Showing posts with label #அம்பேத்கர் #சனாதனஎதிர்ப்பு #சமூகநீதி #பெரியார் #சாதியொழிப்பு #அம்பேத்கர்135. Show all posts
Showing posts with label #அம்பேத்கர் #சனாதனஎதிர்ப்பு #சமூகநீதி #பெரியார் #சாதியொழிப்பு #அம்பேத்கர்135. Show all posts

Tuesday, 14 April 2026

அண்ணல் அம்பேத்கர்: மாலைகளுக்குப் பின்னால் மறைக்கப்படும் புரட்சி!

அறிமுகம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 வந்துவிட்டால் போதும், அண்ணல் அம்பேத்கரின் சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவிக்க அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரும் போட்டியே நடக்கிறது.

தங்களை அம்பேத்கரின் வாரிசுகளாகக் காட்டிக்கொள்ளும் இந்தப் புகைப்படப் 'போஸ்'களுக்குப் பின்னால், அவர் எதற்காகப் போராடினாரோ அந்த அடிப்படை நோக்கங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன. 

அம்பேத்கர் என்பவர் வெறும் ‘சேரிகளுக்கான தலைவர்’ அல்ல; அவர் இந்த நாட்டின் ஒட்டுமொத்த சமத்துவத்திற்கான விடிவெள்ளி.

அம்பேத்கர்

சனாதனம் எனும் நச்சுச் சுழல்

அம்பேத்கர் எதிர்த்தது மனிதர்களை வருணங்களாகவும், சாதிகளாகவும் பிளவுபடுத்தி, பெருமான்மை உழைக்கும் மக்களை சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும், ஊர் என்றும் சேரி என்றும் பிரித்து வைத்திருக்கும் இந்து மதச் சனாதனத்தைத்தான். 

சனாதனம் என்பது வெறும் சாதியப் பாகுபாடு மட்டுமல்ல.
அது பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் சமூக அமைப்பும் ஆகும். மாதவிடாய் முதல் பிறப்பு வரை அனைத்திலும் ‘தீட்டு’ கற்பித்து அதன் பெயரால் சடங்குகளை உருவாக்கி, பார்ப்பனர்களுக்கு வருவாய் ஈட்டித் தரும் ஒரு சுரண்டல் அமைப்பாகும்.

அம்பேத்கருக்கு இழைக்கப்படும் துரோகம்

அம்பேத்கர் வழங்கிய சட்ட உரிமையால் படித்து, பட்டம் பெற்று, உயர்பதவியில் இருக்கும் பல பட்டியல் சாதியினர் இன்று செய்கின்ற செயல் அதிர்ச்சியளிக்கிறது. ஒரு காலத்தில் தங்கள் வீட்டு வாசலை மிதிக்காத பார்ப்பனர்களை, இன்று கௌரவம் என்ற பெயரில் தங்கள் வீட்டுத் திருமணங்களுக்கும் சடங்குகளுக்கும் அழைத்து சனாதனத்திற்குத் தூபம் போடுகிறார்கள். பார்ப்பன புரோகிதர்களை அழைப்பது என்பது உங்கள் வீட்டிற்குள் சனாதனத்தை அழைப்பதாகும். இது அம்பேத்கரின் போராட்டத்திற்கும் கொள்கைக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும்.

காரல் மார்க்சின் கொள்கை வழியில்,  பெரியார்- அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கி சனாதன ஒழிப்பு
சடங்குகளற்ற, பார்ப்பனியமற்ற வாழ்வியலை முன்னெடுக்கும் மார்க்சிய-லெனினிய போராளிகளிடமாவது இவர்கள் பாடம் கற்க வேண்டும். அப்பு-பாலன் காலத்தில் நாயக்கன் கொட்டாயில் நடந்த போராட்டங்களை நினைத்துப் பாருங்கள்.

சனாதனக் கசடுகளைத் தம் சொந்த வாழ்விலிருந்து துடைத்தெறிவதே அம்பேத்கருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும். சனாதன எதிர்ப்பு என்பது அம்பேத்கரின் உயிர் மூச்சு. இதை உணராமல் சடங்குகளில் மூழ்கிக்கிடப்பது அடிமைத்தனத்தை மீண்டும் தழுவுவதே ஆகும்.

பிழைப்புவாதமும் அரசியல் சாதியவாதமும்

இன்று பட்டியல் சாதியினரிடையே பிழைப்புவாதிகள் அதிகரித்து வருகின்றனர். சனாதனத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் சக்திகளோடும், பாஜக போன்ற அமைப்புகளோடும் கைகோர்த்துக்கொண்டு அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது வேடிக்கையானது. ‘சொந்த சாதிக்காரன்’ என்ற ஒரே காரணத்திற்காக, சனாதனக் கொள்கைகளைத் தாங்கிப் பிடிக்கும் ஒருவரை ஆதரிப்பது கடைந்தெடுத்த சாதியவாதமாகும். இது அம்பேத்கரின் உயரிய நோக்கத்தைச் சிதைக்கும் செயலாகும்.

ஜனநாயக சக்திகளிடம்
ஐக்கியம்

பட்டியல் சாதி மக்கள் தனித்து நின்று சனாதனத்தை ஒழித்துவிட முடியாது. அவர்கள் பிற சாதி மக்களோடும், ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளோடும் ஐக்கியமாக வேண்டும். சாதி கடந்த ஒரு பெரும் போராகச் சனாதன எதிர்ப்பு மாற வேண்டும்.

முடிவுரை

அம்பேத்கருக்கு மாலை அணிவிப்பதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதும் ‘போஸ்’ அரசியலைக் கைவிடுவோம். நம் வீட்டுச் சடங்குகளில் இருந்து பார்ப்பனியத்தை விரட்டுவோம். அதிகாரப் பிழைப்புக்காகச் சனாதனத்திடம் மண்டியிடும் துரோகிகளை அடையாளம் கண்டு ஒதுக்குவோம். சனாதனக் கசடுகளைத் துடைத்தெறிந்து, சமத்துவப் பாதையில் நடப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் உண்மையான பிறந்தநாள் காணிக்கை!

ஊரான்