Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Saturday, 18 April 2015

அடுத்த ஒலிம்பிக்ஸில் உசேன் போல்ட்டுக்கு ஆப்பு!

ஒரு பக்கம் 10 இலட்ச ரூபாயில் கோட்டு அணிந்து இந்தியாவின் செல்வச் செழிப்பை உலகெங்கும் பறைசாற்றும் இந்தியர்களின் வழிகாட்டி. 
மறுபக்கம் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் “இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்வியல் முறை” என நம் பாரதப் பெருமையை நிலைநாட்டும் இந்துக்களின் வழிகாட்டிகள். 


பெண்கள் கண்ணிமாக உடையணிய வேண்டும்  என ஒரு பக்கம் உபதேசம்.
கண்ணியமாக உடையணிந்துள்ள பெண்கள் முன்னிலையில் அம்மணமாய் அருள்பாலிக்கும் ஆன்மீக ஆண்கள் மறுபக்கம். 


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த முறை கோப்பை கிடைக்காவிட்டால் என்ன? அடுத்த ஒலிம்பிக்ஸில் ”உசேன் போல்ட்டுக்கு ஆப்பு! அம்மண ஓட்டத்தில் நமக்கே தங்கம்!” என ஆர்ப்பரிக்கும் அகோரிகள்.



இதுதான் புனிதம் என்பதோ!

Saturday, 7 March 2015

பெண்களின் பணிகள் நின்று போனால் ........

வரலாற்றில் எல்லா இடங்களிலும் பெண்கள் தமது குழந்தைகளைப்
பராமரித்தனர்கால் நடைகளில் பால் கறந்தனர்வயல்களில் உழவு வேலை
செய்தனர்துணிகளை வெளுத்தனர்ரொட்டி சுட்டனர்வீட்டைச் சுத்தம்
செய்தனர்துணிகளைத் தைத்தனர்நோயுற்றவர்களைப் பராமரித்தனர்,
மரணப்படுக்கையிலிருந்தவர்களின் அருகில் அமர்ந்து கண்ணீர் வடித்தனர்,
இறந்தவர்களைப் புதைத்தனர்பெண்களின் இந்த அரும் பணிகள் இன்றும்
உலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன”  - ரோஸலிண்ட் மைல்ஸ்

பெண்களின் பணிகள் நின்று போனால் அடுப்பங்கரை மட்டுமல்ல இந்த அகிலமும் சேர்ந்தே இருண்டு போகும்.

தொடர்புடைய பதிவுகள்:
பெண் என்ன செய்தாள்? …………தொடர்-3

Wednesday, 26 December 2012

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவே கிடையாதா?



ஊழலுக்கு எதிராக டெல்லியில் நடந்ததைப் போன்றதொரு போராட்டம் தற்போது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு நடந்து வருகிறது. ஊழலை ஒழிக்க, கடுமையான லோக்பால் சட்டம் தேவை எனக் கோரியவர்களைப் போலவே பாலியில் வன்கொடுமை செய்வோரை மிகக்கடுமையக தண்டிக்கவேண்டும்; அதிலும் டெல்லி மாணவி மீது பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிட வேண்டும் எனக்கோரி தற்போது போராடுபவர்களும் வலியுறுத்துகின்றனர். இந்தப் போராட்டத்தின் மூலம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு ஒரு முடிவு ஏற்படும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘இந்தியாடுடே’ ஆங்கில ஏட்டில் ஒரு கட்டுரை படித்தேன். மராட்டிய மாநிலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்தி அது. ஒரு காமுகன் அப்பாவி பெண் ஒருத்தியை பாலியல் வன்கொடுமை செய்து சின்னாபின்னப்படுத்தி விடுகிறான். வஞ்சிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தாரும் பலமுறை முறையிட்டும் காவல்துறையோ மற்றபிற வாக்கு வங்கி அரசியல் கட்சிகளோ உள்ளுர் பெரிய தலைகளோ இதை ஒரு பெரிய பிரச்சனையாக பார்க்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் யுத்தக் குழுவைச்சார்ந்த (PWG) நக்சல்பாரி புரட்சியாளர்களிடம் (இன்றைய மாவோயிஸ்டுகள்) முறையிடுகின்றனர். நக்சல்பாரிகள் முன்னிலையில் ஊர்மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்ட மக்கள் நீதிமன்றம் கூடுகிறது. பொது விசாரணைக்குப் பின் குற்றம் உண்மை என நிரூபிக்கப்படுகிறது. தண்டனை வழங்குவது குறித்து மக்கள் மத்தியில் அப்போதே கருத்து கேட்கப்படுகிறது. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி இவன்தான் என்பதற்கு அடையாளமாக அவனது மூக்கை அறுக்க வேண்டும் என மக்கள் தீர்ப்புக்கூற, அதுவே முடிவாகி அவனது மூக்கு வெட்டப்படுகிறது. இச்சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை முற்றிலுமாக ஒழிக்கப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் (இ.த.ச) பிரிவு 375, 376, 376A, 376B, 376C, 376D ஆகிய பிரிவுகள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றி சொல்கிறது. பிரிவு 376 ன்படி பாலியல் வன்கொடுமைக்கு (rape) அதிகபட்சமாக ஆயுள் தண்டனைதான் வழங்கமுடியும்.
 
மேற்கண்ட வழக்கில் நீதிமன்றம் சென்றிருந்தாலும்கூட அதிகபட்சம் ஆயுள் தண்டனைதான் வழங்கியிருக்க முடியும். ஆயுள் தண்டனை என்ன; தூக்கு தண்டனை நிச்சயம் என்றாலும்கூட அதற்கு யாரும் அஞ்சிவிடுவதில்லை. நமது கால்துறை மற்றும் நீதிமன்றங்களைப்பற்றி நம்மைவிட குற்றவாளிகளுக்கு மிக நன்றாகவேத் தெரியும். அது மட்டுமல்ல, தூக்கு தண்டனைக் குற்றங்களை நிரூபிப்பது மிகவும் கடினமானது என்பதால் குற்றவாளிகள் தண்டனை ஏதுமின்றி தப்பித்துவிடுவர் என்பதால் தூக்கு தண்டனை சரியான தீர்வு கிடையாது என்பதை பெண் வழக்கறிஞர்களே முன்வைக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிடுவதற்கு சட்டமே இல்லாத போதும், தூக்கிலிட வேண்டும் என்று குடியரசு மாளிகையை முற்றுகையிடுகின்றனர். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்கிற அதேவேளையில் இனி குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லைதான். உணாச்சிப் பெருக்கான இதுபோன்ற போராட்டங்கள், பாலியல் தொடர்பான குற்றங்களின் சமூகப்பின்னணியை பரிசீலிப்பதற்கும், குற்றங்களை நிரந்தரமாக ஒழித்துக்கட்டுவதற்கான தீர்வை நோக்கி இட்டுச்செல்வதில்லை.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பள்ளி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைப் போன்று நாடெங்கிலும் அன்றாடம் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் டெல்லியில் நடந்தது போன்ற ஒரு சில குற்றங்கள் மட்டுமே மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

மன்னர்கள் காலத்தில்

அடிமை உடைமைச் சமுதாயத்தில் தொடங்கிய பெண்கள் மீதான வன்கொடுமைகள், நிலவுடமைச் சமுதாயத்தில் கேள்வி கேட்பாரின்றி நடந்தேறின. பண்ணை நிலவுடமையாளர்கள் இதை ஒரு அன்றாட நிகழ்வாகவே செய்து வந்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கூலி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே. இன்றும்கூட வட இந்திய மாநிலங்களில் இதுதான் நிலைமை. அதே போல முதலாளிகளும், பணக்காரர்களும் இன்று பெண்கள் மீதான வன்கொடுமையை கமுக்கமாக அறங்கேற்றி வருகின்றனர். பணபலமும், அதிகார பலமும், சாதி பலமும்தான் இவர்களை எப்போதும் பாதுகாத்து வருகிறது.

மன்னர்கள் தங்கள் காமலீலைகளை கஜூராவ்க்களில் செதுக்கினார்கள்; எல்லோராவில் தீட்டினார்கள; காமசூத்திரங்களாக எழுதித் தள்ளினார்கள். இத்தகைய கழிவுகளைத்தான் இந்தியாவின் பாரம்பரியப் பெருமை என்று இன்றும் பேணிக்காத்து வருகிறார்கள் காமத்தின் பாதுகாவலர்கள்.

