Showing posts with label மோடி. Show all posts
Showing posts with label மோடி. Show all posts

Wednesday, 24 September 2025

மைசூர்பாகில் மிதக்கும் கோவை!

ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு, கோவையில் ஸ்வீட் விலை மளமளவென சரிந்துவிட்டதால், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உள்ளிட்ட கடைகளில் ஸ்வீட் வாங்க மக்கள் முண்டியடிப்பதால், அங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

விலை குறைவு என்பதால், மக்கள் மூன்று வேளையும் ஸ்வீட்டை மட்டுமே தின்பதால் காய்கறி, மளிகை சாமான், பழக்கடைகள் வெறிச்சோடி கிடப்பதாக வியாபாரிகள் ஒருபக்கம் கவலையடைந்துள்ளனராம்.

கோப்பு படம்

மைசூர்பாகை மூன்று வேலையும் தின்பதால், தான் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும், மக்கள் நலனைவிட வியாபாரிகள் நலன் பெரிதல்ல என்பதால், அது பற்றிக் கவலைப்படாமல், எல்லோரும் ஸ்வீட் வாங்கித் தின்று, 'டாடி'க்கு நன்றி கூறி, இன்புற்றிருக்க வேண்டும் என  இனிப்பு வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்கள் தனது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதாகவும் கோவை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

விலை மலிவு என்பதால் ஒரு வாரத்துக்குத் தேவையான இனிப்புகளை மொத்தமாக வாங்கிச் செல்ல மக்கள் முயல்வதால், ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு மூன்று கிலோவுக்கு மேல் தரக்கூடாது என ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு குடும்பத்திற்கு ஒருவர்தான் ஸ்வீட் வாங்க வர வேண்டும் என்றும், வரும் போது குடும்ப அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

மேலும், பிற மாவட்டங்களிலிருந்து கோவையை நோக்கி மக்கள் படையெடுப்பதால், மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்படுவதாகவும், மக்கள் கோவைக்கு எதற்காகச் செல்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப அனுமதியைக் கட்டுப்படுத்துவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஸ்வீட் ஸ்டால்களில் மொய்க்கும் கூட்டத்தைப் பார்த்து, இனி 'அடுத்த முறையும் தாம்தான் சட்டமன்ற உறுப்பினர்' என்ற மகிழ்ச்சியில் வானதி திளைத்திருப்பதாகவும், தனது மகிழ்ச்சியை மக்களிடையே மைசூர்பாகுடன் பரிமாறிக்கொள்ளும் வேளையில், அதைத் தடுக்க திமுக அரசு சதி செய்வதாகவும் பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

எது எப்படியோ, ஜிஎஸ்டி குறைப்பால் கோவை மக்கள் இனிப்பில் மிதக்கிறார்கள். எனக்குகூட கோவை செல்ல ஆசை வந்துவிட்டது. கோவை செல்ல அனுமதி எங்கே வாங்க வேண்டும், வெளியூர் குடும்ப அட்டைகளுக்கு ஸ்வீட் கிடைக்குமா என்பதைத் தெரிந்தவர்கள் பகிர்ந்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன். 

ஊரான்

Wednesday, 17 April 2024

சூரிய ஒளி: கல் அமைதி காக்கிறது. மனிதன் ஆர்ப்பரிக்கிறான்!

தன் மீது ஒளி விழுந்த போதும்,
இது ஒன்றும் அதிசயம் இல்லை என்று  அந்தக் கல்லும் அமைதி காக்கிறது. ஆனால், ஆறறிவு படைத்த மனிதனோ ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறான்.

அறிவியல் தொழில்நுட்பம் அறியாத மக்களை மகிழ்விப்பதற்கோ அல்லது ஏமாற்றுவதற்கோ அல்லது முட்டாள்கள் ஆக்குவதற்கோ அறிவியல் தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. 

இது போன்ற 'அதிசயங்களுக்குப்' பின்னே உள்ள அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய புரிதல் அல்லது தகவல் மிகச் சொற்பமானவர்களிடம் மட்டுமே எடுத்துச் செல்லப்படுகிறது. மாறாக, பெரும்பான்மையானோர் வாய்வழிச் செய்தியாகவே கேட்டு அதை நம்பும் நிலைதான் இன்னமும் நீடிக்கிறது. 


அறிவியல் தொழில்நுட்ப அறிவும் இயக்கவியல் பொருள் முதல்வாத (dilectics of materialism) அறிவும் பாமரனையும் எட்டும் வரை இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கும். 

மேலும் துன்பங்களும் துயரங்களும் வாழ்க்கையில் தொடரும் வரை அறிவியல் தெரிந்தவர்களும் இதற்குள் இழுத்துச் செல்லப்படுவார்கள் என்பதும் கள எதார்த்தம்.

அறிவியல் தொழில்நுட்ப அறிவு மேலோங்கி, துன்பங்களும் துயரங்கள் அற்ற ஒரு வாழ்க்கை முறை அமையும் சமூகத்தில் வேண்டுமானால் இது போன்ற ஏமாற்று வேலைகள் மறைந்து ஒழியும். எனவே அது போன்ற ஒரு சமூகத்தை நோக்கி பயணிப்பதுதான் இன்றைய காலத்தின் தேவை.

ஊரான்

செய்தி: இந்து தமிழ், ஏப்ரல் 18, 2024

Tuesday, 29 August 2023

கேரளாவை உலுக்கிய ஐயங்காளியின் மாட்டு வண்டிப் போராட்டம்!

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளம்!

கேரளா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நாயர் டீ கடை, மூனாறு உள்ளிட்ட எழில் மிகு தேயிலைத் தோட்டங்கள், கொச்சி உள்ளிட்ட அழகிய கடற்கரை நகரங்கள், நேந்திரம் சிப்ஸ், கதக்களி, மகாபலி, ஓணம், அன்றைய ராதா-அம்பிகா முதல் இன்றைய கும்கி லட்சுமி மேனன் வரையிலான கேரள நாட்டிளம் பெண்டிர், இறுதியாக முல்லைப் பெரியார். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று, ஐயங்காளி!

உங்களுக்குத் தெரியுமா! நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை புலையர்கள் தூய்மையான ஆடைகளை உடுத்தக் கூடாது; கற்கள் மற்றும் மரத்தினால் ஆன ஆடைகளைத்தவிர வேறு துணி ஆடைகளையோ, தங்கநகை ஆபரணங்களையோ அணியக்கூடாது; திருவனந்தபுர நகர வீதிகளில் நுழையவோ நடக்கவோ கூடாது; மாட்டு வண்டிகளில் (அன்றைய பிளஷர் கார் போல!) பயணம் செய்யக் கூடாது; பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயிலக் முடியாது என்ற நிலைதான் இருந்தது. கேரளாவில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட சாதிகளில், ஒரு சில தீண்டத்தகாத சாதிகளில் ஒன்றுதான் புலையர் சாதி.
 
ஆச்சரியமாக இருக்கிறதா? இன்று கல்வியில், இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் கேரளாவின் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டில், அதாவது ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் இருந்தது என்றால் நம்ப முடிகிறதா?

 
மாட்டு வண்டிப் போராட்டம்

1893 ஆம் ஆண்டு ஒரு நாள் வெள்ளை வெளேர் சட்டையுடன், தோள்மீது படிந்த துண்டு மற்றும் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, சாட்டையைச் சுழற்றியவாறு திருவனந்தபுரம் வீதிகளில் மாட்டு வண்டியில் கம்பீரமாய் ஒருவன் பயணம் செய்கிறான். நாயர் சாதி ஆண்களும், பெண்களும் மட்டுமே பயணிக்கக் கூடிய காலத்தில், நாயர் அல்லாத முப்பது வயதே ஆன இளைஞன் ஒருவன் பயணிக்கிறான்.
 
பொது வெளியில் எங்கெல்லாம் புலையர் சாதி மக்கள் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்ததோ அங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டிக் கொண்டு தனது நடைபயணத்தைத் தொடங்குகிறான் 1863 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28  அன்று பிறந்த ஐயங்காளி என்ற போராளி.
 
1898 இல், அரளமூடு சந்தையை நோக்கி பலராமபுரம் சாலியர் தெருவில் நடைபயணம் நுழைந்த போது, ‘தடையை மீறி புலையர்கள் உள்ளே நுழைவதா?’ என‌ ஆத்திரம் கொண்ட ஆதிக்கச் சாதியினர் தாக்குதல் தொடுக்கின்றனர். இந்தத் தாக்குதல் புலையர்களால் முறியடிக்கப்பட்ட பிறகே, பொதுப் பாதையை அவர்களால் பயன்படுத்த முடிந்தது.
 
இதன் விளைவாக சாலியர் கலவரம் என்றழைக்கப்படும்  இந்தப் போராட்டம் திருனந்தபுரத்தை ஒட்டி உள்ள கழக்கூட்டம், கனியபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவுகிறது.
 
பொதுப் பாதையில் நடப்பதற்கான உரிமை கேட்டு, ஐயங்காளி அவர்கள் மேற்கொண்ட இந்தப்போராட்டத்தின் விளைவாக 1900 ஆம் ஆண்டு முதல், புலையர்கள் பொது இடங்களில் நடப்பதற்கான சூழ்நிலை உருவானது.

கல்விக்கான போராட்டம்
 
ஐயங்காளி அவர்களின் போராட்டம் இதோடு நிற்கவில்லை. புலையர்கள் கல்வி பயில பொதுப்பள்ளிகளில் அவர்களை சேர்க்கக் கோரி அரசிடம் முறையிடுகிறார். ஒரு முறை மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குள் நுழைகிறார். பிறகு, தானே புலையர்களுக்கான பள்ளி ஒன்றைத் திறக்கிறார். ஆதிக்கச் சாதியினர் இதைக் கடுமையாக எதிர்த்ததோடு, முதல் நாளே அவரது பள்ளியை எரிக்கின்றனர்.
 
பொதுப் பள்ளியில் புலையர்களை சேர்க்கவில்லை என்றால், ஆதிக்கச் சாதியினரின் நிலங்கள் தரிசாக விடப்பட்டு, அதில் களைகள் மட்டுமே முளைக்கும் என்கிற போர்ப் பிரகடனத்தை அறிவிக்கிறார் ஐயங்காளி.
 
அதுவரை, புலையர்களின் உழைப்பில் உண்டு வாழ்ந்த ஆதிக்கச் சாதிக் கும்பல் அரண்டு போகிறது. இதன் விளைவாக புலையர்களை பொதுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்வதற்கான அரசாணை ஒன்றை ஆங்கிலேய‌ அரசு வெளியிடுகிறது. இதற்கும் ஆதிக்கச் சாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், 1910 மற்றும் 1914 ஆகிய ஆண்டுகளில் அரசாணைகளை வெளியிட்ட பிறகே, புலையர்கள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
 
புலையர்கள், பொதுச் சாலைகளைப் பயன்படுத்த, தூய்மையான ஆடைகளை அணிய, பொதுப் பள்ளிகளில் கல்வி பயில, “கல்லுமல சமரம்” என்று அழைக்கப்படும் பேரெழுச்சி 1915 இல்  நடைபெற்றது.

