ருசிய எழுத்தாளர் லேவ் தல்ஸ்தோய் (Leo Tolstoy) அவர்களின், “சிறுகதைகளும் குறுநாவல்களும்”
முதல் கதை “இரண்டு ஹுஸ்ஸார்கள்”.
ஹுஸ்ஸார்கள் என்றால் இராணுவ குதிரைப்படை வீரர்கள் என்று பொருள்.
தந்தை, மகன் என இரண்டு குதிரைப்படை வீரர்களைப் பற்றிப் பேசுகிறது இந்த நாவல். தந்தை காலத்தில் சதா குடி, ஆட்டம், பாட்டம், சூதாட்டம் என சமூகம் சீரழிந்து கிடந்ததையும், மகன் காலத்தில் அவை ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்ததையும் நாவலில் புரிந்து கொள்ள முடிகிறது.
அரசாங்க கஜானாவில் சேர்க்க வேண்டிய பணத்தையும் சேர்த்து சூதாட்டத்தில் இழந்து விடுகிறான் தந்தை. இந்தத் தந்தையைப் படிக்கும் பொழுது சூதாட்டம் எவ்வளவு கேடானது என்பதை உணர முடிகிறது. தந்தையை ஒப்பிடும் பொழுது மகன் பரவாயில்லை என எண்ணத் தோன்றுகிறது.
***
இன்றைய நமது சமூகத்தில் உள்ள ஒரு சில இளைஞர்கள், இதற்கு நேர் மாறாக, அதாவது தந்தையைவிட மோசமானவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
படிக்காத பாமரன், தான் சம்பாதிக்கிற கூலியில் பெரும் பகுதியை குடியிலே செலவழித்துவிட்டு, குடும்பத்தின் அன்றாட அவசியத் தேவைகளுக்கே அல்லல்படுவது, படித்த முட்டாள்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் இலட்சக் கணக்கில் பணத்தை இழந்து மனைவியின் நகைகளை அடகு வைப்பது அல்லது மனைவி மூலமாக மாமனார் வீட்டில் காசு வாங்கி வரச்சொல்வது, இதனால் கணவன் மனைவி இடையே சச்சரவுகள் ஏற்பட்டு மணமுறிவு வரை செல்வது என இன்றைய தமிழ்ச் சமூகம் சீரழிந்து கிடக்கிறது.
புறச் சூழல்களே மனிதனுடைய பழக்க வழக்கங்களையும், நடத்தைகளையும் தீர்மானிக்கின்றன. எனவே, புறச் சூழல்களை மாற்றி அமைக்காமல் உபதேசங்களால் மட்டும் நம் வீட்டுப் பிள்ளைகளைத் தீய பழக்க வழக்கங்களில் இருந்து மீட்டு விட முடியாது.
போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தாமல், போதைப் 'பொருட்களுக்கு ஆட்பட வேண்டாம்' என இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதனால் மட்டும் எதுவும் மாறப் போவதில்லை.
தீயொழுக்கம் கேடானது என்பதைத்தான் லேவ் தல்ஸ்தோய் 150 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறார்.
***
இந்தக் கதையில், இயற்கையை, மனிதர்களின் பழக்க வழக்கங்களை மிகத் துள்ளியமாகப் பதிவு செய்துள்ளார் லேவ் தல்ஸ்தோய்.
“உங்களிடம் கடைசியாக யார் அன்பாக நடந்து கொள்கிறாரோ, அவர்தான் உங்களுக்கு மிகவும் சிறந்த மனிதர். அந்தக் காலத்தைக் காட்டிலும் இப்பொழுது மக்கள் அதிக புத்திசாலிகளாக இருக்கிறார்கள்”
என்று, தான் நேசித்த பழைய காதலனைப் பற்றி தனது காதலனின் மகனிடம் சொல்லுகிறார் அந்தப் பெண்மணி. இந்தப் பெண்மணியின் மகளைத்தான் மேற்கண்ட காதலனின் மகனும் ஒருதலையாக நேசிக்கிறான்.
“பணி மூடிய சமவெளிப் பிரதேசம் சலிப்பூட்டுகின்ற முறையில் நெடுந்தொலைவு வரை நீண்டிருந்தது. அதன் குறுக்கே அழுக்குப் பிடித்த மஞ்சள் நிற நாடாவைப் போலப் பாதை அமைந்திருந்தது. உருகிக் கொண்டிருக்கும் பனியின் மேல் தகட்டின் மீது நடனமாடிப் பளிச்சிட்ட சூரிய ஒளி முகத்திலும் முதுகிலும் பட்டபொழுது வெப்பத்தினால் சுகமான உணர்ச்சி ஏற்பட்டது”
"அந்த இரவு அமைதிப்படுத்துகின்ற வருத்தத்தையும், காதல் ஏக்கத்தையும் ஒரு சமாதானக் காணிக்கையைப் போலக் கொடுத்தது. அங்குமிங்கும் சிறிதளவு புல் அல்லது உலர்ந்த குச்சிகள் நீட்டிக்கொண்டிருந்த அந்தக் களிமண் பாதை எலுமிச்சை மரங்களின் அடத்தியான இலைகளின் வழியாக நேரடியாக விழுந்த வெளிறிய நிலா வெளிச்சத்தில் கரும்புள்ளிகள் நிறைந்து காணப்பட்டது. சில சமயங்களில் ஒரு வளைந்த கிளையின் ஒரு பக்கத்தில் மட்டுமே வெளிச்சம் பட்டு அதன் மேல் வெள்ளைப் பாசி அதிகமாகப் படர்ந்திருப்பது போலத் தோன்றியது. வெள்ளி இலைகள் அவ்வப்பொழுது ஒன்று கூடி ரகசியம் பேசின”
இப்படி ஏராளமான காட்சிப் படிமங்களை இந்தக் குறு நாவலில் காண முடியும். இத்தகைய அபாரமான வர்ணனைகளே வாசகனை கதைக் களத்திற்குள் நேரடியாக அழைத்துச் செல்கிறது.
தொடரும்
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment