Friday, 25 September 2026

கீழடியும் ‘கில்லி’ அரசியலும்!

கீழடியும் ‘கில்லி’ அரசியலும்!

கஜேந்திர சிங் ஷெகாவத்தைக் கண்டித்து திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கஜேந்திர சிங் ஷெகாவத்

இன்றைய அரசியல், சமூகச் சூழலில் மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கும், தமிழரின் வரலாற்று அடையாளங்களை மறைக்க நடக்கும் சதிகளுக்கும் எதிராக உரக்கக் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கிறோம். மின்கட்டண உயர்வு, அரிசி மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என விலைவாசி உயர்வால் பாமர மக்களின் வயிறு எரிகிறது. மற்றொருபுறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பாலியல் குற்றங்களும் கொலைகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இத்தகைய சூழலில், இடைத்தேர்தல் அரசியலும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நகர்வுகளும் நடக்கின்றன.

கீழடி அறிக்கையும் செகாவத்தின் கூச்சலும்

ஒன்றிய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான கஜேந்திர சிங் ஷெகாவத், "கீழடி அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை" என்றும், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவும் முன்னாள் திமுக அரசும் இதில் அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டுகிறார். மூன்று ஆண்டுகள் கடந்தும் கீழடி பற்றிய முழுமையான அறிக்கை வெளிவராதவாறு முடக்கப்படுகிறது.

யார் இந்த ஷெகாவத்? 1967-இல் ஜெய்சால்மரில் பிறந்து, ஜோத்பூர் எம்பியாகி, ABVP, RSS மற்றும் பாஜக பின்னணியில் வளர்ந்த இவர், சிந்துவெளி நாகரிகப் பகுதியைச் சேர்ந்தவர். ஆனால், தனது சொந்த மண்ணின் வரலாற்று உண்மைகளை விடுத்து, வேத நாகரிகத்திற்கு ஒத்தூதும் வேலையைச் செய்கிறார்.

சிந்துவெளியும் கீழடியும்: தமிழரின் தொடர்ச்சி

சிந்துவெளி நாகரிகம் கி.மு 3000 காலத்தைச் சேர்ந்தது; சிவகளை கி.மு 3400-ஐச் சேர்ந்தது. சிந்துவெளியில் இருந்து கீழடி வரைத் தொடர்வது ஒரே நாகரிகம்தான் என்பதை நோக்கி ஆய்வுகள் நகர்கின்றன!

சிந்துவெளி நகர அமைப்பும், சுட்ட செங்கற்களால் ஆன வடிகால் வசதியும் சாதாரணமானவை அல்ல. 150 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே லைன் போடுவதற்குப் பிரிட்டிஷார் அந்தச் செங்கற்களைப் பயன்படுத்திய அளவுக்கு அவை உயர்தரமானவை.

சிந்துவெளி அகழாய்வில் ஆடு, மாடு, மான், எருமை போன்ற விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. ஆனால், ஆரியர்களின் அடையாளமான ஆரியர் காலத்திய குதிரையின் தடயம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இது ஒன்று போதாதா, சிந்துவெளி என்பது ஆரிய நாகரிகம் அல்ல என்பதை நிரூபிக்க? ஆரியர்கள் வருவதற்கு முன்பே செழித்தோங்கிய நாகரிகம் அது. காகர் ஹக்ரா நதியை 'சரஸ்வதி' என்று கூறி, தனது சொந்த மண்ணின் வரலாற்றைச் சனாதனிகளுக்குத் தாரை வார்க்கும் ஷெகாவத் போன்றவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட நகர்ப்புற வாழ்க்கையையும் வடிகால் வசதியையும் கொண்டு வாழ்ந்த தமிழன், இன்று ஆவணங்களில் மட்டுமே ஓடும் (ஊழல்) சாக்கடை சூழலிலும், குடிசைகளிலும், மனைப் பட்டாவுக்காகவும், தொகுப்பு வீடுகளுக்காகவும் போராடும் அவலத்திலும் தள்ளப்பட்டுள்ளான்.

