Sunday, August 27, 2023

வன்னியர் சாதி உழைக்கும் மக்களுக்கு ஓர் வேண்டுகோள்!

வன்னியர் சாதி உழைக்கும் மக்களே!

ஒரு சில வன்னியச் சாதித் தலைவர்களால்
ஏற்கனவே நீங்கள் நஞ்சூட்டப்பட்டு, பொதுச் சமூகத்திலிருந்து விலகி, திசைமாறி அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். இதனால்  கல்வியில் பின்தங்கி இருப்பதோடு, உரிய விகிதாச்சார அடிப்படையில் அரசு வேலைகளையும் பெறமுடிவதில்லை.

கல்வியில் நீங்கள் பின்தங்கி இருப்பதால், தனியார் நிறுவனங்களில்கூட உங்களால் ஒரு உத்தரவாதமான நல்ல வேலையைப் பெறமுடிவதில்லை. வேளாண்மையிலும் போதிய வருவாய் இல்லாததால், கல்வியில் பள்ளிப் படிப்பைக்கூடத் தாண்டமுடியாத சூழலில், உங்களில் பலர் கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு உதிரி வேலைகளில் எடுபிடிகளாக மட்டும்தான் செயல்பட முடிகிறது. உங்களில் பலர் தினக்கூலிகளாக இருப்பதால், எளிதில் சாராய போதைக்கு அடிமையாகி சீரழிந்து, நீங்கள் மட்டையாவதோடு உங்கள் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்துகிறீர்கள்.

உங்களில் பலர் படித்திருந்தாலும், இதர பிற்பட்டோருக்கான (MBC) இட ஒதுக்கீடு இருந்தும், பிறசாதியினரோடு போட்டி போட்டு மாநில அரசின் வேலை வாய்ப்பினை பெறுகின்ற ஆற்றல் அற்றவர்களாக இருக்கின்றீர்கள். மாநில அரசு இட ஒதுக்கீட்டிலேயே உங்களால் ஒரு வேலையைப் பெறமுடியாத போது, மத்திய அரசின் இதர பிற்படடோரின் (OBC) இட ஒதுக்கீட்டின்கீழ், மத்திய அரசு நிறுவனங்களில் நீங்கள் ஒரு வேலையைப் பெறுவது குதிரைக் கொம்பாகத்தானே இருக்க முடியும்.

மத்திய, மாநில அரசு வேலைகளைப் பெறுவதற்கேற்ப, உங்கள் திறமைகளை வளர்ப்பதற்கு பிற சாதியினர் செய்வதைப் போல, அறிவுத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், ஏற்பாடுகள், கட்டமைப்புகள் எதையும் நீங்கள் ஏற்றிச் போற்றுகின்ற உங்களின் சாதித் தலைவர்கள் செய்வதில்லை. மாறாக, ஆண்ட பரம்பரை, சத்ரிய குலம் என பெருமை பேச வைத்து உங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதை என்றைக்கு நீங்கள் உணர்கிறீர்களோ, அன்றைக்குத்தான் உங்களுக்கான விடிவு காலம் தொடங்கும்.

சாதித் தலைவர்களால் ஏற்கனவே நீங்கள் நஞ்சூட்டப்பட்டது போதாது என்று தற்போது, "அகில பாரதிய சத்ரிய மகா சபா யுவா" என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரக் கும்பல், வன்னியர் சாதி மக்களிடையே ஊடுருவி, பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வன்மப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. 

சாதி வெறியை ஊட்டி பிறசாதி மக்களுக்கு எதிராக உங்களைக் கொம்பு சீவி விடும் உன்மத்தர்களை அடையாளம் கண்டு, அவர்களை பீச்சாங்கையால் புறந்தள்ளி முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களை நோக்கி வாருங்கள். புதியவைகளை நீங்கள் கற்றுணரும்போதுதான், உங்களின் பின்தங்கிய நிலையை உங்களால் உணர முடியும். இன்றைய காலகட்டத்தில் இது ஒன்றுதான் உங்களுக்கான மாற்று வழி! 

ஊரான்

10 comments:

  1. ரவிக்குமார் ப: இந்தப் பதிவை நீங்கள் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் / தீவிர ஆர்வமுள்ள தொண்டர்கள் பார்த்தால், நல்ல எண்ணத்துடன் புரிந்து கொள்வார்களா அல்லது வன்மத்துடன் வெறுப்பார்களா என ஊகிக்க முடியவில்லை.

    நச் என்ற பொட்டில் அறைந்தார்ப் போல ஒரு பதிவு.....

    ReplyDelete
  2. இந்தப் பதிவை நான் ஏற்கனவே பணியாற்றி ஓய்வு பெற்ற நிறுவன நிறுவன ஊழியர்களின் குழு ஒன்றில் பகிர்ந்தபோது வந்த வந்த எதிர் வினைகளை தொகுத்துத் தருகிறேன்.

    *****
    பகுதி 1:

    கோபி: தெளிவாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்...

    ஊரான்: மீண்டும் ஒரு முறை நிதானமாகப் படியுங்கள். என்ன செய்யக் கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பது புரியும்.

    போகிற போக்கில் எழுதியதல்ல இது. நீண்டகால புரிதலிலிருந்து எழுதப்பட்டது.

    கோபி: ஐயா வணக்கம் நீங்கள் இந்த சாதியில் வேலை வாய்ப்புக்காக முயற்சிக்காமல் சாராய போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் பிற சாதியினர் செய்வது போல் என்றால் என்ன என்று சொல்லுங்கள் அனைத்து சாதியினரும் அனைத்து கட்சிகளிலும் அனைத்து அமைப்புகளிலும் உள்ளனர் முற்போக்கு பிற்போக்கு என்பது தற்போது வார்த்தைகளில் மட்டுமே உள்ளது யாரும் அப்படி வாழவில்லை ஒரு சிலரை தவிர..

    அடுத்து அகில பாரதிய சத்ரிய மகா சபா யுவா என்ற பெயரில் எல்லாரையும் ஒன்றுபடுத்தினால் நல்லது தானே(ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் என்று எதை சொல்ல வருகிறீர்கள்) நீங்கள் வரச் சொல்லுகிற ஜனநாயக இயக்கங்கள் எவை?எவை?

    ஊரான்: பிற சாதியினர் தங்களது சாதிப் பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பு பெறும் வகையில் திறன் வளர்ச்சி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விவரங்களைத் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.

    முற்போக்கை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நீங்கள் குறிப்பிடும் அந்த ஒரு சிலரைப் பின்பற்றுங்கள். யாரும் இல்லை என்று சொல்லி பிற்போக்கை ஏற்கலாமா?

    அகில பாரதிய சத்ரிய மகா சபா யுவா, எல்லோரையும் ஒன்றுபடுத்தும் அமைப்பு அல்ல. தமிழ் நாட்டில் வன்னியர்களை மட்டுமே சத்திரியர்களாக ஏற்கும் அமைப்பு. ஆனால் பிற மாநிலங்களில் பல்வேறு சாதியினர் இதில் அங்கம்.

    ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல், வன்னியர் சாதி நெருங்கிய நண்பர்களுடன் பழகுவதால் கிடைக்கும் ஆதாரபூர்வமான தகவல்.

    சாதியப் பாகுபாடு பார்க்காத பொதுவுடமை இயக்கங்களில் சேருங்கள். அவை பலவாக இருந்தாலும் அதில் எது சரி என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

    கோபி: முற்போக்கு பிற்போக்கு என்றால் என்ன! அகில பாரதிய சத்ரிய மகா சபா யுவா என்ன செய்கிறது என்ன தவறை தாங்கள் கண்டீர்கள்? வன்னியர்கள் சத்திரியர்கள் என்பதால் என்ன பிரச்சினை? சாதிய பாகுபாடு பார்க்காத பொதுவுடமை எல்லாம் தற்போது இல்லை. அப்படி பொதுவுடமை என்று சொன்னால் நீங்கள் அனைத்து சாதியினரும் இதே நிலையில் உள்ளதை பொதுவெளியில் பதிவிடுங்கள். பொதுவுடமை இயக்கங்கள் சாதி பார்த்து கொண்டுதான் உள்ளனர்...

    ஊரான்: அகில பாரதிய சத்ரிய மகா சபா என்ன செய்கிறது என்பது தெரியாமலேயே அதற்கு ஆதரவா?

    வன்னியர்களைப் போன்றே வேறு சில சாதிகளும் உண்டு
    எனது பதிவு அவர்களுக்கும் பொருந்தும்.

    பொதுவுடமையர்கள் சாதி வெறியர்கள் அல்ல.

    கோபி: அகில பாரதிய சத்ரிய மகா சபா எனக்கு தெரிந்து ஒருங்கிணைப்பு தான் செய்கிறது அது என்ன தவறு செய்கிறது என சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன். பொதுவுடமையர்கள் சாதி வெறியர்கள் அல்ல என்று கூறுவதால் சாதி பாகுபாடு இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்...

    ஊரான்: பட்டியல் சாதிக்கு எதிரான கருத்துக்களை அ.பா.ச.ம.யு.ச பரப்பி வருகிறது. இது இருவேறு சாதிகளுக்கு இடையிலான பகைமையை வளர்க்கும். சனாதனம் நீடிக்கும்வரை சாதிப் பாகுபாடு இருக்கும். சாதி வெறியர்களாக இல்லாமல் இருப்பதுதான் இன்றைய உடனடித் தேவை. அதுதான் பகைமையை மட்டுப்படுத்தும்.

    ReplyDelete
  3. பகுதி 2:

    கோபி: எதை வைத்து என்ன ஆதாரம் இருக்கிறது தாருங்கள் இறுதியில் சாதன எதிர்ப்பு என உங்கள் கருத்தை முன்மொழியத்தானா இவ்வளவும் தற்போது சனாதன எதிர்ப்பு என்பது வளர்ந்து வரும் ஒரு கார்பரேட் நிறுவனம்... அதிலும் அனைத்து சாதியினரும் மதத்தினரும் ஆதாயத்திற்காக உள்ளனர்... அக்கினி கலசத்தின் மீது ❌ குறியீடு இடப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன் உடனடியாக அதை நீக்கவும் இக்குழுவில் அனைத்து சாதி மத நண்பர்களும் உள்ளனர்... இதே மற்ற சாதி மத குறியீடோ அடையாளமோ இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்... (தாங்கள் வழக்கறிஞரும் ஆவீர்கள்).

    ஊரான்: அவர்களைத்தான் தெரியும் என்கிறீர்களே,
    அ.பா.ச.ம.யு.ச நடத்தப் போகும் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் யாருக்கு எதிரானது என்பதைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.

    சனாதன எதிர்ப்பு ஒரு கார்பரேட் நிறுவனமா? உங்களுக்குச் சனாதனமும் தெரியவில்லை, கார்பரேட்டும் புரியவில்லை. தெரியாமல் இருப்பது தவறொன்றுமில்லை. காலப் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.

    அக்னிக்கலச்தோடு அருவாவும் உள்ளதை கவனிக்கவில்லையா?. வெறும் அக்னிக்கலசம் என்றால் உங்கள் ஆதங்கத்திற்கு செவிமடுக்கலாம்.

    எழுதுகோல் பிடிக்க வேண்டிய பிஞ்சுக் கரங்களில் அருவாவைப் பிடிக்க வைப்போரைக் கண்டிப்பதை விடுத்து, அதைச் சுட்டிக் காட்டும் என்னைக் கண்டிக்கிறீர்கள். இந்தக் குழுவில் மட்டுமல்ல, வெளியிலும் எனக்கு வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளிலும் நெருங்கிய நண்பர்களும் உண்டு; உறவுகளும் உண்டு. யாராக இருந்தாலும் எனக்குத் தவறென்று பட்டால் அதற்காக நான் தயங்கியதும் இல்லை, பின்வாங்கியதும் இல்லை. என்னைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றால் அமேசானில் எனது வாழ்க்கை அனுபவங்களைப் படியுங்கள். அல்லது வலைப்பூவில் வெளிவந்துள்ள தொடரைப் படியுங்கள்.

    உங்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்ததில் மகிழ்ச்சி. நன்றி! வணக்கம்!

    https://ethirthunil.blogspot.com/2021/04/14.html?m=1

    இது இறுதிப் பகுதி. முதல் தொடரிலிருந்து படியுங்கள்.

    https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.amazon.in/%25E0%25AE%2587%25E0%25AE%25B4%25E0%25AE%25BF-%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AE%25AE%25E0%25AF%258D-moral-turpitude-Tamil-ebook/dp/B092MTXYNF&ved=2ahUKEwj4hrzCpP2AAxWra2wGHXXwDSAQFnoECBAQAQ&usg=AOvVaw27P-WUzjxoVdv0PDm-IfC9

