Thursday, September 28, 2023

"இந்தியா முன்னேற வேண்டுமானால் சனாதனத்தை வேரடி மண்ணோடு அழித்து ஒழிக்க வேண்டும்!" - அம்பேத்கர்

தர்காவில் தட்சணை வாங்கும் பிராமணன்

"பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில், பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டுதோறும் உர்ஸ் விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.

அவர் முஸ்லிம் உடை அணிந்து தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்திற்காக செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்" என்கிறார் அம்பேத்கர்.

முன்னேற்றத்திற்கான முதல் படி

"புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க முடியும் என்றாலும், அந்த அறிவைப் பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்பட வேண்டும். இந்த ஆர்வம் வரவேண்டுமானால் ஐயம் எழுப்பும் மனப்பான்மை ஏற்பட வேண்டும். ஏனென்றால், ஐயம் இல்லை என்றால் ஆய்வு நடக்காது. ஆய்வு இல்லை என்றால் அறிவு வளராது. ஏனென்றால், அறிவு என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மிடம் வந்து சேருகின்ற பொருள் அல்ல. தேடித் தேடித்தான் அதை அடைய முடியும். பெரும் முயற்சியும், அதன் காரணமாகப் பெரும் தியாகமும் செய்வதன் விளைவாகத்தான் அறிவு கிட்டுகிறது.

ஐயம் குறுக்கிட்டால்தான் ஆய்வு தொடங்கும். எனவே, ஐயப்படும் செயல்தான் எல்லாம் முன்னேற்றங்களையும் தோற்றுவிக்கிறது. அல்லது முன்னேற்றத்திற்கு முதல் படியாக அமைகிறது எனக் காண்கிறோம்"

அறிஞர் பக்கிள் அவர்களின் "நாகரிகத்தின் வரலாறு" என்கிற நூலிலிருந்து மேற்கண்ட மேற்கோள் ஒன்றை எடுத்துக்காட்டி அம்பேத்கர் கீழ்கண்டவாறு எழுதுகிறார்,

உதவாக்கரை வேதங்கள்

"பிராமணர்கள் ஐயம் எழுவதற்கு இடமே வைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் மிகவும் விஷமத்தனமான ஒரு கருத்தை மக்களிடையேப் பரப்பியிருக்கிறார்கள். வேதங்கள் பொய்யாதவை, தவறுக்கு இடமற்றவை என்பதே இந்தக் கருத்து. இந்துக்களின் அறிவு வளர்ச்சி நின்று விட்டதென்றால், இந்து நாகரீகமும் பண்பாடும் தேக்கமடைந்து முடை நாற்றக் குட்டை ஆகிவிட்டது என்றால் இதுதான் காரணம். இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தக் கருத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்க வேண்டும். வேதங்கள் உதவாக்கரையான படைப்புகள். அவற்றைப் புனிதமானவை என்றோ பொய்யாதவை என்றோ கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பிராமணர்கள்தான் அவற்றைப் புனிதம் என்றும், பொய்யாதவை என்றும் போற்றும்படிச் செய்து வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் பிற்காலத்தில் இடைச் செருகளான புருஷ சூக்தத்தின் மூலம் வேதங்கள் பிராமணர்களைப் பூமியின் அதிபதிகளாக ஆக்கியுள்ளன.

இனக்குழுவின் கடவுளர்களைத் துதித்து, அவர்கள் எதிரிகளை அழித்து, அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து, தங்களை வழிபடுபவருக்குக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளும் வேண்டுகோளைத் தவிர வேறெதுவும் இல்லாத இந்த உதவாக்கரை நூல்களைப் புனிதமானவை என்றும் பொய்யாதவை என்றும் ஆக்கப்பட்டது ஏன் என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லாமல் போயிற்று.

இந்தியாவின் வருங்காலம்

ஆனால் பிராமணர்கள் பரப்பி உள்ள இந்த விவேகமற்ற கருத்தின் பிடியிலிருந்து, இந்து மனத்தை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த விடுதலை ஏற்படாமல், இந்தியாவுகு வருங்காலம் இல்லை. இதில் உள்ள அபாயத்தை நன்றாக அறிந்தே இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். விளைவுகளுக்கு நான் அஞ்சவில்லை. மக்களைத்தட்டி எழுப்பி விடுவதில் நான் வெற்றி பெற்றால் பெரிதும் மகிழ்வேன்".
என்று, "இந்து மதத்தில் புதிர்கள்"  என்ற நூலுக்கான முன்னுரையில் தெரிவிக்கிறார் அம்பேத்கர். (தொகுதி: 8)









புதை சேற்றில் இந்து மதம்

மேலும், "பிராமணர்கள் இந்துக்களை ஒரு புதை சேற்றில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியச் செய்வதற்காகவும் பகுத்தறிவு ரீதியான சிந்தனைப் பாதையில்இந்துக்களை இட்டுச் செல்வதற்காகவும் இந்த நூலை தான் எழுதி உள்ளதாகக் குறிப்பிடுகிறார்" அம்பேத்கர். 

"இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது" என பிராமணர்கள் பரப்பி வரும் கருத்து, "உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது என்பதையும் இந்த புத்தகத்தில் எடுத்துக்காட்ட" அம்பேத்கர்  முயன்றுள்ளார்.

புதை சேற்றில் சிக்கித் தவிக்கும் இந்துக்களை, பிராமணர்களின் பிடியிலிருந்து மீட்பதற்கும், சனாதனத்தை அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் அம்பேத்கரின் எழுத்துக்கள் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.

ஊரான்

No comments:

Post a Comment