Showing posts with label SS austenitic ferritic steel chromium nickel water tap. Show all posts
Showing posts with label SS austenitic ferritic steel chromium nickel water tap. Show all posts

Wednesday, 11 February 2026

பளபளக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எல்லாம் தரம் தானா? - நீங்கள் ஏமாறாமல் இருக்க சில உண்மைகள்!

"தக தக" என மின்னுவதைப் பார்த்து, தரம் என நம்பி நாம் வாங்கும் தட்டு, கரண்டி, தண்ணீர் குழாய்கள் (Taps) போன்றவை சில நாட்களிலேயே துருப்பிடித்து 'பல்ளிளிப்பதை' பார்த்திருப்போம். "ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) எப்படி துருப்பிடிக்கும்?" என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு.

உண்மை என்னவென்றால், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் அதன் அணு அமைப்பைப் பொறுத்து இரண்டு முக்கிய வகைகள் உண்டு. இதில் ஒன்று துருவை எதிர்க்கும், மற்றொன்று எளிதில் துருப்பிடிக்கும்.


முக்கிய வகைப்பாடுகள்:

1. ஆஸ்டெனிட்டிக் (Austenitic - 200 & 300 Series): 

இதில் குரோமியத்துடன் நிக்கல் (Nickel) கலந்திருக்கும். இது துருவை மிகச்சிறப்பாக எதிர்க்கும் திறன் கொண்டது.

Grade 304: இது மிகச்சிறந்த தரம். வாழ்நாள் முழுவதும் உழைக்கும். இதில் காந்தம் ஒட்டாது.

Grade 202: இதில் நிக்கல் குறைவாக இருப்பதால், ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் (குழாய்கள், சிங்க்) பயன்படுத்தினால் விரைவில் துருப்பிடிக்கும். இதிலும் காந்தம் ஒட்டாது என்பதால் பலரும் இதை '304' என நம்பி ஏமாந்துவிடுகிறார்கள்.

2. ஃபெரிடிக் (Ferritic - 400 Series):

இதில் நிக்கல் இருக்காது, வெறும் குரோமியம் மட்டுமே இருக்கும். இது இரும்பை ஒத்த குணமுடையது.
Grade 430: இதில் காந்தம் நன்றாக ஒட்டும். பார்ப்பதற்கு பளபளப்பாக இருந்தாலும், தண்ணீர் அல்லது ஈரப்பதம் பட்டால் மிக எளிதில் துருப்பிடித்துவிடும். விலையும் மிகவும் குறைவு.

எந்த வகை ஸ்டீல் சிறந்தது? - ஒரு பார்வை

அம்சம்ஆஸ்டெனிட்டிக் (304)ஆஸ்டெனிட்டிக் (202)ஃபெரிடிக் (430)
காந்தம் ஒட்டுமா?ஒட்டாதுஒட்டாதுநன்றாக ஒட்டும்
துரு எதிர்ப்புமிக அதிகம்மிதமானதுகுறைவு
விலைஅதிகம்நடுத்தரம்குறைவு
சிறந்தது எது?சமையலறை & குழாய்கள்பாத்திரங்கள் & கைப்பிடிகள்அலங்காரப் பொருட்கள்

வாங்கும் போது ஏமாறாமல் இருப்பது எப்படி?

காந்த சோதனை (Magnet Test): ஒரு சிறிய காந்தத்தை எடுத்துச் செல்லுங்கள். காந்தம் பலமாக ஒட்டினால் அது ஃபெரிடிக் (400 series) வகை. இது வீட்டு உபயோகத்திற்கு (குறிப்பாக தண்ணீர் படும் இடங்களுக்கு) ஏற்றதல்ல.

காந்தம் ஒட்டவில்லை என்றால் அது நல்லதா? இல்லை! ஏனெனில் ஆஸ்டெனிட்டிக் வகையிலேயே தரம் குறைந்த 202 கிரேடிலும் காந்தம் ஒட்டாது.

கெமிக்கல் டெஸ்ட் (SS Test Solution): பெரிய அளவில் பொருட்கள் வாங்கும் போது, கடைகளில் கிடைக்கும் 'SS Test Solution' திரவத்தைப் பயன்படுத்தலாம். 202 கிரேடு ஸ்டீலில் இதை வைத்தால் சிவப்பாக மாறும், உயர்தர 304-ல் நிறம் மாறாது.

ISI முத்திரை: தரமான பொருட்களில் SS 304 அல்லது SS 202 போன்ற தரக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருக்கும். அதை கவனித்து வாங்குங்கள்.

"மின்னுவதெல்லாம் பொன்னல்ல" என்பதைப் போல, "பளபளப்பதெல்லாம் தரமான ஸ்டீல் அல்ல". விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரம் குறைந்த ஸ்டீலை வாங்கி, பின்னாளில் துருப்பிடித்து, அதைக் கண்டு வருந்தி, துரு நீக்க 'பிளீச்சிங் போடவா, ஆசிட் போடவா, எதைப் போட்டால் துரு நீங்கும்' என படாத பாடுபட வேண்டாமே!

வருந்துவதை விட, வாங்கும்போதே சரியான கிரேடு எது என அறிந்து வாங்குவது புத்திசாலித்தனம்.

ஊரான்