Showing posts with label புரட்சி. Show all posts
Showing posts with label புரட்சி. Show all posts

Friday, 28 November 2025

சுயமரியாதைக்காரர்களுக்கும், பொதுவுடமையாளர்களுக்கும் வழிகாட்டும் சிங்காரவேலர்!

உழைப்பில் ஈடுபடும் மனிதனின் அவயங்களைக் காக்கத் தோன்றிய ஆடை, இன்று நவநாகரிக (Fashion) ஒன்றாகவும், நுகர்வுக்கானதாகவும் பார்க்கப்படுகிறது. அவயங்கள் தெரிய, அரைகுறை ஆடை அணிந்து, ‘என் உடல், என் உடை, என் உரிமை’ என்று தங்களின் உடை சுதந்திரம் பற்றிப் பேசும் ஆண்களும், பெண்களும் (இதில் முற்போக்குகளும் அடங்குவர் என்பது ஒரு கேலிக்கூத்து) அதிகரித்துவரும் இன்றைய சூழலில், ஆடை குறித்தும், 

பச்சை உணவை வலியுறுத்தும் சில  கற்கால அலப்பறைகள் அதிகரித்துவரும் இன்றைய காலத்தில், ஏன் உணவை சமைத்து சாப்பிட வேண்டும் என்பது குறித்தும்,

தோழர் சிங்காரவேலர் எழுதுகிறார், 

சிங்காரவேலர்

“மனிதனுக்கு ஆடை (clothing) அவசியமா? ஆடை நாகரிக வாழ்க்கைக்கு அத்தியாவசியமா? என்று கேட்கலாம். ஆடையைத் தரிப்பது Artificial அதாவது செயற்கையால் என்றும் இயற்கை அல்லவென்றும் சிலருடைய கருத்து.

இம்மாதிரியாகவே சமைத்து உண்பது செயர்க்கையென்றும் காய்கனிகளை அதாவது சமைக்காமல் (Raw) பச்சையாக உண்பது இயற்கை என்றும் சிலர் கருதுகின்றார்கள். இந்தக் கருத்துடன் நிற்காமல் பச்சையாக உண்ணவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தக் கோஷ்டியாரில் நமது காந்தியாரும் ஒருவர். இவர் நிர்வாணத்தை (Nudity) அனுசரிக்கின்றாரோ நமக்குத் தெரியாது. ஆனால் பச்சையுணவு நிர்வாணத்தைப்போல் ஓர்வித Fad (பித்து) என்பதே நமது தீர்மானம்.

பச்சையாகத் தின்றுகொண்டிருந்த குரங்கு மனிதன் (Ape-Man) நெருப்பைக் கண்டுபிடித்த பிறகே சமைத்து உண்ண நேரிடவும், அவன் மனித உருவத்தையும், அதற்குகந்த நடத்தையும் பெற்றான் என்பது உயிர் ஞானத்தின் (Bio Science) முடிவு எனலாம்.

இதைப்போலவே ஆடையில்லாமல் நிர்வாணமாக உளவிக் கிடந்த மனிதக் குரங்கு ஆடையை அணிய நேரிடவும், மனிதக் குரங்கு மனிதனாக மாறிவந்த விஷயமும் உயிர் ஞானத்தின் உண்மைகளில் ஒன்று. ஆனால் தற்போது நாம் அடைந்துள்ள மனிதப் பதவியை விட்டுவிட்டு நமது தூரப்பங்காளிகளாகிய (Distant Cousins) மனிதக் குரங்குகளைப் போல் (Man Aps) நாமும் மரங்களில் தொத்திக் கொண்டு கனிவர்க்கங்களை உண்டு வாழலாமென்று கருதுவோர் நிர்வாணமாக இன்றைக்கே நாடுகளை விட்டுக் காடுகளில் சென்று நடமாடலாம்.

இது நவீன நாகரிகமாகாது. இந்த வாழ்க்கை காட்டுமிராண்டி வாழ்க்கையாகும். சமைக்காமல் சாப்பிடுவதும், ஆடை அணியாமல் வாழ்வதும் நமது இயற்கை வாழ்க்கை  என்கின்றனர் சிலர். ஆம் அந்த வாழ்க்கை தற்போது நமக்கு உவந்ததானால் பிணத்தைத் (Cannibalism) தின்பதும், வரைமுறையற்ற புணர்ச்சியும் (Promiscuous Intercourse), கொலை (Murder), பலவந்தப் புணர்ச்சி (Rapine) இவை யாவும் இயற்கை வாழ்க்கை அன்றோ? இவற்றை ஏன் நாம் கையாளக் கூடாது? 

ஆனால் இந்த வாழ்க்கையைத் தவிர்த்து ஆடையை அணிந்து வீடுகளிலும், வாசல்களிலும் வாசஞ்செய்து ஒழுங்கான முறையில் வாழ நேரிட்ட பிறகே ஒரு காலத்தில் காட்டுமிராண்டிகளாய் இருந்த நாம் Decent Civilised Life என்று வழங்கும் தற்கால நாகரிக வாழ்க்கையை அடைந்துள்ளோம். 

நாம் நிர்வாண வாழ்க்கையை விட்டுப் பல லட்சம் வருஷமானதாக உயிர்நூலோர் கணக்கிடுக்கின்றார்கள். அந்த நிலையை இன்றைக்குக் கோருவது மிருகத்தன்மையேயொழிய மனிதத் தன்மையாகாது".

புரட்சி
11.3.1934
பக்கம் 9-13

***

1930 களின் தொடக்கத்தில் சமதர்மம், பொதுவுடமை, சுயமரியாதை, பகுத்தறிவு, மதங்கள், மூடநம்பிக்கைகள் குறித்து 'புரட்சி', 'குடி அரசு' போன்ற ஏடுகளில் வெளியான தோழர் சிங்காரவேலரின் கட்டுரைகளை வாசித்து முடித்த போது பிரமிப்பாய் இருந்தது. 

சுயமரியாதைக்காரர்களின் 'ஈரோட்டுத் திட்டம்' என்பதே பொதுவுடமையைக் கொண்டு வரும் புரட்சித் திட்டம்தான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்துவதில் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என எந்த மதத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை.

பொதுவுடைமை குறித்து சுயமரியாதைக்காரர்களின் போதாமையாலும், பகுத்தறிவு குறித்து பொதுவுடமையாளர்களின் போதாமையாலும் இவ்விரு தரப்பாருமே பகைமைகாட்டி பிணக்கு செய்யும் இன்றைய காலகட்டத்தில், தோழர் சிங்காரவேலர் இவ்விருதரப்பாருக்கும் வழி காட்டுகிறார்.

பொதுவுடமை, மதங்கள், அறிவியல், மூடநம்பிக்கைகள் பற்றிய அவரது ஆழமானப் புரிதலுக்குக் காரணம் அவரது அயராத உழைப்பும், ஆங்கில நூல் வாசிப்பும் என்பதை அவரது கட்டுரைகள் உணர்த்துகின்றன. அவரது எழுத்துக்கள் நூறு ஆண்டை எட்டவிருக்கின்ற இன்றைய நவீன அறிவியல் உலகில் அவரைப் போன்று சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும் யாரும் இல்லையே என்கிற ஏக்கம் மட்டும்தான் இந்த நூலை வாசித்து முடித்த போது என்னுள் எழுந்தது! 

சுரண்டலும், ஒடுக்குமுறையும், மூடநம்பிக்கைகளும் பற்றிப் படரும் இன்றைய காலத்திற்கு சிங்காரவேலரைப் போன்ற சிந்தனையாளர்களுக்காக இச்சமூகம் ஏங்கிக் கிடக்கிறது. 

ஊரான்

Wednesday, 5 November 2025

பஞ்சணைப் பிரச்சாரம் (Arm Chair Criticism)!

"சுயமரியாதை இயக்கம் சட்டசபைகளைக் கைப்பற்றாமல், அதாவது பஞ்சணையில் படுத்துக் கொண்டு மதங்களையும், பழக்கவழக்கங்களையும், மதஸ்தாபனங்களையும் கண்டித்துக் கொண்டிருந்தால் போதுமா?" (Arm Chair Criticism)

என்று கேள்வி எழுப்பி,

"உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?"

என்று வினவி,

"இந்துமதச் சபையார் சட்டசபையில் புகுந்து கொண்டு, சுயமரியாதைப் பிரச்சாரங்களைத் தடுக்க ஆரம்பித்தால் அவர்களை யார் தடுப்பது? நாஸ்திகக் கூட்டத்தைச் சட்டசபை மூலமாகத் தடை செய்தால் சபையில் யார் அதனை எதிர்த்துப் போர் புரிவது?”

என்று கேட்டதோடு,

“சமதர்மம் ஆகாய மூலமாவா_ வருமாமென்று கேட்கின்றோம்?”

“புரட்சிக்காரர்கள் சட்டசபைகளில் போகக் கூடாதென்ற மனப்பான்மையைக் குழந்தைகள் வியாதி என்றார் தோழர் லெனின்” 

என சுயமரியாதை இயக்கம் மேற்கொள்ளவேண்டிய பாதை குறித்து ‘ஈரோட்டுத் திட்டம் “புரட்சி”!’ (16) என்ற தலைப்பில் “புரட்சி” இதழில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை இயக்கம் அன்று சமதர்மக் கொள்கையையும் பேசியது.


புரட்சி
பக்கம் 5-17
24.12.1933

சான்று: சிங்காரவேலர் கட்டுரைகள், NCBH வெளியீடு,
***
ஆங்கிலேயரின் அடிமை இந்தியாவில், சனாதனிகள் மட்டுமே படித்துவிட்டு, சென்னை மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது, மேற்கண்ட வழிகாட்டுதல் எந்த அளவுக்கு சாலப் பொருந்துமோ, அதை இன்றைய ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பல் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு செய்துவரும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது "புரட்சி" இதழின் வழிகாட்டுதல் அப்படியே இன்றும் நூறு சதவீதம் பொருந்துவதாகத்தான் நான் கருதுகிறேன்?

அதிகாரம் கையில் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு சனாதனிகள் மேற்கொள்ளும் இன்றைய தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை  (SIR) ஒன்று போதாதா?

இதையெல்லாம் எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் சட்டசபைக்கு வெளியில் இருந்து கொண்டு கூக்குரலிடுவதைப் பார்க்கும் போது, “பஞ்சணையில் படுத்துக்கொண்டு” என்று அன்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

அதிமுக போன்ற அடிமைகளும், விஜய் போன்ற தற்குறிகளும் அதிகாரத்தில் இருப்பதாலோ அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதாலோ மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது?

ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை எதிர்ப்பவர்கள், போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் பலமற்றிருப்பது அல்லது ஒருசிலர் பிழைப்புவாதிகளாக இருப்பது என்ற இன்றைய சூழலில், அரசியலில் நேர்மையாக இருக்கும் கம்யூனிஸ்டுகள் அதிலும் குறிப்பாக மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகள் பலமற்று இருப்பது அல்லது தேர்தல்களைப் புறக்கணிப்பது என்பதைப் பார்க்கும் போது,

“உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?" என்று,

அன்று சுயமரியாதைக்காரர்களை நோக்கி கேட்டதைத்தான், மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்ட்களை நோக்கி இன்று கேட்கத் தோன்றுகிறது.

காலத்திற்கேற்ப செயல் திட்டம் வகுத்துச் செயல்படுபவர்களே தங்களைக் காத்துக் கொள்வதோடு, சனாதனிகளிடமிருந்து மக்களையும் காக்க முடியும்!

தேர்தலில் நேரடியாகப் பங்கேற்பது, ஒருசில மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகளுக்கு நெருடலாகத் தோன்றலாம். அத்தகையோர், ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்காகத் தேர்தல் களம் காணும் கட்சிகளை, கூட்டணிகளை (தற்போதைக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணி) நேரடியாக ஆதரிப்பதோடு, குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலுக்கு எதிரான
பஞ்சணைப் பிரச்சாரத்தையாவது (Arm Chair Criticism) 
மேற்கொள்ள வேண்டும்! தேர்தல் அரசியலில் நேரடியாகப் பங்கேற்காத இன்றைய சுயமரியாதைக்காரர்களுக்கும், தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இது பொருந்தும்.

ஊரான்

Thursday, 27 January 2022

நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தோடு..,!

நெற்றிப் பொட்டு துடிக்கிறது, கண்கள் குளமாகி  விட்டன. நா வறண்டு விட்டது. இதயம் துடிக்கிறது. என்ன வென்று சொல்ல? எழுத வார்த்தைகள் கிடைக்க வில்லை.

சொந்த வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு மூன்று மணி நேரம் கழித்து பிற்பகல் ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தேன். அகோரப் பசி. வலது கையோ சோற்றுப் பருக்கைகளை வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தது. இடது கையோ கைபேசியில் முகநூல் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தது.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் அவர்களின் முகநூல் பதிவு ஒன்று என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. வலது கையில் சோற்றுப் பருக்கைகள் சிதறின. இடது கை விரல்களோ அடுத்தப் பக்கத்திற்குச் செல்ல நடுங்கின.

“விவசாயிகள் விடுதலை முன்னணி, கடந்து வந்த கரடுமுரடான பாதையில், நெடியதொரு காலம் உழைக்கும் மக்களின் வர்க்க விடுதலைக்கு, தனது சுக போகங்களைத் துறந்து, குடும்பத்தை மறந்து இன்முகத்துடன் ஒப்படைத்த ஒப்பற்றத் தோழனே ஓய்வெடு!” இதுதான் அந்தப் பதிவு.

எனது நாற்பதாண்டு கால புரட்சிகர அரசியல் வாழ்க்கையில் எண்ணற்றோருடன் பயணித்திருக்கிறேன். எல்லோருமே மனதில் நீங்கா இடம் பெற்று விடுவதில்லை. ஒரு சிலரே இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கின்றனர்.

1980 களின் தொடக்க காலத்தில் புதியதொரு புரட்சிகர மாற்று அரசியலை என்னுள் ஆழமாக ஊன்றிய அரசியல் ஆசான் அவர். பிரியமான ‘ரகு’வாகத்தான் அவரை நான் அறிவேன். சுமார் பத்து ஆண்டுகாலம் அவருடன் நான் பயணித்திருப்பேன். அதன் பிறகு அரசியல் பணிக்காக அவர் வேறு பகுதிக்குச் சென்று விட்டாலும், அமைப்பின் மாநாடுகளில், பொது நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவரைக் காண எனது கண்கள் ஏங்கும்.’கண்டேன் சீதையை’ என்பதைப் போல அவரைக் கண்டு விட்டால் எனது நெஞ்சம் பூரித்து போகும்.

யார் சொன்னது புரட்சியாளர்கள் கல் நெஞ்சக்காரர்கள் என்று? ரகுவோடு உறவாடியவர்களுக்குத்தான் தெரியும் அவர்கள் ரோசாவின் ராசாக்கள் என்பது.

மக்கள் கலை இலக்கியக் கழக முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் மறைந்த போது அழுதேன்! அழுதேன்! கண்கள் கனலாய் ஆன போதும் அழுதேன்.

என் ஆசான் ஆருயிர்த் தோழன் ரகுவின் மறைவால் இன்று மீண்டும் அழுகிறேன், நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தை மட்டுமே சுமந்து கொண்டு!

துயரத்துடன்

தமிழ்மணி

குறிப்பு: எதிர்த்து நில் வலைப் பூவிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்