Showing posts with label ஜனனி ஐயர். Show all posts
Showing posts with label ஜனனி ஐயர். Show all posts

Saturday, 8 December 2012

சாதிப் பெருமை பேசுவதே வன்கொடுமைதான்!

தருமபுரி நாயக்கன் கொட்டாய், கடலூர் பச்சாரப்பாளையத்தைத் தொடர்ந்து தற்போது தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், டி.கல்லுப்பட்டி என தொடர்கின்றன தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தீண்டாமைத் தாக்குதல்கள். டி.கல்லுப்பட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் பூசாரியாக இருந்த எஸ்.நாகமுத்து என்கிற 22 வயதான தாழ்த்தப்பட்ட இளைஞர் ஆதிக்கச்சாதியினரால் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டதால் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தற்கொலை என்று சொல்லக்கூடாது. இது ஒரு படுகொலை!

இப்படி நாடெங்கிலும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத்தாக்குதல்கள் தொடர்கின்றன. இத்தகைய தாக்குதல்களில் யாரைக் குற்றவாளியாக்குவது? தாக்குதல்களைத் தூண்டுவோர், தாக்குதல்களில் நேரடியாக ஈடுபடுவோர், தாக்குதல்களுக்குத் துணைபோவோர் மட்டுமே குற்றவாளிகளா? இவர்கள் மட்டுமல்ல!தீண்டாமையை கடைபிடிக்கின்ற அனைவருமே குற்றவாளிகள்தான். அப்படியானால் தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் யார்? தான் இந்தச்சாதிக்காரன் என பெருமை பேசுவதும், தனது பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக்கொள்வதும் தீண்டாமையின் மற்றோரு வடிவமே. ஆம்! இவர்கள் அனைவருமே வன்கொடுமைக் குற்றவாளிகள்தான்!

சாதியம் குறித்து நான் ஏற்கனவே எழுதிய பதிவுகளை உங்களோடு பகிர்கிறேன்.



சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?



ஊரான்


Tuesday, 11 October 2011

ஜனனி ஐயரும் ஆண்டாள் முதலியாரும்!

”என்ன மொதலியார, பாத்து ரொம்ப நாளாச்சு!”,

”என்ன கவுண்டரே, எப்ப வந்த?”,

”என்ன நாயுடு, எங்க கிளம்பிட்ட?”

அலுவலகங்களிலும் மற்ற பல இடங்களிலும் மிகவும் நெருக்கமானவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சாதிப் பெயரைச் சொல்லி அழைத்துக் கொள்வதைப் பார்க்க முடியும்.  தனது சொந்தப் பெயரைச் சொல்லி அழைப்பதைவிட தனது சாதிப் பெயரைச் சொல்லி அழைக்கும் போது ‘தான் சாதியில் உயர்ந்தவனாக்கும்’ என தனக்குள் பெருமைப்பட்டுக் கொள்கிறான்; மனதுக்குள் மகிழ்ச்சியடைகிறான். சொல்லப்போனால் ஒருவித கிளர்ச்சிக்குள்ளாகிறான். தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தவிர சாதி பாராட்டுகிற பிற சாதியினர் அனைவரும் இத்தகைய மனநிலையில்தான் உள்ளனர்.

சாதியப் படி நிலையில் மேல் நிலையில் இருக்கும் ஐயர், ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர்களை பொதுவாக ஐயர் என்றே பிற சாதியினர் அழைப்பதுண்டு. மிகவும் நெருக்கம் இருந்தால் மட்டுமே ‘என்ன ஐயரே, சௌக்கியமா?’ எனக் கேட்க முடியும். மற்றபடி தங்களை “சாமி” என்று அழைப்பதையே பார்ப்பனர்கள் விரும்புறார்கள்.

ரகு ‘சாமி’ இருக்காரா?

‘ரகு இருக்காரா என அவரது துணைவியாரிடம் ஒருவர் கேட்க, என்ன “ரகு இருக்காரா” என மொட்டையா கேக்கிறீங்க! “ரகுசாமி இருக்காரானு கேளுங்க” எனக் கடிந்து கொண்டார். கேட்டவருக்கு வயது ஐம்பது; ஐயருக்கோ வயது முப்பதுக்குள். தனது வீட்டு விசேசத்திற்கு மங்திரம் ஓத ஐயரை அழைக்க வந்தவருக்குத்தான் இந்தப் பாடம்.

சாதி பாராட்டுகின்றவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொண்டு பெருமைப் பட்டுக் கொள்வதோடு நிறுத்திக் கொள்வதில்லை. தாங்கள் செய்கிற தொழிலுக்கும் இச்சாதியை இழுத்துப் போட்டுக் கொண்டு அதிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என பறைசாற்றிக் கொள்கிறார்கள்.
பிராமணாள் ஓட்டல்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. முதலியார் திருமண மண்டபங்களும், நாடார் கல்வி நிறுவனங்களும் என தங்களது சாதியின் பெயரால் அடையாளப் படுத்திக் கொள்வதையே பலர் பெரிதும் விரும்புகின்றனர்.

செத்தபிறகும் இவர்கள் சாதியை விடுவதில்லை. “முருகேச முதலியார் காலமானார்” என்றுதான் சுவரொட்டி அடிக்கிறார்கள். சுடுகாடுவரைக்கும் இவர்கள் சாதியை விடுவதில்லை.

ஜனனி ஐயர்!

”பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் நடித்த ஜனனி ஐயரும், நடிக்க வருவதற்கு முன்பு வாரம் தவறாமல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் செல்வது வழக்கமாம். ………..”

இதென்ன ஜனனி ஐயர்? பெண்கள் தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாமா? இது சரிதானா? இதற்கு முன் பெண்கள் இப்படி சாதிப்பெயரை சேர்த்துக் கொண்டதுண்டா? எனக்குத் தெரிந்து ஐயர் பெண்கள் மட்டுமே இவ்வாறு சாதிப் பெயரை தங்களது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டதுண்டு.

பிரபல ஆங்கில செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படித் தங்களை ஐயராக அடையாளப் படுத்திக் கொள்ளும் பலநூறு பார்ப்பனப் பெண்கள் இருக்கவே செய்கின்றனர். 

ஜனனி ஐயரைப் பார்க்க முடிந்த நமக்கு ஆண்டாள் முதலியாரைப் பார்க்க முடியவில்லையே? திரை உலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் மீனா நாயுடுவைப் பார்க்க முடியவில்லையே! ஆக, சாதி விசயத்தில் பார்ப்பனர்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்துள்ளார்கள் என எடுத்துக்கொள்ளலாமா?

ஜனனி ஐயரோ - முருகேச முதலியாரோ - நடேச ஐயரோ இப்படி தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விம்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விரும்புகிறான் என்பதுதான் இதன் பொருள். ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

ஒருவனின் பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவன் அடையாளப் படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக சாதியின் மதிப்பு பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. உயர்வு தாழ்வை மட்டுமே கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.

சாதியைச் சேர்த்துக் கொள்வது வெறும் அடையாளத்துக்கானது மட்டுமே என யாரும் வாதிட முடியாது. ஏன் என்றால் கந்தசாமி என பெயர் வைத்துக்கொண்டாலும் தாழ்த்தப்பட்டவன் கந்தசாமிப் பறையன் என்றோ கந்தசாமிப் பள்ளன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம்.

ஜனனி தன்னை ஐயராக அடையாளப்படுத்திக் கொள்வதன் பொருள் இதுதான்.

தொடர்புடைய பதிவுகள்:

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?


சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?....தொடர்ச்சி