Friday, November 29, 2024

ஆனைமுத்து எனும் அப்பழுக்கற்ற போராளி!

வலிமையான உடல் கட்டமைப்பு, எடுப்பான உடை, மிடுக்கான நடை, பளபளக்கும் கன்னங்கள், கம்பீரமான குரல், தற்குறி ஆனாலும் எதுகை மோனையோடு அடுக்குமொழியில் எடுத்தியம்பி பார்வையாளரை வசிகரிக்கும் வாய்ஜாலம், பயணிக்க, தங்க சொகுசு வாகனங்கள் நட்சத்திர விடுதிகள் அன்றாட ஆடம்பர வாழ்க்கை அதற்கான திரள்நிதி என அரசியல் வானில் வலம் வரும் ஒருவனைத் தலைவனாக ஏற்கும் அவலம் தொடரும் இச்சமூகத்தில்தான்,

ஒட்டிய கன்னங்கள், குரலை ஓங்கி ஒலிக்கக்கூட முடியாத அளவுக்கு ஒடுங்கிய உடல் வாகு, எளிய மக்களின் வெள்ளை வேட்டி சட்டை, கொள்கையை பறைசாற்றும் தோளில் கருப்புத் துண்டு, மார்பைத் தழுவும் வெண்தாடி, சொற்ஜாலம் இல்லா எளிய பேச்சு, பரந்த அறிவு கொண்ட,

ஆனைமுத்து

பெரம்பலூர் முருங்கன் குடியில் 1925 இல் பிறந்து , அண்ணாமலை பல்கலையில் கல்வி பயின்று, இளம் வயதிலேயே சுயமரியாதை திராவிடர் கழகப் பணிகளில் ஈடுபட்டு, குரல் மலர், குறள் முரசு ஆகிய இதழ்களை நடத்தி, சசிகலா அம்மையாரை 1954 இல் வாழ்க்கைத் துணையாக ஏற்று,
 
பெரியாரின் கரம் பிடித்து, பொதுவுடமையை நேசித்து, திராவிடர் கழக முழுநேரப் பணிக்காக தனது அரசுப் பணியை 1956 இல் துறந்து, 1957 இல் சாதி ஒழிப்புக்காக பெரியார் அறிவித்த அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் 18 மாதம் சிறை சென்று,
 
தந்தை பெரியாரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் 2010 இல் 20 தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டு, பெரியாருக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கு இடம் கொடுக்காமல், பெரியாரின் வாரிசாக வளர்ந்து நின்ற போது 1973 இல் பெரியார் மறைந்த பிறகு, 1975 இல் திராவிடர் கழகத்திலிருந்து 
வெளியேற்றப்பட்டு,
 
1976 இல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியையும், 1978 இல் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையையும் அமைத்து, 

மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பெற அரசியல் போராட்டக் களம் அமைத்து, உத்தரபிரதேசம், பீகார், இராஜஸ்தான், தில்லி, பஞ்சாப் மேற்குவங்கம் போன்ற வட மாநிலங்களில் பயணம் செய்து கொள்கைப் பரப்பி,
 
அனைத்து வகுப்பினருக்கும் கல்வியிலும் வேலையிலும் விகிதாச்சார இடப்பங்கீடு கோரி இந்திய அளவில் போராடி, மண்டல் கமிஷன் அமைக்கத் தூண்டுகோலாய் இருந்து, 1974 இல் சிந்தனையாளன்” ஏடு, 1994 பெரியார் எராஎன்ற ஆங்கில ஏட்டை நடத்தி,
 
2006 இல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை நாடுகளில் கொள்கை பரப்புரை மேற்கொண்டு

மார்க்ஸ், பெரியார் அம்பேத்கர் வழியில் இந்தியச் சமூகம் ஒரு சோசலிச சமூகமாக மாற வேண்டும் என்ற இறுதி மூச்சோடு வாழ்ந்து, 2021 இல் மறைந்து, இன்று நூற்றாண்டு காணும் அந்த மகத்தான தலைவன்தான் தோழர் ஆனைமுத்து அவர்கள்.
 
இட ஒதுக்கீட்டிற்காக அவர் அப்படி என்னதான் செய்தார்? அடுத்து பார்ப்போம்!
 
ஊரான்
 
 தொடர்புடைய பதிவுகள்


No comments:

Post a Comment