தலைமுறை தலைமுறையாக மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத் தருவதும், சமூகத்தில் நிலவிய வரலாற்று ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வதும், அதிகாரம் மற்றும் வாய்ப்புகளில் சமமான பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதுமே சமூக நீதியின் அடிப்படை நோக்கம்.
கல்விச் சமமின்மை
குறிப்பிட்ட சமூகப் பிரிவினருக்கு நீண்ட காலமாகக் கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. கல்வி என்பது சிலரின் தனியுரிமையாக மாற்றப்பட்டிருந்தது.
அரசியல் மற்றும் சமூகச் சமமின்மை
அதிகார மையங்களிலும், ஆட்சி அமைப்புகளிலும், சமூக அந்தஸ்திலும் குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கம் நிலவியது. மற்ற சமூகங்கள் அதிகாரத்திலிருந்து தொடர்ந்து விலக்கி வைக்கப்பட்டன.
பொருளாதாரச் சமமின்மை
கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவற்றிலிருந்து ஏற்பட்ட நீண்டகால விலக்கலின் நேரடி விளைவாக, அந்த சமூகங்கள் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கின.
எனவே, இந்த வரலாற்று அநீதியைச் சரிசெய்வதற்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட முக்கியமான சமூகநீதிக் கருவிகளில் ஒன்றுதான் இடஒதுக்கீடு.
அதன் நோக்கம் வெறுமனே ஒருவரின் வறுமையைப் போக்குவது அல்ல.
வரலாற்று ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு, வாய்ப்பிலும் பிரதிநிதித்துவத்திலும் உரிய பங்கை உறுதி செய்வதே அதன் அடிப்படை நோக்கம்.
அப்படியானால் EWS எங்கே நிற்கிறது?
இதுதான் முக்கியமான கேள்வி.
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமா?
அல்லது
வரலாற்று மற்றும் சமூக ரீதியாக உருவான பிரதிநிதித்துவக் குறைபாட்டைச் சரிசெய்யும் நடவடிக்கையா?
இடஒதுக்கீட்டை “பிரதிநிதித்துவ உரிமை” என்ற அடிப்படையில் புரிந்துகொண்டால், EWS குறித்த விமர்சனம் புரியும்.
ஏற்கனவே தலைமுறை தலைமுறையாகக் கல்வி, சமூக அந்தஸ்து, அதிகாரம் போன்றவற்றில் முன்னிலை பெற்ற சமூகங்களில் உள்ள தனிநபர்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கலாம்.
அவர்களுக்கு அரசு உதவி தேவையில்லை என்று சொல்ல முடியாது.
ஆனால் அந்த உதவி எந்த வடிவில் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் கேள்வி.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கட்டணச் சலுகை, வேலைவாய்ப்புப் பயிற்சி, பொருளாதார உதவி, மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்க முடியும்.
ஆனால் வரலாற்று சமூகப் பின்தங்குதலால் உருவான பிரதிநிதித்துவக் குறைபாட்டைச் சரிசெய்யும் இடஒதுக்கீட்டுடன், தனிநபரின் பொருளாதார நிலையை ஒரே அடிப்படையில் இணைப்பது சமூகநீதியின் வரலாற்று நோக்கத்தை மாற்றிவிடுமா? என்பதுதான் விவாதிக்க வேண்டிய கேள்வி.
EWS குறித்த முக்கியமான முரண்பாடு
மத்திய அரசின் EWS இடஒதுக்கீட்டில், ஏற்கனவே SC, ST, OBC இடஒதுக்கீட்டின் கீழ் வரும் பிரிவினர் அதில் சேர்க்கப்படுவதில்லை.
இதனால் ஒரு விசித்திரமான நிலை உருவாகிறது.
ஒரு குடும்பம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருந்தாலும், அது ஏற்கனவே SC, ST அல்லது OBC இடஒதுக்கீட்டின் கீழ் இருந்தால் EWS 10 விழுக்காட்டைப் பெற முடியாது.
அதே பொருளாதார நிலை கொண்ட ஒரு முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பத்திற்கு EWS வாய்ப்பு கிடைக்கிறது.
இதனால் எழும் கேள்வி:
EWS உண்மையில் வறுமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதா?
அல்லது
சமூகப் பின்தங்குதலுக்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் கட்டமைப்புக்குள், முற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான தனி இடத்தை உருவாக்குகிறதா?
இதுதான் EWS குறித்து சமூகநீதி நோக்கில் எழுப்பப்படும் அடிப்படை விமர்சனம்.
வறுமைக்கு எதிரான போராட்டமும் சமூகநீதியும் ஒன்றல்ல
இதில் ஒரு முக்கியமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வறுமை ஒழிப்பு வேறு.
சமூகநீதி வேறு.
வறுமை என்பது பொருளாதாரப் பிரச்சினை.
ஆனால் சாதி அடிப்படையிலான விலக்கல் என்பது சமூக அதிகாரம், கல்வி வாய்ப்பு, சமூக அந்தஸ்து, பிரதிநிதித்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வரலாற்றுப் பிரச்சினை.
எனவே, இரண்டையும் ஒன்றாகக் கருத முடியாது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் அதற்கான சரியான வழி வறுமை ஒழிப்புத் திட்டங்கள், கல்வி உதவிகள், மானியங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்றவையாக இருக்கலாம்.
அதை சமூகப் பிரதிநிதித்துவத்தைச் சரிசெய்யும் இடஒதுக்கீட்டுடன் ஒன்றாகக் கருதுவது வேறு பிரச்சினை.
சமூகநீதியை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது!
சமூகநீதியை வெறும் “யார் ஏழை?” என்ற கேள்விக்குள் சுருக்கிவிட்டால்,
“யார் வரலாற்றில் அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டார்கள்?” என்ற மிக முக்கியமான கேள்வி மறைக்கப்பட்டுவிடும்.
சமூகநீதி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான உதவி வழங்குவது அல்ல.
சமமாக நடத்தப்படாதவர்களுக்கு, அவர்கள் எதிர்கொண்ட வரலாற்று அநீதியை கணக்கில் கொண்டு நியாயமான வாய்ப்பை உருவாக்குவதே சமூகநீதி.
எனவே,
வறுமையை ஒழிப்போம்!
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவுவோம்!
அதே நேரத்தில்,
சமூகப் பின்தங்குதலால் தலைமுறை தலைமுறையாக மறுக்கப்பட்ட பிரதிநிதித்துவ உரிமையை இடஒதுக்கீட்டின் மூலம் பாதுகாப்போம்!
இரண்டையும் ஒன்றாக்கி, சமூகநீதியின் வரலாற்று நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது.
இதுதான் எனது புரிதல்.
ஊரான்
