Showing posts with label அம்பேத்கர் சுடர். Show all posts
Showing posts with label அம்பேத்கர் சுடர். Show all posts

Saturday, 2 May 2015

அருந்ததிராயும் அம்பேத்கர் சுடரும்!

“மிக ஆழமாகவும் வலுவாகவும் மக்களிடையே ஊடுருவியுள்ள சாதி அமைப்புக்கு எதிராக ஈவிரக்கமின்றிப் போராட வேண்டிய தருணம் இது. மக்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காக சாதியப் பாகுபாடுகள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளன.

பார்ப்பனியம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை வெளிக்கொணராமல் சாதியத்துக்கு எதிரான போராட்டம் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது.”

அருந்ததிராய் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் “அம்பேத்கர் சுடர்” விருது வழங்கும் விழாவில் அருந்ததிராய் அவர்கள் ஆற்றிய உரையின் மையக் கருத்து இது.

அருந்ததிராய் அவர்களின் பேச்சை நாம் எப்படி புரிந்து கொள்வது?

சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் ஏதுமற்றவர்களாகவும், சேவை செய்பவர்களாகவும் உருவாக்கியதில் பார்ப்பனியத்துக்கும் ஏழ்மைக்கும் தொடர்பிருக்கிறது.

சாதிப் படிநிலையில் ஒரு சில சாதிகளை தீண்டத்தகாதவர்களாக்கியதால் பார்ப்பனியத்துக்கும் தீண்டாமைக்கும் தொடர்பிருக்கிறது.

மக்களின் உழைப்பைச் சுரண்டுவதால் முதலாளித்துவத்துக்கும் ஏழ்மைக்கும் தொடர்பிருக்கிறது.

நாட்டு வளங்களையும் மக்களின் உழைப்பையும் சுரண்டுவதால் ஏகாதிபத்தியத்திற்க்கும் ஏழ்மைக்கும் தொடர்பிருக்கிறது.

மக்களை சாதி ரீதியாக கூறுபோட்டு அவர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வை உருவாக்கி அவர்கள்  ஒன்று சேரவிடாமல் தடுப்பதற்கு பார்ப்பனியம் பெரிதும் உதவுவதால் முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் பார்ப்பனியம் தேவைப்படுகிறது.

எனவே முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் பார்ப்பனியத்துக்கும் தொடர்பிருக்கிறது.

அதனால்தான் ”பார்ப்பனியம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை வெளிக்கொணராமல் சாதியத்துக்கு எதிரான போராட்டம் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது.” என அருந்ததிராய் கூறுகிறார்.

அம்பேத்கர் பார்வையில் சமத்துவமின்மை

படிப்படியான முறையில் அமைந்துள்ள சமத்துவமின்மையை நிலைநாட்டும் கொள்கை மனுஸ்மிருமிதி முழுவதிலும் ஊருறுவி நிற்கிறது.

மனுவின் சமத்துவமின்மை கொள்கை இன்றைய சமூக வாழ்க்கையில் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது.

பார்ப்பனன் மேலானவன்; சூத்திரன் கீழானவன் என்கிற வர்ண பேதமும் அதைத் தொடர்ந்து நிறுவப்பட்டுள்ள இன்றைய சாதிய ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மை கொள்கைக்கு சான்றாக உள்ளன.

இதுதான் பார்ப்பனியம் என்கிறார் அம்பேத்கர். மக்களின் ஊனுக்குள்ளும் எலும்புக்குள்ளும் ஊருறுவி நிற்குமாறு புகுத்தி வைத்தப் படிப்படியான சமத்துவமற்ற முறை அநியாயத்தை தூக்கி எறிய முடியாமல் முடக்கி வைப்பதற்கே உதவியது; உதவுகிறது.

படிப்படியான சமத்துவமின்மை முறை அநியாயத்தை எதிர்த்துப் பொதுவான அதிருப்தி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் பாதிக்கப்படுபவர்களிடையேயும் சமத்துவமின்மை இருப்பதால் அநியாயத்தை எதிர்த்து எல்லா வகுப்பினரும் பொதுவாக ஒன்று சேரும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.

பார்ப்பனியத்துக்கும் அதன் அநியாயங்களுக்கும் எதிராகப் புரட்சி எதுவும் நடக்காமல் போனதற்கான காரணங்களில் படிப்படியான சமத்துவமின்மை முறை ஒன்றாகும்.  (பார்க்க: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 7 பக்கங்கள்: 235-239)                                                                                                        
ஏழைகள் ஏன் ஒன்றுபட முடியவில்லை?

ஏழைகள் எங்கு அதிகமாக நிறைந்திருக்கிறார்கள்? கிராமங்களில் நிறைந்திருக்கிறார்கள். நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் நிறைந்திருக்கிறார்கள்.

இங்கெல்லாம் யார் ஏழைகளாக இருக்கிறார்கள்? படிநிலைச் சாதிகளில் கீழ் நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களே மிக அதிகமாக ஏழைகளாக உள்ளனர்.  அடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் கனிசமானவர்கள். அதற்கு அடுத்தபடியாக பிற்படுத்தப்பட்டவர்களில் ஒரு சிலர். உயர் சாதியினரில் மிகச் சொற்பமானோர் ஏழைகளாக உள்ளனர்.

ஏழைகள் அனைவருக்குமான பிரச்சனை பொதுவானதாக இருப்பினும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கூடுதலாக தீண்டாமைக் கொடுமையும் சேர்ந்துள்ளதால் அவர்களின் பிரச்சனை மிகவும் கொடூரமானது.

ஏழ்மைக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் இவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கிடையில் சாதி அடிப்படையில் தனித்தனி அமைப்புகள், கட்சிகள். ஒரே சாதிக்குள்ளேயே பல்வேறு அமைப்புகள், கட்சிகள். மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியிலும் இதே நிலைதான்.

பார்ப்பனர்களின் சொந்த நலனுக்காக – பிழைப்புக்காக பார்ப்பனியம் மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தி மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்தது; வைக்கிறது அதேபோல ஒரு சில பிழைப்புவாதிகள் தங்களின்  நலனுக்காக மக்களை தனித்தனி சாதி அமைப்புகளாக, சாதிக் கட்சிகளாக பிளவுபடுத்தி வைத்திருப்பதன் மூலம் பார்ப்பனியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

சமத்துவமின்மை கொள்கைதான் பார்ப்பனியம் என்பதையோ, அதை பார்ப்பனர்களே உருவாக்கினார்கள் என்பதையோ, அதைக் கட்டிக் காப்பதில் இன்றளவும் பார்ப்பனர்களே முன்னிலையில் உள்ளனர் என்பதையோ இந்தத் தலைவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அல்லது புரிந்து கொண்டிருந்தாலும் பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டமாக அதை முன்னெடுப்பதில்லை.

எனவே ஏழ்மைக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டம் என்பது ”பார்ப்பனியம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை” மிகச் சரியாக புரிந்து கொண்டு போராடும் போதுதான் ஏழ்மையும் தீண்டாமையும் ஒழிக்கப்படும். அதற்குத் தேவை மார்க்சிய சித்தாந்தமும் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கருத்துக்களும்தான்.