Showing posts with label சத்திரியர். Show all posts
Showing posts with label சத்திரியர். Show all posts

Tuesday, 11 June 2024

பூணூல் கல்யாணம் ஆண்களுக்கு மட்டும் ஏன்?

வாட்ஸ்அப் குழுவில்...

கேள்வி: 

பூணூல் கல்யாணம் ஆண்களுக்கு மட்டும் எதற்காக செய்யப்படுகிறது என்ற கேள்வி எனக்கு நீண்ட காலமாக உள்ளது. தெரிந்தவர்கள்  விளக்கினால் நன்றி பாராட்டுவேன்.

பதில்:

இந்து மதத்தின் கோட்பாட்டு நூலான மனுதர்ம சாஸ்திரத்தில் பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் நான்கு வருணங்களாக பகுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

முதல் மூன்று வருணங்களான பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய வருணங்களைச் சார்ந்த ஆண்கள் பூணூல் அணிய உரிமை உண்டு. சூத்திரர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

எந்த வருணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களும் சூத்திரர்களே என்கிறது மனுதர்ம சாஸ்திரம். எனவே பெண்களுக்கு பூணூல் அணியும் உரிமை கிடையாது.

முதல் மூன்று வருணத்தார் இருபிறப்பாளர்கள் (துவிஜர்கள்). உபநயநம் என்று சொல்லக்கூடிய பூணூல் அணியும் நிகழ்ச்சி நடப்பது என்பது இரண்டாவது பிறப்பாக கருதப்படுகிறது. உபநயநம் செய்து கொண்டால்தான் அவன் அந்த வருணத்துக்குரியவன் ஆகிறான். உபநயநம் செய்து கொள்ளவில்லை என்றால் அவன் சூத்திர நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவான். சூத்திரர்களுக்கு இரண்டாவது பிறப்பு கிடையாது. பெண்களுக்கும் கிடையாது.

இந்தப் பூணூல் அணிவதில்கூட கூட மூன்று வருணத்தாருக்கிடையில் பல்வேறு வேறுபாடுகள் உண்டு.

இந்து மத சாஸ்திரப்படி தற்போது நடைபெறும் காலம் கலியுகம். கலியுகத்தில் பிராமணர்கள் சூத்திரர்கள் என்ற இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு. எனவே, இன்றைய காலகட்டத்தில் சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய வருணங்கள் கிடையாது என்பதாலும், இருக்கின்ற இரண்டு வருணங்களில் சூத்திரர்களுக்கு பூணூல் அணியும் உரிமை கிடையாது என்பதனாலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே இந்த உரிமை உண்டு. 
பூணூல் அணிய உரிமை கேட்டு விஸ்வகர்மாக்கள் போராடிய சமீபத்திய வரலாறுகளும்  உண்டு. 

மனுதர்ம சாஸ்திரத்தை முழுமையாகப் படித்து உள்வாங்கிக் கொள்வதும், அதில் உள்ள பல்வேறு அம்சங்கள் எப்படி நடைமுறையில் இன்றும் தொடர்கிறது என்பது குறித்தப் புரிதலை ஏற்படுத்திக் கொள்வதும், பார்ப்பனியம் மேலாதிக்கத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது.

விரிவஞ்சி நான் மிகச் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன். நான் சொல்லி உள்ள எல்லாவற்றிற்கும் மனுதர்மத்தில் ஆதாரங்கள் இருக்கிறது.

ஊரான்

Sunday, 27 August 2023

வன்னியர் சாதி உழைக்கும் மக்களுக்கு ஓர் வேண்டுகோள்!

வன்னியர் சாதி உழைக்கும் மக்களே!

ஒரு சில வன்னியச் சாதித் தலைவர்களால்
ஏற்கனவே நீங்கள் நஞ்சூட்டப்பட்டு, பொதுச் சமூகத்திலிருந்து விலகி, திசைமாறி அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். இதனால்  கல்வியில் பின்தங்கி இருப்பதோடு, உரிய விகிதாச்சார அடிப்படையில் அரசு வேலைகளையும் பெறமுடிவதில்லை.

கல்வியில் நீங்கள் பின்தங்கி இருப்பதால், தனியார் நிறுவனங்களில்கூட உங்களால் ஒரு உத்தரவாதமான நல்ல வேலையைப் பெறமுடிவதில்லை. வேளாண்மையிலும் போதிய வருவாய் இல்லாததால், கல்வியில் பள்ளிப் படிப்பைக்கூடத் தாண்டமுடியாத சூழலில், உங்களில் பலர் கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு உதிரி வேலைகளில் எடுபிடிகளாக மட்டும்தான் செயல்பட முடிகிறது. உங்களில் பலர் தினக்கூலிகளாக இருப்பதால், எளிதில் சாராய போதைக்கு அடிமையாகி சீரழிந்து, நீங்கள் மட்டையாவதோடு உங்கள் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்துகிறீர்கள்.

உங்களில் பலர் படித்திருந்தாலும், இதர பிற்பட்டோருக்கான (MBC) இட ஒதுக்கீடு இருந்தும், பிறசாதியினரோடு போட்டி போட்டு மாநில அரசின் வேலை வாய்ப்பினை பெறுகின்ற ஆற்றல் அற்றவர்களாக இருக்கின்றீர்கள். மாநில அரசு இட ஒதுக்கீட்டிலேயே உங்களால் ஒரு வேலையைப் பெறமுடியாத போது, மத்திய அரசின் இதர பிற்படடோரின் (OBC) இட ஒதுக்கீட்டின்கீழ், மத்திய அரசு நிறுவனங்களில் நீங்கள் ஒரு வேலையைப் பெறுவது குதிரைக் கொம்பாகத்தானே இருக்க முடியும்.

மத்திய, மாநில அரசு வேலைகளைப் பெறுவதற்கேற்ப, உங்கள் திறமைகளை வளர்ப்பதற்கு பிற சாதியினர் செய்வதைப் போல, அறிவுத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், ஏற்பாடுகள், கட்டமைப்புகள் எதையும் நீங்கள் ஏற்றிச் போற்றுகின்ற உங்களின் சாதித் தலைவர்கள் செய்வதில்லை. மாறாக, ஆண்ட பரம்பரை, சத்ரிய குலம் என பெருமை பேச வைத்து உங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதை என்றைக்கு நீங்கள் உணர்கிறீர்களோ, அன்றைக்குத்தான் உங்களுக்கான விடிவு காலம் தொடங்கும்.

சாதித் தலைவர்களால் ஏற்கனவே நீங்கள் நஞ்சூட்டப்பட்டது போதாது என்று தற்போது, "அகில பாரதிய சத்ரிய மகா சபா யுவா" என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரக் கும்பல், வன்னியர் சாதி மக்களிடையே ஊடுருவி, பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வன்மப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. 

சாதி வெறியை ஊட்டி பிறசாதி மக்களுக்கு எதிராக உங்களைக் கொம்பு சீவி விடும் உன்மத்தர்களை அடையாளம் கண்டு, அவர்களை பீச்சாங்கையால் புறந்தள்ளி முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களை நோக்கி வாருங்கள். புதியவைகளை நீங்கள் கற்றுணரும்போதுதான், உங்களின் பின்தங்கிய நிலையை உங்களால் உணர முடியும். இன்றைய காலகட்டத்தில் இது ஒன்றுதான் உங்களுக்கான மாற்று வழி! 

ஊரான்

Thursday, 5 May 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-3

VI

"சமத்துவத்தை இந்துமதம் அங்கீகரிக்கிறதா?

இந்தக் கேள்வி, உடனடியாக ஒருவரது சிந்தனையில் சாதி அமைப்பு முறையைக் கொண்டு வருகிறது. பல்வேறு சாதிகளும், ஒரே தரத்தில் கிடைமட்ட வரிசையில், அருகருகே அமர்த்தப்படவில்லை என்பது சாதி அமைப்பின் ஒரு முனைப்பான அம்சமாகும். பல்வேறு சாதிகளும், ஒன்றன் மீது ஒன்றாக, செங்குத்தான வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளதொரு அமைப்பு அது‌. சாதிகளைத் தோற்றுவித்ததில் மனுவுக்கு பொறுப்பு இல்லாதிருக்கலாம். வருணத்தின் புனிதத்துவத்தை மனு போதித்தார்;  நான் எடுத்துக் கூறியுள்ளபடி வருணமே, சாதி அமைப்பின் தாய். அந்தவகையில் சாதி அமைப்பின் மூலவராக இல்லையெனினும், அதன் தோற்றத்திற்கான கர்த்தாவாக மனு விளங்கினார் என்று குறை கூறலாம். எது எப்படியாயினும், சாதி அமைப்பைப் பொறுத்து மனுவில் குற்றம், அவர் தரப்படுத்தி,  படிமப்படுத்தும் கோட்பாட்டினை உயர்த்திப் பிடித்ததில் பொறுப்பு வகித்தார் என்பதில் ஐயமில்லை.

மனுவின் திட்டப்படி, பிராமணன் முதல் தளத்தில் வைக்கப்பட்டான்‌. அதற்கு அடுத்து சத்திரியர்; சத்திரியருக்குக் கீழே வைசியர்கள்; அவர்களுக்குக் கீழ் சூத்திரர்கள்; சூத்திரர்களுக்கும் கீழே ஆதி சூத்திரர்கள் (தீண்டாதார்). இந்தத் தரவரிசை அமைப்பானது சமத்துவமற்ற கோட்பாட்டினை எடுத்துரைப்பதாகும்; எனவே, இந்து மதம் சமத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்று மெய்யாகவே கூறலாம். அந்தஸ்தில் சமத்துவமற்ற இந்த நிலையானது, ஏதோ மன்னரின் அரசவை கூடத்தின் விழா கூட்டத்திற்காக வரிசைப்படுத்திய முன்னுரிமைப் பட்டியல் ஆணை அல்ல அது. மக்களினத்தவரிடையே கடைபிடிக்க வேண்டிய - எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா நோக்கங்களிலும் அமலாக்கப் படவேண்டிய, ஒரு நிரந்தர, சமுதாய உறவாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், மனு இந்த வேறுபாட்டினை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்பதை விவரித்துக்கூறின், அது பெரிதும் நீண்டு விடும்; அவர், சமத்துவமின்மையை வாழ்வின் ஜீவசக்தியாக்கினார். ஆனால், அடிமைத்தனம், திருமணம், சட்டவிதிகள் போன்ற சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு அதை விளக்க முற்படுகிறேன்."

-பக்கம்-38, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 6.

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1