Thursday, 7 May 2026

‘ஆட்சியில் பங்கு... அதிகாரத்தில் பங்கு’: ஆசையா? அல்லது அரசியல் அறியாமையா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றத்தை (Hung Assembly) உருவாக்கியுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் ஒரு விசித்திரமான விவாதம் முன்னெடுக்கப்படுகிறது. “தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் பங்கேற்றால் அதிகாரம் கிடைக்கும்”, “முதலமைச்சர் பதவி கிடைத்தால் முழு அதிகாரமும் கைக்கு வரும்” என்ற பிம்பங்கள் தீவிரமாகக் கட்டமைக்கப்படுகின்றன.


அதிகாரத்தை வெறும் பதவியாக மட்டும் பார்க்கும் இந்த அரசியல் மாயையை உடைக்க வேண்டிய நேரம் இது.

தமிழக அரசியலில் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற முழக்கம் சமீபகாலமாக அதிகம் ஒலிக்கிறது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்திய ஜனநாயகத்தின் உண்மையான அதிகாரக் கட்டமைப்பை உற்று நோக்கினால், இந்த முழக்கம் பலவீனமான தர்க்கத்தின் அடிப்படையில் எழுப்பப்படுவது புரியும்.

1. அரசாங்கம் வேறு — அரசு வேறு

இந்திய நிர்வாக முறை இன்றும் ஆங்கிலேயரின் இரட்டை ஆட்சி (Diarchy) முறையின் எச்சமாகவே செயல்படுகிறது.

அரசாங்கம் (Government): தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் — முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள். இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறக்கூடியவர்கள். கொள்கை வகுக்கும் அதிகாரம் இவர்களிடம் உண்டு.

அரசு (The State): ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட நிரந்தர அதிகாரிகளைக் கொண்ட நிர்வாக இயந்திரம். கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் உண்மையான நிர்வாக அதிகாரம் இவர்களிடமே பெரும்பாலும் உள்ளது.

மந்திரி சபை, வரவு செலவு, காவல்துறை நிர்வாகம், பணி இட மாற்றங்கள், வேலை வாய்ப்புகள், சட்டம் இயற்றுதல் மற்றும் அரசு இயந்திரத்தைக் கண்காணித்தல் என கொள்கை ரீதியான அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அதாவது மந்திரி சபைக்கு இருந்தாலும், நிர்வாக அதிகாரத்தின் தொடர்ச்சியும் கட்டுப்பாடுகளும் நிரந்தர அதிகார அமைப்புகளிடமே அதிகமாகக் குவிந்துள்ளன.

அரசாங்கம் மாறலாம். ஆனால் அரசின் நிர்வாக இயந்திரம் தொடர்ந்து நிலைத்திருக்கும்.

அரசியல்வாதிகள் நிர்வாகத்தின் மீது அரசியல் அழுத்தம் செலுத்த முடியும்; ஆனால் நிர்வாக அதிகாரத்தின் சட்டபூர்வமான கட்டமைப்பை முழுமையாக தங்களிடம் கொண்டு வர முடியாது.

2. ஆட்சியில் பங்கு: ஏற்கனவே இருப்பதை மீண்டும் கேட்பதா?

“ஆட்சியில் பங்கு” என்பது அமைச்சரவையில் இடம் கேட்பதுதான். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், பட்டியல் சாதி பிரதிநிதிகளும் ஏற்கனவே சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளனர். பல கட்சிகளில் பட்டியல் சாதியினர் அமைச்சர்களாகவும் இருந்து வருகின்றனர்.

அமைச்சர் பதவி கிடைத்துவிட்டால் மட்டும் அதிகாரம் வந்துவிடாது. அமைச்சர்களும் கொள்கை முடிவுகளை எடுக்க மட்டுமே முடியும். அதை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகளையே சார்ந்திருக்க வேண்டும்.

3. அதிகாரத்தில் பங்கு: உண்மையான பாதை

“அதிகாரத்தில் பங்கு” என்ற கோரிக்கை ஒருபோதும் மக்கள் பிரதிநிதிகளுக்கு முழுமையாகக் கிடைக்காதது. ஏனெனில், நிர்வாக அதிகாரம் சட்டப்படி அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்கள் உண்மையில் அதிகாரத்தைப் பெற வேண்டுமென்றால், பெருமளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளில் இடம்பெற வேண்டும். ஒரு அரசியல்வாதி அதிகாரிகளை அழுத்தம் கொடுக்கலாம் அல்லது இடமாற்றம் செய்யலாம். ஆனால் அவர்களின் சட்டபூர்வ அதிகாரத்தை முழுமையாகத் தன்னிடம் எடுத்துக்கொள்ள முடியாது.

4. இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தாதது ஏன்?

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே கணிசமான அதிகாரங்கள் உள்ளன:
  • தவறான திட்டங்களை முடக்கும் உரிமை
  • புதிய திட்டங்களை முன்மொழியும் வாய்ப்பு
  • மக்களின் பிரச்சினைகளை சட்டரீதியாக எழுப்பி தீர்வு காணும் பொறுப்பு
இந்த அதிகாரங்களை எந்த அளவுக்கு பயன்படுத்தினோம் என்பதைப் பரிசீலிக்காமல் “கூடுதல் அதிகாரம்” கேட்பது உணர்ச்சி முழக்கமாக மட்டுமே முடியும்.

5. யாருக்காக இந்தப் பங்கு?

இந்தக் கோரிக்கை இறுதியில் யாருக்காக?
  • விசிக பிரதிநிதிகளுக்கு அமைச்சர் பதவியா?
  • அல்லது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டியல் சாதி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கா?
ஏற்கனவே அரசாங்கத்தில் பங்கு பெற்ற பல பிரதிநிதிகள் தங்கள் மக்களுக்காக என்ன உருப்படியான மாற்றத்தைப் பெற்றுத் தந்தார்கள் என்பதை மக்கள் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளனர்.

முடிவுரை

அரசியல் புரிதல் என்பது உணர்ச்சிவசப்பட்ட முழக்கங்களில் இல்லை; அதிகாரத்தின் உண்மையான கட்டமைப்பைப் புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ ஆவது ‘அரசாங்கத்தில்’ இடம் பெறுவதே தவிர, உண்மையான ‘அதிகாரத்தை’ப் பெறுவதல்ல. இருக்கும் அதிகாரத்தையே சரியாகப் பயன்படுத்த இயலாதவர்கள், அதிக அதிகாரம் கேட்பது ஒரு பரிதாபகரமான அரசியல் நகைச்சுவை.

ஒடுக்கப்பட்ட மக்கள் உண்மையில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் முழு பங்கு பெற வேண்டுமென்றால், தற்போதுள்ள இரட்டை ஆட்சி முறையை ஒழித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு சட்டம் இயற்றும் மற்றும் நடைமுறைப்படுத்தும் ஒற்றை ஆட்சி முறையை அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஜனநாயகக் கட்டுப்பாட்டுக்குள் நிர்வாக அமைப்புகளை கொண்டுவரும் மாற்றங்கள் தேவை.

ஊரான்

2 comments:

Anonymous said...

It is not the duty of VCK to bring these two entities in to one. It is responsibility of all parties.
Bigger parties choose stooges as SC/ST candidate These MLAs are neither committed nor learned. They are hand picked by Majaor parties just to have numbers.
VCK is a trained party with learned and committed leaders. They should take part in the Govt.

sekar said...

அரசு கட்டமைப்பின் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ளாமல், அதைக் களைவதற்குப் போராடாமல் எப்படி அதிகாரத்தைப் பெற முடியும்?