை கடைபிடிப்பதில் இஸ்லாமியர்களும் சளைத்தவர்களல்ல.


1934ம் ஆண்டு அம்பேத்கர் மற்றும் அவருடன் பணிபுரியும் தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 30 பேர் ஒரு சுற்றுலா செல்கின்றனர். அப்பொழுது தவுலாதாபாத் கோட்டையை பார்க்கச் சென்றபோது பயணக் களைப்பில் இருந்ததால் கோட்டைக்கு வெளியே இருந்த ஒரு குளத்தில் கை கால் கழுவினர். தெத்கள் (தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில்) குளத்தை அசுத்தம் செய்துவிட்டதாக ஒரு முகமதியர் கூப்பாடு போட்டார். தெத்களுக்கு கர்வம் பிடித்தவிட்டது. தெத்கள் தங்களுடைய மதத்தை மறந்துவிட்டனர் என இளம் மற்றும் வயதான முகமதியர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு அம்பேத்கரையும் அவரது நண்பர்களையும் வசை பாட ஆரம்பித்தனர்.

அவர்கள் தாக்கும் மனநிலையில் இருந்தனர். அவர்கள் தங்கள் கோபக்கனலை உள்ளூர் தீண்டத்தகாதவர்கள் மீது வீசினார்கள். மிகவும் ஆபாசமாகத் திட்டித் தீர்த்தனர். 

அதன் பிறகு தீண்டப்படாதவர்கள் உள்ளே எந்தத்தண்ணீரையும் தொட்டுவிடக்கூடாது என்கிற நிபந்தனையின் பேரில் ஆயுதங்தாங்கிய சிப்பாய் ஒருவன் பின்தொடர அம்பேத்கரும் அவரது நண்பர்களும் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒருவன் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்றால் அவன் முகம்மதியருக்கும் தீண்டத்தகாதவன்தானே என்பதை இந்த நிகழ்ச்சி படம் பிடித்துகாட்டுவதாக அம்பேத்கர் பதிவு செய்துள்ளார்.

தாயையும் சேயையும் கொன்ற தீண்டாமை

கத்தியவார் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான ஒரு பள்ளி ஆசிரியர் பிரசவித்திருந்த தனது மனைவி மற்றும் குழந்தைக்கு மருத்துவம் செய்ய அணுகிய போது தீண்டத்தகாதவர்களுக்கு மருத்துவம் செய்ய முடியாது என மருத்துவர் ஒருவர் மறுத்துவிட்டார்.

கெஞ்சிக்கூத்தாடிய பிறகு மற்றொரு மருத்துவர் வர ஒப்புக்கொண்டாலும் வீட்டிற்குள் வர மறுத்துவிட்டார். அதனால் தனது மனைவியை பிறந்த குழந்தையுடன் குடியிருப்புக்கு வெளியே கொண்டு வந்தார். பிறகு மருத்துவர் ஒரு வெப்பமானியை ஒரு முஸ்லீமிடம் கொடுக்க, அதை அவர் ஆசியிரியடம் கொடுக்க, அதன் பிறகு அந்த ஆசிரியர் அதை தன் மனைவியிடம் கொடுத்தார். அதை உபயோகித்த பிறகு அதே முறையில் அது திரும்பக் கொடுக்கப்பட்டது. நோயாளிக்கு நிமோனியா ஜீரம் எனக்கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அவளைப் பார்க்க மறுத்தவிட்டார். மருத்துவம் கிடைக்காததால் அந்தப் பெண் இறந்து போனார்.

மருத்துவர் படித்தவராக இருந்தும் தொழில் ரீதியான நடத்தை நெறிகளை குழிதோண்டிப் புதைத்துவிட்ட அந்த மருத்துவருக்கு மனசாட்சி உறுத்தவில்லலை. ஓர் இந்து தீண்டத்தாகாதவனைத் தொடுவதைவிட மனிதாபிமானமற்று இருப்பதையே சிறந்ததாகக் கருதுகிறான்.

வீடு வாடகைக்கு விடும் போது ஜாதி கேட்பதே தீண்டத்தகாதவனா என்பதை அறிவதற்கே!

குஜராத்  ஆமதாபாத்திலுள்ள பிற்பட்டோர் துறை அலுவலகத்தில் கிராம பட்வாரி (தலாத்தி) வேலைக்கு 1938 ம் ஆண்டில் தேர்வு செய்ப்பட்ட தாழ்த்தப்பட்ட பங்கி சாதியைச் சேர்ந்த இளைஞருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமையை அவரே விவரிக்கிறார்.

அலுவலக எழுத்தர்: ‘நீ யார்’?

‘ஐயா, நான் ஒரு ஹரிஜன்’

தூரப் போ! தள்ளி நில். இவ்வளவு அருகே நிற்க உனக்கு என்ன தைரியம்? இப்போது நீ அலுவலகத்தில் இருக்கிறாய். நீ வெளியே மட்டும் இருந்திருந்தால் உனக்கு ஆறு உதை கொடுத்திருப்பேன். இங்கு வேலைக்கு வர உனக்கு என்ன தைரியம்?’

தலாத்தி வேலைக்கான நியமனக் கடிதத்தையும் சான்றிதழ்களையும் தரையில் போடச் சொல்லி பிறகு அதை அவர் பொறுக்கி எடுத்துக் கொண்டார்.

அலுவலகத்தில் ஒரு தகரக் குவளையில் குடி தண்ணீர் இருக்கும். தொட்டால் தீட்டாகிவிடும் என்பதால் அதைத் தொடுவதற்கு இந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் அனுமதிக்கப்படவில்லை. இவருக்கு மட்டும் ஒரு பழைய அழுக்கான பானை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். குடிநீர் வழங்குபவர் இவர் குடிப்பதற்காக சிறிதளவு தண்ணீரை அந்தப் பானையில் ஊற்றி வைப்பார். ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு தண்ணீர் ஊற்றுவது பிடிக்காததால் அவர் எங்கேயாவது நழுவி விடுவார். அப்பொழுதெல்லாம் இவர் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் திண்டாட வேண்டும்.

.அதே போல எந்தச் சாதி இந்துவும் இவருக்கு வீடு வாடகைக்கு கொடுக்கவில்ல. அதனால் 6 மைல் தொலைவில் உள்ள தன் மூதாதையர் கிராமத்திலிருந்து அன்றாடம் வேலைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்.

இவருடைய தந்தை, அண்ணன் எல்லாம் அலுவலகத்தில் குப்பை கூட்டியவர்கள் இவர் மட்டும் எப்படி அலுவலக வேலை பார்க்கலாம் என்பதால் இவர் மீது வெறுப்பு காட்டினர். ஒரு முறை கிராம நூலகத்தின் நூலக அதிகாரியின் நாற்காலியில் அது அவருடையது எனத் தெரியாமல் உட்கார்ந்ததற்காக “இந்த பங்கி நாயை நாற்காலியில் உட்கார யார் அனுமதித்தது?” என கிராம நூலகத்தின் நூலக அதிகாரியின் தூண்டுதலின் பேரில் அங்கிருந்த மக்கள் வசைமாறி பொழிந்து கண்டதுண்டமாக வெட்டிவிடுவதாக இவரை மிரட்டினர். “இவ்வாறு மீண்டும் நடக்காது! நான் வேலையை விட்டுவிடுகிறேன்!” என இவர் இரக்கம் காட்டுமாறு கெஞ்சிக் கேட்ட பிறகுதான் அந்தக்கூட்டம் கலைந்தது. பிறகு 15 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பம்பாயிலுள்ள தன் பெற்றோரிடம் சென்றுவிட்டார்.

(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

“இன்று யார் சாதி பார்க்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்புவோர் ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்கு விடத்தயாரா?

தொடரும்…..

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனுஅதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனுஅதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனுஅதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனுஅதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

Wednesday, 22 July 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

சண்டாளர்கள் பறையர்கள்தான் என்பதை உறுதி செய்யும் வகையில் பறையன் என்ற சொல் மனுஸ்மிருதி தமிழ் மொழி பெயர்ப்பில் இரண்டு இடங்களில்  வருகிறது. (மனு:4:85,86). தீண்டப்படாதவர்கள் அனைவருமே இந்தச் சண்டாளர் என்கிற பட்டியலுக்குள் அடங்கிவிடுகிறார்கள்.

