தெருவில் வாழும் நாய்களுக்கென்று ஒரு ராஜ்ஜியம் உண்டு. அதற்கு எல்லைகள் உண்டு, எதிரிகள் உண்டு, அதிகாரப் போட்டிகளும் உண்டு. சுருக்கமாகச் சொன்னால், நாய்களின் ராஜ்ஜியத்திலும் அரசியல் உண்டு.
எல்லைக் கல்லும் எல்லைச் சண்டையும்
ஒவ்வொரு தெருவிலும் சில நாய்கள் தமக்கென ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு வாழ்கின்றன. அந்த எல்லைக்குள் வேறு தெரு நாய்கள் நுழைய முடியாது. எல்லையைக் காட்டப் பெயர்ப் பலகை இல்லை, கொடிக்கம்பம் இல்லை. அவை எல்லையின் இருபுறமும் மலம்-சிறுநீர் கழித்து, "இது எங்க ஏரியா, உள்ளே வராதே!" என்று சொல்லாமல் சொல்லிவிடுகின்றன.
அரசியல்வாதிகளுக்கும் இதே கதைதான். அவர்களுக்கு நாயின் மலம்-சிறுநீருக்குப் பதில் ஃப்ளெக்ஸ் பேனர்களும் கட்சிக் கொடிக்கம்பங்களும் உண்டு. ஊராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என ஒவ்வொன்றுக்கும் ஒரு எல்லை. ஒருவன் எல்லைக்குள் இன்னொருவன் நுழைந்து அரசியல் செய்ய முடியாது.
புதிதாக ஒரு நாய் எல்லைக்குள் வந்துவிட்டால் முதலில் சந்தேகப் பார்வை, பிறகு குரைப்பு, அதன்பின் விரட்டல். அரசியலிலும் புதியவன் வந்தால் முதலில் விசாரிப்பார்கள், பிறகு கதை கட்டுவார்கள், பின்னணியைத் தேடுவார்கள், இறுதியில் தங்கள் எல்லைக்குள் அவனை நுழையாமல் பார்த்துக்கொள்வார்கள்.
எலும்புத் துண்டுக்கான யுத்தம்
தெருநாய்களின் உணவு பெரும்பாலும் மனிதர்கள் உண்டு மிஞ்சிய எச்சம்தான். ஆனால் எல்லா எச்சங்களையும் அவை விரும்புவதில்லை. நேற்றைய சோறு என்றால் முகர்ந்து பார்த்துத் திரும்பிவிடும். ரேஷன் அரிசிச் சோறு மனிதர்களுக்குப் பயன்படலாம்; நாய்கள் அதை முகர்ந்துகூடப் பார்ப்பதில்லை.
ஆனால் ஓர் உண்மையான எலும்புத் துண்டு விழுந்துவிட்டால், அதைச் சுற்றிப் பத்து நாய்கள் கூடிவிடும். பலசாலியான நாய் மற்றவற்றை விரட்டிவிட்டு எலும்பைத் தனதாக்கிக்கொள்ளும். ஏமாந்த நாய்கள் எட்டி நின்று பரிதாபமாகப் பார்க்கும். கடைசியில் அவை எலும்பு கிடந்த இடத்தை நக்கிவிட்டுச் செல்லும். அவற்றுக்குக் கிடைத்தது அவ்வளவுதான்.
அதிகார அரசியலிலும் இதே காட்சிதான். செல்வாக்குள்ளவன் மற்றவர்களை ஓரங்கட்டிப் பதவியையும் அதிகாரத்தையும் வளங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறான். எலும்பு சிறு துண்டாக இருந்தாலும் சண்டை எப்போதும் மூர்க்கமாகவே இருக்கும்.
எலும்பு போடுபவனுக்கே விசுவாசம்
யார் அதிகம் எலும்புத் துண்டு போடுகிறார்களோ அவர்களுக்குத்தான் நாயின் விசுவாசம். போட்டவன் எப்போது அழைத்தாலும் வாலாட்டிக்கொண்டு ஓடும்; குழைந்து குழைந்து அவனைச் சுற்றிக் "கிரிவலம்" வரும். நாளை இன்னொருவன் பெரிய எலும்பை வீசினால் அவனிடமும் வாலாட்டத் தொடங்கும்.
அரசியலும் அப்படித்தான். கல்குவாரி முதலாளிகளும் மணல் கொள்ளையர்களும் பெருமுதலாளிகளும் வாசலில் வீசும் எலும்புகளைப் பொறுக்கித் தின்னும் அரசியல் நாய்கள், அவர்களின் வாசலைக் காக்கத் தொடங்குகின்றன. இது புதிய கதை அல்ல; ஆனால் நாய்கள் அதைக் கூச்சமின்றிச் செய்கின்றன.
‘கில்லி’ ‘குட்டி’
எல்லா நாய்களும் பிறந்தவுடனேயே பயமுறுத்துவதில்லை. குட்டி நாய்க்கு ஒரு தனி வசீகரம் உண்டு. துள்ளி விளையாடும் அழகைப் பார்த்துச் சொக்கி நிற்பவர்கள் பிஸ்கட் கொடுப்பார்கள், தலையைத் தடவுவார்கள், "என்ன அழகான குட்டி!" என்று கொஞ்சுவார்கள்.
குட்டி வளர வளரக் காட்சி மாறிவிடுகிறது. உடல் பெருக்கிறது, குரல் பெருக்கிறது, "வளர்ந்துவிட்டோம்" என்ற செருக்கு தலைக்கேறுகிறது. புதிய எஜமானர்கள் பிஸ்கட் போடக் கிடைத்துவிட்டதால், நேற்றுவரை கொஞ்சிக் கொடுத்தவனையே இன்று விரட்டுகிறது.
நம் "கில்லி குட்டி"யும் இப்படித்தான். புதிதாக வந்தபோது "மாற்றம்" என்று நம்பிக்கை ஊட்டியது. அதிகாரம் கைக்கு வந்ததும் குரல் மாறியது, நடத்தை மாறியது, எல்லை பெருகியது, காவலர்கள் பெருகினர். நேற்று வாசலில் கொஞ்சிய மக்களையே இன்று காவலர்களை நிறுத்தி விலக்குகிறது. குட்டியாக இருந்தபோது இருந்த வசீகரம் இப்போது அதிகாரத்தின் குரூரமாக மாறிவிட்டது.
கூட்டமும் குரைப்பும்
நாய்கள் தனியாகச் செல்வதைவிடக் கூட்டமாகச் செல்வதையே விரும்புகின்றன. ஐந்து நாய்கள் சேர்ந்தால் தெருவே அவற்றுடையது. அரசியல்வாதிகளும் அப்படித்தான்; தனியாகச் சென்றால் அதிகாரம் தெரியாது, பத்துப் பேர் பின்னால் வந்தால் தெரியும். கொடிகள், கார்கள், பாதுகாப்புப் படையினர் வந்தால்தான் பதவியின் உயரம் தெரிகிறது.
நாய்களின் போர் ஆயுதமே குரைப்புதான். ஒரு நாய் குரைக்கும், எதிரே இன்னொன்று குரைக்கும், மூன்றாவது எங்கிருந்தோ ஓடிவரும். சில நிமிடங்களில் தெருவே அதகளமாகிவிடும். அரசியலிலும் ஒருவன் மேடையில் பேசுகிறான், இன்னொருவன் மறுக்கிறான், மூன்றாவது கண்டனம் சொல்கிறான், நான்காவது பதிலடி கொடுக்கிறான். குரைத்தவர்கள் குரைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதிலும் நம் "குட்டி" நாய் மேடையில் கத்தத் தொடங்கினால், அது குரைப்பா, கத்தலா, மிமிக்ரியா என்றே புரியாமல் செவித்திரை கிழிகிறது. சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரைப் போல நடித்துக் காட்டுவது மக்களின் பிரச்சினைகளுக்குப் பதிலாகிவிடாது.
கத்தத் தெரிந்த குரலுக்கு, மக்களின் பிரச்சினை என்று வந்தால் மட்டும் மௌனம். தெருவே இருட்டில் மூழ்கும்போது குரல் எங்கே போனது? அறிவிக்கப்படாத மின்வெட்டுகளுக்கு எதிராக மக்கள் சாலையில் இறங்கிப் போராடிய பிறகும், மின்வெட்டுகளை "மின் பற்றாக்குறை" என்று பெயர் மாற்றும் சொல்லாடல் மட்டுமே வருகிறது. இருட்டில் அமர்ந்திருப்பவனுக்கு அது வெட்டா, பற்றாக்குறையா என்ற இலக்கணம் எதற்கு?
கூட்டம் காட்டுவது பலத்தையா, பயத்தையா என்பது வேறு கேள்வி. 2025 செப்டம்பரில் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் 41 உயிர்கள் பறிபோன துயரத்தை இங்கே நினைவுகூராமல் இருக்க முடியாது. கூட்டம் சேர்ப்பதில் காட்டிய அக்கறையில் பாதியாவது கூட்டத்தைக் காப்பதில் இருந்திருந்தால் என்ற கேள்வி இன்றும் எஞ்சி நிற்கிறது.
நள்ளிரவு யுத்தம்
தெருநாய்களின் எல்லைச் சண்டைகள் பெரும்பாலும் நள்ளிரவில்தான் தொடங்கும். நாம் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருப்போம்; திடீரென்று "லொள்! லொள்! லொள்!" ஒரு நாய் குரைக்கும், எங்கிருந்தோ இன்னொன்று பதில் குரைக்கும். தெருவே போர்க்களமாகிவிடும். அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த மனிதர்களின் தூக்கம் கலைந்துவிடும்.
அரசியல்வாதிகளின் அதிகாரச் சண்டைகளும் அப்படியே. அவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்; நிம்மதி கெடுவதோ மக்களுக்கு.
நல்ல நாய் எது? வெறிநாய் எது?
தெருவில் நடக்கும்போது எந்த நாய் நல்ல நாய், எது வெறிநாய் என்று எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எல்லா நாய்களும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டுதான் அலைகின்றன. இன்று வாலாட்டுபவன் நாளை கடிக்கலாம். அதேபோல அரசியலில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று முகத்தையும் உடையையும் பார்த்து முடிவு செய்ய முடியாது. வாக்குறுதிக் கொடியை அசைப்பவன் கையில் என்ன இருக்கிறது என்பதை நடத்தைதான் காட்டும். அதனால்தான் நாய்களைக் கண்டு மனிதர்கள் அஞ்சுகிறார்கள்; அதிகார அரசியலைக் கண்டு மக்களும் அஞ்சுகிறார்கள்.
பசி!
நாய்கள் இனப்பெருக்கத்துக்காக மட்டுமே சேர்கின்றன. அங்கே நிறமில்லை, சாதியில்லை, மதமில்லை; எந்த நிறமாக இருந்தாலும் அது நாய்தானா என்பது மட்டுமே பார்க்கப்படுகிறது. மனிதனுக்கோ சேர்வதற்கே சாதி, மதம், இனம், நிறம், பணம், பதவி என எத்தனை தடைகள்! ஆனால் தடைகள் எவ்வளவு இருந்தாலும் அவன் ஆசைக்கு மட்டும் தடையே இல்லை.
நாய்களுக்கு இரண்டே பசிகள்: வயிற்றுப் பசி, எல்லைப் பசி. ஒரு எலும்புத் துண்டு கிடைத்தால் அவற்றின் வயிறு நிரம்பிவிடுகிறது. மனிதனுக்கோ பணப்பசி, நிலப்பசி, தங்கப்பசி, பதவிப்பசி, அதிகாரப்பசி, புகழ்ப்பசி, பாலியல் பசி என முடிவே இல்லாத பசிகள். ஒரு கோடி கிடைத்தால் பத்து கோடி வேண்டும், பத்து கோடி கிடைத்தால் நூறு கோடி வேண்டும். நாயின் பசி வயிற்றோடு முடிகிறது; மனிதனின் பசி கல்லறைவரை தொடர்கிறது. பித்ருலோகத்தில்கூட மனிதன் பசியோடு அலைவதாகத்தானே சொல்கிறார்கள்.
இதுவே அடிப்படை வேறுபாடு. நாயின் அசிங்கம் பசியால் வருகிறது; மனிதனின் அசிங்கம் பேராசையால் வருகிறது.
நாய்களின் ராஜ்ஜியத்தில் யாருக்கு மரியாதை?
நாய்களின் ராஜ்ஜியத்தில் நாய்களுக்காவது ஓர் இடம் உண்டு. பசியென்றால் உணவு தேடுகின்றன, எல்லை என்றால் காக்கின்றன, ஆபத்து என்றால் கூட்டமாக நின்று குரைக்கின்றன. தங்களுடைய கூட்டத்தை அவை கைவிடுவதில்லை.
ஆனால் மனிதர்களின் உலகில்? பசியென்று குரல் கொடுப்பவனைக் காவல்துறையை வைத்து அடித்து விரட்டுகிறோம். கடந்த ஆண்டு ரிப்பன் மாளிகை முன் வேலை பறிபோவதைக் கண்டு போராடிய தூய்மைப் பணியாளர்கள் இரவோடு இரவாக வாரியடித்துக் கைது செய்யப்பட்டதை யார்தான் மறக்க முடியும்? ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டமும், இன்றைய செவிலியர்களின் போராட்டமும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உழைப்பவன் உரிமை கேட்டால் துரத்துகிறோம். வேலை கேட்டால் காத்திருக்கச் சொல்கிறோம். இருட்டில் அமர்ந்தவன் மின்சாரம் கேட்டால் "பற்றாக்குறை" என்கிறோம். அதிகாரம் உள்ளவன் கேட்டால் மட்டும் கதவுகள் திறக்கின்றன.
இறுதியாக…
நாய்களின் ராஜ்ஜியத்தைப் பார்த்துச் சிரிப்பதற்கு முன், நம்முடைய மனித ராஜ்ஜியத்தை ஒருமுறை திரும்பிப் பார்ப்போம். அங்கே யார் எலும்புக்காகக் காத்திருக்கிறார்கள்? யார் எலும்பு போடுகிறார்கள்? யார் வாலை ஆட்டுகிறார்கள்? யார் இருட்டில் குரைக்கிறார்கள்?
நாய்களின் ராஜ்ஜியத்தில் நாய்களுக்கு இருக்கும் மரியாதைகூட, மனித ராஜ்ஜியத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
மனிதனாகப் பிறந்ததால் நாம் பசியையும் பேராசையாக்கிவிட்டோம். நாய்கள் நாடாளவில்லை; நாடாள்பவர்கள்தான் நாய்களைவிடக் கீழிறங்கிவிட்டார்கள்!
— தமிழ்மணி

3 comments:
ஊரானவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை இங்கே தமிழில் கொடுத்து இருக்கிறீர்கள் இரண்டுமே நன்றாக இருந்தது ஆனால் இந்த மனித பதர்களோடு நாய்களை ஒப்பிட்டு அந்த விலங்கினத்தை கேவலப்படுத்தி இருக்கினறீர்கள்.ஒருவேளை உணவு கொடுத்தால் தன் வாழ்நாளின் இறுதிவரை துரத்த துரத்த போகாமல் நன்றியை காட்டுகின்ற ஒரு நல்ல விலங்கினத்தை நீங்கள் இந்த நன்றி கெட்ட மனித சமுதாயத்தோடு ஒப்பிட்டு இருக்கிறீர்கள் .அதுவும் அரசியல்வாதிகளோடு .இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . நீங்கள் எடுத்துக் கொண்ட நாய்களின் ராஜ்யத்தில் கூட தன் எல்லையை மீறி வருபவனைத் தான் அவை விரட்டுகின்றனவே ஒழிய எல்லைக்குள் இருக்கும் குட்டி முதல் வயதான நாய்களை கூட அரவணைத்து தான் அவை செல்கின்றன. தன்னுடைய உணவை அவை பகிர்ந்து கொள்வதில்லை .ஆனால் தன் கூட்டத்தில் ஒருவரை மற்றவர் விலக்கும்போது நின்று முறைக்கவும் அது எதிர்த்து நிக்கவும் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் நம் மனிதர்களோ எவனுக்கு என்ன இருந்தால் என்ன எனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துவிட்டால் போதும் என்ற கீழ்த்தரமான எண்ணத்திலேயே தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஒரு கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக ஆன சில நாட்களிலேயே இன்னொரு கட்சிக்கு அவர்கள் மாறுவது பேராசை அப்படியே வைத்துக் கொள்வோம் ஆனால் அந்த பேராசை அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை அவர்களையே மீண்டும் நிற்க வைத்து நம்முடைய தன்மானத்தை கேள்விக்கு போது இந்த மக்களாகிய மக்களுக்கு ஏன் ரோஷம் வரவில்லை ஏன் தன் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணம் வரவில்லை இவர் வேறு ஒரு நபரை நிறுத்தி வென்று இருந்தால் கூட பரவாயில்லை அதே நபரை நிறுத்தி இவர் வென்று காட்டும் போது இது அரசியல் சாணக்கியமாக பார்க்கப்படுகிறது அந்த துரோகிகளும் சிரித்துக்கொண்டே அந்த வெற்றியை ஏற்றுக் கொள்கிறார்கள் அந்த மக்களும் எந்த உணர்வும் இன்றி அவர்களை ஆதரிக்கிறார்கள் ஜனநாயகம் என்பதையே இவர்கள் கேலிக்கூத்தாக ஆக்கிக் கொண்டிருப்பதை அதிகார வர்க்கமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது தோற்றவன் சொல்கின்ற காரணங்கள் சரியாக இருந்தாலும் ஏற்கப்படுவதில்லை. ஜெயித்தவன் பன்னிய அட்டூழியங்கள் எவராலும் கண்டிக்கப்படுவதில்லை .இதில் நீங்களும் நானும் நம் போன்ற உணர்வு உள்ளவர்களும் பேசுவதில் பயன் என்ன இருக்கிறது வாழ்க போலி ஜனநாயகம் வளர்க பட/பண நாயகம். நன்றி
நாய் நன்றி உள்ள விலங்குகள் ஆனால் மனிதன் நன்றி இல்லா விலங்குகள் நாய்கள் அது பசிக்கு உணவு கிடைக்காத நேரத்தில் மனித குலத்தின் மிச்சங்கள் கிடைக்க காத்திருக்கும் ஆனால் மனித இனம் உணவுக்காக சுயநலத்திற்காக ஒரு கட்டத்தில் எதுவும் செய்ய தயங்காமல் எதையும் செய்யும்.திருடும் , பொய்யான தகவல்களை பரப்பி தான் வாழ பிறரை கெடுக்கும் , ஏன் கொலையும் செய்யும் கொடிய விலங்கினம் என்றால் அது மனித இனம் தான் ஆக நாய் நன்றி உள்ள விலங்குகள் அதை மனித விலங்குகளிடம் ஒப்பிடுவது சரியா? தவறா? என்று முடிவு செய்து பார்க்கலாம் நீங்கள்..
Noice podum naigalai Vida mounamaga irukkum naigalinal than aabathu athigam....
Post a Comment