திரைப்படங்களில்

“மாங்கா - அட தேங்கா - கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா” என எம்.ஜி.ராமச்சந்திரன் பாடியதில் காமம் இல்லையா?  சுகன்யாக்களின் தொப்புள்களில் பம்பரம் விட்டு கலைப்பணியாற்றும் கேப்டன்களால் பாலியல் தூண்டல் ஏற்படாதா? காம வெறியை வளர்ப்பதற்காகவே ஜெயமாலினிகள், சில்க்ஸ்மிதாக்கள், அனுராதாக்கள், டிஸ்கோ சாந்திகள், சிம்ரன்கள், நமீதாக்கள் என தொடர்ச்சியாக காமக்கிழத்திகளை திரைப்பட முதலாளிகள். அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.

ஏடுகளில்

ஆடுகளைத் தோலுரித்து தொங்கவிடுவதைப்போல தினமலர், குமுதம், ஆனந்த விகடன், விகடன் டைம்பாஸ்,  நக்கீரன், சினிமா எக்ஸ்பிரஸ் ஈரான ஏடுகளில் அரைகுறை ஆடைகளுடன் காமக்கிழத்திகளின் ஸ்டில்களைப் போட்டு காமத்துக்கு கடை விரிக்கவில்லையா பத்திரிக்கை முதலாளிகள்?

தொலைக்காட்சிகளில்

மானாட - மயிலாட என்ற பெயரில் காமத்தைத் தூண்டும் கலா மாஸ்டர் அக்காள்களுக்கு பாலியல் குற்றங்களைத் தூண்டுவதில் பங்கு இல்லை என்று மறுக்க முடியுமா? குத்தாட்ட பாடல்களை நேயர் விருப்பம் என்ற பெயரில் திரும்பத் திரும்ப போட்டுக் காட்டி இஞைர்களிடையே காம போதையை ஏற்றவில்லையா தொலைக்காட்சி ஊடக முதலாளிகள்?

நாவல்களில்

சான்டில்யன்கள், சுஜாதாக்கள், ராஜேந்திரகுமார் - ராஜேஸ்குமார்கள் முதல் ‘சரோஜாதேவி’ புத்தகங்கள் வரை பெண்களின் அவையங்களை வர்ணித்து எழுதித் தள்ளியதில் காமம் வளர்க்கப்படவில்லையா?

நட்சத்திர விடுதிகளில்

‘டிஸ்கொத்தே’ என்கிற பெயரில் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்படும் இரவு நேர களியாட்டங்களால் காமம் தூண்டப்படாதா? உள்ளுர் மாரியம்மன் கோவில் திருவிழாக்களில்கூட காமக்கிழத்திகளை ஆடவிட்டுத்தானே பக்தியை வளர்க்கிறார்கள் நம்மூர் ‘நாட்டாமைகள்’.

இணையதளங்களில்

கூகுளைத்தட்டினால் கொட்டப்படும் உடலுறவுக்காட்சிகள் - படங்கள் மூலம்  சைவ சித்தாந்தத்தையா போதிக்கின்றனர் இணைய தள முதலாளிகள்? இவைகளைத் தடைசெய்ய வக்கில்லாமல் சைபர் குற்றங்களில் ஈடுபட்டால் இனி குண்டர் சட்டம் பாயும் என மிரட்டுகிறது அரசு. ஆளும் கூட்டத்தின் தில்லுமுள்ளுகளை அம்பலப்படுத்தி எழுதுவதுதான் இவர்கள் மொழியில் சைபர் குற்றங்கள் போலும்!

விளைவு

வேலை ஏதுமின்றி தண்டச்சோறு திங்கும் காம வெறிபிடித்த திமிங்கலங்களும், அரசே ஊற்றிக்கொடுக்கும் சாராயத்தை ஏற்றிக்கொண்ட வெறியர்களும் தனிமையில் உள்ள பெண்களை குறிவைத்து குதறுகிறார்கள்.  இதில் பெற்ற மகள் என்றும் பாராமல் சீரழிக்கும் அவலங்களும் நடந்து வருகின்றன. பணத்திமிர் கூடிவிட்டால் காமத்தின் வன்மம் மேலும் உக்கிரமாகிறது. கீழ்சாதிப் பெண்தானே என்கிற சாதிய வன்மமும் பாலியல் குற்றங்களில் முக்கியப்பங்காற்றுகிறது.

