Thursday, 7 May 2026

‘காம்ரேடுகளின்’ காமெடி!

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!" என்று கவுண்டமணி பாணியில் சிரிப்பதா? இல்லை, "என்னா ஒரு புத்திசாலித்தனம்!" என்று வடிவேலு பாணியில் வியப்பதா என்று தெரியவில்லை.


அன்று ‘தற்குறி’... இன்று ‘காம்ரேட்’!

நேற்று மாலை வரை "அவருக்கு என்ன தெரியும்? வெறும் சினிமாக்காரர், தற்குறி" என்று டீக்கடை பெஞ்சில் விஜய்யைத் தீயாய் விமர்சித்த அதே 'தோழர்கள்' தான், இன்று இரவு 8 மணி நியூஸில் அவரை "புரட்சிப் போராளி, எங்களின் இனிய காம்ரேட் விஜய்" என்று உச்சி முகர்கிறார்கள். அடேங்கப்பா... 24 மணி நேரத்துக்குள்ள இப்படி ஒரு ஞானோதயம்! கொள்கைங்கிறது என்ன, காலையில் போட்டுக் கொள்ளும் உள்ளாடையா? நினைத்த நேரத்துக்கு மாத்துவதற்கு?

பாம்பும் - நுனிவாலும் - ராகுலும்!

இந்தியா முழுவதையும் பாஜக எனும் பாம்பு கிட்டத்தட்ட விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது. இப்போது தமிழ்நாட்டின் நுனிவால் மட்டும் வெளியே தெரிகிறது. அதை மட்டும் பிடித்து இழுத்துக் காப்பாற்றிவிடலாம் என்று ராகுல் காந்தி நினைக்கிறார் போல! ராகுல் அவர்களே, பாம்பின் வயிற்றைக் கிழித்தால்தான் உள்ளே இருப்பவன் உயிர் பிழைப்பான். அதை விட்டுவிட்டு, பாம்போடு ‘டீல்’ பேசிக் கொண்டு வாலோடு விளையாடினால் எப்படி?

ஒரே இரவில் சுக்குநூறான ‘ஜென்’ ராகுல்!

"நான் அன்பைப் பகிர வந்தவன்", "அறம் சார்ந்த அரசியலே என் வழி" என்று பாரத் ஜோடோ யாத்திரையில் பஞ்ச் பேசிப் பில்டப் கொடுத்த ராகுலின் பிம்பம், ஒரே இரவில் சல்லி சல்லியாய் நொறுங்கிப் போய்விட்டது. 22 வருஷக் கூட்டணியை (திமுக) ஒரே போனில் கட் பண்ணிட்டு, ‘பவர் ஷேரிங்’ எனும் அல்வாவுக்காகப் புது இடத்துக்குத் தாவிய காங்கிரஸின் வேகத்தைப் பார்த்தால், ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீரர்களே தோற்றுவிடுவார்கள்!

நீதி

"கொள்கையை அடகு வைப்பவன், ஒருநாள் தன் தன்மானத்தையும் அடகு வைப்பான்" - இது நேற்று சொன்னது.
இன்று: "அதிகாரத்துக்காகத் தன்மானத்தை அடகு வைத்தவன், நாளை அதைப் பணத்துக்காக ‘செகண்ட் ஹேண்ட்’ விற்பனைக்கும் கொண்டு வருவான்!"

ஊரான்

No comments: