Wednesday, September 13, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-4

சாதிகளைத் தோற்றுவித்த சனாதனம்

வருண-சாதியக் கட்டமைப்பு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் மற்றும் உயர்வு-தாழ்வைப் போதித்து கடைபிடிக்கும் பார்ப்பன மேலாதிக்கம் ஆகிய இவைதான் சனாதனத்தின் மிக முக்கியமான நான்கு தூண்கள். இது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

சாதிகளின் உருவாக்கம்

இரு பிறப்பாளர்கள் என்று சொல்லப்படும் பிராமண-சத்திரிய-வைசிய வருணத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவரவர் வருணத்திலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விதி (மனு 3: 12) இருந்த போதும், வருணக் கலப்பை தடுக்க முடியவில்லை. ஐந்தாவது வருணம் என்று ஒன்று கிடையாது என்பதனாலும் (மனு 10:4), இத்தகைய வருணக் கலப்பை, தகாத மணம் அல்லது முறையற்ற மணம் என்று சொல்லி, இவர்களின் வாரிசுகளை,  வருணங்களின் சேர்க்கைக்கு ஏற்ப, தனித்தனி சாதிகளாக வகைப்படுத்துகிறான் மனு.

சங்கரா சாதிகள்

மேல் வருண ஆணுக்கும் கீழ்வருண பெண்ணுக்கும் பிறந்தவர்களை அநுலோம சாதி (மனு 10: 6-10) என்றும், கீழ் வருண ஆணுக்கும் மேல் வரும் பெண்ணுக்கும் பிறந்தவர்களை பிரதிலோம சாதி (மனு 10: 11-14) என்றும், அனுலோம சாதி மற்றும் பிரதிலோம சாதிகளின் வாரிசுகளுக்கு இடையிலும், இவர்களின் வாரிசுகள் மற்றும் வருணங்களுக்கு இடையிலும், உருவான வாரிசுகளை அந்தராள சாதி (மனு 10: 15-19)  என்றும், பாகியா சாதி என்றும், பூணூல் அணியாததால் உருவான பிராமண-சத்திரிய-வைசிய வாரிசுகளை விராத்திய சாதி (மனு 10: 20-25)  என்றும், ஐந்து வகை சாதிகளாகப் பிரித்து வைக்கிறான் மனு. சங்கரா சாதிகள் என்று அழைக்கப்படும் இந்தச் சாதிகளை, ஈன சாதிகள் என்கிறான்.

இத்தகைய கலப்புகளால், நூற்றுக்கணக்கான சாதிகள் உருவாக்கப்படுகின்றன.

நாவிதர் சாதி

பிராமண ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்தவனை அம்மஷ்டன் என்று நாமகரணம் சூட்டி, ரண வைத்தியம் செய்வது அவனுக்கான தொழில் என வரையறை செய்கிறான். (மனு 10: 8)

இது அநுலோம சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

மேளக்கார சாதி

வைசிய ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் உருவான வைதேக சாதி ஆணுக்கும், அம்பஷ்டப் பெண்ணுக்கும் பிறந்தவனை வேணன் என்ற சாதியாக்கி, தாளம் முதலிய வாத்தியம் வாசிப்பது அவனுக்கான தொழில் என வரையறை செய்கிறான். (மனு 10: 19, 49)

இது அந்தராள சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

கலைஞர் குடும்பத்தை 'மேளக்காரன்' என்று இன்றும் சனாதனவாதிகள் இழிவு படுத்திப் பேசுவதற்கான அடிப்படை இதுதான்.

மீனவ சாதி

பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவனை நிஷாதன் என்றொரு சாதியாக்கி, மீன் பிடித்தல் அவனுக்கான தொழில் என வரையறை செய்கிறான். (மனு 10: 8)

இது அநுலோம சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

ஆசாரி / விஸ்வகர்மா சாதி

சூத்திர ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்தவனை அயோகவன் என்றொரு சாதியாக்கி, தச்சு வேலை செய்வதை  அவனுக்குத்  தொழிலாக நிர்ணயிக்கிறான்.(மனு 10: 12) 

இவர்கள்தான் இன்று ஆசாரி அல்லது விஸ்வகர்மா என்று அழைக்கப்படுகின்றனர்

இது பிரதிலோம சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

பூணூல் அணியாத வைசிய ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்தவர்களையும் ஆசாரி என்கிற சாதியாக்கி தச்சு வேலை அவர்களுக்கானத் தொழிலாக நிர்ணயிக்கிறான் (மனு 10: 23)

இது விராத்திய சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

இருளர் சாதி

பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்த நிஷாதன் என்ற சாதியைச் சேர்ந்த ஆணுக்கும், சூத்திர பெண்ணுக்கும் பிறந்தவனை புலக்கசன் என்றொரு சாதியாக்கி, அவனுக்கு எலி மற்றும் உடும்புப்  பிடித்தலைத் தொழிலாக நிர்ணயிக்கிறான் (மனு 10: 18).

இன்று இருளர்கள் என்று அறியப்படும் இவர்களின் துயர நிலையை "ஜெய் பீம்" திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள்.

இது அந்தராள சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

பறையர் சாதி

"ஐயையோ! அந்த சண்டாளப் பசங்க நம்ம பொண்ணுங்கள இழுத்துட்டு ஓடுறாங்க"! என்று 1989 இல் "சீறும் சிங்கங்கள்" திரைப்படத்தில் வீ.கே.ராமசாமி வசனம் பேசும் போதும், 

"சண்டாளி உன் பாசத்தாலே, நானும் சுன்டெலியா ஆனே புள்ள" என்று 2003 இல், 'பருத்தி வீரன்' படத்தில் சினேகனின் பாடல் வரிகள் நம் காதுகளை வருடிய போதும், சண்டாளன் என்ற சொல்லின் பொருள் தெரியாமல் இரசித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவனை சண்டாளன் என நாமகரணம் சூட்டி, சாதிகளிலேயே ஆகக் கீழான சாதி என வகைப்படுத்தி, தொழிலுக்காக இவன் அலைந்து திரிய வேண்டும் என்று வரையறை செய்கிறான் மனு (மனு 10: 13, 52). சண்டாளர்கள்தான் பறையர்கள் என்பது தெரியாமலேயே, கெட்ட செயல்களில் ஈடுபடுபடுவோரை "சண்டாளப் பாவி!" என்று வசை பாடுவது இன்றளவும் தொடர்கிறது. 

இது பிரதிலோம சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

சக்கிலியர் சாதி

அந்தராள சாதிகளில் ஒன்றான நிஷாத ஆணுக்கும், வைசிய ஆணுக்கும் பிராமண பெண்ணுக்கும் பிறந்த வைதேக என்கிற சாதியைச் சேர்ந்த  பெண்ணுக்கும் பிறந்தவனை காருவாரன் என்றொரு சாதியாக்கி, தோல் வேலை செய்வதை தொழிலாக நிர்ணயிக்கிறான் (மனு 10: 35). இவர்கள்தான் இன்று சக்கிலியர் அல்லது அருந்ததியர் என்று அழைக்கப்படுகின்றனர்.

இது பாகியா சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

வெட்டியான்

சண்டாள ஆணுக்கும் நிஷாத பெண்ணுக்கும் பிறந்தவனை அந்தியாவசாயி என்றொரு சாதியாக்கி, சுடுகாட்டைக் காப்பதை அவனுக்குத்  தொழிலாக நிர்ணயிக்கிறான். வெட்டியான் என்று அழைக்கப்படுபவர்கள் இவர்கள்தான் (மனு 10: 39).

இது பாகியா சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

ஒரு சாதியாரைத் திட்டுகிறோம் என்ற உணர்வின்றியே, எதற்கும் பயன்படாத ஒரு வேலையை "வெட்டி வேலை" என்றும், சும்மா வெளியில் போய் சுத்திட்டு வந்தா "வெட்டிப் பய" என்றும் பலரும் பேசுவதைப் பார்க்கிறோம். 

செம்படவ சாதி

நிஷாத ஆணுக்கும் அயோவகப் பெண்ணுக்கும் பிறந்தவனை மார்க்கவன் என்றொரு சாதியாக்கி, ஓடம் விடுதலை  அவனுக்குத்  தொழிலாக நிர்ணயிக்கிறான் (மனு 10: 34).

இது பாகியா சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

இப்படி நூற்றுக்கணக்கான கீழ்நிலைச் சாதிகளை, சனாதனம் உருவாக்கி உள்ளது. இந்தச் சாதியினர் அனைவருமே ஈன சாதிகள் என்று இழிவுபடுத்தப்படுவதால், இவர்கள் ஊரில் வசிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை; மாறாக இவர்கள் அனைவரும் ஊருக்கு வெளியே மரத்தடியில், தோப்புகளில், மயானத்திற்கு அருகே, மலையடிவாரங்களில் வசிக்க நேர்ந்தது (மனு 10: 50).

அடுத்து உயர்சாதி மற்றும் இடைநிலைச் சாதிகளின் தோற்றம் குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

No comments:

Post a Comment