மிக அருவருக்கத்தக்க கழிவுகளை அப்புறப்படுத்திக் கொண்டும், பலதரப்பட்டவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து கொண்டும், அவர்களின் வீட்டு வாசலில் நின்று உணவு பெறுவதும், தூரத்தில் நின்று கடைகளில் மளிகை சாமான் வாங்குவதும், யாரையும் தீண்டாமலும், யாராலும் தீட்டுப்படாமலும் வாழ்வதுதானே தீண்டப்படாதவனின் நிலை. இத்தகைய ஒரு ஊரை அவன் எப்படி தனது ஊராகக் கருத முடியும் என கேள்வி எழுப்பி தீண்டாமையின் கொடூரத்தை தோலுரித்துக் காட்டுகிறார் அம்பேத்கர்.

தனது சொந்த அனுபவத்திலிருந்தும் பிறரது அனுபவங்களிலிருந்தும் தீண்டாமை குறித்த அவரது பதிவுகளில் சில….

வண்டியிலும் தீண்டாமை…

1901 வாக்கில் கோடை விடுமுறையைக் கழிக்க கோரேகானுக்குச் சென்ற போது இவர்கள் தீண்டப்படாத மஹர்கள் (சண்டாளர்கள்) என்பதை அறிந்த மாசூர் ரயில் நிலைய அதிகாரி இவர்கள் மீது காட்டிய அருவருப்பையும், மஹர்களை ஏற்றிச் சென்றால் இழிவாகிவிடும் என்பதற்காக மாசூரிலிருந்து கோரேகானுக்குச் செல்ல வண்டி ஓட்டிகள் வர மறுத்ததையும், நள்ளிரவில் சுங்கச் சாவடியில் தங்கியபோது இவர்கள் மஹர்கள் என்பதால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காததையும் அம்பேத்கர் மிக வேதனையோடு பதிவு செய்துள்ளார்.

தென்ஆப்ரிக்காவில் வண்டியில் பயணம் செய்த போது காந்தியை இழிவுபடுத்தியதற்காக வெள்ளைக்காரன் மிது வருகிற  கோபம் அம்பேத்கரை இழிவுபடுத்திய சாதி இந்துக்கள் மீது வராமல் போனது ஏன்?

வகுப்பறையில் தீண்டாமை….

அம்பேத்கருக்கு வயது ஒன்பது. பள்ளி வகுப்பறையில் தகுதி வரிசைப்படி இவர் உட்கார வைக்கப்படவில்லை. இவர் உட்காருவதற்கு என தனி சாக்குப்பை ஒன்று இருக்கும். பள்ளியை சுத்தம் செய்யும் வேலையாள்கூட இந்த சாக்குப்பையை தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்பதால் அதை தொடமாட்டானாம்.

அதே போல குடிநீர்க் குழாயைத் தொடமுடியாது. பள்ளிக்கூட பணியாள் குழாயைத் திறந்தால்தான் இவருக்குத் தண்ணீர் கிடைக்கும். பணியாள் இல்லை என்றால் தண்ணீரும் இல்லை.

முடியில்கூட தீண்டாமை…..

சலவையாளர்களுக்குப் பணம் கொடுக்க இவர்களுக்கு வசதி இருந்தாலும் தீண்டத்தகாதவர்களின் துணிகளை சலவை செய்ய சலவையாளர் எவரும் முன்வரவில்லை. இவரது மூத்த சகோதரிதான் இவரது துணிகளைத் துவைத்துக் கொடுத்துள்ளார். அதே போல முடிதிருத்தும் தொழிலாளிகளும் இவருக்கு முடிதிருத்த முன்வராததால் இவரது மூத்த சகோதரியே இவருக்கு  முடிவெட்டுகிற வேலையையும், சவரம் செய்கிற வேலையையும் செய்துள்ளார்.

(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

தொடரும்.

தொடர்புடைய பதிவுகள்:


தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!

சாதிப் பெருமை பேசுவதே வன்கொடுமைதான்!

தருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்...

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்...

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர...