Sunday, 13 April 2014

தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!



எதைச் சொன்னால் வெற்றிபெற முடியுமே அதை மட்டுமே வேட்பாளர்கள் வாக்குறுதிகளாத் தருகிறார்கள். ஆனால் நமது தேவைகளோ நமது வாழ்நிலைமைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுபவை. .இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றுச் செல்பவர்களிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோருவதா?  அல்லது நமக்குத் தேவையானதை நிறைவேற்றக் கோருவதா? இதில் நாம் எதைக் கோருவது?

இந்தக் கேள்விகளுக்கு விடை காணாமல் வரும் 16 வது மக்களவைத் தேர்தலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாது. இதற்கான விடையை ஒரு வேட்பாளரே சொல்கிறார். அவர் என்ன சொல்கிறார் என இனி பார்ப்போம்.

அரங்கத்தினுள் வாக்காளர்கள் நிறைந்திருக்கிறார்கள். வேட்பாளர் மேடை ஏறுகிறார். வாக்காளர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் அவரை வரவேற்கிறார்கள். சில நிமிடங்கள் ஆரவாரம் நீடிக்கிறது. மேடைக்கு முன்னாலிருந்தவர்கள் அனைவரும் எழுந்து அவரை வாழ்த்துகின்றனர். “மகத்தான தலைவர் நீடூழி வாழ்க!” என வாழ்த்தொலிகள் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.

“நன்றாகப் பேசுங்கள் என தலைவர் வேறு சொல்லி விட்டார். எதைப் பற்றி, எப்படி நான் பேசுவது? உப்புச் சப்பில்லாமல் எதைப் பற்றியாவது, ஏதாவது பேசலாம் என்பது உண்மைதான் பேச்சைக் கேட்பவர்களை அது குஷிப்படுத்தலாம் என்பது உண்மைதான். இத்தகையப் பேச்சுகளை பேசக்கூடிய சண்டப் பிரசண்டர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் நான் இப்படி பேசக்கூடிய சண்டப் பிரசண்டர் அல்ல”

இப்படித் தொடங்குகிறது அவரது பேச்சு. மேலும் அவர் தொடர்ந்து பேசுகிறார்.

“நான் ஒன்றும் பிரமாதமாக பேசிவிட முடியாது. இருந்தாலும் நான் என்ன செய்யட்டும்? மேடையில் ஏறிவிட்டேன். ஒரு சில விசயங்களையாவது பேசுகிறேன்.

வாக்காளர்களாகிய நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்காக முதற் கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். தேர்தல் ஆணையம் என்னை வேட்பாளராக பதிவு செய்துள்ளது. என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நம்பிக்கை என்றால் என்ன என்பதை நானறிவேன். இது என் மீது புதிய கடமைகளை - கூடுதலான கடமைகளை, புதிய பொறுப்புகளை - கூடுதலான பொறுப்புகளை அது சுமத்தும் என்பது இயற்கையே. நல்லது. கடமைகளை தட்டிக் கழிப்புது நம்மிடையே வழக்கமில்லை. நான் இந்தக் கடமைகளையும் பொறுப்புகளையும் மனப்பூர்வமாக ஏற்கிறேன்.
 
என் பங்குக்கு உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். என் மீது நீங்கள் தாராளமாக நம்பிக்கை வைக்கலாம். மக்களுக்கான கடமைகளை, தொழிலாளர் வர்க்கத்துக்கான கடமைகளை, விவசாயிகளுக்கான கடமைகளை என்னால் ஆற்ற முடியும். இதை நீங்கள் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் நம்பலாம்.”

குண்டுகல்யாணம் முதல் குஷ்பூ வரை உப்புச் சப்பில்லாமல் பேசி மக்களை குஷிப்படுத்தக் கூடிய ஏராளமான சண்டப் பிரசண்டர்களை நினைவு படுத்துகிறது இவரது பேச்சு.

மேலும் அவர் தொடர்கிறார்.

“ஜனநாயக நாடுகள் என்று கூறப்படும் நாடுகளில் அனைவரும் பங்கேற்கும் தேர்தல் முறை இருக்கின்றது; அங்கு தேர்தல்களும் நடை பெறுகின்றன. ஆனால், எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அங்கெல்லாம் தேர்தல்கள் நடக்கின்றன? முதலாளிகள், நிலப்பிரபுக்கள் இன்னும் பிற முதலாளித்துவ திமிங்கலங்கள் வாக்காளர்கள் மீது நிர்ப்பந்தம் செலுத்தும் சூழ்நிலைகளில் அங்கே தேர்தல்கள் நடக்கின்றன.”

நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களை இவரது பேச்சு நினைவு படுத்துகிறதல்லவா?.

வாக்காளர்களை வாழ்த்திவிட்டு அவர் தனது பேச்சை தொடர்கிறார்.

“உங்களுக்கு சில அறிவுரைகள் கூற விரும்பகிறேன். இவை வாக்காளர்களுக்கான ஒரு வேட்பாளரின் அறிவுரைகளாகும். முதலாளித்துவ நாடுகளில் ஒரு விசித்திரமான நிலையை நீங்கள் காணலாம். வாக்காளர்களுக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் இடையில் உள்ள விநோதமான உறவுகளைப் பற்றியே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

தேர்தல்கள் நடக்கும் வரையில் வேட்பாளர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? வாக்காளர்கள் மீது அப்படியே பாச மழை பொழிகிறார்கள்; அவர்களிடம் இச்சகம் பேசுகிறார்கள்; விசுவாசமாக இருப்போமென சத்தியம் செய்கிறார்கள்; எல்லா வகையான வாக்குறுதிகளையும் அள்ளித் தெளிக்கிறார்கள். அப்போது, எல்லாம் எப்படித் தெரிகிறது என்றால் வாக்காளர்களின் தயவில்தான் வேட்பாளர்கள் முழுமையாக இருப்பது போலத் தெரிகிறது.

ஆனால், தேர்தல்கள் முடிந்து விட்டால் போதும்; வேட்பாளர் வெற்றி பெற்று விட்டால் போதும், வாக்காளர்களுக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் இடையிலான உறவுகள் தலைகீழாக மாறிவிடுகின்றன. பிரதிநிதிகள் வாக்காளர்களை சார்ந்திருப்பதற்கு மாறாக அவர்கள் முற்றிலும் சுயேச்சையானவர்களாகி விடுகின்றனர். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது அடுத்த தேர்தல் வரும் வரையில், பிரதிநிதிகள் வாக்காளர்களிடமிருந்து சுதந்திரமாக விடுபட்டவர்களாக, மக்களுடன் எந்த ஒட்டுறவுமற்றவர்களாக இருக்கின்றனர்.
  
வெற்றி பெற்றவர் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவலாம்; சரியான பாதையிலிருந்து விலகி பழைமையானதொரு பாதையை மேற்கொள்ளலாம்; எந்த விதமான அரசில் சதிகளிலும்  அவர் ஈடுபடலாம்; எந்த ஒரு குணநலமுமற்றவராக மாறி கெட்டுக் குட்டிச் சுவராகலாம்; அவர் விருப்பம் போல எத்தனை முறை வேண்டுமானாலும் குட்டிக் கரணம் அடிக்கலாம். ஒரே வார்த்தையில் சொல்வதானால், அவர் முற்றிலும் சுயேச்சையானவர்; கட்டு திட்டம் ஏதுமற்றவர்".

இந்தியாவில் நாம் பார்த்து பழகிப் போன வேட்பாளர்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இந்தப் பேச்சாளர்.


தொடரும்……..

தொடர்புடைய பதிவுகள்:


தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

Saturday, 12 April 2014

தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!

1947 க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகள் தனியாகவும் சில ஆண்டுகள் மாநில கட்சிகளோடு கூட்டணி அமைத்தும், பாரதிய ஜனதா கட்சி பிற உதிரிக் கட்சிகளோடு கூட்டணி அமைத்தும், பல வண்ணக் கூட்டணி அமைத்து ஜனதாக் கட்சியும் இந்தியாவை ஆண்டுள்ளன.  இடது சாரிகள் நேரடியாக நடுவண் ஆட்சியல் பங்கு கொள்ளவில்லை என்றாலும் சில சமயம் மறைமுகமாக காங்கிரஸ் ஆட்சிக்கும் மற்றும் நேரடியாக ஜனதா கட்சி ஆட்சிக்கும் ஆதரவளித்துள்ளனர்.
இவை தவிர காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் அவர்களின் செல்வாக்குக்கு ஏற்ப மாநிலங்களில் மாறி மாறி ஆட்சி நடத்தி உள்ளன. புதிதாகத் தோன்றியுள்ள ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் சில காலமே ஆட்சி நடத்தினாலும் தற்போது அக்கட்சியில் சேர்பவர்கள் ஒன்று ஏற்கனவே பிற கட்சிகளில் பதவி வகித்தவர்களாகவோ அல்லது அதிகாரிகளாக ஆட்சி நிர்வாகத்தில் அங்கம் வகித்தவர்களாகவோதான் உள்ளனர். ஆட்சி சுகத்தை ருசிக்காத தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கும் இது பொருந்தும்.
சுருக்கமாகச் சொன்னால் 16 வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்தியாவை ஆண்டவர்கள்தான். இவர்கள் மாறி மாறி ஆட்சி நடத்தினாலும் 66 ஆண்டுகளுக்குப் பிறகும் குடிக்கத் தண்ணீர் கேட்கிறார்கள் மக்கள். குடிதண்ணீர் கூட கொடுக்க வக்கற்றவர்கள்தான் தாங்கள் வெற்றி பெற்றால் மக்களுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யப் போவதாக கதை அளக்கின்றனர்.
திருப்பூருக்குச் சென்றால் அத்திக்கடவு - அவினாசி என்கிறார்கள். வேலூருக்குச் சென்றால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த்திட்டம் என்கிறார்கள். கரூருக்குச் சென்றால் வெற்றிலை வாரியம் என்கிறார்கள். தெற்கே சென்றால் தென்னை வாரியம் என்கிறார்கள். அங்கே பாலம் - இங்கே பாலம் என்றும், இதோ தொழிற்சாலை அதோ தொழிற்சாலை என்றும் இப்படி ஊர் ஊருக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக வாரி வழங்குகிறார்கள். இந்தக் கூத்தை கடந்த 66 ஆண்டுகளாக நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைவிட ஜனநாயகக் கடமையாற்ற வாக்காளர் என்ற முறையில் நாமும் இந்தக் கூத்தின் கதாபாத்திரமாகவும் ஆகிவிடுகிறோம்.
கல்வி, வேலை வாய்ப்பு, குடி தண்ணீர், சாலை வசதி, மின்சாரம், மருத்துவம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாமல் நாம் தவித்து வருகிறோம். அடிப்படைத் தேவைகளான உணவு - உடை - வசிப்பிடம் கூட இன்றி வாழும் நிலைதானே இன்னமும் இந்தியாவில் நீடிக்கிறது. கிராமங்களிலிருந்து சென்னை திருப்பூர் போன்ற நகரங்களுக்கும், தமிழ் நாட்டிலிருந்து கர்நாடகாவுக்கும், வட மாநிலங்களிலிருந்து தமிழகம் - கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும், பீகாரிலிருந்து மராட்டியத்திற்கும் என மக்கள் பஞ்சம் பிழைக்க செல்வதைப் போல அலை அலையாய் இந்தியாவெங்கும் படை எடுக்கிறார்களே! ஏன் இந்த நிலை?

சொந்த மண்ணில் மக்கள் உயிர் வாழவே வழியில்லாத போது இந்தியாவை வல்லரசாக்குவோம் எனவும், 8% வளர்ச்சியை எட்டியே தீருவோம் எனவும் உதார்விடுகின்றன வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகள். நாம் எதைக் கேட்கிறோமோ அதைச் செய்ய வக்கில்லை; ஆனால் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுகளாக வாரி இறைக்க மட்டும் இவர்கள் தயங்குவதில்லை. இவர்கள் வெற்றி பெற்றுச் சென்ற பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் ஏன் நிறைவேற்றவில்லை? என்று இவர்களை கேள்வி கேட்க முடியுமா? இல்லை நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள் என்று இவர்கள் மீது குற்ற வழக்காவது தொடர முடியுமா?
தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயகக் கடமை என்பதை மட்டும் நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாக்களிக்காமல் இருந்து விட்டால் நாம் நமது கடமையிலிருந்து தவறி விட்டதாக கருதும் அளவுக்கு கடமை உணர்ச்சியோடு இருக்கிறோம். ஆனால் நமது தேவைகளை பூர்த்தி செய்வதுதான் தங்களது கடமை என வெற்றி பெற்றுச் செல்பவர்கள் எவரும் கருதுவதில்லையே, இது அவர்கள் தங்களது ஜனநாயகக் கடமையிலிருந்து தவறியதாகாதா என நாம் கேட்பதில்லையே ஏன்?
சரி! நாம் என்னதான் செய்வது? தேர்தலில் வாக்களிப்பதா? கூடாதா? தேர்தலில் வாக்களிப்பதோடு நமது கடமை முடிந்ததா? தேர்தலுக்குப் பிறகு நமக்கு கடமைகள் ஏதும் கிடையாதா?
எதைச் சொன்னால் வெற்றிபெற முடியுமே அதை மட்டுமே வேட்பாளர்கள் வாக்குறுதிகளாத் தருகிறார்கள். ஆனால் நமது தேவைகளோ நமது வாழ் நிலைமைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுபவை. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றுச் செல்பவர்களிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோருவதா? அல்லது நமக்குத் தேவையானதை நிறைவேற்றக் கோருவதா? இதில் நாம் எதைக் கோருவது?

Saturday, 29 March 2014

தமிழகமே திருமங்கலமாக மாறுமா?

கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்து கருத்து கணிப்பு வெளியிட்டதற்காக  மே,  2007 ல் மதுரை தினகரன் - சன் தொலைக்காட்சி அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 3 பேர் பலியானதையும் 7 பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டதையும் சாமான்யர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.


மு.க.அழகிரி
“2009 ல் திருமங்கலம் சட்டசபை இடைத் தேர்தலில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, டிவி, சி.டி பிளேயர், கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்களோடு பணத்தையும் கொடுத்து தி.மு.க வேட்பாளரை வெற்றிபெறச் செய்தவர் அழகிரி” என்றும் அந்த வெற்றியை “திருமங்கலம் பார்முலா” என்றும் ஊடகங்கள் வர்ணித்தன. திருமங்கலம் பார்முலா டில்லி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.

திருமங்கலம் பார்முலா இப்போது தமிழக பார்முலா ஆகியுள்ளது. இந்த பார்முலா குறித்து மக்களுக்குத் தெரியும். வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை என்று திமுக மறுத்தது. அது உண்மை என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. மத்திய அமைச்சர் அழகிரியின் உதவியாளரே இதை ஒப்புக்கொண்டுள்ளார்” என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

சங்கரன் கோவில் இடைத் தேர்தலையொட்டி 2011 மார்ச்சில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்  நாகர்கோவிலில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “திருமங்கலம் பார்முலாவை இப்போது அ.தி.மு.க தன்வசம் எடுத்துக்கொண்டுவிட்டது” என தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூ‌றினார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சிவகங்கை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் ஹெச்.ராஜா, தேனி தொகுதியில் போட்டியிடும் .தி.மு.. வேட்பாளர் அழகுசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், மதுரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பரத் நாச்சியப்பன்  ஆகியோர் அழகிரியை சந்தித்து தங்களுக்கு ஆதரவு கேட்டுள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஹெச்.ராஜா
மதுரை தினகரன் - சன் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்காகவும், திருமங்கலம் பார்முலாவுக்காகவும் அழகிரியை அன்று வசைமாரி பொழிந்தவர்கள்தான் இன்று அவரது காலை நக்கிப் பிழைக்க அவரையே சுற்றிச் சுற்றி வருகின்றனர்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார்
இடைத் தேர்தல் மட்டுமன்றி ஊராட்சி - நகராட்சி தொடங்கி சட்மன்ற - நாடாளுமன்றத் தேர்தல்கள் வரை இந்த நாட்டில் நடைபெறும் ‘மக்களாட்சித்’ தேர்தல்கள் எதுவாக இருப்பினும் திருமங்கலம் பார்முலாவை பின்பற்றினால் மட்டுமே வெற்றிக் கோட்டை எட்ட முடியும் என்பது வேட்பாளர்களுக்கும் தெரியும்; வாக்காளர்களும் புரிந்தே வைத்துள்ளனர். 16 வது மக்களவைத் தேர்தலில் செங்கோட்டையை குறிவைத்து அம்மா காய்களை நகர்த்துவதால் இம்முறை தமிழகமே திருமங்கலமாக மாற வாய்ப்புகள் அதிகம் என்பதால் வாக்காளர்களும் வாய் பிளந்து காத்திருக்கிறார்கள்.

தாங்கள் மட்டும் மானங் கெட்டால் போதாது என்பதால் ஒட்டு மொத்த மக்களையும் மானங்கெட்டவர்களாக மாற்றுவதையே நடைமுறைாயக் கொண்டுள்ள வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகளால் நாம் கண்ட பயன் என்ன? இதில் நல்லவர்களைத் தேட வேண்டுமாம்; இல்லையேல் நோட்டாவை நாட வேண்டுமாம். 

நாம் தேட வேண்டியதையும் நாட வேண்டியதையும் பற்றி வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.