Tuesday, 5 May 2026

நான் யாருக்காகவும் இவ்வளவு கண்ணீர் வடித்ததில்லை!

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளராக இருந்த களப்பணியாளர் தோழர் சீனிவாசன் மறைந்த நாள் (05.05.2012) இன்று. அவரது மறைவின் போது நான் எழுதிய இதய அஞ்சலி. 
***
சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் எழுதிய பதிவை இன்று வாசித்தபோதும் எனது கண்கள் கலங்கின. 

தோழர் சீனிவாசன்

தோழர்கள் மருதையன், காளியப்பன், கதிரவன், சீனிவாசன், தமிழ்மணி ஆகிய ஐந்து பேர் கொண்ட அன்றைய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு செயல்பட்ட காலமே மகஇக-வின் பொற்காலம். 

தோழர் சீனிவாசனோடு பழகிய காலங்கள் என்றும் பசுமையாய் நினைவில்.
தோழர் சீனிவாசன் மறைவின் போது நான் எழுதிய நினைவஞ்சலி.

"எனது 54 ஆண்டு வாழ்நாளில் நான் யாருக்காகவும் இவ்வளவு கண்ணீர் வடித்ததில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மரணப் படுக்கையில் கிடந்த போது தோழரை சந்திக்கச் சென்றேன். அன்று அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நான் ஒரு அரை மணிநேரம் பேசாமல் இருந்தேன். பேசும் ஆற்றல் அன்று எனக்கில்லை. கண்ணீரால் கைக்குட்டை நனைந்ததே தவிர என் கண்களை திறக்க முடியவில்லை. ”தமிழ்மணியா இது?” என அவர் கேட்ட பிறகும் எனக்கு பேச நா எழவில்லை. அவரது முகத்தைப் பார்க்க முயலும் முன்மே என் கண்கள் குளமாகிவிடும். பிறகு எப்படி அவரை நான் பார்ப்பது?

இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவரைப் பார்த்தேன். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு துயரத்தை மறைத்து ஒரு சில வார்த்தைகள் பேசினேன்.

அவர் மரணமடைந்த செய்தி கேட்டு வழியத் தொடங்கிய கண்ணீர் இன்னும் நிற்கவில்லை. அவர் மரணம் உறுதி செய்யப்பட்டதால் ஏற்கனவே குடும்பத்தினர் மற்றும் தோழர்களின் கண்ணீர் வற்றிப் போய்விட்டதாக இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தோழர் மருதையன் குறிப்பிட்டார். ஆனால் எனக்கு இன்னும் வற்றவில்லை. கண்ணீர் வழிந்தோடி கொண்டுதான் இருக்கிறது.

ஒரு முப்பது ஆண்டு காலம் உற்ற தோழனாய், நண்பனாய், உறவாய் என என்னுள் அமைப்பு வேலைகளில், எமது உடல் நலனில், எமது குடும்ப உறவில் இரண்டறக் கலந்தவர் தோழர் சீனிவாசன். பொதுக்கூட்டங்களில் பேசும் பொழுது ”ஏன்னு சொல்ச்சுனா” என்று அவர் பயன்படுத்திய சொற்றொடர் எப்படி என் நினைவிலிருந்து அகலாதோ அது போல என் கண்களிலிருந்து எவ்வளவுதான் கண்ணீர் வழிந்தாலும் அது ஒரு போதும் வற்றாது.

ஆனாலும் வெறும் கண்ணீர் மட்டும் அவர் விட்டுச் சென்ற புரட்சிப்பணியை நிறைவேற்ற உதவாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். அவரைப் போல வீருகொண்டு எழுவதே அவருக்கு நான் செலுத்து நினைவஞ்சலியாக இருக்க முடியும்.

தோழர் சீனிவாசனுக்கு வீர வணக்கம்!"

தமிழ்மணி

1 comment:

Anonymous said...

நண்பர் சீனிவாசனுக்கு நினைவஞ்சலி