Showing posts with label ஐயப்பன். Show all posts
Showing posts with label ஐயப்பன். Show all posts

Sunday, 29 July 2018

வெல்லப் போவது யார்? ஐய்யப்பனா? அரசியல் சட்டமா?


பக்த கோடிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
நமது கோவிலில் பிரசாதம் வாங்கும் பொழுது தயவுசெய்து நம்பூதிரிகளைத் (பூசாரிகளைத்) தொடாமல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
நிர்வாகம் ஐயப்பன் கோவில் கேரளா.
சபரிமலையில் பார்ப்பனர்களால் கடைபிடிக்கப்படும் முதல் வகைத் தீட்டு இது.

சீறிப் பாயும் பம்பை ஆற்றில் முங்கித்தானே பக்தன் கோவிலுக்குள் செல்கிறான். பம்பை ஆற்றின் சீற்றத்தில் கோவணமே கந்தலாகும் போது அவனது கைகள் மட்டும் கறையோடு கரையேறுமா என்ன? அது மட்டுமல்ல. அவன் முங்குவது வெறும் தண்ணீரா என்ன! புனித நீராச்சே! புனித நீராடியவனே உன்னைத் தொட்டால் தீட்டு என்றால் யாருக்கடா தேவை உன் ஐயப்பன் என கேள்வி கேட்க எந்த ஒரு ஆணுக்கும் துணிவில்லை.

சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் இருக்கிறானாம். ஐயப்பனை வழிபட வேண்டுமானால் 41 நாள் விரதமிருக்க வேண்டுமாம். பெண்கள் மாதவிடாய்க்கு ஆட்படுவதால் அவர்களால் விரதத்தையும் தூய்மையையும் பின்பற்ற முடியாதாம். .அதனால் ஐய்யப்பனை வழிபட பெண்களை அனுமதிப்பதில்லையாம். இது பார்ப்பன திருவாங்கூர் தேவஸ்தானம் சொல்லும் நியாயவாதம். மாதவிடாய் என்பது தீட்டு, தோஷம், அசுத்தம். இது தூய்மையற்றது என்பதை மிகத் தெளிவாகச் சொல்கின்றனர் பார்ப்பனர்கள். சபரிமலையில் கடைபிடிக்கப்படும் இரண்டாம் வகைத் தீட்டு இது.

ஐயப்பன் எங்களுக்குமானவர். ஐயப்பனை வழிபடுவது எங்களது மத உரிமை; தனிமனித வழிபாட்டுரிமை என போர்க்கொடி உயர்த்தி உள்ளனர் கேரளப் பெண்கள். இது குறித்த பஞ்சாயத்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் இந்த பஞ்சாயத்து மிகவும் முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆண்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள தீண்டாமையை எதிர்த்து கேள்வி கேட்க வக்கற்றுள்ள நிலையில்தான் பெண்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி உள்ளனர்.

பெண்கள் கோவிலுக்குள் வந்தால் தீட்டாகி விடும் என்றால் அவ்வளவு பலவீனமான சாமியை என்ன வெங்காயத்துக்கு கும்பிடுறீங்க? என சீறுகிறார் ஆதவன் திட்சண்யா. பார்ப்பனர்களுக்கு எதிராக திருப்பப்பட வேண்டிய சீற்றம் பக்கத்தர்களுக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளது என்கிற வருத்தம் எனக்கு உண்டு.

சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சொல்கிறார். இது மனித உரிமை மீறல் இல்லையாம். ஆண்டாண்டு காலமாக அனுமதிப்பதில்லையாம். கார்த்திகை – தை - மார்கழி மாதங்களில் கடுங் குளிர் நிலவுவதாலும் மலைப் பிரதேசங்களில் தங்க நேரிடுவதாலும் பெண்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுமாம். இது அவரது நியாயவாதம்.

சரி. இந்த சிரமங்களுக்காக நீங்கள் பெண்களை சபரிமலைக்கு வரவேண்டாம் என்பதை ஒரு வாதத்திற்காக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சபரிமலையிலேயே ஒரு நூறு மீட்டர் தூரத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை வழிபட அனுமதிக்கலாமே!

ஆனால் விசயம் இதுவல்ல. ஜீயர் மேலும் அடுக்குகிறார்.

ஒரு சிலரால் (அதாவது ஒரு சில பெண்களால்) ஐயப்பனுக்காக பக்தர்கள் (அதாவது ஆண் பக்தர்களுக்கு) இருக்கும் விரதங்களுக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியே நம் முன்னோர்கள் (அவாள்தான் வேறு யார் நம் முன்னோர்கள்) இந்த ஏற்பாட்டை செய்துள்ளனராம். இது வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறதாம். எந்தெந்த வேலைகளை யார் யார் எப்போது செய்ய வேண்டும், ஆண்மீகப் பணிகளில் ஆண்கள் செய்ய வேண்டிய காரியங்கள் எது, பெண்கள் செய்ய வேண்டிய காரியம் எது என வேதங்கள் சில வழி காட்டுதல்களையும் செய்து வைத்துள்ளவாம். இந்து மதம் பெண்களைப் பெருமையாகக் கருதுகின்றதாம்.

800 ஆண்டுகால ஐயப்பன் குறித்து ‘5000’ ஆண்டுக்கு முந்தைய வேதங்களில் எப்படி சொல்லியிருக் முடியும் என கேள்வி எழுப்ப இங்கு யாருக்கடா தைரியம் இருக்கு என்கிறார் இந்த ஜீயர்.

ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கும் ஐயப்பனை வழிபடுவது அடிப்படை உரிமை. 1950 க்குப் பிறகு சட்டத்துக்கு உட்பட்டே எதுவும் இருக்க வேண்டும். அரசியல் சாசன விதி-மதக்கோட்பாடு இதில் எதற்கு எது உட்பட்டது? என சரமாரியாக நீதிபதிகள் கேள்விகள் எழுப்புகின்றனர்.

ஆனால்,

10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மாதவிடாய் காரணமாக 41 நாள் விரதத்தையும், தூய்மையையும் பின்பற்ற முடியாது அதனால் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விசயத்தில் நீதிமன்றம் தலையிட்டால் பெரும் சர்ச்சை ஏற்படும் என நீதிமன்றத்தையே எச்சரிக்கிறார் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வி. மாதவிடாய் என்பது தூய்மையற்றதுதான் என்பதை திருவாங்கூர் தேவஸ்தானம் தனது வழக்கறிஞர் மூலம் நிறுவ முயல்கிறது.

வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வியும் (பார்த்தீர்களா வழக்கறிஞருக்குள்ளும் ஒரு மனு இருக்கிறான்), திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஜீயர் உள்ளிட்ட பார்ப்பனர்களும் பார்ப்பன இந்து மதத்தின் சட்டத் தொகுப்பான மனுஸ்மிருதியை ஆதாரமாகக் கொண்டுதான் தங்களது வாதத்தை முன்வைக்கின்றனர்.

மாதவிடாய் காலத்தில் உள்ள ஒரு பெண்ணை ஒருவன் தொட்டுவிட்டால் தான் குளிப்பதன் மூலம் அவன் தூய்மையடைகிறான் என்கிறது மனுஸ்மிருதி (மனு:  5-85). மாதவிடாய் தீட்டு என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதா!

“மாதர்களின் சுபாவமே மனிதர்களுக்கு சிரிங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். ஆதலால் தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அசாக்கிரதையாயிரார்கள்” (மனு:  2-213).  ஒரு சிலரால் (அதாவது ஒரு சில பெண்களால்) ஐயப்பனுக்காக பக்தர்கள் (அதாவது ஆண் பக்தர்களுக்கு) இருக்கும் விரதங்களுக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற ஜீயரின் அச்சம் மனுவால் உறுதி செய்யப்படுகிதே!

“புலன்களையடக்கியவனாயினும் (அவன் ஐயப்ப பக்தனேயாயினும்), அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பினால் காமக்குரோதமுள்ளவனாகக் செய்வர் மாதர்” என்கிறது மனுஸ்மிருதி (மனு:  2-214)

பால் அடிப்படையில் எவரையும் பாகுபாடு செய்யக் கூடாது என இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் விதி 15 வலியுறுத்தினாலும் ஜீயர் சொன்னது போல இதற்கெல்லாம் மேலான விதி வேதங்களில் இருக்கிறதுதானே? வேதம் என்று சொன்னாலே நாம்தான் வீழ்ந்து விடுகிறோமே! இது வேதத்தையும் விஞ்ஞானத்தையும் கலந்து செய்த கலவை என்று ஒருவன் விளம்பரம் செய்யும் போது நாம் வாய்பிளந்துதானே நிற்கிறோம்.

தொடர்புடைய பதிவுகள்:


    Friday, 9 December 2011

    மகர ஜோதிக்குத் தடையா?


    மகர ஜோதிக்குத் தடையா?

    நான் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு அரசுத்துறை நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்த திருமணமாகா இளைஞர்கள் சிலர் தங்கியுள்ளனர். ஐ.டி.ஐ படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் மாதம் மூன்றாயிரம் பெறுவதற்கே பத்து-பன்னிரண்டு மணி நேரம் உழைக்க வேண்டிய நிலையில் பலர் அல்லல் படும் போது இவர்களுக்கு கிடைத்துள்ள வேலை கிடைத்தற்கரிய ஒன்று.

    ஆனால் இந்த வாய்ப்பை இவர்கள் முறைாயாகப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தங்களது நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு பிரியானியும் மதுவுமாக நாளைக் கழிக்கின்றனர். கை நிறைய ஊதியம் பெறும் இளைஞர்கள் பெரும்பாலும் இப்படித்தான் உள்ளனர் என எனது நண்பர் இத்தகைய இளைஞர்கள் மீது கோபக் கனலை கொட்டித் தீர்த்தார்.

    வழக்கம் போல இப்பொழுதும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் கூடுகிறார்கள். என்ன ஆச்சரியம்? இப்பொழுதெல்லாம் பிரியானி-மது எதுவுமே கிடையாது. இதுவரை மதுவில் மகிழ்ச்சியைத் தேடியவர்கள் தற்போது கருப்பு வேட்டியும், கழுத்தில் கருப்புத் துண்டும் என கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் புது உற்சாகத்தில் திளைக்கிறார்கள். 

    ஆம்! ஐயப்பனுக்கு நடை திறந்த பிறகு தமிழகமே தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலானவர்கள் மதுவுக்கு மட்டுமல்ல மாமிசத்துக்கும் டாட்டா காட்டி விட்டார்கள். துடைப்பக்கட்டையால் அடித்தும் கூட திருந்தாதவர்கள் ஒரு கருப்புத் துண்டால் மதுவைக் கைவிட்டது மனைவி மார்களுக்கு மகிழ்ச்சிதானே.

    அரசுக்கு இழப்பு ஆயிரம் கோடிகளில்!

    ஆனால் இந்த மாற்றம் இங்குள்ள அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாதம் சுமார் ரூ 3000 கோடிக்கு விற்பனையாகும் டாஸ்மாக் மது விற்பனை தற்போது பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இந்த நிலை தை மாதம் வரை அதாவது மகர ஜோதி முடியும் வரை நீடிக்கும். இரண்டு மாத காலம் என்றாலும் மது விற்பனையால் ஏற்படும் இழப்பு அரசால் ஈடு செய்ய முடியாதது என கருதப்படுகிறது. ஓர் ஆண்டுக்கு மட்டும்தான் இந்த நெருக்கடி என்றால் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த நிலை ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிற ஒன்று என்பதால் இந்த நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டவுள்ளது அரசு.

    வழக்கமான குடியர்கள் ஐயப்பனுக்கு மாலை போட்டதால்தான் மதுவிற்பனை குறைந்ததற்கான முக்கியக் காரணம் என்பதால் இதைத் தடுப்பதற்கு சோ உள்ளிட்ட அரசியல் இராஜதந்திரிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளது அரசு. மகர ஜோதியை தடை செய்யக்கோரி அங்குள்ள அரசு மீது வழக்கு தொடரலாமா என யோசித்து வருகிறது இங்குள்ள அரசு. மகர ஜோதியை தடை செய்துவிட்டால் அங்குள்ள அரசு ஆட்டம் கண்டவிடும் என்பதால் நீதிமன்றத்தின் மூலம் மகர ஜோதியை தடை செய்வது அவ்வளவு சுலபமானதல்ல என சட்ட வல்லுனர்கள் கருதுவதால் ஐயப்பனுக்கு மாலை போடுவதை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரலாமா எனவும் யோசித்து வருகிறது இங்குள்ள அரசு.

    பால் விலை, பேருந்துக் கட்டணம்  மற்றும் மின்கட்டண உயர்வால் ஏற்கனவே மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது அரசு. ஒரு இரண்டு மாத காலத்திற்காவது குடிகாரக் கணவனின் கொடுமை இருக்காது என நிம்மதிப் பெருமூச்சு விடும் தாய்மார்கள் அரசின் மேற்கண்ட நடவடிக்கையால் மேலும் அதிருப்திக்குள்ளாவார்கள் என கருதப்படுகிறது. இது மக்களின் கவலை. 

    ஆனால் மக்கள் பிரதிநிதிகளின் கவலையோ வேறுவிதமாக இருக்கிறது. தேர்தலில் போட்ட முதலை இலாபத்துடன் எடுக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு திட்டங்கள் வேண்டாமா? அத்திட்டங்களுக்கு நிதி ஆதாரம் வேண்டாமா? டாஸ்மாக்கை விட்டால் இப்போதைக்கு வேறு வழி ஏது? எனவேதான் ஒன்றியம், வட்டம், மாவட்டம், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள் என பல்வேறு துதிபாடிகளும் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் ஐயப்பனின் மகர ஜோதியை தடை செய்ய வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்களாம். 

    கறிக்கோழி விலை கடும்வீழ்ச்சி!

    ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சைவத்துக்கு மாறியதால் மேலும் பல சிக்கல்கள் உருவெடுத்துள்ளன.

    ஐயப்பனால் கோழிக்கறி விற்பனை கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணை உரிமையாளர்கள் அவசரமாகக் கூடி இது குறித்து விவாதித்துள்ளனர். இரண்டு மாத காலத்திற்கு கோழிகள் போடும் முட்டையை ஐயப்பனே நினைத்தாலும் நிறுத்த முடியாது. போட்ட முட்டைகளை விற்பனை செய்யாமல் வைத்திருக்கவும் முடியாது. இதனால் ஏராளமான முட்டைகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    உரிய பருவத்தில் கறிக் கோழிகளை விற்பனை செய்யவில்ல என்றால் அவை முதுமையடைந்து முற்றிய பிறகு விற்பனைக்கு உகந்ததாக இருக்காது. மேலும் இரண்டு மாத காலத்திற்கு முட்டை மற்றும் கறிக்கோழி சில்லரை விற்பனையாளர்கள் வருவாய் இழந்து வறுமைக்குத் தள்ளப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தங்களது வாழ்க்கைப் பிரச்சனை என்பதால் மகர ஜோதியைத் தடை செய்வது அல்லது ஐயப்பனுக்கு மாலை போடுவதை நிரந்தரமாகத் தடை செய்வது குறித்து அரசிடம் முறையிடுவது என முடிவு செய்துள்ளனர்.

    மீனவர்கள் பாதிப்பு

    கடல் சீற்றம் மற்றும் சிங்களக் காடைகளின் காட்டுமிராண்டித் தாக்குதல்களை எதிர் கொண்டு உயிரைப் பணையம் வைத்து பிடித்து வரும் மீன்களின் விற்பனை ஐயப்பன் ‘சீசனை’யொட்டி வெகுவாகக் குறைந்து விட்டதால் மொத்த விற்பனையாளர்கள் மீன்களை வாங்க மறுக்கின்றனர். இது மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை. எனவே தங்களது வாழ்வு கேள்விக்குள்ளாகியுள்ளதால் மேற்கண்ட கோரிக்கையை முன்னிறுத்தி அரசிடம் முறையிடுவது என மீனவர்களும் முடிவு செய்துள்ளனர்.

    பான்பராக் விற்பனைகூட கனிசமாகக் குறைந்துள்ளதால் பான்பராக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூடி இது குறித்து முடிவெடுக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன.

    முல்லைப் பெரியார் அணை உடைவதைப் போல தயாரிக்கப்பட்டிருந்த “டேம் 999” திரைப்படத்தை தமிழ் நாட்டில் திரையிட அரசு தடை விதித்துள்ளதைப் போல மகர ஜோதியை தடை செய்வது அல்லது ஐயப்பனுக்கு மாலை போடுவதை நிரந்தரமாகத் தடை செய்வது இதில் ஏதாவது ஒன்றை செய்வதற்கு அரசு தயக்கம் காட்டாது என நம்பப்படுகிறது.

    அப்படிச் செய்தால் ஏற்கனவே முல்லைப் பெரியார் பிரச்சனையால் இரு மாநிலங்களுக்கிடையில் முற்றியுள்ள பகைமை மேலும் தீவிரம் அடையும் என்பதால் மத்திய அரசும் இது குறித்து என்ன செய்யலாம் என தீவிரமாக யோசித்து வருவதாக டெல்லி வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இங்கே உள்ள அரசின் மேற்கண்ட நடவடிக்கையால் முல்லைப் பெரியாரா? இல்லை ஐயப்பனா?, எதை முன்னிருத்தினால் அரசியல் ஆதாயம் அடையலாம் என அங்குள்ள அரசியல் கட்சிகள் பெரும் குழப்பதில் இருப்பதாகத் தகவல்.