மணிகளும் பானையோடுகளும் அல்ல... அவை எங்களின் தோட்டாக்கள்!

கீழடி அகழாய்வில் கிடைத்த பல்லாயிரக்கணக்கான பொருட்கள், பானையோடுகள், மணிகள் போன்றவை வெறும் பழங்காலப் பொருட்கள் அல்ல; அவை தமிழினத்தின் வரலாற்றுத் தோட்டாக்கள்!

அங்கு கிடைத்த இரும்பாலான வாள், ஈட்டி, அம்பு ஆகியவற்றின் துருப்பிடித்த எச்சங்களைக் கண்டே சனாதன சக்திகள் அஞ்சுகின்றன. முதுமக்கள் தாழிகள் இன்னும் உடையாமல் தமிழரின் தொன்மையைச் சாற்றுகின்றன. அன்றைய நம் மூதாதையர்கள் வாளோடு வாழ்ந்தார்கள்; ஆனால், இன்று பூணூலிஸ்டுகள் அதை ஏற்க மறுக்கிறார்கள். நமது வரலாற்றை மூடி மறைக்க நினைத்தால், அந்த உறை கிணற்றிற்குள் வைத்து உங்களை மூடிவிடுவோம்! இனி 2000 ஆண்டுகள் கழித்து “உறை கிணறுகளில் பூணூல்கள்” என எதிர்கால சந்ததி வரலாறு படிக்கும் காலம் வரும். ஜாக்கிரதை!

இயற்கையை வழிபட்ட தமிழனின் அடையாளங்களைச் சனாதனமயமாக்கும் சூழ்ச்சியும் நடக்கிறது. வீதியோர வேப்பமரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி உண்டியல் மாட்டுவதும், குன்றுகளைக் கண்டால் அங்கே ஒரு வேளைக்குத்தி சாமியாக்குவதும், பழனியை 'ஆறுபடை வீடு' என மாற்றுவதும் இதற்கே. மும்பை ஐஐடி பூணூல் கயிறுகளைக் கொண்டு தமிழர் நாகரிகத்தைச் சனாதனப் பக்கம் இழுக்க முயல்வதும் அக்கம் பக்கமாய் நடக்கிறது. சிவபெருமான், பார்வதி, விநாயகன், தேவயானி, முருகன் என்று குழுப் படம் எடுப்பவர்கள், அதில் வள்ளிக்கு இடம் கொடுப்பதில்லை.

ஆலைக் கட்டமைப்புகள் 

அன்று கீழடியில் நெசவாலைகள் BHEL நிறுவனம் போல பிரமாண்டமாக இயங்கியிருக்கின்றன. ஆனால் இன்று, 50 ஆண்டுகளாக இயங்கும் பொதுத்துறை ஆலைகளை மூடுகிறாய், தொழிற் சட்டங்களைத் திருத்துகிறாய்! முடித்தால் 2600 ஆண்டுகள் பழமையான, புதைந்து போனாலும் இன்று கம்பீரமாய் காட்சி அளிக்கும் கீழடி நெசவு ஆலைகளின் அடையாளங்களை மூடிப் பார்!

அறிஞர்கள் அமர்நாத் ராமகிருஷ்ணா, தங்கம் தென்னரசு ஆகியோர் இத்தகைய வரலாற்றுத் திரிபுகளுக்கு எதிராகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

போலி அரசியலும் மக்கள் களமும்

ஒருபுறம் தமிழனின் அடையாளம் அழிக்கப்படும் சூழலில், தவெக போன்ற புதிய அரசியல் வரவுகள் இந்த அரசியல் கலவரங்களுக்கு இடையில் வாயைத் திறக்காமல் 'மிக்சர் சாப்பிடும்' அதிசயப் பிறவியாக உலவுகின்றன. காவிரி நீர் திறந்தால் தானாக கடைமடைக்கு வரப்போகிறது;  அதற்கு 10 கோடியும், லண்டனில் கார் ரேஸ் பார்க்க ஒரு நாளைக்கு 10 கோடியும் செலவழிக்கும் கும்மாள ஆட்சி நடக்கிறது.

அன்று கல்யாணத்திற்குப் போகச் சொன்னால் எவர்சில்வர் குண்டானை அடகு வைத்து கபடி விளையாடப் போன ‘கில்லி’ இல்லையா இவன்? இன்று தமிழ்நாடே அடகு போனாலும் வாயைத் திறக்க மறுக்கிறான். "அடகு போனதனடா தமிழ்நாடு" என்று கோவன் பாட வேண்டிய அவல நிலைதான் மிஞ்சியுள்ளது. இத்தகைய மிக்சர் தின்றவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தினால்தான் கீழடியையும் தமிழையும் காக்க முடியும்!

ஒரே இனம் - தமிழ் இனம்!

"ஆண்ட பரம்பரை", "பேண்ட பரம்பரை" என்று பெருமை பேசிக்கொண்டு பிரிந்து நிற்காதே! நாம் அனைவரும் ஹோமோ சேப்பியன்ஸ் எனும் ஒரே மனித இனம்தான். காலத்தாலும், தட்பவெப்பநிலையாலும், தொழிலாலும், உழைப்பாலும் கருப்பாய், சிவப்பாய், குட்டையாய், நெட்டையாய் மாறியிருக்கிறோம். கள்ளன், மள்ளன், கவுண்டன், பறையன், செட்டி, ரெட்டி, வெள்ளாளன், பிள்ளை என அனைவருக்கும் ஒரே மூதாதையர்தான். இடையில் வந்தவன் நம்மை பிரித்து வைத்தான். இன்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாள்கிறோம். எப்படி வந்தது இந்த இழிநிலை என உன்னைக் கேட்க வைப்பதுதான் கீழடி!

அன்று சாதியும் இல்லை, மதமும் இல்லை, சாமியும் இல்லை. 

இன்று சாமியின் பெயரால் பக்தியின் பெயரால் பழனிக்கு நீ தூக்கும் காவடி, சனாதனிகளின் பல்லக்கைத் தூக்குவதற்குச் சமம். காவடியை இறக்கு! கீழடியைத் தூக்கு! இதை உணர்ந்தால்தான் தமிழனாய் ஒன்றிணைய முடியும்.

விலங்குகளுக்குத்தான் எழுத, படிக்க, பேசத் தெரியாது என்பதால் வரலாறு இல்லாமல் மடிந்து போகும். ஆனால் உனக்கு:
  • பெரியாரால் படிக்கத் முடிந்தது,
  • அண்ணாவால் பேசத் தெரிந்தது,
  • பகத்சிங்கால் ரோஷம் வந்தது!
பிறகு என்ன தயக்கம்? 982 பக்க கீழடி அறிக்கை தானாக வராது. தமிழரின் வரலாற்று ஆயுதங்களான ஈட்டி, வாள் ஏந்திய அதே வீரியத்தோடு தமிழ்நாடு வீதிகளில் ஜல்லிக்கட்டுகளைப் போல களம் காண வேண்டும். இல்லையேல் நம்மையும், தமிழர் நாகரிகத்தையும் கீழடிக் குழிகளிலேயே புதைத்து விடுவார்கள். வீதியில் இறங்கிப் போராடுவோம்! கஜேந்திர சிங் செகாவத்துகளும் அவர்களின் ஆண்டைகளும் பின்னங்கால் பிடரியில்பட ஓடவைப்போம்! கீழடியையும் தமிழ் மண்ணையும் பாதுகாப்போம்!

தமிழ்மணி 
***
குறிப்பு: கீழடி குறித்து அவதூறாகப் பேசிய ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தைக் கண்டித்து மகஇக சார்பில் 25.09.2026 அன்று மாலை திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்கான எனது உரை இது. தீடீர் என நிகழ்ந்த எனது மிக நெருங்கிய உறவினரின் மரணம்-அதற்கு நான் சென்றதால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க. முடியவில்லை.
***

No comments: