Thursday, September 21, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-13, இறுதிப் பகுதி

இதுவரை சனாதான தருமம் குறித்து மிக சுருக்கமாகவே பதிவு செய்ய முயற்சித்துள்ளேன். சனாதன தருமத்தின் மூல நூல் மனுதருமம் என்பதால் பெரும்பாலும் அதிலிருந்தே மேற்கோள்கள் காட்டி உள்ளேன். 

சனாதன தருமத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இல்லை. இதன் விளைவாகத்தான் சாதிய ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் இன்றளவும் கோலோச்சுகிறது. 'இந்து சாதி முறை, தேச வளர்ச்சிக்கு மகப் பெரிய இடையூறாக இருக்கிறது. இந்தியாவில் 75% மக்கள் உரிமை இழந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளதால், இந்தியா இறந்துபட்ட நாடு என்ற நிலையை அடையாவிட்டாலும், சிதைந்து வரும் நாடாக ஆயிற்று' என்பார் அம்பேத்கர் (தொகுதி 7). 

சனாதனம் எப்படி உயிர் வாழ்கிறது?

பிறப்பு முதல் இறப்பு வரை, ஏன் இறந்த பிறகும், ஒரு இந்து தனது வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஜாதகம் கணித்தல், வலைகாப்பு, திருமணச் சடங்குகள், கிரகப்பிரவேசம், பிறப்பு இறப்புச் சடங்குகள், யாகம் வளர்த்தல், திதி கொடுத்தல், புனித யாத்திரை, பரிகாரம் தேடுதல், கோவில்களுக்குச் சென்று வழிபடுதல் உள்ளிட்ட எண்ணற்ற சடங்குகள் சம்பிரதாயங்களுக்குப் பின்னே புரோகிதர் இருக்கிறான். இதன் மூலம் ஒரு பக்கம் நமது வருவாயின் ஒரு பகுதியை புரோகிதன் பறித்துக் கொள்வதோடு சனாதன தருமத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறான். 

சனாதனத்தைப் பலவீனப் படுத்த...

வாழ்வின் சுக-துக்க நிகழ்வுகளுக்கு புரோகிதனை அழைக்காதீர்கள். குடும்பப் பெரியோர்களைக் கொண்டு முடித்துக் கொள்ளுங்கள். அதிலும், சனாதான தருமத்தின் வழிகாட்டுதலைப் புறந்தள்ளி மாற்று முறைகளைக் கைக்கொள்ளுங்கள். பயிரிடுதலை இழி தொழில் (மனு 10: 84) என்று வசைபாடி, உழைக்காமல் உண்டு கொடுக்கும்  புரோகிதத் தொழிலை விட்டு பார்ப்பனர்கள் வெளியேறட்டும்.

பக்தி உள்ளவர்கள் வீட்டிலேயே வழிபாடு செய்யுங்கள். சனாதனத்தின் கோட்டைகளாக இருக்கும் கோவில்கள் அர்ச்சகனோடு புதைந்து போகட்டும். 

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்ப-துயரங்களுக்கான காரணங்களை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து அதைப் போக்குவதற்கு பகுத்தறிவுப் பாதையில் பயணிக்க முயற்சிப்போம். 

அகமண முறைதான் சாதி தோன்றுவதற்கும், சாதியக் கட்டமைப்பு நீடிப்பதற்கும் அடிப்படை என்று அம்பேத்கர் அவதானித்தாலும், புறச்சாதியில் கலப்பு மணம் புரிவோர், திருமணத்திற்குப் பிறகு சாதியையும் சேர்த்தே சுமப்பதால், சாதி அவர்களை விட்டு அகலவில்லை. ஆனாலும், காதல் திருமணங்கள், சாதியக் கட்டமைப்பில், விரிசலை ஏற்படுத்துவதால், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

சுயமரியாதையோடு வாழ...

நூறு வயது சத்திரியனைவிட பத்து வயது பிராமணனே மரியாதைக்குரியவன் (மனு 2: 135) என்று சொல்லும் சனாதனத்தை ஏற்று, பார்ப்பனப் பொடியன்களின் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து ஆசிபெறும், ஆடு அண்ணாமலையைப் போல சுயமரியாதையிழந்து மானங்கெட்டு வாழாமல், நெஞ்சை நிமிர்த்தி சுயமரியாதை உள்ள மனிதனாய் வாழப் பழகிக் கொள்வோம்.


கல்வியில் முன்னுரிமை

பார்ப்பனரல்லாத பிற சாதியினர், பெண்கள் உள்ளிட்ட தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக அரசுத் துறைகளில், வேலை வாய்ப்புகளைப் பெறும்போதுதான் அங்கே நீடிக்கும் பார்ப்பன மேலாதிக்கத்தில் உடைசலை ஏற்படுத்த முடியும். 

2024 நாடாளுமன்றத் தேர்தலில்...

சனாதனத்தை மீட்டெடுக்க முயலும் பாரதிய ஜனதா கட்சியை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவது உடனடி அவசரக் கடமையாக என்பதால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியை படுதோல்வி அடையச் செய்வது சனாதானத்திற்குக் கொடுக்கும் ஒரு பெரிய அடியாக இருக்கும்.

மனமாற்றமா? போராட்டமா?

மக்களின் அன்றாட வாழ்வில் சனாதனக் கருத்துக்களைப் புகுத்தி, அவர்களை இந்து என்ற சட்டகத்திற்குள் அடைத்து, இப்படித்தான் ஒரு இந்து வாழ வேண்டும் என்று பெரும்பான்மை உழைக்கும் மக்களை இந்து மதத்திற்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது சனாதனம்.

இந்து சமூகத்தில் நிலவும், சாதியக் கட்டமைப்பே, மன்னராட்சி-நிலவுடமை காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு சுரண்டல் வடிவமாகும். ஒவ்வொரு பிரிவினருக்குமென ஒரு தொழிலைத் தீர்மானித்து, அவர்கள் அந்தத் தொழிலைத்தான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வரையறுத்தது, குலத்தொழில் முறையிலான ஒருவகை வர்க்கப் பிரிவினையாகும். அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தை தொடர்ந்து சுரண்டுவதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை மோடி அரசு இன்று கொண்டு வந்துள்ளது.

தீண்டாமை உள்ளிட்ட இந்து மத நம்பிக்கைகள், கருத்தளவில் நீடிக்கும் வெறும் உளவியல் பிரச்சனையா, மனதளவில் மாற்றிக் கொள்வதற்கு? அது அவனது மத நம்பிக்கையோடு தொடர்புடையது. விதிவிலக்காக, இந்து மத நம்பிக்கைகளை கைவிட்ட சொற்பமான ஒரு சிலர் வேண்டுமானால் மாறக்கூடும். ஒட்டுமொத்த மக்களையும் அப்படி மாற்றிவிட முடியாது.

கருத்துத் தளத்தில், சனாதன தருமம் சமூக கட்டமைப்பின் மேல் தளத்திலும், வர்க்கப் பிரிவினை என்ற அடிப்படையில் சமூகத்தின் அடிக்கட்டுமானத்திலும் நீடிப்பதால், மதத்திற்கு எதிரான சீர்திருத்தப் போராட்டங்கள் மூலமாகவும், சுரண்டலிலிருந்து மக்களை விடுவிக்கின்ற வர்க்கப் போராட்டங்கள் மூலமாகவும்தான் சனாதனத்தை முற்றிலுமாக வீழ்த்த முடியும். 

சீர்திருத்தமும் வர்க்கப்போராட்டமும்

பெண் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம், சமத்துவபுரங்கள், பார்ப்பனரல்லாதோருக்கான இட ஒதுக்கீடு-குறிப்பாகப் பெண்களுக்கான தனி ஒதுக்கீடு போன்ற சில சீர்திருத்த நடவடிக்கைகள் சனாதனத்தில் பெரும் உடைப்பை ஏற்படுத்துவதால், அவற்றை ஆதரித்து ஊக்கப்படுத்தும் அதே வேளையில், உழைப்புச் சுரண்டலிலிருந்து ஒட்டு மொத்த மக்களையும் விடுவித்து சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்தை உத்தரவாதம் செய்யும் பொதுவுடமைச் சமூகத்தை அமைப்பதற்கான பாதையில் முன்னேற வேண்டும். 

சனாதான தருமம், அதாவது, இந்து மதம் இருக்கும் வரை சாதி இருக்கும், சாதி இருக்கும் வரை தீண்டாமை நீடிக்கும். சனாதன தருமம் இல்லாதொழியும் போதுதான் தீண்டாமையும் ஒழியும்.

மனிதனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் போது, மதத்தின் தேவையும் முடிவுக்கு வரும். இது, இந்து மதம் உள்ளிட்ட எல்லா மதங்களுக்கும் பொருந்தும். ஆனால் இருக்கின்ற மதங்களிலேயே ஆகக் கொடியது இந்து மதம் என்பதால், அதை எவ்வளவு விரைவில் வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவில் வீழ்த்த வேண்டும்.

சனாதனத்திற்கு எதிரானப் போராட்டம் கடந்த காலங்களிலும், நிகழ்காலத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்கள் தங்களுடைய நூல்களையேத் திருத்தத் தொடங்கி விட்டார்கள். நான்காவது வருணத்தவர்கள் சூத்திரர்கள் என்று நேற்று வரை புத்தகம் போட்டவர்கள் இன்று அதை வேளாளர்கள் என்று திருத்திப் போடுகிறார்கள். 

வருணப் பிரிவுகள், ஒருவரின் பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதல்ல; மாறாக, அது அவர்களின் செயலால், குணத்தால் தீர்மானிக்கப்படுவது என்று கதை அளந்து கொண்டிருக்கிறார்கள் சனாதனிகள். "வருணங்களை ஒருவரின் குணத்தைக் கொண்டு தீர்மானித்தால், கடைசியில் வருண அமைப்பு தலைகீழாக மாறிவிடும். வருண ஏற்பாடு என்பது குலைந்து போய்விடும். ஆகவே, செயலினால் மட்டும் வருண அமைப்பைத் தீர்மானிப்பது சரியல்ல" (ஸ்ரீமத் பகவத் கீதா, பக்கம்: 274, நாக்பூர் வெளியீடு) என்று வெளிப்படையாகவே தெளிவுபட்டுவிட்டது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம். 

கீதையையே திருத்தி எழுதுபவர்கள், சனாதனத்தின் இழிவுகளை மூடி மறைக்க நாளை எதையும் செய்யத் துணிவார்கள்! 

2022 இல் கீதை, நாக்பூர் வெளியீடு

1919 இல் மனுதருமம்

அவர்கள் சொல்வது போல, சனாதனம் அழிவில்லாதது; என்றும் நிலைத்திருப்தல்ல. மாறாக, உடன் கட்டை ஏறுதலுக்குத் தடை, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், விதவைகள் மறுமணம், தேவதாசி முறை ஒழிப்பு உள்ளிட்ட எண்ணற்ற சனாதனப் பழக்க வழக்கங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சனாதனத்தின் ஒரு பகுதி வீழ்த்தப்பட்டுள்ளது. 

Hence, sanatan is not eternal. It should be eradicated as soon as possible.

சனாதனம் குறித்த விரிவான விவாதத்திற்கு வித்திட்ட, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!

வணக்கம்!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment