Thursday, June 13, 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!..... தொடர்-3


மனை வாங்கி, பூமி பூஜை போட்டு, இடைக்கால மின் இணைப்புப் பெற்று, போர் போட்டு, கடைக்கால் எடுத்து, பிளிந்த் போட்டு, சுவர் எழுப்பி, லாப்ட் கட்டி, இங்கே லிண்டில் போட்டு, தளம் அமைத்து, மாடிப்படி அமைத்து, வாசக்கால் ஜன்னல் வைத்து, அவைகளுக்கு கதவுகள் போட்டு, கூடவே செப்டிக் டேங்க் கட்டி, சுற்றுச் சுவர் எழுப்பி, கேட் அமைத்து, ஒயரிங் வேலை முடித்து, தரைக்கு கிரானைட்டோ டைல்சோ போட்டு, பிறகு சுவர்களுக்குப் பட்டிப் பார்த்து, பிரைமர் அடித்து, மீண்டும் பட்டிப் பார்த்து, இறுதி வண்ணம் பூசி–கதவு ஜன்னல்களுக்கும் சேர்த்தே–மின் இணைப்பை நிரந்தரமாக்கினால் வீடு ரெடி. ஆனால் குடி போக முடியுமோ! கூடாது.

மனை வாங்கிய நாள் முதல் வீடு கட்டி முடிக்கப்படும் நாள் வரை இங்கே எத்தனையோ முன் பின் முகம் தெரியா தொழிலாளர்கள் வியர்வை சிந்தி இருப்பார்கள். அவர்களது உழைப்பை நீக்கி விட்டால் அங்கே எஞ்சி இருப்பது வெறும் மண் மட்டும்தான்.

அரையும் குறையுமாக, வெள்ளை அடிக்கும் போதே ஐயரைப் பார்த்து நாள் குறிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை என்றால் சொந்த பந்தம், சுற்றம் நட்பு புடை சூழ எல்லோரையும் அரவணைக்க நீங்கள் விரும்பலாம். ஆனால் புரோகிதனுக்கு என்றைக்கு சாத்தியமோ அந்த நாளே உமக்கு ஷேமமான நாள் என்பதால் நீரும் அதற்குத் தலையை ஆட்டி, அட்வான்சை தட்டிலே வைத்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும். முழுமையாக முடித்துவிட்டு கிரகப் பிரவேசம் செய்தால் பார்க்கிறவா கண்ணுட பட்டுடுமாம். ஆகவே குறையா இருக்கும் போதேதான் பிரவேசம் நடத்தனுமாம். குறைப் பிரசவத்தை ஜனங்களே ஏற்கும் போது நீர் ஏனய்யா இடையில் வம்புக்கு வருகிறீர்!

ஐயரைப் பார்த்தாச்சு. நாளும் குறிச்சாச்சு. பதட்டம் தொற்றிக் கொள்கிறது. வீட்டிற்காக உழைத்தவனை அழைக்கிறோமோ இல்லையோ சொந்த பந்தங்களில் ஒருவர்கூட விடுபட்டு விடக்கூடாது. நட்பில்கூட எதுவும் மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போட்ட மொய்யை குறைவில்லாமல் மீட்டெடுக்க வேண்டுமல்லவா?

ஐயர் கொடுத்தப் பட்டியலைக் கடைக்காரனிடம் நீட்டினால் ஒரு சிலவற்றை இல்லை என்கிறான். இருப்பதை வாங்கிக் கொண்டு மற்றவைகளையும் பிற கடைகளில் தேடிப் பிடித்து பேரம் பேசி சொஞ்சம் சில்லரைகளை மிச்சப்படுத்திய தெம்போடு திரும்புகிறான். ஐயருக்கு கட்ட வேண்டியதில் பேரம் பேசியிருந்தாலே சில நூறையாவது மிச்சப்படுத்தியிருக்கலாமே! அப்படி எல்லாம் யோசிக்கவே கூடாது. அதெல்லாம் தெய்வக் குத்தம்.

அன்றைய மாறுவேட போட்டிக்குத் தயாராக வேண்டும் என்பதால் வேட்டி ஒன்றையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டான். பேண்ட்டோடு பூஜை செய்தால் அண்டகாசுரன் பெண்டு எடுத்து விடுவானல்லவா?

மஞ்சள், கும்குமம், மாவிலை, பூசனி, எலுமிச்சை, அரிசி, அகத்திக் கீரை, தேங்காய், மாங்காய், புளி, லொட்டு, லொசுக்கு என பூஜைக்குத் தேவையான அனைத்தும் ரெடி. கன்றும் பசுவும் வேண்டுமே. எங்கே தேடுவது? எப்படி அவைகளை ஓட்டி வருவது? கவலையே வேண்டாம். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும். ஒரு தளமானாலும் அடுக்குமாடி குடியிருப்பானாலும் ஏற்றி இறக்க, சாணம் போட, கோமியம் பேய எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத்தமாய் ஒரு அமௌண்ட்டை கோமாதா அக்கவுண்ட்டில் சேர்த்துவிட்டால் போதும். அமௌண்ட் கொஞ்சம் அதிகம் என்றாலும் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும். கோமாதா இல்லாமல் பூஜை போட்டால் அண்டகாசுரன் சும்மா விடுவானா?

தொடர்புடைய பதிவுகள்

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!......தொடர்-2
அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!


No comments:

Post a Comment