ஆனால், இப்போராட்டத்திற்கு இணையாகவே, இத்தாலிய சிந்தனையாளர் கிராம்சி குறிப்பிடும் "பண்பாட்டு மேலாதிக்கம்" (Cultural Hegemony) என்ற தத்துவத்தின் அடிப்படையில், பார்ப்பனிய நலன்களை முன்னிறுத்தும் ஊடகங்களும் சனாதன சக்திகளும் மக்களிடையே ஒரு பேராபத்தான நச்சு விதையை ஆழமாக விதைத்துள்ளன. அதுதான்: 'திராவிட-திமுக வெறுப்பு எனும் பொதுப் புத்தி' (Common Sense).
இந்த நச்சுப் பொதுப் புத்தியை ராஜாஜி காலம் தொடங்கி இன்றைய நடிகர் விஜய் போன்றோர் திமுக எதிர்ப்பை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்தும் காலம் வரை மிகத் திட்டமிட்டுத் தலைமுறை தலைமுறையாக மக்களின் மனங்களுக்குள் பதியச் செய்துள்ளனர்.
சனாதனமும் திமுக வெறுப்பும்: ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்
இந்திய நிலப்பரப்பில் சனாதனத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், மனிதத்தன்மையற்ற தீண்டாமையையும் கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக எப்படி ஒரு 'இயல்பான சமூக ஒழுங்கு' போல மக்கள் மனங்களில் பொதுப் புத்தியாகப் பதிய வைத்தார்களோ, அதே உத்தியைத்தான் இன்றைய 'திமுக வெறுப்பு' அரசியலிலும் சனாதன சக்திகள் கையாண்டு வருகின்றன.
சொத்துடைமைச் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கங்களாக இருக்கும் ஊழலோ, வாரிசு அரசியலோ இங்குள்ள எந்தவொரு தேர்தல் அரசியல் கட்சிக்கும் விதிவிலக்கல்ல. வலதுசாரிகள் முதல் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என அனைத்துத் தேர்தல் கட்சிகளுக்குள்ளும் இத்தகைய போக்குகள் மலிந்து கிடக்கின்றன என்பதுதான் எதார்த்தம். அப்படித் தெரிந்திருந்தும், சனாதனக் கட்டமைப்புகளுக்கு சேவை செய்யும் ஊடகங்கள் "திமுக மட்டுமே ஊழல் கட்சி", "திமுக ஒரு தீய சக்தி" என்ற ஒற்றைப்படைப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் பின்னணி சமூகநீதி அரசியலை பலவீனப்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட யுக்திகளே!
யாரெல்லாம் சனாதனக் கருத்தியலுக்குத் தத்துவார்த்த ரீதியாகவும், அதிகாரப் பகிர்வு ரீதியாகவும் பெரும் சவாலாக விளங்குகிறார்களோ, அவர்களுக்கு எதிராக இத்தகைய நச்சுப் பொதுப் புத்தி கட்டவிழ்த்து விடப்படுகிறது. கவலைக்குரிய ஒன்று என்னவென்றால், அண்மைய ஊடக விவாதங்களைப் பார்க்கும் போது, சாதாரண மார்க்சியம் பேசுவோர் முதல் அதிதீவிர மார்க்சியம் பேசுவோர் வரை பலரும்கூட — திமுகவின் வர்க்க நலன்சார் கொள்கைகளை விமர்சிப்பதாகக் கூறிக்கொண்டாலும் — சனாதன சக்திகள் கட்டமைத்துள்ள "பொதுப் புத்தி" நோய்க்கு ஆட்பட்டு, சுயசிந்தனையை இழந்து நிற்பதுதான்.
வெறுப்பு அரசியல்: சாக்கடையாகும் களம்
கருத்தியல் விமர்சனங்களை விடுத்து, 'வெறுப்பை' மட்டுமே முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் இந்தக் கொடிய அரசியல் நோய், ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் புழுக்கள் நெளியும் ஒரு சாக்கடையாக மாற்றிவிட்டது. இத்தகைய தரம் தாழ்ந்த வெறுப்பு அரசியல் களம் தொடருமேயானால், உழைக்கும் மக்களுக்கான ஆரோக்கியமான மக்கள் நல அரசியல் என்பது இங்கு எட்டாக்கனியாகவே போய்விடும்.
மார்க்சிய-லெனினியப் பார்வையுடையோர், இந்தச் சூழலை இரண்டு மிக முக்கியமான வழிமுறைகளின் வழியே எதிர்கொள்ள வேண்டும்:
-
குறிப்பான அம்பலப்படுத்தல் (Specific Exposure): திமுகவாக இருந்தாலும் சரி, வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, அந்தக் கட்சிகளில் உள்ள தனிநபர்கள் செய்கின்ற ஊழலை ஆதாரங்களோடு குறிப்பாக எதிர்த்து அம்பலப்படுத்துவதும் போராடுவதும் அவசியமானது. அப்படிச் செய்யும் பொழுதுதான், தவறு செய்த குறிப்பான நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும், அவர்களை மக்கள் மன்றத்தில் தனிமைப்படுத்துவதற்கும் வழிவகுக்கும். அதை விடுத்து, ஒட்டுமொத்தமாக "ஒரு கட்சியின் ஊழல்" என்று பொதுப்படையாகப் பேசும்பொழுது, அது உண்மையில் ஊழல் செய்கின்ற குறிப்பிட்ட தனிநபர்களைக் காப்பாற்றுவதற்கும், அவர்களைக் கூட்டத்திற்குள் ஒளித்து வைப்பதற்கும் மட்டுமே உதவும்.
-
கொள்கை ரீதியான விமர்சனம் (Ideological Criticism): அதேபோல, ஒரு கட்சியின் அரசியல் கொள்கைகளும், அவர்களின் நடைமுறைப் பொருளாதாரத் திட்டங்களும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கும் பொழுது, அவற்றின் மீதான தத்துவார்த்த விமர்சனங்களையும், மக்கள் திரள் போராட்டங்களையும் முன்னெடுப்பதுதான் ஆரோக்கியமான மாற்று அரசியலுக்கு வழிவகுக்கும்.
முடிவுரை
மேற்கண்ட இரு மார்க்சிய-பொருள்முதல்வாத வழிமுறைகளைக் கையாளாமல், சனாதன சக்திகள் கட்டமைத்த "பொதுப் புத்தியின்" தாளத்திற்கு ஆடிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் "ஊழல் கட்சி, தீய சக்தி" என்று முத்திரை குத்துவது, இங்கு சனாதனத்திற்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கும் மட்டும்தான் மறைமுகமாகத் துணை செய்யுமே ஒழிய, ஒருபோதும் மக்களை உண்மையான முற்போக்கான 'மாற்று அரசியலை' நோக்கிச் சிந்திக்க வைக்காது.
பார்ப்பனியப் பண்பாட்டு மேலாதிக்கத்தை உடைக்க வேண்டிய நாம், இந்த நச்சுப் பொதுப் புத்தியை உணர்ந்து, உண்மையான தத்துவார்த்தக் களத்தில் மக்களை தயார்படுத்த முயலுவோம்!
ஊரான் / பொன். சேகர்

1 comment:
நல்லதொரு பரிசீலனையையும் ,சிறப்பான வழிகாட்டுதலாக இக் கட்டுரையை பார்க்கிறேன்.
இங்கு அனைத்தையும் விமர்சன ரீதியாக பார்ப்பது மட்டுமே மார்க்சிய அரசியலாக நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சரியான அரசியல் எது என்றபுரிதலற்ற நபர்கள் தங்களை ஒழுங்கு செய்யாத வரைக்கும் ,வெளியிலிருந்து எவ்வளவுதான் வழிகாட்டினாலும் அது ந விழலுக்கிரைத்த நீராகவே இருக்க முடியும் என கருதுகிறேன்.
Post a Comment