Saturday, 27 June 2026

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியா? — பிஞ்சுகளின் நெஞ்சில் நுழையும் சனாதனம்!

இந்து மத வாழ்வியல் முறை என்பது, இங்குள்ள பலரின் அன்றாட சமூகப் பழக்கவழக்கங்களுக்குள்ளேயே சாதிப் பார்வையை ஆழமாகப் பதித்திருக்கிறது. கையில் கட்டும் கயிறு, பேசும் மொழி, வாழும் தெரு, உறவாடும் வட்டம் என பலவற்றின் வழியாக சாதி அடையாளங்கள் தேடப்பட்டு, மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பராமரிக்கப்படுகின்றன.


இத்தகைய சமூகச் சூழலில், ஜூன் 26, 2026 அன்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்: "ஆண்டுதோறும் மாணவர்கள் சாதிச் சான்றிதழ் வாங்குவதில் உள்ள சிரமங்களைக் குறைக்க, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும்." முதல்வர் விஜயின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நிர்வாக வசதிக்காக என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த வாதத்தை ஒரு நிமிடம் நேரடியாக எதிர்கொள்வோம்.

சாதிச் சான்றிதழ் வாங்குவதில் சிரமம் என்பது நிர்வாகச் சிக்கல். அதற்குத் தீர்வு — சான்றிதழ் வழங்கும் முறையை எளிமையாக்குவது, digitize செய்வது. ஆனால் அந்தச் சான்றிதழை அட்டையில் பதித்து மாணவர்களின் அன்றாட கல்வி வாழ்க்கைக்குள் சாதி அடையாளத்தை நிரந்தரமாகக் கொண்டு வருவது — இது நிர்வாக வசதிக்கான தீர்வல்ல; சாதி அடையாளத்தை நிறுவனமயமாக்கும் அரசியல் தேர்வு.

திரைக்கவர்ச்சி, தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு அல்லது அரசியல் அலைகள் காரணமாக மக்கள் சில நேரங்களில் சாதி எல்லைகளைக் கடந்து வாக்களிக்கலாம். அது புதிய நிகழ்வு அல்ல. ஆனால் தேர்தல் அரசியலில் சாதி தற்காலிகமாக பின்னுக்குத் தள்ளப்படுவது, சமூக வாழ்வில் சாதி ஒழிந்துவிட்டது என்று பொருளல்ல. இன்றும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு முதல் அமைச்சரவை அமைப்பு வரை "யார் எந்தச் சாதி?" என்ற கணக்கீடுகள் பேசப்படுகின்றன. இதுவே நமது சமூகத்தின் எதார்த்தம்.

இந்தச் சூழலில், பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியைக் குறிப்பிடுவது என்ன செய்யும் என்பது தெளிவானது.

அடையாள அட்டையைப் பார்த்த மாத்திரத்திலேயே, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் முதலில் பாகுபாடு, இழிவு, அவமதிப்பு அல்லது உளவியல் அழுத்தங்களை எதிர்கொள்வர். தீண்டாமை என்பது வெறும் உடல் ரீதியான பிரிவினை அல்ல; அது பார்வையிலும், மொழியிலும், அணுகுமுறையிலும், மனநிலையிலும் வெளிப்படுகிறது. 

அந்த அபாயத்தை பள்ளிக்கூடங்களுக்குள்ளேயே நடிகர் விஜயின் அரசு கொண்டு வருகிறது.

இந்தப் பிரச்சினையை ஒரு கட்சி அரசியலின் குறுகிய எல்லைக்குள் மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. சனாதன சமூக ஒழுங்கு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொள்கை மட்டுமல்ல; அது இந்திய சமூகத்தின் பல அடுக்குகளுக்குள்ளும் வரலாற்று ரீதியாக ஊடுருவியுள்ள ஒரு கருத்தியல் கட்டமைப்பு. எனவே அதை வலுப்படுத்தும் போக்குகள் எந்தக் கட்சியிலும், எந்த நிர்வாக அமைப்பிலும் தோன்றக்கூடும்.

ஆனால் அதே நேரத்தில் இதை மறுக்க முடியாது: சாதி அடையாளங்களை சமூக வாழ்வில் தொடர்ந்து பராமரிப்பதும் நிறுவனமயமாக்குவதும் சனாதன சமூக ஒழுங்கின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியைக் குறிப்பிடுவது சனாதன சமூகக் கூறுகளை மறுஉயிர்ப்பிக்கும் போக்காகும் — நோக்கம் எதுவாக இருந்தாலும் விளைவு இதுதான்.

இன்று சனாதனத்தைப் புதுப்பிக்க சில மதவாத சக்திகள் இந்திய அரசியலில் செயல்பட்டு வருகின்றன. சாதி அடையாளத்தை வலுப்படுத்தும் எந்த நடவடிக்கையும் — நோக்கம் எதுவாக இருந்தாலும் — அத்தகைய அரசியலின் சமூக அடித்தளத்தை பலப்படுத்துகிறது.

மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியைக் குறிப்பிடும் இந்த நடைமுறை உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். கல்வி நிலையங்கள் மாணவர்களை சாதி அடையாளங்களின் அடிப்படையில் வகைப்படுத்தும் இடங்களாக அல்ல; சமத்துவம், மனித மரியாதை மற்றும் சமூக நீதி கற்றுக்கொடுக்கும் இடங்களாக இருக்க வேண்டும்.

சாதியை ஒழிக்க வேண்டுமெனில், அதை நிர்வாக ஆவணங்களின் வழியாக அன்றாட வாழ்வில் மேலும் ஆழமாகப் பதிப்பதல்ல தீர்வு. மாறாக, மாணவர்கள் ஒருவரை ஒருவர் மனிதர்களாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளும் சமூகச் சூழலை உருவாக்குவதுதான் தீர்வு.

சமூக நீதிக்கான தமிழ்நாட்டின் நீண்ட வரலாறு, இந்தக் கேள்வியை அலட்சியமாகக் கடந்து செல்ல அனுமதிக்காது.

ஊரான் / பொன். சேகர்

No comments: