Monday, March 17, 2025

அறுந்த செருப்பு!

பசி எடுக்கிறதோ இல்லையோ மாலை நேரமானால் எதையாவது கொறிக்க வேண்டும் என பழக்கப்பட்ட மக்கள் கூட்டம் சிக்கன் பக்கோடா, மீன்வறுவல், போண்டா, சமோசா, பஜ்ஜி கடைகளையும் பானிபூரி கடைகளையும்  மொய்த்துக் கொண்டிருந்தது. டாஸ்மாக்கின் உபயத்தால் சிலரின் கல்லாப் பெட்டிகள் கணக்கின்றன. பலரின் 'பர்சுகள்' மெலிகின்றன. பணம் புழங்கினால் நாட்டு வளம் பெருகிவிட்டதாக சில பொருளாதாரப் புலிகள் சொல்லுவது உண்மைதானோ என்பதை மெய்ப்பிக்கும் வண்ணமாய் மாலை நேரக் கடைகள் காட்சியளிக்கின்றன.

ஸ்ப்ளெண்டர், பேஷன், ஹோண்டா சிட்டிகள் தங்களது எசமானர்களை இறக்கிவிட்டு, 'சைடு ஸ்டேண்டில்' சாய்ந்து கொண்டு ஒய்யாரமாய் ஓய்வெடுக்கலாம் என்றால் வருவோர் போவோருக்கு இடையூறாய் நிறுத்தப்பட்டிருந்ததால் பலரின் வசவுச் சொற்களை சுமந்து கொண்டு சோகமாய்க் காட்சி அளித்தன.

கோப்புப் படம்

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த போது, வேலூர் செல்லும் தனியார் பேருந்து நடத்துனருக்கும், அதற்கு அடுத்துப் புறப்பட வேண்டிய அரசுப் பேருந்து நடத்துனருக்கும் இடையே மிக மூர்க்மாய் சண்டை நடந்து கொண்டிருந்தது. தனது பேருந்து புறப்படுவதற்கு முன்பு அடுத்த பேருந்தில் யாரையும் ஏற்றக் கூடாது என்ற தனியார் பேருந்துக்காரர்களின் எழுதப்படாத சட்டமே சண்டைக்கு அடிப்படை.

எந்தப் பேருந்தில் நாம் பயணிக்க வேண்டும் என்பதையும் அந்த முதலாளிமார்களே தீர்மானிக்கிறார்கள். மீறி அடுத்தப் பேருந்தில் ஏறினால் மிரட்டி இறக்குகிறார்கள். ‘என் பயணம் என் உரிமை’ என்றெல்லாம் இங்கு பேச முடிவதில்லை.

சற்று நேரத்தில் தனியார் பேருந்து புறப்பட, அரசுப் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். காற்றைத் கிழித்துக் கொண்டு வேலூரை நோக்கிப் பேருந்து முன்னே விரைய, கிழிபட்ட காற்றோ சன்னல் இடைவெளிக்குள் புகுந்து முகத்தில் மோதி பின்னே மறைந்தது‌. பேருந்தின் வேகத்திற்கேற்ப காற்றின் வேகம் மாறுபடும் என்பதால் முகத்தைத் தழுவி நழுவும் அளவுக்கு சன்னல் திறப்பை குறைத்துக் கொண்டேன்.

மேற்கே கதிரவன் மறைய, கிழக்கின் இருள் மலைகளைப் போர்த்த, பேருந்தின் வேகத்திற்கேற்ப பக்கவாட்டில் தோன்றிய மலைகளும் பின்னோக்கி விரைந்து மறைந்தன. 

இது பங்குனியின் தொடக்கம். குளிரும் இல்லை, கடும் கோடையும் இல்லை என்பதால், பாலாற்றில் ஓரமாய் ஓடிய மெல்லிய நீரோடையைப் போல, ஜன்னல் காற்று இதமாய் முகத்தை வருட, நெடுஞ்சாலை நடுவே வரிசை கட்டி நின்ற வெண் விளக்குகள் பாதை காட்ட, ஆங்காங்கே சில செவ்விளக்குகள் தடம் மாறும் தடையங்களை சுட்டிக்காட்டி எச்சரித்து பின்னோக்கி மறைந்தன. 'சிவப்பு' எண்ணிக்கையில் குறைவுதான். ஆனால், அதுதானே சேதாரத்திலிருந்து நம்மைக் காக்கிறது.

தவறவிட்ட 'பிரேஸ்லெட்' ஒருமணி நேரத்தில் திரும்பக் கிடைத்ததை, கல்லூரிக்கால நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவில் “எல்லோரும் நல்லோர்களே” என்று கலீல் பகிர்ந்த செய்தியைக் கண்டபோது மற்றொரு கோணத்தில் எனது எண்ணம் ஓட, “நல்லவர்களைக் கெட்டவர்களாக்கும் மிகக்கொடிய 'ஆயுதம்' சொத்து!” என்றொரு செய்தியை முகநூலில் பகிர்ந்த போது, எனது வலது கால் பாதத்தின் மேல் ஏதோ விழுந்ததை உணர்ந்தேன். 

கீழே பார்த்தபோது அது நான்காக மடிக்கப்பட்டிருந்த 200 ரூபாய் தாள். அந்தத் தாள் முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்களுடையதுதான் என்பதை என் மனம் உறுதியாக நம்பியதால், அவர்களிடம் அதை எடுத்துக் கொடுத்தேன். அதைப் பெற்றுக் கொண்டவர், எடுத்துக் கொடுப்பது யார் என்றுகூட பார்க்க விரும்பவில்லை போலும்; மாறாக, 'பாக்கெட்டிலிருந்து செல்போன் எடுக்கும் போது விழுந்திருக்கும்’ என்று அவரது மனைவி அவரிடம் சொல்வது மட்டும் என் காதில் விழுந்தது. சட்டைப் பையில் செல்போனோடு ரூபாய் தாளை வைத்தால், செல்போனை எடுக்கும் பொழுது அதோடு சேர்ந்து அந்தத் தாளும் வெளியே வந்து கீழே விழுந்த அனுபவம் எனக்கு உண்டு. 

இந்த அனுபவத்தைக் கைபேசியில் பதிவு செய்து கொண்டே வந்த பொழுது நேரம் போனதே தெரியவில்லை. வேலூர் பேருந்து நிலையம் வந்துவிட்டது. பேருந்திலிருந்து கீழே இறங்கிய போதுதான் தெரிந்தது இடது கால் செருப்பின் ஒரு வார் அறுந்திருந்தது. இரவு மணி எட்டு, இந்த நேரத்தில் செருப்பை செப்பனிடவும் முடியாது, வேறு செருப்பும் வாங்க முடியாது என்பதால் சற்றே காலை இழுத்தவாறு அடுத்தப் பேருந்தில்  வாலாஜாவுக்குப் பயணித்து, அங்கிருந்து ஒரு ஆட்டோவில் எனது இல்லம் இருக்கும் இடத்தில் இறங்கினேன். 

நான்கடி எடுத்து வைப்பதற்குள் செருப்பின் அடுத்த வாரும் அறுந்து போனது. அதனுடைய ஆயுள் அவ்வளவுதான், இனியும் அதை செப்பனிட முடியாது என்பதாலும், அறுந்த செருப்போடு நடப்பது மேலும் சுமைதான் என்பதாலும், இதுவரை என்னைச் சுமந்த அந்தச் செருப்பைத் தூக்கி எறிந்துவிட்டு வெறுங்காலோடு வீடு நோக்கி நடக்கலானேன். 

இதுவரை நாம் சுமந்த சில எண்ணங்கள்கூட நமக்குப் பயன்பட்டிருக்கலாம்; ஆனால் இனியும் அத்தகைய எண்ணங்கள் பயன்படாது என்று உணர்ந்த பிறகும் அவற்றைத் தூக்கிச் சுமப்பதும் ஒருவிதத்தில் சுமைதானே?

ஊரான்

8 comments:

  1. Valluvan: Arumai Sir.
    The happiness and some kind of feeling we are getting on Free of cost 😉
    Your special touch in between the writings is the big highlight Sir.
    Even when we are in bad feeling s by reading your write-ups brings out of our unwell ness

    Like hearing Ilayaraja music
    Thanks 👍🙏
    This is to be my message to your great Sir.

    A small or even a single word will make huge changes in our life.

    ReplyDelete
  2. அரசு: தேவையில்லாத நினைவுகளை சுமப்பதும் ஒரு சுமைதானோ? என்ற வரிகள் அருமை.

    பழையன கழிதலும் புதியன புகுதலும் பொருட்களுக்கு மட்டும் அல்ல சிந்தனைக்கும் தானே.

    ReplyDelete
  3. ராமு: பலருக்கும் இது போன்ற அனுபவம் இருந்திருக்கலாம்.ஆனால் எனக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.அதை போகிற போக்கில் மறந்து போய் விட்டது.தங்களின் அற்புதமான நடையில் அனுபவத்தை பகிர்ந்து இருந்தது பழைய நினைவுகளை தென்றலாக சுமந்து வந்தது.சில எண்ணங்களை சுமக்காமல் இருப்பதும் நல்லதே! நன்றி.

    ReplyDelete
  4. ராதாகிருஷ்ணன்: Final punch....😆
    True statement....
    இதுவரை நாம் சுமந்த சில எண்ணங்கள்கூட நமக்குப் பயன்பட்டிருக்கலாம்; ஆனால் இனியும் அத்தகைய எண்ணங்கள் பயன்படாது என்று உணர்ந்த பிறகும் அவற்றைத் தூக்கிச் சுமப்பதும் ஒருவிதத்தில் சுமை.

    ReplyDelete
  5. பாஸ்கரன்: பயன் படாத எண்ணங்களை அறுந்து போன செருப்போடு ஒப்பிட்டிருப்பது அருமை 👌👌

    ReplyDelete
  6. ஜெயராம கிருஷ்ணன்: தேவையற்ற எண்ணங்களைத் தூக்கி எறியத்தான் வேண்டும் ஏனெனில் அதுவும் பயனற்ற பழுதாகிப் போன இயந்திரம்தான் ...👌

    ReplyDelete
  7. பஞ்சாட்சரம்: மிகச்சிறந்த தெள்ளிய நீரோடை போன்ற கதையோட்டம்.

    ReplyDelete
  8. மகேஸ்வரி: ஆனால் சில சுமைகளை இறக்கி வைக்க முடிவதில்லை.

    ReplyDelete