Thursday, March 13, 2025

பெண்களைப் பாழாக்கும் கவிதைகளை மட்டும் ஒரு போதும் எழுதாதீர்கள்!

ஏன் பெண்கள் என்றால் மட்டும் சிலருக்கு எச்சில் ஊற கவிதைகள் ஊற்றெடுக்கின்றன?  பழங்காலம்தொட்டே,
பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் ஆண்களின் வக்கிரப் பார்வைதான்  பெண்களை வர்ணிக்கும் கவிதை வரிகள்! காமத்தில் திளைப்பவனால் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும்.

அதனால்தான் அன்று பெண்களின் அவயங்களை சிலைகளில் வடித்தார்கள். ஓவியங்களில் தீட்டினார்கள். கதைகளிலும் நாவல்களிலும் காமத்தைத் தெளித்தார்கள். இன்று திரைப்படங்களில் துருத்திக் காட்டுகிறார்கள்! 

விளைவு? கணன்று கொண்டிருந்த காம நெருப்பு, இன்று பச்சிளம் சிறுமி முதல் பல்லுபோன பாட்டிகள் என பலரையும் எரித்துப் பொசுக்கிக் கொண்டிருக்கிறது.


கவிதை எழுத பொருளா இல்லை? 
மக்களின் பாடுகளைப் பாடுங்கள். பெண்களைப் பற்றியும் பாடுங்கள். ஆனால், அவயங்களைத் தவிர்த்து அவர்களின் வேதனைகளை வெளிக்கொணருங்கள்!

இருவருக்கும் இடையிலான காதலை, அந்தரங்க ஆசைகளை, உணர்வுகளை, அனுபவங்களை ஏன் மற்றவர்களுக்குப் பாய் விரித்து பந்தி போடுகிறாய்?
உனது காதலி என்ன, அடுத்தவனின் நுகர்வுப் பொருளா? காதலி பற்றியக் கவிதை வரிகளை அடுத்தவன் படிக்கும் பொழுது உன் காதலியையும் சேர்த்தே அவன் அனுபவிக்கிறான் என்பதை நீ உணரவில்லையா?

கவிதை எழுதித்தான் ஆக வேண்டும், கற்பனைகளுக்கு வடிகால் தேடித்தான் ஆகவேண்டும் என்றால்,

மக்களின் வறுமை வேதனைகளைப் பாடத் தெரியாது என்றால்,

பசுமை நிறைந்த காடுகளையும் பாலை வனக்கங்களையும் 
மலைகளையும் மடுவுகளையும்
ஆறுகள் ஏரிகுளங்களையும் வயல்களையும் தோட்டங்களையும் 
பூத்துக் குலுங்கும் மலர்களையும் 
பறந்து மகிழும் பறவைகளையும்
ஓடி ஆடும் விலங்குகளையும் வானத்தையும், கடலையும்
என, நம் கண்முன்னே பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையைப் பாடுங்கள்! 
இக்கவிதைகளை, பாடல்களைப்
படிப்பவனுக்கும் ஆபத்தில்லை. பாடுபொருளுக்கும் ஆபத்தில்லை!

பெண்களைப் பாழாக்கும் கவிதைகளை மட்டும் ஒரு போதும் எழுதாதீர்கள்! உங்களுக்குக் கோடி 'புண்ணியம்'!

ஊரான்

2 comments:

  1. சக்திவேல்: இன்றைய பாலியல் வன் செயல்களுக்கு இத்தகைய கவிதைகளும் காரணம் என உணர வைத்தது மட்டும் அல்ல அதற்கு மாற்றாக இயற்கை எழிலை மக்களின் வாழ்க்கை முறையை பாடுகளை சமூகத்தில் பெருகி வரும் கலாச்சார சீரழிவு முயற்சிகளை மானிடத்தின் மாண்புகளை எழுதிட வழிகாட்டியது அதனினும் அருமை . நன்றி 🙏

    ReplyDelete
    Replies
    1. இன்று முகநூலில் ஒரு கவிதை படித்தேன். பெண்களின் அவயங்களை மிகக் கூர்மையாக வர்ணித்திருந்தான் ஒரு 'கவிஞன்'. அதன் எதிர்வினைதான் இன்றைய பதிவு.

      ஒரு முற்போக்கு எழுத்தாளர் தனது சிறுகதை ஒன்றில் கணவன் மனைவிக்கு இடையிலான அந்தரங்க உறவுகளைக்கூட வர்ணித்திருந்தார். கிட்டத்தட்ட அவர் தனது மனைவியோடு அனுபவித்த உணர்வுகளைத்தான் அந்தக் கதையிலும் வெளிப்படுத்தி இருந்தார் என்றுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

      அனுபவிக்காத ஒன்றை எப்படி உணர்வு பூர்வமாக ஒருவனால் வெளிப்படுத்த முடியும்? இது அருவருப்பு இல்லையா? நான்கு சுவர்களுக்குள், தனிமையில், இரண்டு நபர்களுக்குள் உள்ள அந்தரங்க உறவுகள் பொதுவெளியில் பேசப்படுவது கூடாது என்பதே எனது கருத்து.

      Delete