Wednesday, September 13, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

வருணங்களில் சனாதனம்

வருண-சாதியக் கட்டமைப்பு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் மற்றும் உயர்வு-தாழ்வைப் போதித்து கடைபிடிக்கும் பார்ப்பன மேலாதிக்கம் ஆகிய இவைதான் சனாதனத்தின் மிக முக்கியமான நான்கு தூண்கள். அதனால், இது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

வருணங்களின் உருவாக்கம்

நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்கிறான் பகவத் கீதையில் கிருஷ்ணன் (கீதை 4:13), அதன்படி,

பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், தோளிலிருந்து பிறந்தவர்கள் சத்திரியர்கள், தொடையிலிருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், பாதத்திலிருந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும், அந்த நான்கு வருணங்களைக் குறிப்பிடுகிறான் மனு. (மனு 1:31).

தூய்மைக்கு பார்ப்பனர்கள், வீரத்திற்கு சத்திரியர்கள், தானத்திற்கு வைசியர்கள், சேவை செய்வதற்கு சூத்திரர்கள் என்று அவர்களுக்கான குணங்களையும் வகுத்ததோடு,

பிராமணர்கள் வேதங்களை ஓதவும், சத்திரியர்கள் நாட்டையும் மக்களையும் காக்கவும், வைசியர்கள் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்யவும், சூத்திரர்கள் மேலே உள்ள மூன்று வருணத்தாருக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமென அவர்களுக்கான தொழிலையும் இறுதி செய்கிறான் மனு. (மனு 1: 88-91)

அவரவர் தொழிலை, அவரவர் தனித்தனியாக செய்ய வேண்டும் என்றும், ஒருவர் தொழிலில் மற்றவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் முன் நிபந்தனை விதிக்கிறான் மனு (மனு 1: 87)

வேதங்கள் மற்றும் ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டுள்ள எல்லா தருமங்களும், ஒழுக்கங்களும், இந்த மனுதரும சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன (மனு 1: 101, 102). இந்த தருமங்களைக் கடைபிடித்தால் சொர்க்கத்தை அடைய முடியும் என்கிறான் மனு (மனு 2: 9)

பெயர் சூட்டல்

பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் போது அது மூன்று பகுதிகளாக இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு பெயரிடும் போது, பிராமணன் பெயர் மங்களகரத்தைக் குறிப்பதாகத் தொடங்கி இறுதியில் சர்மா எனவும், சத்திரியன் பெயர் நலத்தைக் குறிக்கும் வகையிலான தொடங்கி வர்மா எனவும், வைசியன் பெயர் செல்வத்தைக் குறிக்கும் வகையில் தொடங்கி பதி எனவும், சூத்திரன் பெயர் தாழ்வைக் குறிக்கும் வகையில் தொடங்கி தாசன் எனவும் முடிய வேண்டும் என கட்டளையிடுகிறான். (மனு: 2: 31, 32)

சங்கர் தயாள் சர்மாவும், ராம் கோபால் வர்மாவும், குமுத் பல்லவ் பதியும், சித்த ரஞ்சன் தாசும் இன்றளவும் இருப்பதற்குக் காரணம் மனு இன்றும் உயிரோடு இருக்கிறான் என்பதைத்தானே காட்டுகிறது!

ஆனால், பெண்கள் இத்தகையப் பெயர்களை சூட்டிக் கொள்ள முடியாது. மாறாக, பெண்களின் பெயர்கள் சுகமாக கூப்பிடத்தக்கதாயும், கொடுமை இல்லாததாயும், அர்த்தமுள்ளதாயும், மங்களமாயும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறதாயும் இருக்க வேண்டும் என்கிறான் மனு. (மனு 2:33) அதாவது நெடில் எழுத்துகளில் (long vowels: a, e, I, o, u) முடிய வேண்டும் என்பதைத்தான் இப்படிச் சொல்லுகிறான். தெரிந்தோ தெரியாமலோ இன்றும்கூட, இந்துப் பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் இப்படித்தான் வைக்கப்படுகின்றன.

பூணூல் கல்யாணம்

என்னதான் முதல் மூன்று வருணத்தார் தலையிலும் தோளிலும் தொடையிலும் பிறந்தாலும், அவர்கள் மீண்டும் ஒருமுறை (துவிஜர்கள்-இருபிறப்பாளர்கள்)  பிறந்தால்தான் அவர்களை மனிதர்களாகக் கருத முடியும் என்பதால்,

பிராமணர்கள் 8 வயதில் பஞ்சு நூலாலும், சத்திரியர்கள் 11 வயதில் சனப்பை நூலாலும், வைசியர்கள் 12 வயதில் வெள்ளாட்டு மயிரினால் ஆன நூலாலும் பூணூல் அணிய வேண்டும் என்கிறான் (மனு 2: 36, 44).

பூணூல் அணியவில்லை என்றால் அவர்களை சாதி விலக்கம் செய்து அவர்களை விராத்திய ஜாதி என்று சொல்லி  வருணத்திற்கு வெளியே விரட்டுகிறான் மனு (மனு 2: 39). சாதி விலக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, இன்றும் கூட, இந்தியா முழுக்க பார்ப்பன குடும்பங்களிலும் தங்களை  சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்று கருதிக் கொள்பவர்கள் வீடுகளிலும் பூணூல் கல்யாணம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. 

இரு பிறப்பாளர்கள் உயர்ந்தவர்கள் (மனு 2-169) என்றும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் (மனு 2-66) பூணூல் அணிகிற உரிமை கிடையாது என்பதனால் அவர்கள் இழிவானவர்களாகக் கருதப்படுகிறார்கள். 

பூணூல் அணிவது ஒரு வருணத்திற்கான அடையாளம் அல்ல, மாறாக அது தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை காட்டிக் கொள்வதற்கான அடையாளம் என்று மகாத்மா காந்தி பூணூல் அணிவதைச் சாடுகிறார்.

திருமணம்

அவரவர், அவரவர் வருணத்திலேயே, தந்தையின் அனுமதியைப் பெற்று திருமணம் செய்து கொள்ள வேண்டும். (மனு 3-11, 12).

ஏராளமான பார்ப்பன வீட்டுப் பெண்கள் மற்ற சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்வதை இன்று அதிகமாகக் காண முடிகிறது. அதனால்தான் பிராமணப் பெண்கள் மற்ற சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது; பிராமணப் பையன்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பார்ப்பனர்கள் கதருகிறார்கள். 

ஆணவப் படுகொலை

கீழ் சாதிப் பையன்கள், மேல் சாதிப் பெண்களை திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து வருவதால், மற்ற சாதிகளிலும் இத்தகையக் கதரல்களைக் காணமுடிகிறது. மீறி திருமணம் செய்வோரை, ஒன்று சாதி விலக்கம் செய்வது, இல்லை என்றால் நாயக்கன் கொட்டாய் இளவரசனைப் (திவ்யா) போல, உடுமலை சங்கரைப் (கௌசல்யா) போல  படுகொலை செய்வது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

இதுபோன்று வருணக் கலப்பு மற்றும் சாதிக் கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதால், திருமணங்களை எட்டாக வகைப்படுத்தி அதில் சிலவற்றை இழிவானத் திருமணங்கள் என முத்திரை குத்துகிறான் மனு (மனு 3: 21, 41).

வருணக் கலப்பில் பிறந்த வாரிசுகளை, புதிய சாதிகளாக எப்படி வகைப்படுத்துகிறான் மனு என்பதை அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment