Monday, 21 September 2026

கீழடியைக் காக்க மதுரையில் ம.க.இ.க ஆர்ப்பாட்டம்! தோழர் தமிழ்மணி உரை

கீழடியைக் காக்க
மதுரையில் 
ம.க.இ.க ஆர்ப்பாட்டம்! 

ஒன்றிய அரசே!

கீழடி: அமர்நாத் ராமகிருஷ்ணா ஆய்வறிக்கையை உடனே வெளியிடு! ஆய்வுப் பணிகளை முடக்காதே!

தமிழக அரசே! கீழடி அறிக்கையை வெளியிட சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்று!

தொல்லியல் ஆய்வுக்கு ரூ. 1 கோடி  போதாது; 100 கோடி ஒதுக்கு! ஆய்வை தொடர்ந்து நடத்து!

வரலாற்றை மீட்டெடுக்க 18.09.2026 மாலை 5.30 மணி அளவில் மதுரையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டம் 
***

தோழர் தமிழ்மணி உரை

அனைவருக்கும் வணக்கம்,

நேற்றைக்கு நாங்கள் கீழடி மற்றும் கொந்தகைக்கு போயிருந்தோம். ஒரு வீடு விடாமல் எல்லா வீடுகளுக்கும் போனோம். தற்போது நடைபெறுகிற ஆர்ப்பாட்டம் குறித்தப் பிரசுரத்தைக் கொடுத்தோம். ஆனால் வீடுகளில் ஆட்களே இல்லை. வயதானவர்கள் முடியாதவர்கள் மட்டும்தான் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். தெருக்களில் மாடுகளும் ஆடுகளும் நாய்களும் இருந்தன. 

இந்தக் கிராமத்து மக்களெல்லாம் விவசாயிகள். ‘எங்கே ஆளுங்களையே காணோமே?’ என்று அங்கிருந்த ஒரு சிலரிடம் கேட்டபோது ‘எல்லாரும் வேலைக்குப் போய் இருக்காங்க’ என்று சொன்னார்கள். ‘எங்கே?’ என்று கேட்டபோது ‘மதுரைக்கு’ என்றார்கள். 

மதுரையில என்ன வேலை கிடைக்கும்? மதுரைக்குப் போனா என்ன கலெக்டர் வேலையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் வேலையுமா கிடைக்கும்? கூலி வேலைதானே கிடைக்கும்? விவசாயத்தில் வரக்கூடிய வருவாயைக் கொண்டு வாழ முடியாது என்பதனால்தான் அவர்கள் தினக்கூலிகளாக வெளியூர்களுக்கு ஓடுகிறார்கள். 

கொந்தகை என்ற ஊரில் நாங்கள் பிரசுரம் கொடுக்கும் போது ‘தோழர், சாக்கடத் தண்ணி தெருவுல ஓடுது பாருங்க. இங்க சாக்கடை வசதியே இல்லை, எங்க வீட்டு தண்ணிய திறந்து விட்டா அது அடுத்த வீட்டுக்காரங்க வழியாக போனா அவங்க சண்டைக்கு வராங்க‌. இதுதான் இங்க பெரும் பிரச்சனை’ என்று எங்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.  அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. சாக்கடை நீரெல்லாம் தெருவில்தான் ஓடுகிறது. ‘இந்த மாதிரி எங்களுக்கு கஷ்டம் இருக்கும்போது நீங்க கீழடி பக்திப் பேசுறீங்க,  ஆதிச்சநல்லூரீங்கிறீங்க, நாகரிகமுங்கிறீங்க, எங்க பிரச்சனை எங்களுக்கு இருக்கும்போது இதுல நாங்க என்ன செய்ய முடியும்’ என்று அவர் கேட்டார். இதுவும் நியாயமான கேள்விதான். 

நேற்று மாலையில் மதுரைக்கு வந்தோம். இன்று இங்கு கடுமையான வெயில். நான் வேலூர்காரன்தான். வேலூர் என்றாலே வெய்யிலூருன்னு சொல்லுவாங்க. அதை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி மதுரை காயுது. காவிரியில் தண்ணி ஓடல; வைகையில் மட்டும் என்ன வெள்ளப்பெருக்கா இருக்கும்?

பாசனத்திற்கு தண்ணீர் இல்லை. அதனால் இங்கே விவசாயம் இல்லை. இங்கு மட்டுமல்ல பல இடங்களிலும் இதுதான் நிலைமை. இந்த நாட்டில் அதிகமான மக்கள் விவசாயிகள். இதோ பாருங்க, பக்கத்துல நல்லெண்ணெய் கடை, யாராவது வருவாங்களான்னு காத்துக்கிட்டு இருக்கு ஒரு QR Code. அவங்க விக்கிறது நல்ல எண்ணெய்தான். நல்ல எண்ணெயா இருந்தாலும் காசு கையில புரண்டால்லானே வாங்க முடியும்?

இங்கே எண்ணெய் வாங்க யாரும் வரல. ஆனால் சாராயக்கடையில சரக்கு வாங்க வரிசையில் நிக்குது ஒரு கூட்டம். அதேபோல கோயில்கள்ல குங்குமம், விபூதி வாங்க  வரிசை கட்டி நிக்கிறாங்க.

இன்று மக்கள் கையில போதுமான காசு பணம் கையில் இல்ல. மக்கள்  கஷ்டப்படுறாங்க வறுமையில் இருக்காங்க. வறுமையில் இருக்காங்க என்று சொல்வதைவிட தங்களுக்குத் தேவையானதை வாங்க முடியாத நிலையில் இருக்காங்க. வாங்குவதற்கு போதுமான வருமானம் இல்லை. இவங்ககிட்ட போய் கீழடி, சிவகளைன்னு பேசி என்ன ஆவப்போவுது அப்படின்னு ஒரு சந்தேகம் வரலாம்.

இப்ப ஆட்சி மாற்றம் நடந்து ஒரு 100 நாள் கூட ஆகல. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அரிசி வாங்க போனேன். 25 கிலோ மூட்டை ரூ.1400. போன மாசம் ரூ.1500. இந்த மாசம் ரூ.1600. மாதத்துக்கு ரூபா 100 அதிகமாகி ரெண்டு மாசத்துல மட்டும் 200 ரூபாய் வெலை கூடிடுச்சு. சர்க்கரை 45 ரூபாயிலிருந்து 65 ரூபாய். 
100 நாட்களுக்குள் இவ்வளவு விலை ஏறியிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லையா? இதுதான் ஜனங்களுக்கு பிரச்சனை. மக்கள் இதைத்தான் பேசுகிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சனையும்கூட. நான் மறுக்கவில்லை. 

ஆனால், இங்கே, ‘கீழடியை உயர்த்திப்பிடி, வேதநாகரிகத்தைத் துரத்தி அடி!’ என்கிறோம். அதாவது, கீழடி நாகரிகத்தில் மதம் இல்லை சாதி இல்லை, கடவுள் சிலைகள் இல்லை. மக்களைப் பாகுபடுத்தும் எதுவுமே இல்லை. அதனால்தான் கீழடியை உயர்த்திப்பிடி என முழங்குகிறோம்.  போராடுறோம். நாம்கூட சாதி பேதமற்ற ஒரு சமத்துவமான சமூகத்தை அமைப்பதற்காகத்தானே போராடுகிறோம். நல்லது. 

அதே வேளையில், ஏன் வேத நாகரிகத்தைத் துரத்தி அடிக்கணும்? வேத நாகரிகம் என்றால் என்ன? அவன் சொல்லும் வேத நாகரிகம்கூட நம்மிடையே ஊறிப்போயிருக்கு.  நீங்களும், நானும் நம்மை அறியாமலேயே வேத நாகரிகத்தை ஏதோ ஒரு வகையில் பின்பற்றி வருகிறோம். அதுதான் உண்மை. 

இப்ப, ஒரு முக்கியமான பிரச்சனை மதுரையில் ஓடிக்கிட்டு இருக்கு.
நேத்து மீனாட்சி கோவிலுக்கு குடமுழுக்கு. தமிழில் மந்திரம் ஓதி குடமுழுக்கு செய்யவேண்டும் என்று தமிழ் ஓதுவார்கள், ஆர்வலர்கள் போராடுகின்றனர்.  வேத நாகரீகத்தை ஏன் துரத்த வேணும் என்பதைப் புரிந்து கொள்ள குடமுழுக்கு என்றால் என்னவென்று தெரிந்து கொண்டால் போதும். குடமுழுக்கு பற்றி வேதம் என்ன சொல்லுகிறது? அதைத் தெரிந்து கொண்டால் குடமுழுக்கு நடத்தணுமா இல்லையா என்று முடிவுக்கு வர முடியும்.  நடத்துவது என்பது அப்புறம். 

நண்பர்களே, இந்து மதத்திற்கு வேத சட்ட வழிகாட்டி மனுதர்ம சாஸ்திரம். அது என்ன சொல்லுது? படிச்சு காட்டுறேன். பாருங்க, 

"வீடு முதலானவற்றிற்குச் சண்டாள சாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது, விளக்குதல், மெழுகுதல், கோமூத்திரம் தெளித்தல், கொஞ்சம் மேல்மண்ணை எடுத்து அப்பால் போடுதல், பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படி செய்தல் இவை ஐந்தாலும் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது." (மனுஸ்மிருதி - 5:124)

சண்டாள என்ற சொல் திரைப்படங்களில் நிறைய பாடல்களில் வந்திருக்கு. இந்த நாட்டில் வாழக்கூடிய பட்டியல் சாதி பறையர்களைக் குறிக்கும் சொல் அது.  

கோவிலோ வீடோ கடையோ எந்தக் கட்டுமான  வேலையாக இருந்தாலும் அதில் பலரும் ஈடுபட்டிருக்கலாம். ஈடுபடுகிறார்கள் என்பதுதானே உண்மை. ஒருசிலரால் அந்த இடம் அசுத்தமாகி இருக்கும். அதாவது தீட்டுப் பட்டிருக்கும். எனவே  அந்த இடத்தை விளக்கி, மொழுகி அதுவும் சாணியைக் கொண்டு மொழுகி, பசு கோமியம் தெளித்து, பசு மாட்டை அங்கு ஓட்டிச் செல்வதால் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது என்கிறது மனு ஸ்மிருதி. 

கட்டுமான வேலைகளில் ஈடுபட்டத் தொழிலாளர்களை குறிப்பாக பறையர் சாதி மக்களை இழிவுபடுத்தும் ஒரு செயல்தான் கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகள். இவை அப்பட்டமாகத் தீண்டாமையைக் கடைபிடிக்கும் வன்செயல்கள். எனவே சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி, கோமியம் தெளித்து, பசுமாட்டை அழைத்துச் சென்று சடங்கு நடத்தும் யாராக இருந்தாலும் மந்திரம் ஓதுவோரையும், சமஸ்கிருதத்தில் ஓதியினாலும் சரி தமிழில் ஓதினாலும் சரி மந்திரம் ஓதும் புரோகிதர்களையும் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்த நபர்களையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே.  

உழைக்கும் மனிதனை இழிவு படுத்தக் கூடிய இந்தச் செயலை அதுவும் தமிழ் மொழி மூலம் இழிவுபடுத்தக் கோருவதை என்னை பொறுத்தவரை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. 

அடுத்து ‘நீ யார்? நான் யார்?’ என்று பெருமை பேசக்கூடியவர்கள் தங்களை ‘ஆண்ட பரம்பரை, அந்தப் பரம்பரை, இந்தப் பரம்பரை’ என்று பீற்றிக் கொண்டு தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோரும் ஒரே பரம்பரைதான் என்று வரலாறு சொல்கிறது. எல்லோரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவங்கதான். அங்கிருந்து கொஞ்சம் பேர் ஐரோப்பா பக்கம் போனார்கள். கொஞ்சம் பேர் சீனா- திபெத்துப் பக்கம் போனார்கள். கொஞ்சம் பேர் சிந்து சமவெளிக்கு வந்தார்கள். இன்னும் சில பேர் தெற்கு நோக்கி தமிழ்நாடு பக்கம் வந்தார்கள். இதெல்லாம் நடந்தது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. இவர்கள் வாழ்ந்த பகுதிகளின் சீதோஷ்ண நிலை, உழைப்பு அதுக்குத் தகுந்த மாதிரி பரிணாம வளர்ச்சி அடைந்தார்கள். அதனால் மனிதர்களின் ‘கலர்’ வேறு வேறு ஆகவும், மூக்கு ‘சைஸ்’ மண்டை ‘சைஸ்’ வேறு வேறாகவும் மாறின.

ஐரோப்பாவின் ஸ்டெப்பி புல்வெளிப் பிரதேசம் பகுதியில் வாழ்ந்தவர்கள் ஆடு மாடு மேய்த்து மட்டுமே வாழ்ந்தார்கள். அங்கு விவசாயம் கிடையாது. ஆறுகள் கிடையாது. அந்த இடம் தாங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறும்பொழுது அவர்கள் சிந்து சமவெளியை நோக்கி வருகிறார்கள்.  கி.மு 3000 வாக்கில் சிந்து சமவெளி நகர நாகரிகம் அழியத் தொடங்கியது. ஆனால் ஆரியர்கள் இங்கு வந்ததோ கி.மு 1900. சிந்து சமவெளி நாகரிகம் முடிவுப்பெறும் போது அதாவது மிகவும் பிற்காலத்தில் இங்கே வந்தவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தை தங்களுடைய நாகரிகம் எனவும் அதுதான் சரஸ்வதி நாகரிகம் எனவும் வரலாற்றை திருத்தி எழுத முயற்சிக்கிறது சனாதான கும்பல். சிந்து சமவெளி நாகரிகமும் நம்முடைய நாகரீகம்தான் என்பதற்கான தரவுகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை இங்கே நாம் மறந்து விடக்கூடாது. சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய நாகரிகத்தை அவன் கபளீகரம் செய்ய முயற்சிக்கிறான் என்பதே உண்மை.

அந்தக் காலத்தில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் பிற்காலத்தில் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளால் எங்கேயோ சென்று விட்டார்கள்.  செயற்கை நுண்ணறிவையே விஞ்சும் அளவிற்கு சீனாக்காரன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான். ஆனால் அன்றே நகர நாகரிகம் கண்ட நம்மால், உலகில் முதன் முதலில் இரும்பைக் கண்டுபிடித்து பயன்படுத்திய நம்மால் ஏன் அவ்வாறு முன்னேற முடியவில்லை? அன்றே ஆதன், குவிரன் என்று எழுதத் தெரிந்த நம்மால் பிற்காலத்தில் ‘அ’ ணா ‘ஆ’ வண்ணாகூட தெரியாமல் போனது எப்படி? அன்றே எழுதப் படிக்கத் தெரிஞ்சவங்க பின்னாடி ஏன் தற்குறி ஆனார்கள்?

இந்தியாவில் நுழைந்த பிறகு ஆரியர்கள் தங்கள் நயவஞ்சகத்தால் இந்திய மன்னர்களை ஏதோ ஒரு வகையில் மயக்கி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நமது கல்வியைப் பறித்தார்கள். 

அன்று கல்வி என்றால் வேதம் மட்டும்தான். அதையும் சமஸ்கிருதத்தில் மட்டும்தான் படிக்க வேண்டும். இதைப் படிக்கின்ற உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு. 

களப்பிரர் ஆட்சி காலம் வரை நம்மிடம் இருந்த கல்வி உரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்டது. அப்படியானால் அதன் பிறகு யாரும் படிக்கவில்லையா? ஆழ்வார்களும் நாயன்மார்களும் படிக்கவில்லையா என்று கேட்கலாம். வேதங்களையும் புராணக் கட்டுக்கதைகளையும் மக்களிடம் பரப்புவதற்காக அவர்கள் படித்தார்கள். யாருக்குத் தேவை அந்தக் கல்வி? 

ஆனால் இங்கு நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, நமது அப்பன் ஏன் படிக்கவில்லை? நமது பாட்டன் முப்பாட்டன் ஏன் படிக்கவில்லை? அவர்கள் ஏன் தற்குறிகளாக ஆனார்கள்? நேற்று வரை அதுதானே நிலைமை. 

பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் ஆட்சியாளர்களால் நமக்கான கல்வி மறுக்கப்பட்டது. கல்வி இல்லை என்றால் சிந்தனை இருக்காது. சிந்தனை இல்லையென்றால் புதிய கண்டுபிடிப்புகள் இருக்காது. 

கல்வி இருந்ததால்தான் பாயில்ஸ் விதிகளையும், ஆர்க்கிமிடீஸ் கோட்பாடுகளையும், ஓம்ஸ் விதியையும் ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. கல்விதான் அவர்களை தொழிற் புரட்சிக்கு இட்டுச் சென்றது. ஐரோப்பா முன்னேறியது.


ஆரியர்கள் நமது கல்வியை பறித்தார்கள். அதனால் நாம் முன்னேற முடியவில்லை. ஒரு காலத்தில் முன்னேறிய நகர வாழ்க்கை வாழ்ந்த நாம் பிற்காலத்தில் பின்தங்கிப் போனதற்கு நமக்குக் கல்வி மறுக்கப்பட்டதே காரணம். 

சிவகளையிலும், கீழடியிலும் கிடைத்திருக்கும் வாள், ஈட்டி, அம்பு இவை வெறும் துருப்பிடித்த வரலாற்று நினைவுகள் அல்ல. அவை சனாதனத்தை வெட்டி வீத்த, குத்திக் கிழிக்கக் கிடைத்திருக்கும் போர் ஆயுதங்கள்.  இந்த ஆயுதங்களை மக்கள் தங்கள் கைகளில் ஏந்த வேண்டும். இந்த ஆயுதங்களை நாம் ஏந்தவில்லை என்றால் இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும் இப்படியேதான் இருப்போம். சொல்லப்போனால் இன்னும் பின்னோக்கிதான் செல்வோம். 

‘ஏன் இப்படி!’ என்று நாளை நம் பேரப்பிள்ளைகள் கேட்பார்கள். பேரப் பிள்ளைகள் சொன்னார்கள் என்று இன்று ஓட்டு போட்டிருக்கலாம். அதை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறவில்லை என்றால் தமிழ்நாடு இன்னும் பின்னோக்கிதான் போய்க்கொண்டிருக்கும்.

தமிழ்நாட்டு மக்களைத் தட்டி எழுப்ப நம்மிடம் அகழாய்வு ஆயுதங்கள் இருக்கின்றன. விடக்கூடாது. பல மாதங்கள் ஆனாலும், சில பல ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆயுதங்களை நாம் கையில் ஏந்தியே ஆக வேண்டும்.  
சனாதன சக்திகளையும் அவர்களின் எடுபிடிகளையும் ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். 

இதற்கு மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது என்பதை தமிழ் மக்கள் இசை விழாவின் போது உணர முடிந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உலகெங்கிலும் வாழக்கூடிய ஆர்வலர்கள், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை வாழக்கூடிய உணர்வு கொண்ட தமிழ் மக்கள் இப் பிரச்சனைக்கு ஆதரவு  தெரிவித்துள்ளார்கள். அவர்களால் நேரடியாக பங்கேற்க முடியவில்லை என்றாலும் நிதி கொடுத்து ஆதரவு தருகிறார்கள்.

எனவே, இங்கு வாழக்கூடிய நாம் தான் சனாதனத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் இதைத் தொடர்ந்து முன்னெடுப்போம். வேறு வழி கிடையாது. அதை நோக்கிப் பயணிப்போம். அதற்கு இந்த ஆர்ப்பாட்டம் உதவும் என்றால் உண்மையிலேயே மகிழ்ச்சிதான். 

நன்றி. 

வணக்கம்!

தமிழ்மணி

(மக்கள் அதிகாரம் தளத்தில் வெளியான கட்டுரை)

Tuesday, 15 September 2026

நாம் எங்கிருந்து வந்தோம்? மனித பரிணாமத்தின் எளிய கதை!

இன்றைக்கு நாம் பார்க்கும் உலகம் பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மனிதர்களால் நிரம்பியுள்ளது. ஆனால், "நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள்" என்பதை அறிவியல் மிகத் தெளிவாக நிரூபித்துள்ளது. மனித இனம் எப்படித் தோன்றி, பரவி, இன்றைக்கு வாழும் நிலைக்கு வந்தது என்பதைப் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகப் பார்ப்போம்.

1. மூதாதை மனிதன்: ஹோமோ எரெக்டஸ் (Homo erectus)

சுமார் 18 முதல் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிய இனம் தான் ஹோமோ எரெக்டஸ்.
  • சிறப்பம்சம்: குரங்குகளைப் போல வளைந்து நடக்காமல், முதன்முதலில் முதுகுத் தண்டெலும்பை நேராக நிமிர்த்தி நடந்த மனித இனம் இதுதான்.
  • சாதனை: தீயைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டவர்கள். ஆப்பிரிக்காவில் தோன்றிய இவர்கள், அங்கேயே முடங்கிவிடாமல் ஆசியா, ஐரோப்பா என உலகெங்கும் முதன்முதலில் இடம்பெயரத் தொடங்கினார்கள்.
2. பொது மூதாதை: ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் (Homo heidelbergensis)

ஹோமோ எரெக்டஸ் இனத்திலிருந்து காலம் செல்லச் செல்ல உருவான அடுத்தகட்ட மனித இனம் தான் ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ்.
  • இவர்களை நமது 'தாத்தா இனம்' என்று சொல்லலாம்.
  • ஏனெனில், இவர்களிடம் இருந்துதான் பிற்காலத்தில் மூன்று வெவ்வேறு மனித இனப் பிரிவுகள் பிறந்தன.
3. ஒரு குடும்பத்தின் மூன்று பிள்ளைகள்!

ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் மனிதர்கள் உலகம் முழுதும் பரவி வாழத் தொடங்கியபோது, அவர்கள் வாழ்ந்த காலநிலைக்கும் சூழலுக்கும் ஏற்ப 3 பிரிவுகளாகப் பரிணமித்தார்கள்:

1. நியாண்டர்தால்கள் (Neanderthals)
:
  • இவர்கள் குளிர்பிரதேசங்களான ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளுக்குச் சென்று வாழ்ந்தவர்கள்.
  • தடிமனான உடலமைப்பு, பெரிய மூக்கு மற்றும் குகைகளில் வாழும் பழக்கம் கொண்டவர்கள்.
2. டெனிசோவன்கள் (Denisovans):
  • இவர்கள் கிழக்கு ஆசியா, சைபீரியா மற்றும் திபெத் போன்ற கடும் பனிப்பிரதேசங்களுக்குச் சென்று வாழ்ந்தவர்கள்.
  • சமீபத்திய மரபணு ஆய்வுகள் மூலமே இவர்களைப் பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
3. ஹோமோ சேப்பியன்ஸ் (Homo sapiens - நவீன மனிதர்களாகிய நாம்!):
  • நமது நேரடி மூதாதையர்களான இவர்கள் ஆப்பிரிக்க கண்டத்திலேயே தங்கி, அங்குள்ள வெப்பமான சூழலுக்கு ஏற்பத் தங்களை வளர்த்துக்கொண்டவர்கள்.
  • சிந்தனைத் திறன், கூர்மையான மொழியறிவு, சமூகமாக வாழும் ஆற்றல் ஆகியவற்றால் சிறந்து விளங்கினார்கள்.
பரிணாம வரைபடம் (மரப வழிக் கிளை):
           

இறுதியில் வென்றது யார்?

சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து மீண்டும் வெளியேறிய ஹோமோ சேப்பியன்ஸ் (நாம்), ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த நியாண்டர்தால்களையும் டெனிசோவன்களையும் சந்தித்தார்கள்.

காலப்போக்கில் மற்ற இரு இனங்களும் அழிந்துபோக, சுற்றுச்சூழல் மாற்றங்களைத் தாங்கி, சிந்தனை ஆற்றலால் வென்ற ஹோமோ சேப்பியன்ஸ் மட்டுமே இன்று பூமிப் பந்தின் ஒரே மனித இனமாக வாழ்ந்து வருகிறோம்!

ஊரான் 

Monday, 14 September 2026

வரலாற்றை மீட்டெடுக்க மதுரையில் ஆர்ப்பாட்டம்!

நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் அன்பு வணக்கம்!

கீழடியை உயர்த்திப் பிடிப்போம்!
வேத நாகரிகத்தைத் துரத்தியடிப்போம்!
இந்திய வரலாற்றைத் தென்னகத்திலிருந்து எழுதுவோம்!

என்கிற‌முழக்கத்தின் கீழ், கடந்த ஆகஸ்ட் 22 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய “தமிழ் மக்கள் இசை விழா” மாபெரும் வெற்றி பெற்றது.
அந்தப் பெருவெற்றிக்கு முதன்மையான காரணம் — தோழர்களும், நண்பர்களும், பொதுமக்களும் தாராளமாக அள்ளிக் கொடுத்த நிதி ஆதரவுதான்.

தஞ்சை இசை விழாவுக்காக நாங்கள் உங்களிடம் நிதி கேட்டபோது, எங்கள் மீது கொண்ட பற்றோடும், நாங்கள் முன்னெடுக்கும் பணியின் மீது கொண்ட நம்பிக்கையோடும் நீங்கள் அளித்த ஒவ்வொரு ரூபாயும் அந்த விழாவின் வெற்றியில் பங்கெடுத்தது.
அதற்காக எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



நண்பர்களே!

கீழடி என்பது வெறும் ஒரு தொல்லியல் தளம் அல்ல.
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கேள்விக்கான ஒரு முக்கியமான திறவுகோல்.

அந்த வரலாற்றை ஆய்வு செய்வதும், பாதுகாப்பதும், மக்களிடம் கொண்டு செல்வதும் நமது வரலாற்றுக் கடமை.
ஆனால் கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையில், பல்வேறு காரணங்களால் அவை எதிர்கொள்ளும் தடைகள் கவலை அளிக்கின்றன.

எனவே,

ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ள கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக முழுமையாக வெளியிட வேண்டும்!
தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தவும், தொல்லியல் தளங்களைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும்!

என்ற கோரிக்கைகளை

வலியுறுத்தி, வருகிற செப்டம்பர் 18 அன்று மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.

மதுரையில் எழும் நமது குரல் ஒன்றிய–மாநில அரசுகளின் செவிகளை எட்ட வேண்டும்.

அதற்கு உங்கள் ஆதரவு தேவை.

உரிமையோடும் உணர்வோடும் ஒரு நிதி விண்ணப்பம்!

நண்பர்களே,

கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு நாங்கள் பயணித்து வருகிறோம்.
இந்த நாற்பது ஆண்டுகளில் எத்தனையோ களங்களைப் பார்த்திருக்கிறோம்.

இறால் பண்ணை அழிப்புப் போராட்டம்...

ஜெயா-சசி ஊழலுக்கு எதிராக தஞ்சை வினோதகன் மருத்துவமனை கைப்பற்றும் போராட்டம்…

வரலாற்று சிறப்புமிக்க திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம்...

தூத்துக்குடி தாது மணல் கொள்ளை எதிர்ப்பு...

தில்லையில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் பாடும் போராட்டம்...

அனைத்து சாதி அர்ச்சகர் போராட்டம்…

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்...

தாமிரபரணியைக் காக்க ‘கோக்’ எதிர்ப்புப் போராட்டம்...

திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் தமிழ் இசையை இழிவுபடுத்தும் கொடுமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி, அதைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்று வரும் தமிழ் மக்கள் இசை விழாக்கள்…

என மக்களின் உரிமைக்காக எண்ணற்ற களங்களில் நாங்கள் நின்றிருக்கிறோம்.

இந்தப் பயணத்தில் எங்களிடம் பெரிய பணபலமோ, அதிகார பலமோ இருந்ததில்லை.

எங்களுக்குப் பின்னால் இருந்தது மக்களின் நம்பிக்கையும், உழைக்கும் மக்களின் கரங்களும் மட்டுமே.

பேருந்துகளில் ஏறி...

கடைவீதிகளில் இறங்கி...

குடியிருப்புகளிலும் அலுவலகங்களிலும் சென்று...

“இந்தப் போராட்டத்திற்காக உதவுங்கள்” என்று நிதி கேட்டபோதெல்லாம்,

தங்களுடைய அன்றாட உழைப்பில் இருந்து மக்கள் தங்களால் இயன்றதை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்தச் சிறு சிறு பங்களிப்புகள்தான் எங்களுடைய போராட்டங்களுக்குப் பெரும் மூலதனமாக மாறியிருக்கின்றன.
அந்த நம்பிக்கையில்தான் இன்றும் உங்கள் முன் நிற்கிறோம்.

இந்த முறையும் உங்கள் உதவி தேவை!

தஞ்சை இசை விழாவிற்காக நாங்கள் நிதி கேட்டபோது தாராளமாக உதவிய நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் மீண்டும் எமது நன்றிகள்.

இப்போது மதுரை ஆர்ப்பாட்டத்திற்காக மீண்டும் நண்பர்களின் உதவியை நாடுகிறோம்.

தஞ்சை இசை விழாவிற்காக ஏற்கனவே நிதி வழங்கிய தோழர்களிடமும், நண்பர்களிடமும் மீண்டும் நாங்கள் நிதி கோரவில்லை‌. 

மாறாக, அப்போது நிதி வழங்க முடியாமல் போன நண்பர்களும், தோழர்களும், ஆதரவாளர்களும் மட்டும் இந்த முறை தங்களால் இயன்ற சிறிய தொகையாக இருந்தாலும் வழங்கி, செப்டம்பர் 18 அன்று மதுரையில் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மதுரையில் ஒலிக்கும் இந்தப் போராட்ட முழக்கம் ஒன்றிய–மாநில அரசுகளின் செவிகளை எட்ட வேண்டும். அந்த முழக்கத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்கட்டும்!

ஏனெனில்,

நாங்கள் களத்தில் நிற்பதற்கு உங்கள் ஆதரவு தேவை.

நாங்கள் எழுப்பும் குரல் தொலைதூரம் செல்வதற்கு உங்கள் உதவி தேவை.

நாங்கள் தொடர்ந்து பயணிப்பதற்கு உங்கள் நம்பிக்கை தேவை.

செப்டம்பர் 18 அன்று மதுரையில் ஒலிக்கும் போராட்ட முழக்கத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்கட்டும்!

நீங்கள் அளிக்க விரும்பும் நிதியை G-Pay மூலம் கீழ்கண்ட எமது கைபேசி எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கைபேசி: 94861 05861 (r.Veerasamy, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்)

தோழமையுடன்,

தமிழ்மணி @ பொன்.சேகர்

வாக்குறுதிகள் கிடப்பில்… முதலாளிகளுக்குப் பட்டுக் கம்பளம்! நடிகரின் ஆட்சியும் அதற்கு முட்டுக்கொடுக்கும் கட்சிகளும்!

கடினமான பாதையை நடிகர் அரசு தேர்ந்தெடுக்கிறதா? அல்லது முதலீட்டாளர்களுக்கு எளிதான பாதையைத் தேர்ந்தெடுக்கிறதா? இதற்கான பதில் வருங்காலத்தில் அல்ல; இப்போதே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் தெரிகிறது.
(மக்கள் அதிகாரம் தளத்தில் வெளியான கட்டுரை)


“மாற்றம்” என்ற வெற்றுக் கூச்சலோடு விவசாயிகளுக்கு நிவாரணம், பெண்களுக்கு உதவித்தொகை, இலவசப் பேருந்துப் பயணம், இலவச கேஸ் சிலிண்டர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள் என்று தேர்தல் காலத்தில் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றியது இன்றைய நடிகர் தலைமையிலான தவெக.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று சட்டமன்றத்தில் முன்னுரிமை பெறும் அம்சங்களைப் பார்த்தால், “மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? அல்லது முதலீட்டாளர்களுக்கு வசதியான சட்டங்களை உருவாக்குகிறதா?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

அண்மையில் முடிவடைந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான மசோதாக்களைப் பார்த்தால், இந்தக் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

விவசாய நிலம்… ஈரநிலம்… யாருடைய முடிவு?

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத் திருத்த மசோதா, 2026-ல் முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. திட்டமிடப்படாத பகுதிகளில் ஈரநிலங்களை வளர்ச்சிப் பயன்பாட்டுக்கு மாற்றும்போது இதுவரை இருந்த மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதல் பெற வேண்டும் என்கிற நிபந்தனையை நீக்கி, அந்த அதிகாரத்தை நகரமைப்புத் துறை இயக்குநரிடம் ஒப்படைக்கிறது.

அரசின் விளக்கம் — “ஆட்சியரின் கூடுதல் ஒப்புதல் காரணமாக அனுமதிகளில் தாமதம் ஏற்படுகிறது; எனவே நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும்” என்பதாகும்.

ஆனால் கேள்வி: வளர்ச்சித் தேவைக்கு அனுமதி விரைவாகக் கிடைப்பதற்காக நிலத்தையும் நீரையும் பாதுகாக்கும் கண்காணிப்பு பலவீனப்படுத்தப்படுகிறதா?

விவசாய நிலம், ஈரநிலம், நீர்வழித்தடம் போன்றவை வெறும் “நிலம்” அல்ல; அவை மக்களின் வாழ்வாதாரம். எனவே “அனுமதி எளிதாகக் கிடைக்க வேண்டும்” என்ற முதலீட்டு நோக்கத்திற்கும், “நிலமும் நீரும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்ற மக்கள் நல நோக்கத்திற்கும் இடையில் அரசு எந்தப் பக்கம் நிற்கிறது என்பதே கேள்வி. இந்த மசோதாவை அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டோர் எதிர்த்தும் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

100 ஏக்கரிலிருந்து 12 ஏக்கர்… கல்வி யாருக்காக?

அடுத்ததாக தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா. இதுவரை தனியார் பல்கலைக்கழகம் தொடங்க குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. புதிய திருத்தத்தின்படி:

  • பெருநகர சென்னை பகுதியில் — 12 ஏக்கர்
  • பிற மாநகராட்சிகள், நகராட்சிகளில் — 18 ஏக்கர்
  • பிற பகுதிகளில் — 25 ஏக்கர்

என்று நிலத் தேவை குறைக்கப்பட்டுள்ளது. அதோடு, நிரந்தர அறக்கட்டளை நிதியும் ரூ.50 கோடியிலிருந்து ரூ.25 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அரசின் வாதம் — “நிலப்பற்றாக்குறை உள்ள நகரங்களில் உலகத் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான தடைகளை அகற்றுவது.”

ஆனால் இதை வேறு கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்துவது எப்போது? தனியார் பல்கலைக்கழகங்களுக்கான தடைகளைத் தளர்த்துவதில் மட்டும் ஏன் இவ்வளவு அவசரம்? கல்வி ஒரு உரிமையா? அல்லது முதலீட்டுக்கான சந்தையா?

இந்த மசோதா மூலம் தரமான பல்கலைக்கழகங்கள் உருவாகாது. மாறாக கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் பெட்டிக் கடைகள்தான் பெருகும். அதே நேரத்தில் அரசின் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்.

இந்த மசோதாவை CPI, CPI(M), பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்துள்ளன. ஆனால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இங்கே ஒரு முக்கியமான அரசியல் முரண்பாடும் வெளிப்படுகிறது. வெளியில் இருந்து ஆட்சிக்கு ஆதரவு தரும் CPI, CPI(M) ஆகிய கட்சிகள் எதிர்த்த மசோதாவே ஆட்சியில் பங்கு பெறும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோரால் நிறைவேறுகிறது. அப்படியானால் அடுத்த கேள்வி தவிர்க்க முடியாதது: மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றும் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டே எதிர்ப்பு மட்டும் எதற்காக? CPI, CPI(M) கட்சிகளுக்கு வாக்களித்த மக்களை முட்டாளாக்கவா? “முட்டாள்களோடு சேர்ந்து விட்டால் அறிவாளிகளும் முட்டாளாகி விடுவார்கள்” என்பது இதுதானோ?

வணிகத்திற்கு 21 நாள்… மக்கள் பாதுகாப்புக்கு எவ்வளவு நாள்?

தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டத் திருத்தம், 2026 மூலம் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் உருவாக்கப்படுகிறது. ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் திட்டங்கள், 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் உள்ளிட்ட “பெரிய, முக்கியமான முதலீடுகளுக்கு” விரைவான அனுமதி வழங்கும் அமைப்பாக இது செயல்பட உள்ளது. சில அனுமதிகளுக்கு 21 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படாவிட்டால் ‘தாமதமில்லா ஒப்புதல்’ (Deemed Approval) என்ற நடைமுறை மூலம் தாமாகவே அனுமதி கிடைத்துவிடும்.

இதுதான் “Ease of Doing Business”. மோடி அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நல சட்டத் திருத்தங்களின் அதே வழியில் இந்த நடிகர் ஆட்சியும் நடைபோடுகிறது.

“உங்கள் நிலம், குடிநீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கிறதா?” என்று மக்களிடம் கேட்பதற்குப் பதிலாக, “உங்களுக்கு இன்னும் என்ன வசதி வேண்டும்?” என முதலாளிகளிடம் சிரம் தாழ்த்தி தெண்டனிடுகிறது நடிகரின் ஆட்சி.

முதலாளிகளுக்கு வேகமாக அனுமதி வழங்குவது வளர்ச்சி அல்ல; மக்களின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதுதான் உண்மையான மக்கள் நலன்.

தீயணைப்புத் துறையிலும் ‘தளர்வு’

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கட்டிட விதிமுறைகளுடன் தொடர்புடைய National Building Code of India, 2016 குறித்த குறிப்புகளை நீக்குவது உள்ளிட்ட மாற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசு இதை வணிக சீர்திருத்தச் செயல்பாட்டுத் திட்டத்தின் (Business Reforms Action Plan) அடிப்படையில் கட்டிட மற்றும் தீ பாதுகாப்பு விதிகளை நவீனப்படுத்தும் நடவடிக்கை என விளக்கியுள்ளது.

“முதலீட்டுக்கு வேகமான அனுமதி வழங்கும் அதே வேளையில், பாதுகாப்பும் கண்காணிப்பும் அதே அளவு வலிமையாக இருக்கிறதா?” என்பதை உறுதி செய்ய வேண்டாமா?

ஒரு தொழிற்சாலையில் விபத்து நடந்த பிறகு பாதுகாப்பு பற்றி பேசுவதைவிட, தொழில் தொடங்குவதற்கு முன்பே பாதுகாப்பை உறுதி செய்வதுதானே அரசின் கடமையாக இருக்க வேண்டும்?

ஆனால், இங்கே பணக்காரர்களின் நலன் காப்பதே நடிகரின் கடமையாக உள்ளது.

வியாபாரிகளுக்கு ஐந்து ஆண்டுகள்… விவசாயிக்கு என்ன?

தமிழ்நாடு விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் ஒழுங்குமுறை இரண்டாவது திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி வியாபாரிகளுக்கான மண்டி உரிமத்தின் காலம் 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. மேலும் உரிம விண்ணப்ப நடைமுறை ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்படுகிறது.

இது நிர்வாக எளிமைப்படுத்தல் என்று அரசு கூறலாம். ஆனால் விவசாயிகளின் பார்வையில் ஒரு கேள்வி எழுகிறது:

விவசாயி உற்பத்தி செய்கிறான்; வியாபாரி சந்தையைப் பெறுகிறான். ஆனால் விவசாயிக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் சட்டங்கள் இல்லை. உற்பத்தி செய்யும் விவசாயிக்கு விளைபொருளுக்கான விலையைத் தீர்மானிக்கும் அதிகாரமும் இல்லை. ஆனால் வியாபாரிகளின் நிலையை வலுப்படுத்தும் மாற்றங்கள் மட்டும் வேகமாக நடக்கிறது. இந்த மசோதா விவசாயிகள் நலன் சார்ந்ததா அல்லது வியாபாரிகளின் நலன் சார்ந்ததா? நடிகரின் ஆட்சி யாருக்கானது?

உள்ளாட்சி வேலைகளும் இனி TNPSC வழியாக

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பல்வேறு பணியிடங்களுக்கான நியமனங்களை டி.என்.பி.எஸ்.சி (TNPSC) மூலம் மேற்கொள்ளும் வகையில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசின் விளக்கம் — “ஒரே மாதிரியான, வெளிப்படையான, தகுதி அடிப்படையிலான நியமன முறையை உருவாக்குவது.”

ஆனால், உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள பணியிடங்களை மையப்படுத்தப்பட்ட ஒரே தேர்வு முறைக்குள் கொண்டு வருவது உள்ளூர் நிர்வாகத்தின் தேவைகளுடன் எப்படி பொருந்திப் போகும்? இதற்கான நடைமுறை விளைவுகள் வெளிப்படையாக மதிப்பிடப்படவில்லை.

மக்களுக்கு வாக்குறுதிகள்… எம்.எல்.ஏக்களுக்கு வாகனமும் படியும்!

இங்கேதான் மக்களுக்கு இன்னொரு நெருடலான கேள்வி எழுகிறது.

நடிகர் விஜய், ஆகஸ்ட் 19 அன்று அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அரசு வாகனம், ஓட்டுநர் உள்ளிட்ட வசதிகளுடன் மாதம் ரூ.75,000 வாகனப் படியும், ரூ.25,000 உதவியாளர் படியும் வழங்கப்படும் என்று அறிவித்தார். பின்னர் இதற்கான சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக எம்.எல்.ஏக்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் மொத்தம் சுமார் ரூ.1.05 லட்சத்திலிருந்து ரூ.2.05 லட்சமாக உயர்ந்துள்ளன.

அதாவது 100 சதவீதம் அவர்களுக்கு வசதிகள் பெருகியுள்ளன. ஆனால் வாக்களித்த மக்களோ விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றனர்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, ஆட்சியாளர்களுக்கான வசதிகள் நிறைவேற்றப்படுகின்றன. வாக்களித்த மக்கள் கண்களில் சுண்ணாம்பும், வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் கண்களில் வெண்ணெயும் தடவுவது என்பது இதுதானோ?

இவை தனித்தனி மசோதாக்களா? அல்லது ஒரே அரசியல் திசையா?

ஒரு மசோதாவை மட்டும் பார்த்தால் இதன் பாதிப்பு தெரியாமல் போகலாம். ஆனால் அனைத்தையும் ஒன்றாகப் பாருங்கள்:

  • நிலம் — முதலீட்டுக்கு எளிதாக்கப்படுகிறது.
  • தனியார் பல்கலைக்கழகம் — நிலத் தேவை குறைக்கப்படுகிறது.
  • தொழில் — அனுமதி வேகப்படுத்தப்படுகிறது.
  • வணிகம் — முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் வரை விரிவுபடுத்தப்படுகிறது.
  • மண்டி உரிமம் — 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டாக நீட்டிக்கப்படுகிறது.
  • உள்ளாட்சி நியமனம் — மையப்படுத்தப்படுகிறது.
  • எம்.எல்.ஏக்களுக்கான சம்பளம், வாகனம், படிகள் — உயர்த்தப்படுகின்றன.

இவற்றின் பின்னால் ஒரு பொதுவான நிர்வாகத் ‘திறமை’ தெரிகிறதா? “முதலீடு எளிதாக வர வேண்டும்; வணிகம் வேகமாக நடக்க வேண்டும்; நிர்வாகத் தடைகள் குறைய வேண்டும்.”

இது பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு பார்வையா? “இந்த வளர்ச்சியில் சாதாரண மக்களின் பங்கு என்ன?” இதுதான் முக்கியமான கேள்வி.

இங்கேதான் ஆட்சியில் பங்கேற்கும் கட்சிகளின் பொறுப்பு தொடங்குகிறது!

நடிகர் அரசு தனிப்பெரும்பான்மை பெற்ற அரசு அல்ல. காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், விசிகவுக்கு சமூகநீதி நலத்துறையும், IUML-க்கு சிறுபான்மையினர் நலத்துறையும் வழங்கப்பட்டுள்ளன.

அதனால் இவர்கள் வெறும் “வெளிப்புற ஆதரவாளர்கள்” அல்ல; ஆட்சியின் நேரடி பங்காளிகள். அப்படியானால் கேள்வி:

இந்த மசோதாக்களில் மக்கள் நலனுக்கு எதிரான அம்சங்கள் இருக்கின்றன என்று கருதினால், அமைச்சரவையில் இருந்து என்ன செய்தார்கள்? எதிர்ப்பு தெரிவித்தார்களா? திருத்தம் கோரினார்களா? வாக்கெடுப்பில் எதிர்த்தார்களா? அல்லது பதவியைத் தக்க வைத்துக்கொண்டு ஆட்சியின் முடிவுகளை ஏற்றுக்கொண்டார்களா?

குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்னிறுத்தும் விசிக, சமூகநீதி அமைச்சகத்தைப் பெற்றிருப்பது மட்டுமே போதாது. நிலம், கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, தொழிலாளர் உரிமை ஆகியவற்றில் அந்தப் பதவி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் முக்கியம். அமைச்சர் பதவி ஒரு அலங்காரப் பதவி அல்ல; அது அரசியல் பொறுப்பு.

தமிழில் எழுத்துக்கூட்டி படிப்பதற்கே திண்டாடும் நடிகர் கட்சியில் உள்ள அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் மேற்கண்ட மசோதாக்களில் ஒரு வரியைக் கூட படித்திருக்க மாட்டார்கள். அப்படியே ஒரு சிலர் படித்திருந்தாலும் அது என்னவென்று அவர்களுக்குப் புரிந்திருக்காது.

அதிகாரிகள் சட்ட மசோதாவை வரைகிறார்கள். நடிகனின் கண் அசைவில் ஆட்டு மந்தைகளைப் போல இவர்கள் மேசையை மட்டும் தட்டி நிறைவேற்றுகிறார்கள்.

காங்கிரஸ் — கார்ப்பரேட் ஆதரவு என்ற விமர்சனத்திலிருந்து தப்ப முடியுமா?

காங்கிரஸ் இந்த அரசின் நேரடி ஆட்சிப் பங்காளியாக இருக்கிறது. முதலீடு, தொழில் வளர்ச்சி, தனியார் முதலீடு போன்றவற்றுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கை காங்கிரஸுக்கு புதிதல்ல.

ஆனால் இன்று தமிழகத்தில் கேள்வி இன்னும் குறிப்பானது: விஜய் அரசின் கொள்கைகளில் காங்கிரஸ் பங்காளியாக இருக்கிறதா? அப்படியானால், அந்தக் கொள்கைகளுக்கான அரசியல் பொறுப்பையும் அது ஏற்க வேண்டும். “அமைச்சர் நாங்கள்; முடிவு நாடாளும் நடிகருடையது” என்று ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஆட்சியில் பங்கு என்றால் பொறுப்பிலும் பங்கு. அமைச்சர் பதவி நாக்குவழிப்பதற்காக அல்ல.

விசிக, முஸ்லிம் லீக் — பதவி மட்டும் போதுமா?

விசிக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும், முஸ்லிம் லீக் சிறுபான்மை மக்களின் உரிமையையும் பேசுகின்றன. அப்படியானால் மக்களிடம் ஒரு கேள்வி: இந்த ஆட்சியில் உங்கள் பங்கேற்பு அந்த மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது?

ஒரு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது என்பதே சமூகநீதி அல்ல; ஒரு துறை கிடைத்துவிட்டது என்பதே அதிகாரப் பங்கேற்பு அல்ல. அந்த அதிகாரம் யாருடைய வாழ்க்கையை மாற்றுகிறது என்பதுதான் உண்மையான அளவுகோல்.

வெளியில் இருந்து ஆதரிக்கும் CPI, CPI(M)-க்கு இன்னும் கடினமான கேள்வி!

இங்கே இடதுசாரிகளின் நிலை இன்னும் சுவாரசியமானது. CPI, CPI(M) ஆகிய இரு கட்சிகளும் விஜய் அரசில் அமைச்சரவையில் சேரவில்லை; ஆனால் வெளியில் இருந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கின்றன.

பாஜக மறைமுகமாக ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதே இந்த முடிவுக்கான முக்கிய அரசியல் காரணம் என்று அவர்கள் சமாளிக்கலாம். ஆனால் நடப்பது பாஜக ஆட்சிதான் என்பதை அவர்கள்தான் புரிந்து கொள்வதில்லை.

இதனால் ஒரு அடிப்படைக் கேள்வி மறைந்து விடுமா?

விஜய் அரசு மக்கள் விரோதமான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்? வெளியில் நின்று எதிர்ப்பீர்கள்; அதே நேரத்தில் ஆட்சிக்கு ஆதரவு தொடரும். அப்படியானால் அந்த ஆதரவின் அரசியல் எல்லை என்ன?

இதை CPI, CPI(M) கட்சிகள் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். ஆதரவு என்பது நிபந்தனையற்றதா? அல்லது உழைக்கும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் நிபந்தனைகளுடனா? ஏனெனில், “நாங்கள் எதிர்க்கிறோம்” என்று சட்டமன்றத்திற்கு வெளியே சொல்வதும், அதே அரசாங்கம் பெரும்பான்மையைத் தக்க வைத்துக்கொள்ள உதவுவதும் ஒன்றோடொன்று முரண்படுகின்றன.

மதிமுகவைப் பொறுத்தவரை…

மதிமுகவும் விஜய் தலைமையிலான கூட்டணியில் பங்கேற்கிறது. வைகோ, நடிகர் அரசை பாராட்டியிருப்பதோடு, கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். எனவே மதிமுகவின் நிலைப்பாட்டை மறைமுகமாக ஊகிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நடிகர் ஆட்சியை நேரடியாக ஆதரிக்கிறார்கள்.

ஆனால் ஒரு கேள்வி மட்டும் இருக்கிறது: ஆதரவு என்பது ஆட்சியின் ஒவ்வொரு கொள்கைக்கும் ஆதரவா? அல்லது குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்கான ஆதரவா? அதை மதிமுக தெளிவுபடுத்த வேண்டும்.

நடிகர் ஆட்சியின் உண்மையான சோதனை இதுதான்!

ஒரு புதிய அரசு என்பதால் தவறுகள் இருக்கலாம். புதிய அரசியல் கட்சி என்பதால் நிர்வாக அனுபவம் குறைவாக இருக்கலாம். அதையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அரசு எந்த வர்க்கத்தின் பக்கம் நிற்கிறது என்பதை அறிய அரசின் சட்டங்களைப் பார்க்க வேண்டும்.

விவசாய நிலம், தனியார் கல்வி, தொழில் முதலீடு, வணிக அனுமதி, சந்தை, உள்ளாட்சி வேலைவாய்ப்பு, மக்கள் பிரதிநிதிகளின் சலுகைகள்… இவற்றில் அரசு எடுக்கும் முடிவுகளை ஒன்றாக வைத்துப் பார்த்தால், “மக்கள் நலன்” என்ற அரசியல் முழக்கத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய நடிகரின் ஆட்சியில் “முதலீட்டாளர் நலன்” என்ற நடைமுறைதான் தற்போது புலப்படுகிறது.

முடிவாக…

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்களுடையவை. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்படும் சட்டங்கள் அரசின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகின்றன.

மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு, முதலீட்டாளர்களுக்கு சட்டத் தளர்வு வழங்குவது எளிது. ஆனால்,

  • விவசாயியின் நிலத்தைக் காப்பது கடினம்.
  • மாணவனுக்கு மலிவான உயர்கல்வியை வழங்குவது கடினம்.
  • தொழிலாளிக்கு வேலைப் பாதுகாப்பை உறுதி செய்வது கடினம்.
  • சிறு விவசாயிக்கு நியாயமான சந்தை விலையை உறுதி செய்வது கடினம்.
  • ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது கடினம்.

அந்தக் கடினமான பாதையை நடிகர் அரசு தேர்ந்தெடுக்கிறதா? அல்லது முதலீட்டாளர்களுக்கு எளிதான பாதையைத் தேர்ந்தெடுக்கிறதா? இதற்கான பதில் வருங்காலத்தில் அல்ல; இப்போதே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் தெரிகிறது.

அதேபோல், ஆட்சியில் நேரடியாகப் பங்கேற்கும் கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரிக்கும் கட்சிகளும் இனி தங்களுடைய நிலைப்பாட்டை வெறும் அறிக்கைகளால் அல்ல, செயலால் நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

  • அமைச்சரவையில் இருப்பவர்கள் (காங்கிரஸ், IUML, VCK) — ஆட்சியின் முடிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
  • வெளியிலிருந்து ஆதரிப்பவர்கள் (மதிமுக) — அந்த ஆதரவின் அரசியல் பொறுப்பை ஏற்க வேண்டும்.
  • மசோதாக்களை எதிர்ப்பவர்கள் (CPI, CPI-M)  தேவைப்படும் நேரத்தில் ஆதரவையும் திரும்பப் பெறத் தயாராக இருக்க வேண்டும்.

இல்லையெனில் மக்கள் கேட்பார்கள்: “நீங்கள் யாருடைய பக்கம்? ஆட்சியின் பக்கமா? முதலாளிகளின் பக்கமா? அல்லது மக்களின் பக்கமா?”

நடிகர் அரசின் உண்மையான முகம் அதன் தேர்தல் அறிக்கையில் இல்லை; அது நிறைவேற்றும் சட்டங்களில் இருக்கிறது.

கூட்டணிக் கட்சிகளின் உண்மையான கொள்கை மேடைகளில் இல்லை; மக்களுக்கு எதிரான ஒரு சட்டம் வரும்போது அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டில்தான் இருக்கிறது.

வாக்குறுதிகள் மக்களுக்காக…

சட்டத் தளர்வுகள் முதலீட்டாளர்களுக்காக…

பதவிகள் கூட்டணிக் கட்சிகளுக்காக…

ஆதரவு ஆட்சிக்காக…

அப்படியானால் மக்கள் எங்கே?

— தமிழ்மணி

Sunday, 13 September 2026

ஆ.ராசா: திமுக வெறுப்பு அரசியலும் இரட்டை அளவுகோல்களும்

தமிழ் அரசியல் களத்தில் மேடைப் பேச்சுகளும் தனிநபர் விமர்சனங்களும் விவாதத்திற்கு உள்ளாவது புதிதல்ல. ஆனால், ஒரே மாதிரியான தனிநபர் விமர்சனங்களுக்கு வெவ்வேறு முகாம்கள் காட்டும் எதிர்வினைகள், நடுநிலையான அரசியல் நடத்தப்படுகிறதா அல்லது "திமுக வெறுப்பு" என்ற ஒற்றைப் புள்ளியில் கொள்கைகள் அடகு வைக்கப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது.


இரட்டை அளவுகோல்: ஆ.ராசா மற்றும் நிர்மல் குமார் பேச்சுகள்

சமீபத்திய அரசியல் மோதல்களில் ஆ.ராசாவின் பேச்சும், பாஜகவைச் சேர்ந்த நிர்மல் குமாரின் பேச்சும் கடுமையாக விவாதிக்கப்பட்டன.
நிர்மல் குமாரின் பிறப்பு குறித்து ஆ.ராசா தனிநபர் ரீதியாகப் பேசியதை, "ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்திவிட்டார்" என்ற தளத்திற்கு உயர்த்தி வலதுசாரிகள் முதல் இடதுசாரிகள், முற்போக்காளர்கள் வரை அனைவரும் கண்டித்தனர். தனிநபர் விமர்சனம் என்பது நாகரிக அரசியல் எல்லைக்குள் தவறானது என்ற அடிப்படையில் ஆ.ராசா அதற்காக வருத்தமும் தெரிவித்துவிட்டார்.

அதே நேரத்தில், மு.க. ஸ்டாலின் அவர்கள் "பெண்கள் விவகாரத்தில் தான் கைது செய்யப்பட்டார்"  என்று நிர்மல் குமார் பேசியதற்கு போதுமான எதிர்ப்பு எழவில்லை; நிர்மல் குமார் அதற்காக வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. இதிலும் பெண்களை அவர் தொடர்பு படுத்துகிறார் என்பதை மறந்துவிடக்கூடாது.

முன்னதில் மறைமுகமாக ஒருவரது தாயாரையும் பின்னதில் பெயர் குறிப்பிடாமல் ஒரு பெண்ணையும் என இருவரது பேச்சுகளிலுமே ஒரு பெண் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆனால் ஆ.ராசாவின் பேச்சை "பெண்களுக்கு எதிரான கருத்தியல்" எனப் பொதுமைப்படுத்தி விமர்சித்தவர்கள், நிர்மல் குமாரின் பேச்சை கண்டுகொள்ளாமல் கடந்தது ஏன்? இது அரசியல் நடத்தையில் உள்ள இரட்டை நிலையை வெளிப்படையாகக் காட்டுகிறது.

திமுக-வும் முதலாளித்துவமும்

முற்போக்காளர்களும் இடது முகாம்களும் திமுகவை விமர்சிக்கும் போது "திமுக முதலாளித்துவத்திற்கு சாதகமாகச் செயல்படுகிறது" என்று குறிப்பாக விமர்சிக்கலாம்.

இத்தகைய விமர்சனம் தவறல்ல. ஆனால் இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: இதே கொள்கையை அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆளும் போது பின்பற்றுகின்றன. தொழிற்சாலை நலச் சட்டங்கள் முடக்கப்படுவதும், கார்ப்பரேட்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படுவதும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதும் பல்வேறு கட்சிகளால் வேறு வேறு அளவுகளில் முன்வைக்கப்படுகின்றன. இதில் முதன்மை வகிப்பது அன்றைய காங்கிரசும் இன்றைய பாஜக-வும்தான்.

ஆனால் திமுகவை மட்டும் குறி வைத்து விமர்சிப்பது ஏன்?
இந்த கேள்விக்கான நேர்மையான பதில், கொள்கை விமர்சனமல்ல; திமுக வெறுப்பு என்ற உளவியல் நிலைப்பாட்டிலிருந்து இந்த விமர்சனம் வருகிறது என்பதுதான்.

சனாதன சக்திகளால் கட்டமைக்கப்பட்ட திமுக வெறுப்பு உளவியல்

திமுக மீதான இந்த வெறுப்பு அரசியல் திடீரென உருவானதல்ல. இதன் வேர்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
திராவிட இயக்கம் என்பது சாதிய படிநிலை, வர்ணாசிரமம், பார்ப்பனிய ஆதிக்கம் ஆகியவற்றை நேரடியாக நிலைகுலையச் செய்த இயக்கம். சமூக நீதி, இடஒதுக்கீடு, மாநில உரிமை, வைதீக-சடங்கு எதிர்ப்பு ஆகியவை திராவிட இயக்கத்தின் அடிப்படை அரசியல் நிலைப்பாடுகள். இந்த நிலைப்பாடுகளே சனாதன சக்திகளுக்கு உண்மையான எதிரிகளாக திமுகவை மாற்றியது.

ஆகவே, திமுகவை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தவும், அதன் சமூக நீதிச் சாதனைகளைச் சிறுமைப்படுத்தவும், மக்கள் மனதில் திமுக என்றால் ஊழல், திமுக என்றால் வாரிசு அரசியல் என்ற படிமத்தை ஊடகங்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட பிரச்சாரங்கள் வழியாக சனாதன சக்திகள் வலிமையாக விதைத்து வந்திருக்கின்றன. இந்த விதை தலைமுறை தலைமுறையாக வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. கவனிக்க ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு மற்ற கட்சிகள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல.

கிராம்சி சுட்டிக்காட்டுவது போல, ஆளும் வர்க்கம் தனது ஆதிக்கத்தை வெறும் அதிகாரத்தால் மட்டுமல்ல, மக்களின் பொதுப்புத்தியை வடிவமைப்பதன் மூலமும் நிலைநிறுத்துகிறது. "திமுக வெறுப்பு" என்பது இந்தப் பண்பாட்டு மேலாதிக்கத்தின் ஒரு வெளிப்பாடே.

முற்போக்காளர்களும் இந்த வலையில் சிக்குவது ஏன்?

கெடு வாய்ப்பாக, வர்க்கப் போராட்டம் பேசும் முற்போக்காளர்களும், இடது தோழர்களும் கூட சில நேரங்களில் இந்த சனாதனக் கட்டமைப்பின் வெளிப்பாடான திமுக வெறுப்பை கையில் எடுக்கிறார்கள்.

திமுக தொழிலாளர் நலனுக்கு எதிரான கொள்கைகளை செயல்படுத்தும்போது விமர்சிப்பது, கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்ப்பது — இவை நியாயமான வர்க்கப் பார்வையின் வெளிப்பாடுகள். இவற்றை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் வலதுசாரிச் சக்திகளின் அவதூறுகளையும், ஒரு பெண்ணின் கண்ணியத்தை கேள்விக்குட்படுத்தும் பேச்சுகளையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, திமுகவின் மீதான விமர்சனத்தை மட்டும் பூதாகரமாக்குவது வர்க்கப் பார்வை அல்ல. அது அறியாமலேயே சனாதன சக்திகளின் திமுக வெறுப்பு பிரச்சாரத்திற்கு கருவியாக மாறுவதாகும்.

தீவிர முதலாளித்துவக் கொள்கைகளையும் கார்ப்பரேட் ஆதிக்கத்தையும் வெளிப்படையாக ஆதரிக்கும் வலதுசாரி சக்திகளைக் காட்டிலும், திமுகவையே தங்களின் முதன்மை எதிரியாகக் கருதி முற்போக்காளர்கள் தாக்குவது சித்தாந்த முரண்பாடாகும். இது உண்மையான வர்க்க எதிரியை மறைக்கும் அரசியல் நடைமுறையாகும்.

முடிவுரை

அரசியல் நாகரிகமும் பெண்ணியப் பாதுகாப்பும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்த அதே முற்போக்குக் குரல்கள், நிர்மல் குமாரின் பேச்சையும் கண்டிக்கத் தவறியது கொள்கை உறுதியின்மையை வெளிப்படுத்துகிறது.

திமுகவின் கொள்கை தவறுகளை விமர்சிக்கலாம்; அது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை. ஆனால் அந்த விமர்சனம் அதே அளவுகோலில் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்த வேண்டும். திமுக மட்டும் முதலாளித்துவம் பின்பற்றுவதில்லை; அனைத்துக் கட்சிகளும் பின்பற்றுகின்றன — இந்த உண்மையை மறைத்து திமுக மட்டும் தாக்கப்படும்போது, அது கொள்கை விமர்சனமல்ல; சனாதன சக்திகளால் கட்டமைக்கப்பட்ட திமுக வெறுப்பு உளவியலின் வெளிப்பாடு.

திமுக வெறுப்பு எனும் கட்டமைக்கப்பட்ட உளவியலிலிருந்து விலகி, உண்மையான வர்க்க மற்றும் சமூக எதிரி யார் என்பதை அடையாளம் கண்டு செயல்படுவதே ஒரு விழிப்புணர்வடைந்த முற்போக்கு இயக்கத்திற்கு அழகாகும்.

ஊரான்

Saturday, 12 September 2026

சமூக நீதியின் உண்மையான வரையறை

வரலாற்றுப் பூர்வமாக சமூக நீதி என்பது வெறும் வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல.

தலைமுறை தலைமுறையாக மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத் தருவதும், சமூகத்தில் நிலவிய வரலாற்று ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வதும், அதிகாரம் மற்றும் வாய்ப்புகளில் சமமான பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதுமே சமூக நீதியின் அடிப்படை நோக்கம்.

கல்விச் சமமின்மை

குறிப்பிட்ட சமூகப் பிரிவினருக்கு நீண்ட காலமாகக் கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. கல்வி என்பது சிலரின் தனியுரிமையாக மாற்றப்பட்டிருந்தது.

அரசியல் மற்றும் சமூகச் சமமின்மை

அதிகார மையங்களிலும், ஆட்சி அமைப்புகளிலும், சமூக அந்தஸ்திலும் குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கம் நிலவியது. மற்ற சமூகங்கள் அதிகாரத்திலிருந்து தொடர்ந்து விலக்கி வைக்கப்பட்டன.

பொருளாதாரச் சமமின்மை

கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவற்றிலிருந்து ஏற்பட்ட நீண்டகால விலக்கலின் நேரடி விளைவாக, அந்த சமூகங்கள் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கின.

எனவே, இந்த வரலாற்று அநீதியைச் சரிசெய்வதற்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட முக்கியமான சமூகநீதிக் கருவிகளில் ஒன்றுதான் இடஒதுக்கீடு.

அதன் நோக்கம் வெறுமனே ஒருவரின் வறுமையைப் போக்குவது அல்ல.

வரலாற்று ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு, வாய்ப்பிலும் பிரதிநிதித்துவத்திலும் உரிய பங்கை உறுதி செய்வதே அதன் அடிப்படை நோக்கம்.

அப்படியானால் EWS எங்கே நிற்கிறது?

இதுதான் முக்கியமான கேள்வி.

இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமா?

அல்லது

வரலாற்று மற்றும் சமூக ரீதியாக உருவான பிரதிநிதித்துவக் குறைபாட்டைச் சரிசெய்யும் நடவடிக்கையா?

இடஒதுக்கீட்டை “பிரதிநிதித்துவ உரிமை” என்ற அடிப்படையில் புரிந்துகொண்டால், EWS குறித்த விமர்சனம் புரியும்.

ஏற்கனவே தலைமுறை தலைமுறையாகக் கல்வி, சமூக அந்தஸ்து, அதிகாரம் போன்றவற்றில் முன்னிலை பெற்ற சமூகங்களில் உள்ள தனிநபர்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கலாம்.

அவர்களுக்கு அரசு உதவி தேவையில்லை என்று சொல்ல முடியாது.

ஆனால் அந்த உதவி எந்த வடிவில் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் கேள்வி.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கட்டணச் சலுகை, வேலைவாய்ப்புப் பயிற்சி, பொருளாதார உதவி, மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்க முடியும்.

ஆனால் வரலாற்று சமூகப் பின்தங்குதலால் உருவான பிரதிநிதித்துவக் குறைபாட்டைச் சரிசெய்யும் இடஒதுக்கீட்டுடன், தனிநபரின் பொருளாதார நிலையை ஒரே அடிப்படையில் இணைப்பது சமூகநீதியின் வரலாற்று நோக்கத்தை மாற்றிவிடுமா? என்பதுதான் விவாதிக்க வேண்டிய கேள்வி.

EWS குறித்த முக்கியமான முரண்பாடு

மத்திய அரசின் EWS இடஒதுக்கீட்டில், ஏற்கனவே SC, ST, OBC இடஒதுக்கீட்டின் கீழ் வரும் பிரிவினர் அதில் சேர்க்கப்படுவதில்லை.

இதனால் ஒரு விசித்திரமான நிலை உருவாகிறது.

ஒரு குடும்பம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருந்தாலும், அது ஏற்கனவே SC, ST அல்லது OBC இடஒதுக்கீட்டின் கீழ் இருந்தால் EWS 10 விழுக்காட்டைப் பெற முடியாது.

அதே பொருளாதார நிலை கொண்ட ஒரு முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பத்திற்கு EWS வாய்ப்பு கிடைக்கிறது.

இதனால் எழும் கேள்வி:

EWS உண்மையில் வறுமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதா?

அல்லது

சமூகப் பின்தங்குதலுக்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் கட்டமைப்புக்குள், முற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான தனி இடத்தை உருவாக்குகிறதா?

இதுதான் EWS குறித்து சமூகநீதி நோக்கில் எழுப்பப்படும் அடிப்படை விமர்சனம்.

வறுமைக்கு எதிரான போராட்டமும் சமூகநீதியும் ஒன்றல்ல

இதில் ஒரு முக்கியமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வறுமை ஒழிப்பு வேறு.
சமூகநீதி வேறு.

வறுமை என்பது பொருளாதாரப் பிரச்சினை.

ஆனால் சாதி அடிப்படையிலான விலக்கல் என்பது சமூக அதிகாரம், கல்வி வாய்ப்பு, சமூக அந்தஸ்து, பிரதிநிதித்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வரலாற்றுப் பிரச்சினை.

எனவே, இரண்டையும் ஒன்றாகக் கருத முடியாது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அதற்கான சரியான வழி வறுமை ஒழிப்புத் திட்டங்கள், கல்வி உதவிகள், மானியங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்றவையாக இருக்கலாம்.

அதை சமூகப் பிரதிநிதித்துவத்தைச் சரிசெய்யும் இடஒதுக்கீட்டுடன் ஒன்றாகக் கருதுவது வேறு பிரச்சினை.

சமூகநீதியை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது!

சமூகநீதியை வெறும் “யார் ஏழை?” என்ற கேள்விக்குள் சுருக்கிவிட்டால்,
“யார் வரலாற்றில் அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டார்கள்?” என்ற மிக முக்கியமான கேள்வி மறைக்கப்பட்டுவிடும்.

சமூகநீதி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான உதவி வழங்குவது அல்ல.

சமமாக நடத்தப்படாதவர்களுக்கு, அவர்கள் எதிர்கொண்ட வரலாற்று அநீதியை கணக்கில் கொண்டு நியாயமான வாய்ப்பை உருவாக்குவதே சமூகநீதி.

எனவே,

வறுமையை ஒழிப்போம்!
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவுவோம்!

அதே நேரத்தில்,

சமூகப் பின்தங்குதலால் தலைமுறை தலைமுறையாக மறுக்கப்பட்ட பிரதிநிதித்துவ உரிமையை இடஒதுக்கீட்டின் மூலம் பாதுகாப்போம்!

இரண்டையும் ஒன்றாக்கி, சமூகநீதியின் வரலாற்று நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது.

இதுதான் எனது புரிதல்.

ஊரான்

Friday, 11 September 2026

இளமைக்கால நினைவலைகள்: மகிழ்ச்சியா? ஏக்கமா?தற்பெருமையா?

ஒரு தோழர் கேட்ட கேள்விக்குப் பிறகு எழுந்த எண்ண ஓட்டம்.

கேள்வி கடைசியில்.
***

இளமைக்கால நினைவலைகள்: மகிழ்ச்சியா? ஏக்கமா? தற்பெருமையா?

கடந்த காலம், குறிப்பாக நமது இளமைக் கால நினைவுகள் மனதில் வந்து போகும்போது ஒருவிதமான உணர்வு பிறக்கிறது. அது வெறும் மகிழ்ச்சியா? அல்லது ஒருவகை ஏக்கமா? அல்லது இன்றைய வாழ்க்கையின் நெருக்கடிகள் நம்மைப் பழைய காலத்திற்கு ஏங்க வைக்கின்றனவா? இன்னும் சொல்லப்போனால், இது ஒருவிதத் தற்பெருமையின் வெளிப்பாடா?

சமூக இயக்கங்களிலும், மக்கள் தொண்டிலும், பொதுப் பணிகளிலும் ஈடுபடுபவர்களுக்கு எழும் இந்த இயல்பான கேள்வியை, மனோதத்துவ ரீதியாகவும் நாம் வாழும் சமூகச் சூழலின் அடிப்படையிலும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

மகிழ்ச்சியா? ஏக்கமா? — ‘இனிய வலி’

பழைய நினைவுகள் நெஞ்சில் எழுவதை “பழமை ஏக்கம்” என்று சொல்வார்கள். இது வெறும் மகிழ்ச்சியுமல்ல, வெறும் ஏக்கமுமல்ல; இரண்டும் கலந்த ஒரு ‘இனிய வலி’.

கடந்த காலத்தில் நாம் வாழ்ந்த நல்ல அனுபவங்கள், அன்பான மனிதர்கள், நாம் அடைந்த வெற்றிகளை மனம் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போது, அது மனதிற்குள் பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. அதே நேரத்தில், “அந்த அழகான காலம் மீண்டும் வராதா?” அல்லது “அன்று நம்மோடு இருந்த மனிதர்களும் அந்தச் சூழலும் இன்றைக்கு இல்லையே” என்ற இழப்பு உணர்வு சேரும்போது, அதுவே ஏக்கமாகவும் மாறுகிறது.

இன்றைய நெருக்கடிகளும் மனதின் புகலிடமும்
இன்றைய வாழ்க்கையில் நாம் சந்திக்கிற வேலைப் பளு, பொருளாதார நெருக்கடி, சமூக அலைக்கழிப்புகள் ஆகியவற்றிடமிருந்து தப்பிக்கவே மனம் பழைய நினைவுகளைத் தேடி ஓடுகிறது.

இன்றைய வாழ்வில் பதற்றமும் பாதுகாப்பற்ற உணர்வும் கூடும்போது, மனித மனம் தானாகவே தான் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்த பழைய காலத்திற்குள் போய் ஒளிந்து கொள்கிறது. இது மனதிற்குள் நடக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை.

மேலும், இன்றைய உலகம் மனிதர்களைத் தனித்தனியாகப் பிரித்து, எந்நேரமும் பணத்திற்காக ஓடக்கூடிய இயந்திரங்களாக மாற்றிவிட்டது. ஆனால், நமது இளமைக் காலம் என்பது பணத்தை விட மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் தந்த காலமாகவும், பெரிய நெருக்கடிகள் இல்லாத காலமாகவும் இருந்திருக்கலாம். இந்த இரண்டு காலத்திற்கும் உள்ள வேறுபாடே நம்மைப் பழைய காலத்திற்கு ஏங்க வைக்கிறது.

இது தற்பெருமையா அல்லது ‘சுய-மதிப்பீடா’?

பழைய நினைவுகளை நினைத்துப் பார்ப்பது தவறான தற்பெருமையோ அல்லது தன்-நலமோ அல்ல.

“நான் கடந்து வந்த பாதையில் சில நல்ல செயல்களைச் செய்திருக்கிறேன்”, “ஒரு காலத்தில் உறுதியாக நின்று போராடி இருக்கிறேன்” என்று நினைப்பது ஒரு மனிதனுக்குத் தன் மீதான நம்பிக்கையையும் மரியாதையையும் உயர்த்துகிறது.

குறிப்பாக, புரட்சிகர இயக்கங்களிலும் மக்கள் தொண்டிலும் நீண்ட காலம் உழைத்த தோழர்களுக்கும் தொண்டர்களுக்கும், அவர்களுடைய தியாகங்களும் உழைப்புமே அவர்களின் வாழ்க்கையின் அடையாளம். இன்றைக்குக் களத்தில் இறங்கி வேலை செய்ய முடியாத சூழல் வரும்போது, இந்த பழைய நினைவுகளே அவர்களுக்கு மன உறுதியைத் தரும் கவசமாக மாறுகின்றன.

சமூகச் செயல்பாடுகள்: நல்ல நினைவுகளும் கசப்பான நினைவுகளும்
போராட்டங்களிலும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்ட நினைவுகள், “நாம் தன்நலமாக வாழாமல், நாலு பேருக்குப் பயன்படும் வகையில் வாழ்ந்திருக்கிறோம்” என்ற ஒரு பெரிய நிறைவைத் தருகின்றன.

அதே நேரம், போராட்டங்களில் வந்த பின்னடைவுகள், இழப்புகள் போன்ற கசப்பான நினைவுகள் வந்து போவது, நாம் கடந்த பாதையை நாமே திரும்பிப் பார்த்து மதிப்பீடு செய்து கொள்வதற்காகத்தான். அவை நாம் இன்றைக்கு அடைந்துள்ள மன முதிர்ச்சிக்குச் சான்றாக நிற்கின்றன.

முடிவாக…

கடந்த காலத்திலேயே மூழ்கிக் கிடப்பதுதான் ஆபத்தே தவிர, இன்றைய நெருக்கடிகளைச் சமாளிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், நம்மை நாமே மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவும் மனம் எடுத்துக் கொள்ளும் ஒரு சிறிய இடைவேளைதான் இந்த நினைவலைகள்.

“இது தற்பெருமையோ?” என்று ஒருவருக்குச் சந்தேகம் எழுவதே, அவர் தன்னைத்தானே சுய-பரிசீலனை செய்து கொள்ளும் நல்ல பண்பைக் காட்டுகிறது. சுருங்கச் சொன்னால், இந்தப் பதிவு சமூக மாற்றத்திற்காக உழைக்கும் போராளிகளுக்கு மட்டுமல்ல, மக்கள் நலனுக்காக உழைக்கும் அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான்.

இந்த நினைவலைகள், சமூகத்திற்காக உழைத்த ஒரு மனிதனின் தடம் குறித்த நியாயமான பெருமிதம்! அவற்றை இரசிப்போம்; அதே உற்சாகத்தோடு இன்றைய போர்க்களத்திலும் தொடர்ந்து முன்னேறுவோம்!

தமிழ்மணி
***
தோழர் வணக்கம்,

உங்களிடம் ஒரு கேள்வி, கடந்த காலம் குறிப்பாக இளமைக்கால நினைவுகள் சில மனதில் மலரும் பொழுது, ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படுகிறது ஏன்? அது மகிழ்ச்சியா அல்லது ஏக்கமா என்று தெரியவில்லை.

ஒருவேளை தற்கால கடுமைகள் அப்படியான எண்ணத்தை என்னுள் தோற்றுவிக்கிறதோ, அதாவது பழமைக்கு ஏங்க வைக்கிறதோ? இது என்ன மனநிலை?

தோழர் பழனிச்சாமி, மகஇக, கரூர்
***
(மக்கள் அதிகாரம் தளத்தில் எனது புதிய கட்டுரை)

Monday, 7 September 2026

மனுதர்மத்தின் பழைய தந்திரமும்... விஜய்யின் நச்சு அரசியலும்!

மனுஸ்மிருதியின் 7:41-ஆம் சுலோகம் ஒரு பகிரங்கமான மிரட்டலைத் விடுக்கிறது: "பார்ப்பனர்களை மதிக்காத மன்னர்கள் அழிந்து போவார்கள்."

அன்று மன்னராட்சி காலத்தில், "மன்னன் கடவுளின் பிரதிநிதி" என்று நம்ப வைத்துத் தங்கள் வர்ணாசிரம தர்மத்தைப் பாதுகாக்கப் பார்ப்பனர்களுக்கு மன்னர்களின் துணை தேவைப்பட்டது. அன்று மன்னராட்சி, இன்று தேர்தல் ஜனநாயகம். வடிவம் மாறியிருக்கலாம்; ஆனால் அந்த மேலாதிக்கத்தை வேறு வடிவத்தில் தொடர நினைக்கும் சதி மாறவில்லை.


1.விஜய்யின் அருவருப்பான உடல்மொழியும்... மடைமாற்ற நாடகமும்!

சமீபத்தில் நாம் பார்த்த விஜய்யின் அரசியல் அரங்கேற்றமும், அவரது உரையும் ஒரு அருவருப்பான நாடகத் தன்மையையே காட்டியது.

• அரசியல் அறிவற்ற உடல்மொழி: மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்கான அரசியல் களத்தில், திரைப்படங்களில் காட்டுவது போன்ற வெற்று மாஸ் கெத்தையும், மிகைப்படுத்தப்பட்ட அருவருப்பான உடல்மொழியையும் வெளிப்படுத்தி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

• கொள்கையற்ற கூச்சல்: வர்க்கச் சுரண்டல், சமூகநீதி, இடஒதுக்கீடு என எந்தவொரு கொள்கைப் பிடிப்பும் இல்லாமல், வெறும் திமுக எதிர்ப்பு என்பதை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கூச்சலிடுகிறார்.

• பின்னணியில் இருக்கும் சதி: ஒரு நடிகனின் இந்தத் தகுதியற்ற, வெறுப்பு நிறைந்த பேச்சை ஊதிப்பெருக்கி, மக்கள் மத்தியில் திமுக மீதான வன்மமாக மடைமாற்றப் பார்ப்பனிய ஊடகங்களும் வலதுசாரிச் சக்திகளும் துடிக்கின்றன.

ஒரு நடிகன் எவ்வளவு மோசமாக அரசியல் பேசினாலும், அதை வைத்து ஆட்சியைப் பிடிக்க வைக்கலாம் என்ற பார்ப்பனியத்தின் கணக்கு, தமிழ்ச் சமூகத்தை எவ்வளவு முட்டாளாக நினைக்கிறது என்பதற்குச் சான்று!

2. திமுக மீது பார்ப்பனியத்திற்கு ஏன் இவ்வளவு வன்மம்?

தமிழ்நாட்டின் திமுக ஆட்சியைப் பார்ப்பனிய சக்திகள் தொடர்ந்து எதிர்ப்பதற்குக் காரணம், அது வெறும் அரசியல் கட்சி என்பதற்காக அல்ல.

• நூற்றாண்டுகளாகச் சில குறிப்பிட்ட சமூகங்கள் மட்டுமே அனுபவித்துவந்த கல்வி, அரசு வேலைகள் மற்றும் அதிகார நாற்காலிகளில் இடஒதுக்கீடு மூலம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை அமர வைத்தது திராவிட இயக்கம்.

• சாதி மேலாதிக்கத்திற்கு எதிராகச் சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களிடம் கொண்டு சேர்த்தது.

தங்கள் கைப்பிடியில் இருந்த அதிகாரமும், சமூக மேலாதிக்கமும் கைநழுவிச் சாமானிய மக்களின் கைக்குச் சென்றதை ஆதிக்க சக்திகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திமுகவின் மீது அவர்களுக்கு இத்தனை வன்மம்.

3. திமுக எதிர்ப்பு — யாரைப் பாதுகாப்பதற்கான அரசியல்?

திமுகவை விமர்சிப்பது தவறே இல்லை. அதன் நிர்வாகத் தவறுகள், ஊழல்கள், மக்கள் விரோத நடவடிக்கைகளை தாராளமாகக் கேள்வி கேட்கலாம். ஆனால், இங்கே நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது:

"திமுகவை வீழ்த்துவது என்ற ஒரே நோக்கத்திற்காக, விஜய்யைப் போன்ற கொள்கையற்ற பொம்மைகளை அரசியல் களத்தில் இறக்கும்போது... அதன் மூலம் பயன்பெறப்போவது யார்?"

திமுக எதிர்ப்பு என்ற போர்வையில் சமூகநீதிக்கு எதிரான வலதுசாரிச் சக்திகளும், சாதி மேலாதிக்கத்தைக் காப்பாற்றத் துடிப்பவர்களும் ஒன்று சேர்கிறார்கள் என்றால், அதன் பின்னால் ஒரு பெரிய சமூகச் சதி இருக்கிறது.

4. மனுதர்மத்தின் நவீன முகமூடிகள்!

அன்று மனுதர்மம் நேரடியாகச் சொன்னது: "வர்ணாசிரமத்தைக் காப்பாற்று."

இன்று அதை நேரடியாகச் சொல்ல முடியாது என்பதால், "தகுதி, திறமை, ஊழலற்ற ஆட்சி, மாற்று அரசியல்" போன்ற கவர்ச்சியான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். அந்த வரிசையில் வந்த நவீன முகமூடியே விஜய்!

இந்தச் சொற்களையும், நடிகர்களின் போலி உடல்மொழியையும் பார்த்து நாம் ஏமாந்துவிடக் கூடாது. இந்த அரசியல் நடைமுறையில் யாருடைய அதிகாரத்தை உயர்த்துகிறது? யாருடைய உரிமையைப் பறிக்கிறது? என்பதே உண்மையான அளவுகோல்.

முடிவாக...

திமுகவை எதிர்ப்பது யார் என்பதை விட, திமுக வீழ்ந்தால் அடுத்து அதிகாரத்திற்கு வருபவர்கள் நமது இடஒதுக்கீட்டையும் சமூகநீதியையும் பாதுகாப்பார்களா? என்பதே சாமானிய மக்களின் கேள்வியாக இருக்க வேண்டும்.

தமிழ்ச் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும். மனுதர்மத்தின் பழைய அதிகார உத்திகள், நடிகர்களின் போலி முகமூடிகளோடு திரும்பி வரும்போது அதை அடையாளம் கண்டு முறியடிப்பதே உண்மையான சமூகநீதி அரசியலாகும்!

— ஊரான்

Sunday, 6 September 2026

கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக் கூறலாமா?

கீதையில் “குணமும் செயலுமே காரணம்” என்று எழுதப்பட்டிருந்தாலும், பார்ப்பனியச் சமூகக் கட்டமைப்பில் அது எப்போதுமே பிறப்பின் அடிப்படையில்தான் (Birth-based) நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது என்பதே மறுக்க முடியாத வரலாறு.

 
***

ண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி வந்துவிட்டால் போதும்; வீடுகளின் வாசல்களில் கைக்குழந்தையின் காலடித் தடங்களை மாக்கோலமாகப் பதிக்கிறார்கள். சிறுவர், சிறுமிகளுக்குக் கிருஷ்ணன் வேடமிட்டுப் பள்ளிகளுக்கு அனுப்பி மகிழ்கிறார்கள். இஸ்லாமிய வீட்டுக் குழந்தைகள்கூட கிருஷ்ணனாக வேடமிட்டு மத நல்லிணக்கத்தை விதைக்கிறார்கள். நவீன டிஜிட்டல் ஊடகங்களான முகநூலிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் குவிகின்றன.

ஆனால், இந்த நடைமுறைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் பின்னால் உள்ள மனித மனநிலையையும் சமூக யதார்த்தத்தையும் நாம் சற்றுச் சுய-பரிசீலனை செய்து பார்க்க வேண்டியுள்ளது.

உண்மையான வழிகாட்டிகளை மறக்கும் சமூகம்

நமக்கு நேரடியாக உதவி செய்த, நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்-தந்தையரின் பிறந்த நாள் கூடப் பலருக்குத் தெரிவதில்லை; தெரிந்தாலும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதில்லை. நமக்கு வாழ்வின் ஏற்றத்திற்கு அடித்தளமிட்டு, கல்வி புகட்டிய ஆசிரியர்களின் பெயர்களைக் கூட நாம் மறந்து விடுகிறோம். நல்வழிப்படுத்திய நல்நெஞ்சங்களையும், தாத்தா-பாட்டிகளையும் கூட நினைவில் வைப்பதில்லை.

இப்படி நமக்கு நேரடியாகப் பல உதவிகளைச் செய்து, மனித நேயத்தோடு வாழ்ந்த மனிதர்களை அவர்கள் வாழும் போது மறந்துவிட்டு, மறைந்த பிறகு நினைவிலும் வைப்பதில்லை.

ஆனால், யார் அந்த கிருஷ்ணன்? அவனை நாம் பார்த்திருக்கிறோமா? பேசியிருக்கிறோமா? நமக்கு நேரடி உதவிகள் ஏதேனும் செய்திருக்கிறானா? அப்படி எதுவுமே செய்யாத ஒரு படிமத்திற்கு வாழ்த்துகள் பொங்கும் அதேவேளையில், அதே கிருஷ்ணனின் பெயரால் சனாதனத் தர்மத்திலும் பகவத் கீதையிலும் முன்வைக்கப்படும் கருத்துகள் குறித்துச் சமூக சிந்தனையாளர்கள் கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது.

வர்ணங்களும் சமூகப் பிளவுகளும்

பகவத் கீதையின் 4-வது அத்தியாயத்தில் இடம்பெறும் “சாதுர்வர்ணியம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகச” (நான்கு வர்ணங்களையும் குணம் மற்றும் செயல்களின் அடிப்படையில் நானே படைத்தேன்) என்ற கூற்று, இந்தியச் சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து வைத்து, ஒடுக்குமுறைக்கும் ஏற்றத்தாழ்வுக்கும் அடித்தளமிட்ட ஒரு கருத்தியலாகவே பார்க்கப்படுகிறது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற சமூகப் புரட்சியாளர்களும், மார்க்சியச் சிந்தனையாளர்களும் இந்த வர்ணாசிரம அமைப்பை மனித குலத்திற்கு எதிரான சதித் திட்டம் என்று கடுமையாகச் சாடியுள்ளனர். பிறப்பின் பெயரால் மனிதர்களை வகைப்படுத்தி, தர்மத்தின் பெயரால் ஒடுக்கும் ஒரு தத்துவத்தைக் கொண்டாடுவதும், அதை உருவாக்கியதாகக் கூறப்படும் கிருஷ்ணன் போன்ற படிமங்களுக்கு வாழ்த்துச் சொல்வதும் சமத்துவத்தைப் பேணும் எவருக்கும் முரண்பாடான ஒன்றே.

“குணத்தின் அடிப்படையில்” — ஒரு நவீனத் திசைதிருப்பல்!

நவீனக் காலத்தில் சாதிய ஒடுக்குமுறைகளை வெளிப்படையாக நியாயப்படுத்த முடியாது என்பதால், ஆன்மீகவாதிகளும் வலதுசாரி அமைப்புகளும் வர்ணங்கள் என்பது “பிறப்பின் அடிப்படையில் அமைந்தது அல்ல; குணம் மற்றும் செய்யும் தொழில் (கர்மா) அடிப்படையிலானதுதான்” என்று புது விளக்கம் கொடுக்க முயல்கிறார்கள்.

ஆனால், இந்த “குணத்தின் அடிப்படையிலான வர்ணம்” என்ற வாதம் முற்றிலும் நடைமுறைக்கு மாறான, மக்களை ஏமாற்றும் ஒரு தத்துவார்த்த மூடுதிரையாகவே இருக்கிறது. குணம் மற்றும் தொழிலின் அடிப்படையில் தான் வர்ணம் என்றால், இன்று ஒருவர் தனது குணத்திற்கு ஏற்ப வர்ணத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது!

மோசமான திருட்டுப் புத்தியோ அல்லது குற்ற உணர்வோ கொண்ட ஒரு மேல்சாதிக்காரன் சூத்திரனாகக் கீழிறக்கப்படுவதோ, அல்லது நல்ல குணமும், அறிவும், சாந்தமும் கொண்ட ஒரு எளிய சாதிக்காரன் பார்ப்பனராக உயர்த்தப்படுவதோ இந்த அமைப்பில் எப்போதுமே அனுமதிக்கப்பட்டதில்லை. நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் இருந்து வெளியிடப்படும் பகவத் கீதை தமிழ் மொழிபெயர்ப்பு விளக்கவுரைகள் கூட, பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரம இறுக்கத்தையே நேரடியாக வலியுறுத்துகின்றன.

கோட்பாட்டுக்கும் நடைமுறைக்குமான முரண்பாடு

கீதையில் “குணமும் செயலுமே காரணம்” என்று எழுதப்பட்டிருந்தாலும், பார்ப்பனியச் சமூகக் கட்டமைப்பில் அது எப்போதுமே பிறப்பின் அடிப்படையில்தான் (Birth-based) நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது என்பதே மறுக்க முடியாத வரலாறு.

மனுநீதி உள்ளிட்ட சனாதன நூல்கள் பிறப்புரிமையை மட்டுமே முதன்மைப்படுத்தின. எனவே, “குணத்தின் அடிப்படையில் வர்ணம்” என்று இன்று பேசப்படும் வாதங்கள் அனைத்தும், சமத்துவச் சிந்தனைகள் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் சாதியக் கட்டமைப்பைக் காப்பாற்றிக் கொள்ளப் பூசப்படும் புதிய சாயமே தவிர வேறில்லை.

கிருஷ்ண ஜெயந்தியை ஒரு பண்பாட்டுக் கொண்டாட்டமாகவோ அல்லது எளிய குழந்தைகளின் பூரிப்பாகவோ கடந்து செல்பவர்கள் கடந்து செல்லட்டும். ஆனால், நேரில் கண்டிராத படிமங்களுக்கு வாழ்த்து மழை பொழியும் அதேவேளையில், நமக்கு நேரடியாக வாழ்வளித்த உண்மையான மனிதர்களை மறப்பதும், “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்” என்று கூறி மனிதர்களைப் பிளவுபடுத்திய கருத்தியலை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் கேள்வி கேட்காமல் ஏற்பதும் பகுத்தறிவுக்குப் பொருத்தமானதல்ல!

வர்ணம் என்பதும் சாதி என்பதும் குணம் சார்ந்ததல்ல; அது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்தாள உருவான ஒரு பிற்போக்குத்தனமான கருவியே! இந்த உண்மையை உணர்ந்து, நம் வாழ்வின் நிஜமான வழிகாட்டிகளைப் போற்றுவதும், சமூகச் சமத்துவத்தை நோக்கி நடைபோடுவதுமே ஒரு முற்போக்குச் சமூகத்திற்கு அழகாகும்!

  • தமிழ்மணி
குறிப்பு: மக்கள் அதிகாரம் தளத்தில் வெளியான கட்டுரை
காதளத்தில் வெளியான