ஆளும் வர்க்கத்தின் பங்கு

இப்படி மன்னர் காலம் தொட்டு இன்றைய இணையதள காலம் வரை பெண்களை போகப்பொருளாக சித்தரித்து, ஆண்களிடம் காம வெறியை வளர்த்தவர்கள் – வளர்த்து வருபவர்கள் பணக்காரர்களும் முதலாளிகளுமே. இவற்றை எல்லாம் அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல இத்தகைய இழி செயல் புரிவோருக்கு கலைப்பணிக்கான விருதுகளையல்லவா வழங்கி கௌரவிக்கிறது!

எப்படித்தான் தடுப்பது?

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலட வேண்டும் என ஒரு பக்கம் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதுதான் தூத்துக்குடியில் பள்ளிச்சிறுமியைக் குதறினார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நடத்துவது, கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பெண்கள் கற்றுக்கொள்வது, தற்காப்பு ஆயுதங்களை எப்போதும் கையில் வைத்திருப்பது, தூக்கு தண்டனை உள்ளிட்ட கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவது, இறுதியில் ஆண்கள் பெண்களை ஒரு மனுசியாக மதிக்கக்கற்றுக்கொள்வது என பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்கப்படுகின்றன. முற்றும் துறந்த முனிகளே முந்தானைகளைத் தேடும் போது பக்திகூட இதில் சக்தியற்றுப்போகிறதே!

டெல்லியில் நடைபெறுவது போன்ற தன்னெழுச்சியான போராட்டங்கள் மூலமாகவோ அல்லது ‘பெண்ணியவாதிகள்’ முன் வைக்கும் தீர்வுகள் மூலமாகவோ புரையோடியிருக்கும் பாலியல் வன்மத்தையும், பாலியல் குற்றங்களையும் முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது.

தற்போதைய உலகமயக் கொள்கை “எதைச் செய்தேனும் பணத்தை ஈட்டு! எல்லாவற்றையும் அனுபவி!” என மக்களிடையே நுகர்வு வெறியை வளர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடகங்கள், கதைகள், திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் போன்ற ஊடகங்கள் மூலமாக பெண்களையும் ஒரு நுகர்வுப் பண்டமாக - அனுபவிப்பதற்கான ஒரு பொருளாக பார்க்கிற எண்ணத்தை வளர்த்துவருகிறார்கள்.  காசுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட திரைப்பட – பத்திரிக்கை - தொலைக்காட்சி – இணையதள - முதலாளிகளையும் இத்தகைய முதலாளிகளை பாதுகாக்கும் அரசுகளையும் ஒழித்துக்கட்டாமல் பாலியல் குற்றங்களுக்கு ஒரு போதும் முடிவுகட்டமுடியாது.

பாலியல் குற்றங்களுக்கு எதிரான போராட்டங்களை பெண்கள் மட்டுமே நடத்தி வெற்றி பெற்றுவிடவும் முடியாது. முதலில் பெண்கள் ஒவ்வொருவரும் புரட்சிப் போராளிகளாக மாறவேண்டும். அமைப்பாய் அணிதிரள வேண்டும். அப்பாவி பெண்களிடம்தான் காமாதி காம சூரர்களின் ‘வீரம்’ எடுபடும். அஜிதாக்களைக் கண்டால் அஞ்சி நடுங்குவார்கள். விலைவாசி உயர்வு, வேலையின்மை என பெருகிவரும் மக்கள் பிரச்சனைகளுக்குக் காரணமான தனியார் மயம் -  தாராள மயம் - உலக மயத்தை எதிர்த்த போராட்டங்களோடு பாலியல் வெறியைத் தூண்டுகிற சமூக வெறியர்களுக்கு எதிராகவும் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தும் போது பாலியில் வன்மங்களும் வெறியாட்டங்களும் இச்சமூகத்திலிருந்து துடைத்தெறியப்படும்.

இதற்கு இ.த.ச க்களும் ‘நிதி’மன்றங்களும் தேவையில்லை. மக்கள் நீதிமன்றங்களே இன்றைய தேவை.

Sunday, 4 December 2011

மீண்டும் உச்சத்தில் மல்லிகைப் பூ!

"மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!" என்ற தலைப்பில் சென்ற ஆண்டு ஒரு இடுகையை வெளியிட்டேன். முதலில் வினவு தளத்தில் வெளியானது. அதன் பிறகு எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ! என்ற தலைப்பில் ஊரான் வலைப் பூவில் மீள் பதிவு செய்யப்பட்டது.

 ஒரு கிலோ மல்லைகைப் பூவின் நேற்றைய விலை ரூபாய் 1500, இன்றைய விலை ரூ 2000. அப்படியானால் ஒரு முழம் என்ன விலை இருக்கும்? எப்படி கணக்குப் போடுவது? ஒன்றும் விளங்கவில்லை. சரி, இந்த விலை விற்கிறதே அவ்வளவு சாசு கொடுத்து வாங்குவார்களா என ஒரு கணம் யோசித்தேன். பலரின் கூந்தலைப் பார்த்து திகைத்துப் போனேன். இன்று திருமண நாள் என்பதால் திருமணங்களும் புது மனை புகு விழாக்களும் அதிகமாக நடைபெற்றன. மல்லிகைப் பூ இந்த விலை விற்கிறதே என்பதற்காக யாரும் கூந்தலை காயப் போடவில்லை. கொண்டையில் கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்கத்தான் செய்தன. 

தலையில் சூடிய ஆறு மணி நேரத்திற்குள் வாடி வதங்கி குப்பைக்குச் செல்லும் மல்லிகைப் பூ இந்த விலை விற்கிறது. என்னக் கொடுமை சார் இது? 

ஒரு பொருளின் பயன்பாடு பற்றியோ அதன் அத்தியாவசியம் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. உற்பத்தியாளனுக்கும் விற்பனையாளனுக்கும் கை நிறை காசு சேர்ந்தால் சரி. அவன் ஜோலி முடிந்தது.

ஒன்றை நாம் செய்யும் போது அதுவே நம் வழக்கத்திற்கொன்றானதாக மாறிவிட்டால் அதை யாரும் சொல்லாமலேயே செய்வோம். அப்படித்தான் பூச் சூடிக் கொள்வதும். அழகுக்கும் பெண்மைத்தன்மைக்கும் பூ அவசியமானது என பெண்கள் மீது அவர்கள் அறியாமலேயே ஒரு கருத்தியல் திணிக்கப்பட்டுள்ளதால் பெண்ணானவள் பூ அவசியமாதா இல்லையா என்பதைப் பற்றி அறியாமலேயே ஒரு வக்கமான செயலாக பூச்சூடிக் கொள்வதை செய்து வருகிறாள். வழக்கமாகிவிட்ட ஒரு செயலை அதற்கான செலவு அதிகம் என்பதால் அவ்வளவு இலகுவில் அதை விட்டுவிடுவதில்லை. வேண்டுமானால் குறைத்துக் கொள்வார்களே ஒழிய வழக்கத்தைக் கைவிட மாட்டார்கள். 

குடிப்பழக்கம் ஒருவனின் வழக்கமான செயலாக மாறிவிட்டபிறகு ஒரு குவார்ட்டர் ஆயிரம் ரூபாய் என்பதற்காக குடிப்பதை விட்டுவிடுவானா என்ன? குவார்ட்டரை வேண்டுமானால் கட்டிங்காக குறைத்துக் கொள்வானே ஒழிய குடியை விட்டுவிட மாட்டான்.

Thursday, 27 January 2011

எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ!

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்!
"வாங்க முடியாத உயரத்தில் மல்லிகை!"  என்ற தலைப்பில் இன்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. முன்பெல்லாம் எடைக்கு விற்கப்பட்ட மல்லிகை தற்போது நூறு பூக்கள் ரூ 35 முதல் ரூ40 வரை என எண்ணிக்கையில் விற்கப்படுகிறது. அதாவது ஒரு மொட்டு 40 பைசா. ஒரு கிலோ ஆயிரம் ரூபாயிலிருந்து இன்னும் விலை குறையவில்லை. எடைக்குப் பதிலாக தற்போது எண்ணிக்கையில் விற்கப்படுகிறது.

பூக்களின் 'அவசியம்' குறித்து "மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!" என்ற தலைப்பில் 30.12.2010 அன்று வினவு தளத்தில் எனது கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. தேவை கருதி அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

வினவுக்கு நன்றி!

ஊரான்
----------------------------------------------------------------------------------------------
தொடர் மழையை காரணமாகச் சொல்லி வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு முருங்கைக்காயின் விலை பதினைந்து ரூபாய். முந்தானை முடிச்சு படமா ஓடுகிறது இந்த விலை விற்பதற்கு? சந்தையில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். சந்தையை ஒரு சுற்று சற்றிவிட்டு அப்பாடா என ஒரு பெருமூச்சுவிட்டபடி என்னிடம் வந்தார்.
“என்ன பை காலியா இருக்கு. எதுவும் வாங்கலியா?” என்றேன்.
“வெலயக் கேட்டா பயமா இருக்கு. நான் ஏதோ அப்பிடி இப்பிடி எதையாவது வாங்கிக்கிட்டு போயிடுவேன். ஆனா சாதாரண ஜனங்க,  அதுவும் மாசம் மூவாயிரம்,  நாலாயிரம் சம்பாதிக்கிறவங்க என்ன செய்வாங்க பாவம்?” என்றார்.
கை நிறைய சம்பளம் வாங்குபவரையே மிரள வைத்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு.
விலைவாசி உயர்வு, உயிர்வாழும் உரிமையைப் பறித்துவருகிறது. இதே நிலை நீடித்தால், ஒன்று பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் அல்லது ஊட்டச்சத்துக் குறைவால் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆட்படுவதும், தொடர் மரணமும் அன்றாட நிகழ்வாகிவிடும்.
மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரசித்திப் பெற்ற மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாயாம். சென்ற வாரம் மல்லி என்றால் இந்த வாரம் கனகாம்பரம். கனகாம்பரமும் ஒரு கிலோ ஆயிரம் ரூபாயாம்.
சமீபத்திய தொடர் மழை காரணமாகவும், கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாகவும் விளைச்சல் வெகுவாகக் குறைந்துவிட்டதாம். நூறு கிலோ கிடைத்த ஒரு ஏக்கரில் இப்போது ஒரு கிலோதான் கிடைக்கிறதாம்.
விளைச்சல் குறைந்துவிட்டதே என விவசாயிகள் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. நம்பி மல்லியைப் பயிர் செய்துவிட்டார்கள். விளைச்சல் இல்லை என்றால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
பூ பயிரிடும் விவசாயிகள் மட்டுமல்ல இத்தொழிலையே நம்பி வாழும் பூக்களைக் கொய்வோர்,  பூக்களைக் கொள்முதல் செய்வோர்,  பூக்களை மொத்தமாக வாங்கி உதிரியாக விற்பனை செய்வோர், பூக்களைக் கோர்த்து முழம்போட்டு விற்பனை செய்வோர் என ஒரு பெரும் கூட்டமே பூக்களின் விலை உயர்வால் பாதிக்கப்படுவர்.
விளைச்சல் குறைவாலும், விலை உயர்வாலும் நுகர்வோருக்கு பாதிப்பில்லாமலா? பூக்களின் விலை உயர்வைக் கண்டு அங்கலாய்த்தாலும், கொத்துக் கொத்தாகக் கொண்டையில் பூச்சூடிக்கொள்ளும் மகளிர் பூச்சூடாமல் நிறுத்திக் கொள்வார்களா? இன்று மல்லி முழம் ஐம்பது ரூபாய். ஐம்பது  ரூபாய் என்ன, நூறு ரூபாயானாலும் பெண்ணுக்கு அழகு பூச்சூடுவதுதானே! விடுவார்களா என்ன? பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித்தானே நமது மகளிர் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் காலையிலும், வீட்டோடு இருக்கும் பெண்கள் மாலையிலும் பூச்சூடிக்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். கொண்டையில் சூடியப் பூக்கள் வாடி வதங்கி இறுதியில் குப்பைக்குத்தான் செல்கின்றன. யாருக்காகப் பெண்கள் கொண்டையில் பூக்களை சுமக்கிறார்கள்?
கோயிலுக்கோ அல்லது திருமணத்திற்கோ பூச்சூடாமல் சென்றுவிட்டால் இச்சமூகம் சும்மா விடுவதில்லை. சமூகத்திற்குப் பயந்தே பெரும்பாலான பெண்கள் பூச்சூடிக்கொள்கிறார்கள். பெண்களைப் போகப் பொருளாக மாற்றுகின்ற வேலையைத்தான் பூக்கள் செய்கின்றன. பிறரைக் கவருவதற்காகத்தான் நாம் பூச்சூடுகிறோம் என்பதை அறியாமலேயே பெண்கள் இதை ஒரு பண்பாடாகக் கருதி செய்து வருகிறார்கள். இன்று நடுத்தர மற்றும் மேட்டுக்குடிப் பெண்களிடம் வளர்ந்து வரும் குட்டைக்கூந்தல் கலாச்சாரம் பூக்களை சற்றே ஓரம் கட்டி வருவது ஒருவித முன்னேற்றம்தான்.
நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு ஆகிய விசேட நாட்கள் என்றால் பூக்களுக்கு ஏக கிராக்கிதான்.
ஆட்டோக்களிலும், லாரிகளிலும், பேருந்துகளிலும், அலுவலகங்களிலும், வீட்டுப் பூசை அறைகளிலும், கோயில்களிலும் உறையும் கடவுள் சிலைகளுக்கும், படங்களுக்கும் பூ அபிஷேகம் செய்து, பூ மாலைகள் சூடுவதை கிலோ ஆயிரம் ரூபாய் என்பதற்காக பக்தர்கள் நிறுத்தவா போகிறார்கள்? அறியாமையும் இயலாமையும் குடி கொண்டிருக்கும் நம் மக்களிடம் இதை எதிர்பார்க்க முடியாதுதான்.
எவ்வளவுதான் விலை ஏறினாலும் சந்தனக்கூடுகளிலும், பூச்சொறிதல்களிலும், பாடைகளிலும், மணமேடைகளிலும், தலைவர்களுக்காக வைக்கப்படும் அலங்கார வளைவுகளிலும்-மலர்ப்பாதைகளிலும்-வரவேற்பு மேடைகளிலும் கொட்டப்படும் பூக்கள் குறையவா போகிறது?
பிறந்த நாள் பொக்கேக்கள், பிரபல தலைவர்களின் சிலைகளுக்கும்-இறந்தவர்களின் உடலுக்கும்  மலர் மாலை-மலரஞ்சலி என மலர்களின் பயன்பாடோ விரிந்து செல்கிறது.
மேற்கண்டவைகள் அவசியமான அடிப்படைத் தேவைகள் இல்லை என்றாலும், மக்களிடையே நிலவும் அறியாமையின் காரணமாகவும் அற்ப பந்தாவுக்காகவும்தானே பூக்கள் இவ்வாறு கொட்டப்படுகின்றன.
நமது மண் வளமும், நீர் வளமும் நம் சொந்தங்களின் உழைப்பும் இது போன்ற அவசியமற்ற, அர்த்தமற்ற தேவைகளுக்காக வீணடிக்கப்பட வேண்டுமா?  மருந்துகளுக்காவும் உணவுக்காவும் பயன்படும் மலர்களை மட்டும் பயிர் செய்வது அவசியமானது. மற்ற தேவைகளுக்காக மலர்களை உற்பத்தி செய்வது அர்த்தமற்றது; அவசியமற்றது.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் காலத்திலிருந்து நமது விவசாயம் என்பது சுதேசித் தேவையை விடுத்து பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக மாற்றப்பட்டும் அந்த விதத்தில் அழிக்கப்பட்டும் வருகிறது. சுயதேவைக்காக இருந்த உணவுப் பயிர்களின் இடத்தில் பணப்பயிர்கள் ஆக்கிரமித்துவிட்டன. அதுவும் கூட விவசாயிகளை வாழவைப்பதாக இல்லை. பூக்களின் விலை உயர்வின் பின்னே உள்ள காரணம் இதுதான். மேலும் அழகு, நுகர்வு என்ற பெயரில் பூக்களை வைத்து மிகப்பெரிய நுகர்பொருள் சந்தை உருவாக்கப்பட்டிருக்கிறது.
அர்த்தமற்ற முறையில் இயற்கை வளமும், மனித வளமும் விரயமாக்கப்படுவதற்கு பூக்கள் ஒரு எடுப்பான உதாரணம். இந்தப் பொருளாதாப் பின்னணியோடு பெண்களை அழகு சாதனமாகவும், துய்த்தெறியும் பொருளாகவும் பார்க்கும் பண்பாட்டு காரணமும் இணைந்திருக்கிறது. அந்த வகையில் பூக்களின் மாய உலகிலிருந்து பெண்கள் வெளியேற வேண்டும்.
____________________
- ஊரான்

____________________