தூய ஆடை அணியக்கோரி போராட்டம்
 
கற்கள் மற்றும் மரத்தினால் ஆன ஆடைகளைக் தவிர துணி உள்ளிட்ட வேறு ஆடைகளை புலையர் பெண்கள் அணியக்கூடாது என்றிருந்த தடையை உடைக்க, அவற்றையும் தூக்கி வீசுங்கள் என ஒரு கூட்டத்தில் அறைகூவல் விடுக்கிறார் ஐயங்காளி. இதை அறிந்த ஆதிக்கச் சாதியினர் புலையர்கள் நடத்திய கூட்டத்தில் தாக்குதல் நடத்தியதோடு, புலையர்களின் வீடுகளையும் தீயிட்டு எரிக்கின்றனர். இதற்கு எதிராக, பேரணிகள், வேலை நிறுத்தங்கள், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை மேற்கொள்கிறார் ஐயங்காளி.

மகாத்மா ஐயங்காளி
 
மகாத்மா காந்தி கேரள மண்ணில் கால் பதிப்பதற்கு முன்பாகவே, ஒடுக்கப்பட்ட சாதி மக்களை விழிப்புணர்வு செய்ததில் ஒரு அழியாத் தடத்தை ஏற்படுத்தியதால்தான், ஐயங்காளி, “மகாத்மா ஐயங்காளி” என அழைக்கப்படுகிறார். அதன்பிறகுதான் காந்தி மகாத்மாவாகிறார்.
 
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1911 முதல் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் திருவிதாங்கூர் அசெம்ளிக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் ஐயங்காளி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
 
ஐயங்காளியை தவிர்த்துவிட்டு கேரள வரலாற்றை எழுத முடியாது. அதனால்தான் திருவனந்தபுரத்திலுள்ள “பழை விக்டோரியா ஜூப்ளி டவுன் ஹால்” பெயர், “மகாத்மா ஐயங்காளி ஹால்” என 2019 முதல் அழைக்கப்படுகிறது. கேரள ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம், 2010 முதல் ஐயங்காளி பெயரில் அழைக்கப்படுகிறது. 1980 இல் ஐயங்காளி அவர்களின் சிலையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
 
எந்த சனாதன சக்திகள் ஐயங்காளிகளை அன்று அடக்கி ஒடுக்க முனைந்ததோ, அதே சனாதன சக்திகளின் பிரதிநிதியான நரேந்திர மோடி, இன்று, ஐயங்காளிகளுக்குப் புகழாரம் சூட்டுகிறார். எச்சரிக்கை! சனாதன மீட்டுருவாக்கம் நடைபெறும் இன்றைய சூழலில் ஓராயிரம் ஐயங்காளிகள் இன்று தேவைப்படுகிறார்கள்! சனாதனிகளை வீழ்த்த!
 
ஊரான்
 
THE PRINT ஆங்கில ஏட்டில் Keshav Padmanabhan அவர்கள் எழுதிய‌ ஆங்கிலக் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரை.

https://theprint.in/theprint-profile/ayyankalis-bullock-cart-ride-changed-caste-dynamics-in-kerala/1734496/?amp

Saturday, 5 August 2023

'அக்கா'வின் ஆட்டுக் குட்டி தலையாட்டுமா?

ஆடு வளர்த்தாவது பெரியாளாகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான் அந்தத் தாடிக்காரன். சீமைக்(காய்)குட்டியே சிறந்த குட்டி என்று கணக்குப் போட்டு தேடிப் பிடித்து ஓட்டி வந்தான். இலை கிடைக்கும் இடமாய்ப் பார்த்து வளர்க்கத் தொடங்கினான். 

ஆடு குட்டியாய் இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாய்த்தானே இருக்கும். அதனால் போவோர் வருவோரெல்லாம் குட்டியை கொஞ்சத் தொடங்கினர். 

பலமுறை, பிடறியால் தன்மொகரையைப் பேர்த்தபோதும்,  ‘பாவம் குட்டிதானே' என்று பொறுத்துக் கொண்டான் ‘இலை’ கொடுத்தவன்.

கொங்கக்காவின் பராமரிப்பில் பக்குவமாய் வளர்ந்து வந்தது ஆட்டுக் குட்டி. குட்டிக்குப் பசி எடுக்கும் போதெல்லாம், அது வேலி தாண்டக்கூடத் தயங்கியதில்லை. அக்கம் பக்கம் சண்டைக்கு வந்த போதும், அவள் பொருமை காத்தாள். எப்படியாவது எதையாவது தின்று குட்டி பெருத்தால் சரி என்பது அவள் கணக்கு.

குட்டி இப்பொழுது கொழுகொழுவென வளர்ந்து கிடாவாகி விட்டது. கோவிலுக்கு நேர்ந்து விட்டாற்போல அது ஊரெங்கும் திரியத் தொடங்கியது. 

தூர விரட்ட நினைத்தோரை அது முன்னங்கால்களால் எட்டி உதைத்தும், குட்டைக் கொம்புகளால் முட்டப்பார்த்தும் துரத்த முனைந்தது. அது பாவ்லாதான் எனப் புரிந்து கொண்டோர் துரத்தி விரட்டினர்; பயந்து நடுங்கியோர் ஒதுங்கிச் சென்றனர்.

மாதங்கள் உருண்டோடின. ஆடியும் வந்தது. சீமையிலே மழை சரியாய்ப் பொழியாததால் ஆற்றிலும் நீர் பெருக்கெடுக்கவில்லை. இருந்தாலும் என்ன? கசியும் நீரிலாவது கடமையை முடிக்க வேண்டுமல்லவா?

இதோ பதினெட்டும் வந்து விட்டது. கிடாவைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, பூ மாலையிட்டு, வீதி வழியாக ஆற்றை நோக்கி ஓட்டலானாள் கொங்கக்கா. போகும் வழி நெடுக, மாலைநேர கறிவிருந்தை நினைத்து நாக்கில் எச்சில் ஊற, ஆட்டுக்குக் கட்டுக் கட்டாய் ‘புல்' கொடுத்து குதூகலித்தது உடன் சென்ற கூட்டம்.

ஆறும் நெருங்கியது. அங்கேயும் ஒரு பெருங்கூட்டம் ஆட்டுக்காகக் காத்திருந்தது. பூஜைகள் கனஜோராய் நடக்கத் தொடங்கின. பூஜை முடிந்து மேடைநோக்கி ஆட்டை ஓட்டிச் சென்றனர். பூசாரி தீர்த்தச் செம்போடு மேடையை நெருங்கினான். 

உள்ளூர் கிடாவென்றால் தீர்த்தம் தலையில் பட்டவுடன் தலையாட்டிவிடும். ஆனால், இது சீமைக்காய் கிடாவாச்சே! தலையை ஆட்டுமா ஆட்டாதா என்ற பதட்டத்தில்  கொங்கக்கா!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Tuesday, 25 July 2023

வெண்ணெய்க் கூட்டம்!

'டிராக்டர்களின்' பயன்பாட்டால்
ஏர் மாடுகள் 
அற்றுப் போயின!
ஏர் கலப்பைகளும் 
காட்சிப் பொருளாயின.

இனவிருத்திக்காக 
எங்கோ,
சில காளைகள் மட்டுமே 
வாட்டமாய் வளர்க்கப்படுகின்றன!
எஞ்சிய காளைகள் 
கறிக்குப் பலியாக
பசுக்கள் மட்டுமே 
பராமரிக்கப்படுகின்றன
பாலுக்காக!

அன்று,
தவிடும் புண்ணாக்கும்
தவிர்க்க முடியா தீவனமாய்!
இன்று,
SKM, கௌ கேர் - என
சந்தையில்
எண்ணற்ற தீவனங்கள் 
கல்லா கட்ட!

என்னதான்,
பசும்புல்லும் 
வைக்கோலும்
வயிற்றை நிரப்பினாலும்
காய்ந்த
மொறுமொறுப்பான
மல்லாட்டக் (1) கொடிகளே
மாடுகளின் 
மனங்கவர்ந்த தீனியாகும்!

கல்லக்காயைப் (1) பறித்தெடுத்து 
இலைகள் உதிராமல்
கொடிகளைப் (செடிகளை)
பக்குவமாய்க் காய வைத்து - பின்
போராக்கி
உச்சியிலே பர்தா (2) போட்டு 
மூடுகின்றான்
மழையில் நனையாமல்
பாதுகாக்க!



அடிக்கும் காற்றில் 
பர்தாவும் 
பறக்காமல் இருக்க - சேலையால்
இருக்கமாய் 
இழுத்துக் கட்டி 
காக்கின்றான் போரை,
கரந்த பாலை 
அப்படியே
நமக்களிக்கும்
நம்மவன்!

ஆனால்,
பசுக்களுக்கு - ஒரு 
புல்லும் புடுங்காத
வெண்ணெக் கூட்டமொன்று
'கோமாதா பாரத்மாதா'வென 
ஓயாமல் ஓலமிட்டு 
இந்தியத் தாய்களைத் 
துகிலுரித்துக் கெக்கலிக்கும் 
கேடுகெட்ட 'தேசமடா' இது!

ஊரான்

குறிப்பு: 

1. வேர்க் கடலையை, கல்லக்கா (கடலைக் காய்), மல்லாட்ட (மணிலாக் கொட்டை) என்றழைப்பது ஊர்வழக்கு. 

2. மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாலின் அல்லது வைக்கோல் போட்டு போரை மூடுவார்கள். அதைத்தான் இங்கே பர்தா எனக் குறிப்பிட்டுள்ளேன். 

தொடர்புடைய பதிவுகள்

Saturday, 15 July 2023

பெருந்தலைவர் காமராசர் ஏன் நினைவு கூறப்பட வேண்டும்?

சங்க காலம், சனாதன காலம் தொடங்கி அதன் பிறகு மன்னர் ஆட்சி, அந்நியர் ஆட்சி எனத் தொடர்ந்து, இன்றைய மக்களாட்சிக் காலகட்டம் வரை பல்வேறு புலவர்களையும், மன்னர்களையும், தலைவர்களையும் நாம் நினைவு கூர்ந்து வருகிறோம். அவ்வாறு நாம் நினைவு கூறும் போது, அவர்களுடைய நேர்மறை மற்றும் எதிர்மறை உள்ளிட்ட இரண்டு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இன்றைய காலகட்டத்திற்கு எது தேவையோ அதை மக்களிடையே உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்களை நினைவு கூர்வதில் ஏதேனும் பொருள் இருக்க முடியும்.

மாறாக, தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்குதல் என்கிற அளவுக்கு மட்டும் நிறுத்திக் கொண்டால் அவர்களுடைய கருத்துக்கள் எதுவும் மக்களிடையே போய்ச் சேராது; மாறாக அது ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாகவே கடந்து போகும்.

*****
அனைத்து மதத்தினர், அனைத்துச் சாதியினர், அனைத்துக் கட்சியினராலும் பெருந்தலைவர் என்று போற்றப்படும் முன்னாள் தமிழகத்தின் முதலமைச்சர் திரு.கு.காமராசர் அவர்களின் 121-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் எங்கும் பல்வேறு கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்ததோடு, இந்திய அரசியலை நிர்ணயிக்கும் மிகப்பெரிய ஆளுமையாக காமராசர் அவர்கள் இருந்ததனால் அவரை காங்கிரஸ் கட்சியினர் கூடுதல் மரியாதையோடு நினைவு கூறுகின்றனர். 

கடந்த 30 ஆண்டுகளாக, தமிழகத்தில் சாதிய அரசியல் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிய பிறகு அனைவருக்குமான தலைவர்கள் எல்லாம் தங்களுடைய சாதிக்கான தலைவர்களாக சுருக்கப்பட்டு வருகின்றனர். அப்படித்தான் காமராசரையும் நாடாராக சுருக்கி விட்டார்கள். இதை சாதிய அரசியலின் உச்சம் என்றுகூட சொல்லலாம். 

*****
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாசாபேட்டை பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் விழா நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. இசைச்செல்வர் சீனி சம்பத் அவர்களின் பாடல்களோடு தொடங்கிய நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு. முனிரத்தினம் அவர்கள் வந்த பிறகு, அவரும் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் அவர்களும் சிறிது நேரம் உரையாற்ற, அதன் பிறகு பள்ளி சிறுவர்களுக்கு நோட்டு பேனா வழங்கி, அன்னதானம் வழங்கி நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.

வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் மட்டும் காமராசரின் சாதனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க உள்ளிட்ட சனாதன சக்திகள் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய அரசியல் சூழலில், காமராசரைக் கொண்டு சனாதன சக்திகளை சம்மட்டியால் அடிக்கும் வகையில் காமராசரின் நேர்மறை கருத்துக்களை மக்களிடையே பதிவு செய்யும் போதுதான் அது காமராசருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும்.





மூணு கதர் வேட்டிச் சட்டைகள் மற்றும் 150 ரூபாய் சொச்சப் பணம்; இதுதான் காமராசர் இறந்த போது அவர் விட்டுச் சென்ற சொத்து. காசு பணம் என்று கோடிகளில் புரளும் இன்றைய அரசியல்வாதிகளை ஒப்பிடுகையில் காமராசர் உண்மையிலேயே ஒரு ஏழைப் பங்காளன்தான்; மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பெரும் தொழிலதிபராக இருப்பவர்களை வாழும் காமராசர் என்று வாய்கூசாமல் மேடையில் புகழும்போது அது காமராசரையே இழிவுபடுத்துவதாக அமைந்துவிடுகிறது. 

*****
மகாரத்தனா ஆலைகளில் ஒன்றான BHEL பாய்லர் ஆலை காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் திருச்சியில் தொடங்கப்பட்டது. தவிர, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் (NLC), சென்னை மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஊட்டியில் இந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் ஆலை என அரசுத் துறை ஆலைகளும் இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட எண்ணற்ற தமிழ் நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற முடிந்தது.

1917 லெனின் தலைமையில் ரஷ்ய நாட்டில் ஏற்பட்ட சோஷலிச புரட்சி, அதைத் தொடர்ந்து லெனின் ஆட்சிக் காலத்திலும், ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலும் ஏற்படுத்தப்பட்ட பொதுத்துறைகளினால் அபார வளர்ச்சி கண்ட ருசிய நாட்டின் கொள்கைகளைத்தான் இந்தியாவிலே நேருவும் கடைபிடித்தார். அதன் தாக்கத்தினால்தான் இந்தியாவில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டன.

12 மகாரத்னா, 12 நவரத்னா, 12 மினிரத்னா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டு மிக வெற்றிகரமாக செயல்பட்டு வந்தன. உலகமயம் தாராளமயம் தனியார் மையம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் 1990 களின் தொடக்கத்தில் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கிய காலம் தொட்டு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்கிற நடைமுறை அமுலுக்கு வந்தது. 

ஆலைகளை நடத்துவது, அதாவது தொழில் செய்வது ஆட்சியாளர்களின் வேலை அல்ல; ஆட்சியை நடத்துவது அதாவது நிர்வாகம் செய்வது மட்டுமே ஆட்சியாளர்களின் வேலை என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட சனாதனக் கும்பல் ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு, வாஜ்பாய் காலத்திலும் அதைத் தொடர்ந்து மோடி காலத்திலும் பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாகத் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன அல்லது மூடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெற்று வந்த எண்ணற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொண்டு விட்டது பாஜக அரசு. இப்பொழுது எஞ்சி இருப்பது கோவணம் மட்டுமே, அதாவது ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே. மீண்டும் ஒரு முறை சங்பரிவாரக் கும்பல் ஆட்சிக்கு வருமேயானால், எஞ்சியிருக்கிற கோவணமும் உருவப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தப்படுவோம். 




காமராசர் கடைப்பிடித்து வந்த பசுவதைத்  தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு, சாதியக் கட்டமைப்பைப் பலகீனப் படுத்தும் சோசலிச சமத்துவக் கோட்பாட்டுக்கு ஆதரவு உள்ளிட்டவைகளால் காமராசர் மீது ஆத்திரம் கொண்ட சனாதனக் கும்பல் 1967 ஆம் ஆண்டு டெல்லியில் காமராசர் தங்கியிருந்த வீட்டுக்குத் தீ வைத்து அவரைக் கொலை செய்த முயன்றது என்பதை மனதில் கொண்டு, ஆட்சி அதிகாரத்திலிருந்து சங்பரிவாரக் கும்பலை அப்புறப்படுத்தவும், கருத்தியல் தளத்தில் இந்தக் கும்பலுக்கு எதிராகக் களமாடவும் நாம் உறுதி ஏற்பது ஒன்றுதான் காமராசருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

ஊரான்

Monday, 20 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-7

 VII

குஜராத் இனப்படுகொலை

முதலில் மோடியை குஜராத்தின் முதலமைச்சராக்கி, குஜராத்தின் வளர்ச்சி நாயகன் என்கிற பிம்பத்தைக் கட்டமைத்தார்கள். குஜராத் மாநிலம் வேகமாக வளர்ந்து வருதாகக் கதை அளந்தார்கள். அதற்கு, “குஜராத் மாடல்” என்று நாமகரணம் சூட்டி அவர்களுக்கள்ளாகவே அகமகிழ்ந்து கொண்டார்கள். குஜராத்தின் வளங்களை கொள்ளையடிக்க அதானிக்கும், அம்பானிக்கும் பட்டுக் கம்பளம் விரித்ததைத் தவிர மோடி வேறு எதையும் செயவில்லை என்பதை நாடறியும். அதற்குக் கைம்மாறாக அவர்கள் மோடிக்குக் கோடிகளை வாரிக் கொடுத்தனர். இவற்றை எல்லாம் மூடிமறைப்பதற்காக இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகக் கட்டமைத்து, ஆதாரம் ஏதும் இல்லை என்ற போதிலும் கோத்ரா இரயிலை எரித்தவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்கிற பொய்யைத் திட்டமிட்டே பரப்பி, “இஸ்லாமியர்களுக்குப் பாடம் புகட்டுவோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்து, 2002 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். இந்தத் தாக்குதல் மூலம் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்து டெல்லிக் கோட்டைக்குப் பாதை அமைத்துக் கொண்டார் மோடி. குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் படுகொலைகளுக்கு மோடிதான் காரணம் என்பதை அம்பலப்படுத்தி பிபிசி நிறுவனம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெளியிட்ட ஆவணப்படத்தை மோடி அரசு தடைசெய்ததன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரானப் படுகொலைகளை மூடிமறைக்க முயன்றது. ஆனால் தடையையும் மீறி இரத்தக்கரை படிந்த மோடியின் கோரப் பற்கள் வெளியே தெரிந்ததை அவர்களால் மறைக்க முடியவில்லை.

டிஜிட்டல் பரிவர்த்தனை

2014  ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என ஆசை வார்த்தைக் கூறி அனைவரையும் வங்கிக் கணக்குத் தொடங்கச் சொல்லி நம்மை வங்கி வலைப் பின்னலில் சிக்கவைத்தார்.  குறைந்தபட்ச இருப்பு இல்லை எனக் கூறி நம் பாக்கெட்டில் இருந்த பணத்தை எல்லாம் வங்கிகள் அபகரித்துக் கொண்டதைத் தவிர வேறு எதைக் கண்டோம் நாம்?

எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என மாயாஜாலம் காட்டினார் மோடி. நாமும் அதை நம்பி ஜி-பே, கூகுள் பே என அதன் பின்னால் ஓடினோம். இன்று அதற்கும் கட்டணம் வசூலித்து கல்லா கட்டுகிறது மோடி அரசு.

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சங்களை இழந்த பலர் கடன் சுமையிலிருந்து மீள முடியாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றினால் அதைக் கிடப்பில் போட்டு வேடிக்கை காட்டுவதோடு, தற்கொலைகளுக்கு வெண்சாமரம் வீசி வருகிறார் ஆளுநர் ஆர்.என் இரவி. 

பண மதிப்பிழப்பு

கள்ளப் பணம் நாட்டில் பெருகிவிட்டதாகவும், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை பலர் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறி புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016 நவம்பர் 8 அன்று திடீரென அறிவித்தார் மோடி. ஏ.டி.எம் எந்திரங்களில் இருந்த ரூபாய் நோட்டுகள் உருவப்பட்டன. கார்டைச் சொருகினால் பணத்தாளுக்குப் பதிலாக காற்றுதான் வந்தது.

வங்கிக்குச் சென்று மணிக் கணக்கில் கால்கடுக்க நின்றும் வெறும் கையோடு திரும்ப வேண்டியதாயிற்று. அன்றாட தேவைக்கும் அவசரத் தேவைக்கும் பணம் கிடைக்காமல் மக்கள் பரிதவித்தனர்.  ஏதோ கருப்புப் பணம் ஒழிந்தால் சரி என மக்களும் தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைத் தாங்கிக் கொண்டனர். அதன் பிறகு புதிய 500 ரூபாய் தாள்களையும் 2000 ரூபாய் தாள்களையும் புழக்கத்திற்குக் கொண்டு வந்தனர். ஆனால் இன்று 500 ரூபாய்த் தாள்களை மட்டுமே பார்க்க முடிகிறது. 2000 ரூபாய்த் தாள்கள் எங்கே சென்றன என்பது மர்மமாகவே உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகுதான் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகள் அதிகரித்தன. அதன் விளைவுதான் இன்று நாம் காணும் அதானியில் இமாலய நிதி மோசடி.

விலைவாசி உயர்வு

பணமதிப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் முற்றிலுமாக ஒழிக்கப்படும், அதன் விளைவாக விலைவாசி குறையும் என நம் நாவில் தேன் தடவினார்கள். நாமும் நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு மீண்டும் மோடியை பிரதமராக்கினோம். என்ன நடந்தது?

2014 க்கு முன்பு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சுமார் 400 ரூபாயாக இருந்த போது விலைவாசி விண்ணை முட்டுவதாகக் கூப்பாடு போட்டவர்கள் ஆட்சிக்கு வந்த பின் இன்று ஒரு சிலிண்டர் கேஸ் விலை 1100 ரூபாயைத் தாண்டிவிட்டது. 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ.103. ரூ.55 க்கு விற்பனை செய்யப்பட் டீசல் விலை இன்று ரூ.95. மோடியை மீண்டும் பிரதமராக்கியது நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொண்ட கதையாவிட்டது நமது கதை.

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-4


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-1

Sunday, 19 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5

V

ஹர்ஷத் மேத்தா

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பெயரில் இந்தியச் சந்தையை உலகச் சந்தைக்கு திறந்துவிட்ட 1990-களின் காலகட்டத்தில், ஹர்சத் மேத்தா என்கிற பங்குச் சந்தைத் தரகரின், பங்குச் சந்தை மோசடி இந்திய முதலீட்டாளர்களை நிலைகுலையச் செய்தது. முறைகேடுகளில் ஈடுபட்ட ஹர்சத் மேத்தா மீதான 23 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஹர்சத் மேத்தா அங்கேயே மாண்டு போனார். ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்த பலர் தங்களுடைய சுமார் ரூ.3542 கோடி மதிப்பிலான சொத்தை இழந்து நடைபிணமாய் வீதியில் வீசப்பட்டனர்.

விஜய் மல்லய்யா

எப்பொழுதும் அழகிகளோடு ஆட்டம் போடும் பிரபல கிங்பிஷர் சாராய அதிபரும், யுனைட்டடு பிரீவரீஸ் நிறுவனத்தின் முதலாளியுமான விஜய் மல்லய்யாவை அறியாதோர் உண்டோ? சாராயத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே, 2005 ஆம் ஆண்டு வாக்கில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஒரு விமான சேவை நிறுவனத்தைத் தொடங்குகிறார். அதற்காக பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பலகோடி ரூபாயைக் கடனாகப் பெறுகிறார். ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே போதிய வருவாய் இல்லை என்கிற காரணத்தைக் காட்டி கிங்பிஷர் ஏர்லைன் நிறுவனத்தை இழுத்து மூடுகிறார். கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பி அடைக்க நெருக்குதல் கொடுத்த போது, 2016 மார்ச் 6 அன்று இந்தியாவைவிட்டு தப்பிஓடி இங்கிலாந்தில் அடைக்கலமாகிறார்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB), ஐடிபிஐ (IDBI), பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 17 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து அவர் கடனாகப் பெற்ற சுமார் ரூ.9000 கோடியில் ஒருபைசாவைக்கூட இன்றுவரை திரும்பப் பெறமுடியவில்லை. உண்மையில் விஜய் மல்லய்யா ஏப்பம் விட்ட இந்தியாவின் சொத்து மதிப்பு ரூ.30000 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம். இதில் வேடிக்கை என்னவென்றால், ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததாகக் கூப்பாடு போடும் மோடியால் இன்றுவரை இங்கிலாந்தில் சல்லாபமாக வாழ்ந்து வரும் மல்லய்யாவின் ஒரு மயிரைக்கூடத் தொடமுடியவில்லை.

கைலாசா

முதலாளிகள் மட்டுமல்ல சாமியார்கள்கூட இந்தியப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு ஓட்டம் பிடித்து சல்லாபமாய் கூத்தடிக்கின்றனர் என்பதை நித்தியானந்தா நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.  பலஆயிரம் கோடி சொத்துக்களோடும் சில நூறு அழகிகளோடும் ஒருவன் இந்தியாவைவிட்டு ஓடுவது மோடி கூட்டத்திற்குத் தெரியாதா என்ன? பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு இராணுவக்காரன் ஒருவன் விடும் குசுவைக்கூட மோப்பம் பிடிக்கத் தெரிந்த நமது புலாய்வுப் புலிகளுக்கு நித்தியானந்தா எங்கிருக்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்!  ஐ.நா சபையிலேயே கைலாசா சார்பாக பேச முடிகிறது என்றால் நாம் எத்தகைய கேணயர்கள் என்பதை நாம்தான் உணர வேண்டும். நித்தியானந்தா வெறும் கோவணத்தோடு ஓடியிருந்தால் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. அவன் இந்தியாவின் சொத்துக்களை அள்ளிச் சென்றிருக்கிறான் என்பதற்காகத்தான் நாம் கவலைப்பட வேண்டி உள்ளது. இந்த வரிசையில் அடுத்து இந்தியாவை விட்டு ஓடக்கூடியவன் ஜக்கியா அல்லது பதஞ்சலி இராம்தேவா என்பது நமக்குத் தெரியாது.

ஆலைகளை அமைத்து தொழில் செய்யும் ஒரு சில  முதலாளிகள் சில லட்சம் ரூபாய்களை சம்பாதிப்பதற்கே அல்லாடும் போது, வெறும் கோவணத்தைக் காட்டியே இவர்களால் பல ஆயிரம் கோடிகளைச் சுருட்ட முடிகிறது என்றால், அது அவர்களின் திறமையினாலா அல்லது நமது இளிச்சவாய்த் தனத்தினாலா? சிந்திக்க வேண்டும். 

தொடரும்...... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்

Thursday, 16 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2

 II

நிகோலா

இலாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் பெருநிறுவனங்களாலும், பொறுப்பற்ற அரசுகளாலும், நீர்-நிலம்-காற்று என அனைத்தும் பாழாகி, மக்கள் வாழ முடியாத நிலைக்கு இப்புவிப் பரப்பு மாசடைந்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இனம்புரியாத பல்வேறு புதுப்புது நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவதோடு, பலர் அன்றாடம் மாண்டும் வருகின்றனர். வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையும், சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறதுதானே!

ஒருபுறம், புவி மாசடைவதைத் தடுக்கத் தமிழகத்தில் செயல்படும் பூவுலகின் நண்பர்களைப் போல உலகமெங்கும் எண்ணற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தோன்றிய வண்ணம் உள்ளனர். மற்றொருபுறம், நச்சுப் புகையை வெளியேற்றாத வாகனங்களைத் தாங்கள் வடிவமைத்துள்ளதாகவும், நச்சுப் புகையை வெளியிடாத இயற்கை எரிபொருளை கண்டுபிடித்து விட்டதாகவும் சிலர் கூறுவதை நாம் அவ்வப்பொழுது கேட்டுக் கொண்டுதான் வருகிறோம். இந்த வழியில் பிரபலமாகப் பேசப்பட்ட இராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை.

முன்பு ‘நிகோலா மோட்டார்ஸ்’ (Nikola Motors) என்று அறியப்பட்ட, ட்ரீவர் மில்டன் என்பவரைத் தலைவராகக் கொண்ட, அமெரிக்காவைச் சேர்ந்த நிகோலா (Nikola Corporation) என்கிற ஒரு நிறுவனம் நச்சுப்புகையைக் கக்காத (zero emission) ‘லித்தியம் பேட்டரி’ மற்றும் ‘ஹைட்ரஜன் செல்’லில் இயங்கும் வாகனத்தை வடிவமைத்துள்ளதாகக் கூறி, டிரக் வகையைச் சார்ந்த ஒரு மோட்டார் வாகனம் சாலையில் ஓடும் வீடியோவை 2020 ஆம் ஆண்டு மத்தியில் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அத்தகைய வாகனங்கள் எதுவும் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வராத போதிலும், நிகோலா நிறுவனத்தின பங்குகள் உச்சத்தைத் தொட்டன. அதைத் தொடர்ந்து பிரபல ஜெனரல் மோட்டார் (GM) நிறுவனமும் நிகோலாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.

நிகோலா நிறுவனம் வடிவமைத்ததாகச் சொல்லப்படும் டிரக், லித்தியம் மற்றும் ஹைட்ரஜன் செல்லில் ஓடவில்லை, மாறாக அது சாய்வான மலைப் பாதையில் தானாக ஓடுவதாகவும், ஒரு டஜன் பொய்களைச் சொல்லி நிகோலா நிறுவனம் மக்களை ஏமாற்றுவதாகவும் கூறி, 21.09.2020 அன்று ஹிண்டன்பர்க் தனது ஆய்வறிக்கையை வெளியிட்ட அடுத்த சில நாட்களில், நிகோலா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 30% அளவுக்கு மளமளவென சரிந்தது. இதைத் தொடர்ந்து ஜெனரல் மோட்டார்ஸ் (GM) நிறுவனமும் நிகோலாவுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்துவிட்டது.

க்ளோவர் ஹெல்த்

மருத்துவம் மற்றும் காப்பீடு தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வரும் மற்றொரு அமெரிக்க நிறுவனமான க்ளோவர் ஹெல்த் (Clover Health) என்ற நிறுவனம் முதலீட்டார்களை தவறாக வழிநடத்தி சொத்துக் குவித்து வருதாக அந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஹிண்டன்பர்க் தனது ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்ட பிறகு க்ளோவர் ஹெல்த் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 12.3% சரிவைக் கண்டது.

மேற்கண்ட இரு நிறுவனங்கள் மட்டுமன்றி, 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மோசடிகளை ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை 2023, ஜனவரி 27 ஆம் தேதிவரை பலருக்கும் ஹிண்டன்பர்க் என்றால் என்னவென்றே தெரியாது.

அதானி

மோடி ஆட்சிக்கு வரும் வரை இந்தியாவைப் பொருத்தவரை டாடா-பிர்லா என்கிற இரு பெருமுதலாளிகளைத்தான் நாம் அறிவோம். 1857 ல் தொடங்கப்பட்ட பிர்லா நிறுவனம் சிமெண்ட், ஜவுளி மற்றும் இரசாயணம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும், 1868 ல் தொடங்கப்பட்ட டாடா நிறுவனம் ஜவுளி, இரும்பு, நீர் மின் நிலையங்கள், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

அதன் பிறகு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து 1966 ல் தொடங்கப்பட்ட அம்பானி மற்றும் 1988 ல் தொடங்கப்பட்ட அதானி ஆகிய இரு நிறுவனங்களும் முதலில் பலருக்கும் பரிச்சயமில்லாத நிறுவனங்களாக இருந்து வந்தன. இவர்களைத்தவிர கோத்ரெஜ், பஜாஜ், மித்தல், ஜிண்டால் என பல்வேறு முதலாளிகளும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால், இன்று குறிப்பாக மோடி பிரதமராக வந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெட்ரோலியம், ஜவுளி, இரசாயணம், துறைமுகங்கள், மின்சாரம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் அம்பானி மற்றும் அதானி ஆகிய இருவர் மட்டுமே கொடிகட்டிப் பறக்கின்றனர். அதிலும் குறிப்பாக அதானி கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பணக்கார முதலாளியாகவும் உலகின் மூன்றாவது பெரிய பணக்கார முதலாளியாகவும் வளர்ந்து நிற்கிறார்.  இது எப்படிச் சாத்தியமானது?


நேற்றுவரை ஒரு சாதாரண அரசியல்வாதியாக இருந்த நம்ம ஊர் பிரமுகர் ஒருவர் திடீரென சில லட்சங்களைச் சேர்த்துவிட்டால் உடனே நாம் கொந்தளிக்கிறோம். அதுவும் அவர் மாற்றுக் கட்சிக்காரர் எனில் வறுத்தெடுத்து விடுகிறோம். இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டால் மட்டுமே ஒருவன் திடீர் பணக்காரனாக வளரமுடியும் என்பது நாம் அறிந்த பால பாடம்.

அரசியல்வாதிகள் மக்களோடு சேர்ந்து வாழ்வதாலும் பழகுவதாலும் அவர்கள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெரு முதலாளிகளுக்கும் மக்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லாததால், பெருமுதலாளிகள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவதற்கான வாய்ப்பும் இல்லை அல்லது தெரிந்து கொள்வதற்கு நாம் முயற்சிப்பதும் இல்லை.

அதனால்தான், அதானி எப்படி உலகின் மூன்றாவது பணக்காரனாக வளர முடிந்தது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவன் வந்து நமக்குப் புரிய வைக்க வேண்டி உள்ளது. இதற்காக நாம் வெட்கப்படத்தானே வேண்டும்.

தொடரும்...

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்