    நாராயணன்: சனாதன எதிராக நூறாண்டு வரலாறுஉள்ளது! அதன் பலன்தான் இன்றைக்கு பொதுத்துறையில் பணிபுரிந்துகொண்டு எதிர் அரசியல் பேசமுடிகிறது! சனதன எதிர்ப்பு ஒரு கார்பரேட் நிறுவனம் என்று கொச்சை செய்வது வன்மையாக கண்டிக்கிறேன்! சனாதன எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்நதால் ,பதிவிட்டவர் கும்பிடரேன் சாமி என்று கழனியில் விவசாய கூலியாகவும்,நமது பிள்ளைகளை பண்ணை கூலியாகவும்தான் ( உ.பி & பீகாரை போல) வாழ்ந்து கொண்டிருப்போம்!
    தியாகம் செய்ய வில்லை என்றாலும் ,தியாகிகளை கொச்சை படுத்துவது சமுதாயத்திற்கு கேடு!

    கோபி: அக்கினி கலசத்தின் மீதுள்ள ❌ குறியீடு நீக்குங்கள் நீங்கள் தான் பிரிவினையை உருவாக்கி உள்ளீர்கள் நீங்கள் கூறும் நல்ல கருத்துகளை என் சுய அறிவு மூலம் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் கருத்து சொல்வதாக கூறி நல்ல சட்ட விழிப்புணர்வு கருத்துகளுக்காக பாராட்டப்பட்டிருக்க வேண்டிய போற்றப்படவேண்டிய உணர்ச்சிகரமான பெயர் இருந்தும் தவறாகிப்போன ஒற்றை குறியீடட்டால் திசைமாறி போன திரைப்படம் போல் உங்கள் நல் விழிப்புணர்வு கருத்துகளை வீணாக்காதீர்கள்...

    ஊரான்: முதலில் அருவாவை நீக்கட்டும். பிறகு உங்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்கலாம்.

    வன்னியர்கள் வாழும் கிராமங்களுக்குக் செல்லுங்கள். வன்னியர் வீட்டுப் பிள்ளைகளின் கல்வித்தரம் குறித்துப் பரிசீலியுங்கள். நிலவரம் புரியும். பிறகு யாரும் சொல்லாமலேயே எனது கருத்துக்கு இயல்பாய் வந்து சேருவீர்கள். வன்னியர்கள் குறித்த எனது கருத்து கிராமம்-நகரம் உள்ளிட்ட ஐம்பது ஆண்டுகால அனுபவத் தொகுப்பு.

    உங்கள் புரிதலுக்கு நன்றி! வணக்கம்!

    கோபி: உங்கள் கருத்தை முகத்திற்கு சொல்லுங்கள் முதுகிற்கு சொல்லாதீர்கள் புண்படுத்தும் கருத்துக்கள் வேண்டாம் பண்படுத்தும் கருத்துக்களே வேண்டும் உங்கள் கூற்று படி ❌ குறியீடு நீக்காத உங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார்களுக்கும் வேறுபாடுகள் இல்லை.

    ஊரான்: முகம் எது, முதுகு என்று எனது பதிவை ஆழமாகப் பரிசீலிப்போருக்குப் புரியும். எனக்கே ஆர்.எஸ்.எஸ் முத்திரை குத்திய உங்கள் பரந்த மனதிற்கு கோடி நன்றிகள்! நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ்கவே!

    கோபி: உங்கள் கூற்று படி என்பதை கவனிக்கவும்.. வாழ்த்துக்களுக்கு நன்றி..

    ஊரான்: 🙏

    ReplyDelete
  4. பகுதி 3:

    பாலன்: ஆடு நனைய ஓநாய் அழுகிறது ... சாதி மதம். வேண்டாம் என நினைப்பவர் கள்..., குழப்பவாதிகள்

    ஊரான்: 🙏புரிதலுக்கு மிக்க நன்றி.

    Ram: We feel that Sensitive issues such as Religion, Caste, Language and Political may be avoided in the common platform discussion.

    ஊரான்: 🙏

    சுதா: Bro.... உ(ங்கலு)ன்னுடைய ஈ(ஊ)ன பார்வை.

    ஊரான்: படித்தவர்களுக்கே (!) இந்தப் புரிதல் என்றால் பாவம் படிக்காதவர்களின் நிலை?

    சுதா: உங்களுக்கே இந்த *ஜாதி வெறி* என்றால் படிக்காத நிலைமை நிச்சயமாக.

    ஊரான்: எனக்கு எந்த ஜாதியின் வெறி?

    சுதா: உங்களின் கடுகு உள்ளத்தை காட்டுகிறது உங்களின் பதிவு.

    ஊரான்: கடுகு உள்ளம் (?) சற்று விளக்கமாக...

    சுதா: உங்களுடைய பொது சிந்தனை எள் முனையளவும் இல்லை என்பது தான் உங்களின் பதிவு.

    ஊரான்: எனது பதிவில் உள்ளவை நேரடி அனுபவத்தின் தொகுப்பு. அதன் மீதான விவாதம் நடத்தினால் பயனுள்ளதாய் இருக்கும். அதை விடுத்து என் மீதான தாக்குதலாய் மாற்ற முயற்சிப்பதன் மூலம் உண்மையை மறைத்துவிட முடியாது. பதிலுக்கு மிக்க நன்றி.

    சுதா: Bro மற்றவர்களை குறை கூறுவதற்கு முன்பாக தன்னிடம் உள்ள குறைகளை தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் bro

    ஊரான்: தனிப்பட்ட முறையில் நான் யாரையும் குறை கூறவில்லையே? சமூக நடப்பைத்தான் தெரிவித்துள்ளேன். நிற்க, என்னிடம் உள்ள குறைகள் என்னவோ? குறிப்பிட்டுச் சொன்னால் தவிர்த்துக் கொள்கிறேன்.

    சுதா: *அம்பேத்கரையும் பெரியாரையும் படித்த சகோதரர்கள்* யாரும் தரம் தாழ்ந்த பதிவுகளையும் தனிநபர் காழ்ப்புணர்ச்சிலும் ஈடுபட மாட்டார்கள். உங்களுடைய பதிவுகள் தொடர்ச்சியாக இந்த குழுவில் வெறுப்பு மற்றும் விஷமத்தனமான பதிவுகள் அதிகமாக பகிரப்படுவது உங்களின் குறுகிய கண்ணோட்டத்தை காட்டுகிறது நீங்கள் உங்களுடைய பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும்🤝🤝

    ஊரான்: இப்படி பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி? வெறுப்பு மற்றும் விஷமத்தனமான பதிவுகள் எவை என்பது பற்றி அவ்வப்பொழுது சுட்டிக் காட்டியிருக்கலாமே? Don't be prejudice, be precise in your comments.

    சுதா: *Probably all the information you share is considered* unnecessary log for this group and those who care about the community *சமூகத்தின்*

    ஊரான்: சொல்ல வந்ததை முழுமையாகத் தெளிவாகச் சொல்லுங்கள். நான் நாட்டு நடப்பைத்தான் இந்தக் குழுவில் பகிர்ந்து வருகிறேன். அவை எல்லாம் இந்தக் குழுவிற்குத் தேவை இல்லை என குழு நிர்வாகி தெரிவித்தால் ஏற்றுக் கொள்கிறேன்.

    தனக்குப் பிடித்தக் கருத்து மட்டும்தான் ஒரு குழுவில் இருக்க வேண்டும் என்று ஒருவர் கருதினால் அவர் எந்தக் குழுவிலும் இருக்க முடியாது. ஏன், சமூகத்தில் கூட உறவாட முடியாது. நன்றி.

    சுதா: உங்களின் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்க கூடாது.

    ஊரான்: ‌யாரும், யார் மீதும் எதையும் திணிக்க முடியாது. இந்தக் காலத்தில் அந்த அளவுக்கு மக்கள் யாரும் பலவீனமானவர்கள் அல்ல. இது வெறும் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே. ஏற்பதும் நிராகரிப்பதும் அவரவர் உரிமை.

    சுதா: அதற்காக யாரையும் புண்படுத்த msg பதிவிடலாமா?

    ஊரான்: இதுவரை யாரும் தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்திப் பதிவுகளைப் போடவில்லை. ஆனால் அதை முதலில் நீங்கள் தொடங்கி வைத்துள்ளீர்கள். வாழ்க உங்கள் ஜனநாயக மாண்பு!

    ஊரான்: எனது பதிவில் யாரைப் புண்படுத்தி உள்ளேன்? நிதானமாக மீண்டும் ஒருமுறை படியுங்கள். சமூக நிலைமை புரியும். புரிந்தும் இப்படிப் பேசுவோரை ஒன்றும் செய்ய முடியாது, கடந்து செல்வதைக் தவிர.

    பாலன்: பணி ஓய்வு ,,, வேற வேலை வேண்டும் பொழுது போக அதற்காக இப்படி.

    ஊரான்: சமூகத்தின் அவலத்தைப் பேசுவது உங்களுக்குப் பொழுது போக்கு. அப்போ, இங்கே தாங்கள் களமாடுவதும் பொழுது போக்கோ?

    ReplyDelete
  5. பகுதி 4:

    பாலன்: 40 வயதில் நாய் குணம்,. அதுவே 60 க்கு பிறகு பண்பட்டு இருக்கும். ஒரு சிலருக்கு அது இல்லை.

    ஊரான்: அது என்ன ஒரு சிலர், பழமொழி அப்படி இல்லையே? அதனால் தாங்களும் இதில் அடங்குவீர்கள். மகிழ்ச்சி, எம்மோடு சேர்ந்ததற்கு!

    சுதா: *நண்பரே* மேற்கண்ட பதிவுகளின் மூலம் நீங்கள் பணி ஓய்வு பெற்று இருக்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது. அதனால் தங்கள் 60 வயதை கடந்திருப்பீர்கள் அதனால் பணி ஓய்வு காலத்திலாவது திருவள்ளுவனை தயவு செய்து படியுங்கள் இல்லையென்றால் புத்தகத்தை நான் உங்களுக்கு பரிசாக கொடுக்க தயார் தயவு செய்து உங்களுடைய பதிவுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

    ஊரான்: ஐயா, எல்லாவற்றையும் படித்ததால்தான் எழுத முடிகிறது. நூல்களோடு சமூக எதார்த்தத்தையும் படியுங்கள். அதைத்தான் எனது பதிவு வெளிப்படுத்துகிறது.

    பாலன்: விடு தம்பி ஒரு சிலர் இப்படித்தான் வீம்புக்கு ...(. )

    ஊரான்: முன்வைக்கும் கருத்துக்கு பதில் இல்லை என்றால் வீம்பு என்று முதாதிரை குத்துவது. இதுகூட நல்லாருக்கே!

    பாலன்: குழுவில் உள்ள அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் ,. மற்றவர்களின் மனதை காயப்படுத்த msg களை பதிவிடாதிர்கள் . நம் உடலில் உள்ள அழுக்கு போக ( முதுகு) குளித்தவன் எவனும் இல்லை . அடுத்தவன் அழுக்கை பற்றி கவலை வேண்டாம் . முற்போக்கு சிந்தளை யாலன் என்று கூறிக்கொ்ளும் எவனும் அவன் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்காதவன் எவனாவது உண்டென்றால் அவரை ஏற்றுக்கொள்வோம்.

    சுதா: 🤝👍👍

    ஊரான்: எனது பதிவுக்கு எதிராகக் களமாடும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். முகநூல் போன்ற பொதுத் தளத்திற்கு வாருங்களேன். அங்கே களமாடினால் மேலும் சிறப்பாக இருக்கும்.

    https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0BY8aAUJ6u38Es1qh9Lfad7kxRgTUmBhMQtZAEd49MKWTbp5vjsfGeKRiB8UKaJSWl&id=100002580377725&mibextid=Nif5oz

    நாராயணன்: 👌👍👏👏

    ReplyDelete
  6. ரவிக்குமார் ப: இவ்வளவு எதிர் வினைகளை எதிர் பார்க்கவில்லை.......

    ReplyDelete
    Replies
    1. தெரிந்தவர்களே இப்படி என்றால் தெரியாதவர்கள் எப்படி வினையாற்றுவார்கள் என்பதை நினைத்தால் பரிதாபமாகத்தான் உள்ளது.

      Delete
    2. ரவிக்குமார் ப: வருத்தத்துக்கு உரியது.
      சாதிகள் ஒழிய / ஒழிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியவில்லை.

      Delete
    3. நீண்ட நெடிய கடுமையான போராட்டம் தேவை.

      Delete
  7. முத்துராமன்: நல்லதொரு வழிகாட்டுதல்.
    இளைஞர்கள்
    உணரும் நிலையில் இல்லையே...

    ReplyDelete