வன்னியர் சாதி உழைக்கும் மக்களே!
ஒரு சில வன்னியச் சாதித் தலைவர்களால்
ஏற்கனவே நீங்கள் நஞ்சூட்டப்பட்டு, பொதுச் சமூகத்திலிருந்து விலகி, திசைமாறி அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். இதனால் கல்வியில் பின்தங்கி இருப்பதோடு, உரிய விகிதாச்சார அடிப்படையில் அரசு வேலைகளையும் பெறமுடிவதில்லை.
கல்வியில் நீங்கள் பின்தங்கி இருப்பதால், தனியார் நிறுவனங்களில்கூட உங்களால் ஒரு உத்தரவாதமான நல்ல வேலையைப் பெறமுடிவதில்லை. வேளாண்மையிலும் போதிய வருவாய் இல்லாததால், கல்வியில் பள்ளிப் படிப்பைக்கூடத் தாண்டமுடியாத சூழலில், உங்களில் பலர் கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு உதிரி வேலைகளில் எடுபிடிகளாக மட்டும்தான் செயல்பட முடிகிறது. உங்களில் பலர் தினக்கூலிகளாக இருப்பதால், எளிதில் சாராய போதைக்கு அடிமையாகி சீரழிந்து, நீங்கள் மட்டையாவதோடு உங்கள் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்துகிறீர்கள்.
உங்களில் பலர் படித்திருந்தாலும், இதர பிற்பட்டோருக்கான (MBC) இட ஒதுக்கீடு இருந்தும், பிறசாதியினரோடு போட்டி போட்டு மாநில அரசின் வேலை வாய்ப்பினை பெறுகின்ற ஆற்றல் அற்றவர்களாக இருக்கின்றீர்கள். மாநில அரசு இட ஒதுக்கீட்டிலேயே உங்களால் ஒரு வேலையைப் பெறமுடியாத போது, மத்திய அரசின் இதர பிற்படடோரின் (OBC) இட ஒதுக்கீட்டின்கீழ், மத்திய அரசு நிறுவனங்களில் நீங்கள் ஒரு வேலையைப் பெறுவது குதிரைக் கொம்பாகத்தானே இருக்க முடியும்.
மத்திய, மாநில அரசு வேலைகளைப் பெறுவதற்கேற்ப, உங்கள் திறமைகளை வளர்ப்பதற்கு பிற சாதியினர் செய்வதைப் போல, அறிவுத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், ஏற்பாடுகள், கட்டமைப்புகள் எதையும் நீங்கள் ஏற்றிச் போற்றுகின்ற உங்களின் சாதித் தலைவர்கள் செய்வதில்லை. மாறாக, ஆண்ட பரம்பரை, சத்ரிய குலம் என பெருமை பேச வைத்து உங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதை என்றைக்கு நீங்கள் உணர்கிறீர்களோ, அன்றைக்குத்தான் உங்களுக்கான விடிவு காலம் தொடங்கும்.
சாதித் தலைவர்களால் ஏற்கனவே நீங்கள் நஞ்சூட்டப்பட்டது போதாது என்று தற்போது, "அகில பாரதிய சத்ரிய மகா சபா யுவா" என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரக் கும்பல், வன்னியர் சாதி மக்களிடையே ஊடுருவி, பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வன்மப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
சாதி வெறியை ஊட்டி பிறசாதி மக்களுக்கு எதிராக உங்களைக் கொம்பு சீவி விடும் உன்மத்தர்களை அடையாளம் கண்டு, அவர்களை பீச்சாங்கையால் புறந்தள்ளி முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களை நோக்கி வாருங்கள். புதியவைகளை நீங்கள் கற்றுணரும்போதுதான், உங்களின் பின்தங்கிய நிலையை உங்களால் உணர முடியும். இன்றைய காலகட்டத்தில் இது ஒன்றுதான் உங்களுக்கான மாற்று வழி!
ஊரான்
