Thursday, September 21, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-12

நீதித்துறையில் சனாதனம்

பிராமணர்களோடுதான் நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும். (மனு 8: 1). இன்று நீதித்துறையே  பிராமணர்கள் கையில் இருக்கும் போது அவர்களுக்கு என்ன கவலை?

வருணாசிரம தருமப்படிதான் விசாரணை நடத்த வேண்டும் (மனு 8: 24); சாஸ்திரப்படிதான் தீர்ப்பு வழங்க வேண்டும் (மனு 8: 3) என்கிறது சனாதனம்.

சபரிமலை வழக்கில் ஒரு பார்ப்பனப் பெண் நீதிபதியினுடைய தீர்ப்பும், அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு பார்ப்பன நீதிபதியின் தீர்ப்பும் சாஸ்திரப்படிதானே  வழங்கப்பட்டுள்ளது?

சூத்திரனும் நாத்திகனும் நீதிபதியாகக் கூடாது. அப்படி அவர்கள் நீதிபதிகளாகிவிட்டால் சேற்றில் சிக்கிய பசு போல அந்த நாடும் சிக்கி சீரழியும் (மனு 8: 20, 21). அதனால்தான் நீதித் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லையோ?

விசாரணையின் போது குற்றம் புரிந்தவன், அவன் பிராமணனாய் இருந்தால் 'உண்மையைச் சொல்' என்றும், வைசியனாய் இருந்தால் 'பொய் சொல்லாதே, சொத்து பூரா அழிஞ்சு போயிடும்' என்றும், சூத்திரனாய் இருந்தால் 'பொய் சொன்ன, கொன்னுடுவேன் படவா' என்றும் விசாரிக்க வேண்டும் (மனு 8: 88).

இன்றும்கூட காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில், ஆர் பி வி எஸ் மணியனுக்கு, பத்ரி சேஷாத்திரிக்கு, எஸ் வி சேகருக்கு ஒரு அணுகுமுறையும், சாதாரண சூத்திர உழைப்பாளிக்கு ஒரு அணுகுமுறையும் இருக்கத்தானே செய்கிறது.

பிராமணனைக் காப்பாற்ற பொய் சாட்சி சொல்லலாம் என்கிறது சனாதனம் (மனு 8-112). 

நமது தலைவர்களை மிகவும் இழிவுபடுத்திப் பேசிவிட்டு, வழக்கு என்று வந்துவிட்டால், தாங்கள் அவ்வாறு எதையும் பேசவில்லை என்று அவர்களே, அவர்களுக்கான பொய்சாட்சியாக பார்ப்பனர்கள் மாறிவிடுகிறார்களே? அங்கே நிற்கிறது சனாதனம்.

சூத்திரன் ஒரு பிராமணனைக் கொடுமைப் படுத்தினால், அவன் கையை வெட்டச் சொல்கிறது சனாதனம் (மனு 8: 270). மேலும், பெயரையும் சாதியையும் சொல்லி இழிவாகத் திட்டினால் பத்து அங்குல கம்பியைக் காய்ச்சி அவன் வாயில் சொருக வேண்டும் என்கிறது (மனு 8: 271).

உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் சன்மானம் தருவேன் என்று ஒரு சாமியார் பேசுவதற்கும்,  சனாதனத்தை எதிர்த்தால் நாக்கைப் பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என கஜேந்திரசிங் செகாவத் என்ற மத்திய அமைச்சர் பேசுவதற்கும் சனாதனம்தானே வழிகாட்டுகிறது.

பிராமணனுக்கு ஒரு போதும் கொலை தண்டனை விதிக்கக்கூடாது; தலையை மொட்டையடித்தாலே அது கொலைத் தண்டனைக்கு ஒப்பானது. ஆனால், மற்றவர்களுக்கு கொலை தண்டனை உண்டு. (மனு 8: 379). 

பிராமணன் எந்தப் பாவம் செய்தாலும் அவனைக் கொல்லாமல் காயமின்றி அவன் பொருளுடன் ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (மனு 8: 380).

சங்கரராமன் கொலையும், காஞ்சி நடுவாளும், பெங்களூருவும் நினைவுக்கு வருகிறதா? என்ன செய்ய சாஸ்திரப்படிதானே நீதி வழங்க முடியும்?

இப்படி நீதி பரிபாலன முறையில், மாறுபட்ட விசாரணை முறைகளும், வேறுபட்ட தண்டனைகளும் வகுக்கப்பட்டிருக்கிறது. இன்றளவும், இதுதான் நடைமுறையாகவும் இருந்து வருகிறது.

தொழிலாளர்களைச் சுரண்டுவதில் சனாதனம்

பிராமணனுக்குச் சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டவன் சூத்திரன் என்கிற தொழிலாளி. எனவே, ஒரு சூத்திரனுக்கு சம்பளம் கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ ஒரு பிராமணன் சூத்திரனிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம் என்கிறது சனாதனம் (மனு 8: 413).

சந்திரயான்-3 க்காக உழைத்த தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் சம்பள பாக்கி வைத்திருப்பதும் சனாதன ஆட்சியால்தானோ?

போரில் அடிமையாகப் பிடிபட்டவன் (1), பக்தியினால் வேலை செய்பவன் (2), வேசியின் மகன் அதாவது சூத்திரன் மகன் (3), தானமாகக் கொடுக்கப்பட்டவன் (4), விலைக்கு வாங்கப்பட்டவன் (5), குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்பவன் (6),  தான் செய்த குற்றத்திற்கான தண்டனையைக் கழிக்க வேலை செய்பவன் (7) என தொழிலாளர்களை ஏழு பிரிவுகளாகப் பிரிக்கிறது சனாதனம் (மனு  8: 415). பெரிய அளவில் ஊதியம் தராமல் இவர்களது உழைப்பைச் சுரண்டுவதற்கான ஏற்பாடுதான் இது.

அதேபோன்றதொரு சுரண்டல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில், இதுவரைத் தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களை, நான்கு சட்டத் தொகுப்புகளாகச் சுருக்கி, தொழிலாளர்களை ஏழு வகையாகப் பிரித்து, (1.நிரந்தரத் தொழிலாளர்கள், 2.NEEM தொழிலாளர்கள், 3.பயிற்சியாளர்கள் (apprentice), 4.தொழில் பழகுனர்கள் (probationers), 5.FTE தொழிலாளர்கள், 6.ஒப்பந்தத் தொழிலாளர்கள், 7.பதிலிகள்), இதில் பெரும்பாலானோருக்கு சொற்ப கூலியைக் கொடுத்து அதானி அம்பானி போன்ற பார்ப்பன பனியா முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது இன்றைய மோடி தலைமையிலான சனாதன ஆட்சி.

*****

சனாதனம் எப்படி உயிர் வாழ்கிறது, அதை எப்படி வீழ்த்தப் போகிறோம் என்பது குறித்து அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment