Saturday, 27 June 2026

கிராம்சியின் பார்வையில் இந்தியப் புரட்சியை எப்படிப் புரிந்துகொள்வது?

இந்திய மார்க்சிய இயக்கங்களுக்குள் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு கேள்வி உண்டு:
இந்தியாவில் முதலில் வர்க்கப் புரட்சியா? அல்லது முதலில் சாதி ஒழிப்பா?

இந்தக் கேள்விக்கு எளிமையான பதில் எதுவும் இல்லை. ஏனெனில் இந்திய சமூகம் ஐரோப்பிய முதலாளித்துவ சமூகங்களைப் போல வெறும் வர்க்க அடிப்படையில் மட்டும் கட்டமைக்கப்படவில்லை. இங்கு வர்க்கமும் சாதியும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த வரலாற்று எதார்த்தங்களாக உள்ளன.

இந்தச் சிக்கலைப் புரிந்துகொள்வதற்கு இத்தாலிய மார்க்சிய சிந்தனையாளர் அன்டோனியோ கிராம்சியின் (1892-1937) கருத்துக்கள் பயனுள்ளதாக இருக்கின்றன.


அன்டோனியோ கிராம்சி (1892-1937)

பொருளாதார அடித்தளமும் பண்பாட்டு மேலாதிக்கமும்

மார்க்சியத்தின் அடிப்படை விளக்கப்படி, சமூகத்தின் பொருளாதார அடித்தளமே அதன் அரசியல், மதம், சட்டம், பண்பாடு போன்ற மேல்கட்டுமானங்களை நிர்ணயிக்கிறது.

ஆனால் கிராம்சி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார்:
பொருளாதாரச் சுரண்டல் இருந்தும், ஏன் மக்கள் தானாகவே புரட்சியில் ஈடுபடவில்லை?

இதற்கான அவரது பதில், "பண்பாட்டு மேலாதிக்கம்" (Cultural Hegemony) என்ற கருத்தாகும்.

ஆளும் வர்க்கம் வெறும் அரசின் வன்முறை கருவிகள் மூலமாக மட்டுமல்ல, மக்களின் மனங்களிலும் தனது ஆதிக்கத்தை நிறுவுகிறது. பள்ளிகள், மத அமைப்புகள், குடும்பம், ஊடகங்கள், கலை, இலக்கியம் போன்றவை இந்த ஆதிக்கத்தை மறுஉற்பத்தி செய்யும் கருவிகளாக செயல்படுகின்றன.

எனவே அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் மட்டுமல்ல; மக்களின் சிந்தனையையும் மாற்றும் கருத்தியல் மற்றும் பண்பாட்டு போராட்டமும் அவசியம் என்று கிராம்சி வலியுறுத்தினார்.

இங்கே கிராம்சியின் இன்னொரு கருத்தும் முக்கியமானது — "நிலை போர்" (War of Position). 

அதிகாரத்தை கைப்பற்றும் இறுதித் தாக்குதலுக்கு முன் சமூகத்தின் கல்வி, பண்பாடு, நிறுவனங்களுக்குள் நீண்டகால கருத்தியல் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதே இந்தக் கருத்தின் சாரம். இந்தத் தயாரிப்பு இல்லாமல் கைப்பற்றப்படும் அதிகாரம் — வென்றாலும் — மாற்றத்தை நிலைநிறுத்தாது என்பதே அவரது எச்சரிக்கை. 

இந்தியாவைப் போன்ற சிக்கலான சமூகத்தில் இது மிகவும் பொருத்தமானது.

இந்தியச் சூழலின் தனித்துவம்

கிராம்சி நேரடியாக இந்திய சாதி அமைப்பைப் பற்றி எழுதவில்லை. ஆனால் அவரது கோட்பாட்டைப் பயன்படுத்தி இந்தியச் சமூகத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியாவில் சாதி என்பது வெறும் மேல்கட்டுமானப் பிரச்சினை அல்ல. அது பொருளாதார வாழ்க்கையுடனும் ஆழமாகப் பிணைந்துள்ளது.

யார் நிலம் வைத்திருக்கிறார்கள்? யார் நிலமற்ற கூலிகளாக இருக்கிறார்கள்? யார் கல்வி பெறுகிறார்கள்? யார் அதிகார அமைப்புகளுக்குள் நுழைகிறார்கள்?
என்ற கேள்விகளுக்கு பல இடங்களில் சாதி சார்ந்த பதில்களே கிடைக்கின்றன.

இதை அம்பேத்கர் வேறு கோணத்தில் கண்டார். சாதி ஒழிப்பு என்ற கட்டுரையில் (Annihilation of Caste) அவர் சுட்டிக்காட்டியது: சாதியை நிலைநிறுத்துவது வெறும் பொருளாதார நலன் மட்டுமல்ல; மதம் மற்றும் சாஸ்திரங்கள் என்ற கருத்தியல் சக்திகளும் சாதியை உள்ளிருந்து காக்கின்றன. 

இந்தப் பார்வை கிராம்சியின் பண்பாட்டு மேலாதிக்கம் (cultural hegemony)  கருத்துடன் ஆழமான ஒத்திசைவு கொண்டது — இரு சிந்தனையாளர்களும் ஒரே முடிவை வெவ்வேறு வழியில் சொல்கிறார்கள்: பொருளாதார மாற்றம் மட்டுமே போதாது; கருத்தியல் மாற்றமும் இணைந்து நடக்க வேண்டும்.

எனவே இந்தியாவில் சாதி என்பது ஒரே நேரத்தில் பொருளாதார உறவும், சமூக உறவும், பண்பாட்டு உறவும் ஆகும்.

"முதலில் சாதி ஒழிப்பு" என்ற வாதம்

அம்பேத்கர் மற்றும் பெரியார் சிந்தனையாளர்கள் கூறுவது: சாதி அடையாளங்கள் உடைக்கப்படாமல் வர்க்க ஒற்றுமை உருவாகாது என்பதாகும்.

இந்த வாதத்தில் ஒரு உண்மை உள்ளது.

ஒரு தொழிலாளி அல்லது விவசாயி, பொருளாதார ரீதியாகச் சுரண்டப்படுவதோடு மட்டுமல்லாமல், சாதி உணர்வின் மூலமாகவும் பிற உழைக்கும் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கலாம். இந்த அர்த்தத்தில், சாதி எதிர்ப்பு போராட்டம் புரட்சிகர அரசியலின் அவசியமான ஒரு கூறாகிறது.

ஆனால் இதிலிருந்து, "முதலில் சாதி ஒழிப்பை முழுமையாக வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன் பிறகுதான் வர்க்கப் போராட்டம்" அல்லது “முதலில் வர்க்கப் போராட்டத்தை முழுமையாக வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன் பிறகுதான் சாதி ஒழிப்புப் போராட்டம்" என்ற முடிவுக்கு வர முடியாது.

ஏனெனில் சாதியையும் தொடர்ந்து மறுஉற்பத்தி செய்வது பொருளாதார மற்றும் சமூக ஆதிக்க அமைப்புகளே ஆகும். சாதியின் கருத்தியல் வேர்களை அறுக்காமல் வர்க்கப் போராட்டம் முழுமையடையாது; அதே நேரத்தில், அந்த வேர்களுக்கு உரமூட்டும் பொருளாதார அமைப்பை தகர்க்காமல் சாதி ஒழிப்பும் முழுமையடையாது.

"முதலில் வர்க்கப் புரட்சி" என்ற வாதத்தின் வரம்புகள்

மறுபுறம் சிலர், "அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினால் சாதி தானாக ஒழிந்துவிடும்" என்று கருதுகிறார்கள்.

இந்த அணுகுமுறையும் இந்திய யதார்த்தத்தை முழுமையாக விளக்க முடியாது.

ஏனெனில் சாதி என்பது வெறும் பொருளாதார உறவு மட்டுமல்ல; அது மனிதர்களின் அன்றாட வாழ்வியல், மத நம்பிக்கைகள், திருமண உறவுகள், சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் மனநிலைகளுக்குள்ளும் ஊடுருவியிருக்கிறது.

இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு நடந்தது, கிராம்சி கூறும் "புரட்சி நடந்தது போல் தோன்றும், ஆனால் உண்மையில் நடக்காது" (passive revolution) என்பதை நினைவூட்டுகிறது — மேல்தட்டு தலைமையில் சட்டங்கள் மாற்றப்பட்டன, நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன; ஆனால் சாதியப் பண்பாட்டு மேலாதிக்கம் பெரிதாக எதிர்கொள்ளப்படாமல் தொடர்ந்தது. அதாவது அரசியல் அதிகாரம் மட்டுமே போதாது என்பதை இந்திய வரலாறே நிரூபித்திருக்கிறது.

கிராம்சிய பார்வையில் இந்தியப் புரட்சி

கிராம்சியின் உண்மையான பங்களிப்பு இங்கேயே உள்ளது.
அவர், "முதலில் பண்பாட்டு புரட்சி; பிறகு அரசியல் புரட்சி" என்று கூறவில்லை. அதேபோல், "அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகுதான் பண்பாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்றும் கூறவில்லை.

அவரது பார்வையில் அரசியல் போராட்டமும் பண்பாட்டு போராட்டமும் ஒரே வரலாற்றுப் போராட்டத்தின் இரு பரிமாணங்களாகும்.

இந்தியச் சூழலில் இதன் பொருள்: வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராட வேண்டும்; சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டும்; பொருளாதார சமத்துவத்திற்காகப் போராட வேண்டும்; பண்பாட்டு மேலாதிக்கத்தையும் உடைக்க வேண்டும். இவை ஒன்றுக்கொன்று மாற்றாக அல்ல; ஒன்றுக்கொன்று துணையாக இருக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தின் வழிமுறையை சொல்வதும் அவசியம். சாதி அடிப்படையில் சாதிவாரி  இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது சாதிகளுக்கிடையிலான போட்டியைக் குறைக்கும்; அது சாதிக்குள்ளேயே வர்க்க முரண்பாட்டை தெளிவாக்கும்; பின்னர் பொது வீட்டுவசதி போன்ற கட்டமைப்பு மாற்றங்கள் வாழிடப் பிரிவினையை உடைக்கும்; அது திருமண எல்லைகளை அரிக்கும். இந்த வழிமுறையே சாதியையும் வர்க்க அமைப்பையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் யுக்தியாகும்.

பண்பாட்டு படையின் அவசியம்

இந்தக் காரணத்தால்தான் புரட்சிக்காக வேலை செய்கிற ஒரு அரசியல் இயக்கம் வெறும் அரசியல் அமைப்பாக மட்டும் இருக்க முடியாது.
அதனுடன் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், பண்பாட்டு செயற்பாட்டாளர்கள், சமூக விமர்சகர்கள் என ஒரு பரந்த பண்பாட்டு படையும் தேவைப்படுகிறது. கிராம்சி இவர்களை "இயல்பான அறிவுஜீவிகள்" (Organic Intellectuals) என்று அழைத்தார் — உழைக்கும் மக்களிலிருந்தே உருவாகி, அவர்களின் விடுதலைக்காக கருத்தியல் ஆயுதங்களை உருவாக்குவோர்.
ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களை மக்கள் மனங்களில் இருந்து அகற்றி, புதிய சமத்துவச் சிந்தனையை உருவாக்கும் பணியை இந்தப் பண்பாட்டு படை மேற்கொள்ள வேண்டும்.

முடிவுரை

இந்தியாவில் சாதி ஒழிப்பும் வர்க்க விடுதலையும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.
சாதியை எதிர்க்காமல் வர்க்க ஒற்றுமை உருவாகாது. வர்க்கச் சுரண்டலை எதிர்க்காமல் சாதி ஒழிப்பும் முழுமையடையாது.

எனவே இந்தியப் புரட்சியின் பாதை என்பது “முதலில் சாதியா, முதலில் வர்க்கமா?” என்ற தேர்வின் பாதை அல்ல. மாறாக, சாதி ஒழிப்பையும் வர்க்க விடுதலையையும், அரசியல் போராட்டத்தையும் பண்பாட்டு போராட்டத்தையும், பொருளாதார மாற்றத்தையும் சமூக மாற்றத்தையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் பாதையாகவே அது இருக்க வேண்டும்.

இதுவே கிராம்சியின் சிந்தனையிலிருந்து இந்திய யதார்த்தத்திற்காக நாம் பெறக்கூடிய முக்கியமான பாடமாகும்.

ஊரான்

No comments: