Showing posts with label வானதி சீனிவாசன். Show all posts
Showing posts with label வானதி சீனிவாசன். Show all posts

Wednesday, 24 September 2025

மைசூர்பாகில் மிதக்கும் கோவை!

ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு, கோவையில் ஸ்வீட் விலை மளமளவென சரிந்துவிட்டதால், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உள்ளிட்ட கடைகளில் ஸ்வீட் வாங்க மக்கள் முண்டியடிப்பதால், அங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

விலை குறைவு என்பதால், மக்கள் மூன்று வேளையும் ஸ்வீட்டை மட்டுமே தின்பதால் காய்கறி, மளிகை சாமான், பழக்கடைகள் வெறிச்சோடி கிடப்பதாக வியாபாரிகள் ஒருபக்கம் கவலையடைந்துள்ளனராம்.

கோப்பு படம்

மைசூர்பாகை மூன்று வேலையும் தின்பதால், தான் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும், மக்கள் நலனைவிட வியாபாரிகள் நலன் பெரிதல்ல என்பதால், அது பற்றிக் கவலைப்படாமல், எல்லோரும் ஸ்வீட் வாங்கித் தின்று, 'டாடி'க்கு நன்றி கூறி, இன்புற்றிருக்க வேண்டும் என  இனிப்பு வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்கள் தனது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதாகவும் கோவை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

விலை மலிவு என்பதால் ஒரு வாரத்துக்குத் தேவையான இனிப்புகளை மொத்தமாக வாங்கிச் செல்ல மக்கள் முயல்வதால், ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு மூன்று கிலோவுக்கு மேல் தரக்கூடாது என ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு குடும்பத்திற்கு ஒருவர்தான் ஸ்வீட் வாங்க வர வேண்டும் என்றும், வரும் போது குடும்ப அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

மேலும், பிற மாவட்டங்களிலிருந்து கோவையை நோக்கி மக்கள் படையெடுப்பதால், மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்படுவதாகவும், மக்கள் கோவைக்கு எதற்காகச் செல்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப அனுமதியைக் கட்டுப்படுத்துவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஸ்வீட் ஸ்டால்களில் மொய்க்கும் கூட்டத்தைப் பார்த்து, இனி 'அடுத்த முறையும் தாம்தான் சட்டமன்ற உறுப்பினர்' என்ற மகிழ்ச்சியில் வானதி திளைத்திருப்பதாகவும், தனது மகிழ்ச்சியை மக்களிடையே மைசூர்பாகுடன் பரிமாறிக்கொள்ளும் வேளையில், அதைத் தடுக்க திமுக அரசு சதி செய்வதாகவும் பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

எது எப்படியோ, ஜிஎஸ்டி குறைப்பால் கோவை மக்கள் இனிப்பில் மிதக்கிறார்கள். எனக்குகூட கோவை செல்ல ஆசை வந்துவிட்டது. கோவை செல்ல அனுமதி எங்கே வாங்க வேண்டும், வெளியூர் குடும்ப அட்டைகளுக்கு ஸ்வீட் கிடைக்குமா என்பதைத் தெரிந்தவர்கள் பகிர்ந்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன். 

ஊரான்

Tuesday, 10 June 2014

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு!

 தமிழக மீனவர்கள் மீதான சிங்கள இராணுவத்தின் தொடர் தாக்குதல் மற்றும் கைது விவகாரம் மோடி அரசிலும் தொடர்வது , 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அனந்தகுமார் மற்று வெங்கைய்ய நாயுடு ஆகிய நடுவண் அமைச்சர்களின் தமிழகத்திற்கு எதிரான பேச்சு, 

போன்ற தமிழக மக்களின் நலன் சார்ந்த விசயங்களிலும்-

மாதாந்திர டீசல் விலை உயர்வைத் தவிர்க்க வாய்ப்பில்லை என்கிற பெட்ரோலியத் துறை செயலாளரின் அறிவிப்பு,

இரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்கிற நடுவண் அமைச்சரின் அறிவிப்பு,

போன்ற ஒட்டு மொத்த இந்திய மக்களின்  நலன் சார்ந்த விசயங்ளிலும்,

தேர்தலுக்கு முன்புவரை காங்கிரஸ் அரசுக்கு எதிராக தொலைக்காட்சி ஊடகங்களில் உச்சஸ்தாயில் உதார் விட்ட ராகவன், கல்யாணராமன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க வின் தமிழக முன்கள வீரர்கள் 

இன்று

"உங்களுடைய அணுகுமுறை 'புதிய மொந்தையில் பழைய கள்ளு'! என்பதாகத்தானே உள்ளது?" என்று ஊடகங்களில் எழுப்பப்படும் சரமாரியான கேள்விக் கணைகளை எதிர்கொள்ள முடியாமல், முகம் வெளிறி, எச்சிலை விழுங்கி, முக்காடிட்டு, முகம் தொங்கிப் போய் உட்கார்ந்திருக்கும் காட்சிகள்  இருக்கிறதே! அடடா! கண் கொள்ளாக் காட்சி!

இப்படம் இன்றே கடைசி அல்ல! இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்றாலும் பிரேமுக்கு பிரேம் நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் நிறைந்து இருப்பதால் "பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு!" என்கிற திரை ஓவியத்தை அன்றாடம் தொலைக்காட்சி ஊடகங்களில் கண்டு களிக்குமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்!

கட்டணம் ஏதும் இல்லை! அனுமதி இலவசம்!!