Sunday, November 3, 2024

மழைக்காலம்: வருண பகவானே நினைத்தாலும் நடுவீட்டுக்குள் நுழையும் நரகலைத் தடுக்க முடியாது?

கிராமம் முதல் நகரம் வரை மழைக் காலங்களில் கழிவு நீரும், மழை நீரும் சாலைகளில் தேங்குவதும், நரகலோடு வீடுகளுக்குள் புகுவதும் வாடிக்கையாகிவிட்டது. 

அதேபோல, ஆண்டுக் கணக்கில் வாய்க்கால்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதாலும், ஆக்கிரமிப்புகளால் வாய்க்கால்கள் காணாமல் போனதனாலும், வயல்களில் மழை நீர் தேங்கி பயிர்கள் பாழாவதும்  வாடிக்கையாகி விட்டது.

சரி, மழை பெய்தால் நீர் பெருக்கெடுக்கத்தான் செய்யும். நிற்க, இப்பொழுது அப்படி ஒன்றும் பெருமழை எல்லாம் பெய்து விடுவதில்லை. கடந்த காலங்களில் பெய்ததைவிட மழையின் அளவு குறைவுதான். அகன்று கிடக்கும் ஆறுகளையும், ஓடி ஓய்ந்த ஓடைகளையும் கேளுங்கள். 'போடா வெண்ணெய்' என அவை உங்கள் செவிட்டில் அறையும்.
கோப்புப் படம்

சரி, கழிவு நீர் எங்கிருந்து வந்தது? கழிவு நீர் என்றால் அது அன்றாடம் வெளியேறிக் கொண்டே இருக்க வேண்டுமே?  இதுவரை ஏன் வெளியேறவில்லை? கழிவு நீர் வெளியேறுவதற்கான சாக்கடைப் பாதைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ஆங்காங்கே அடைப்புகளும் ஆக்கிரமிப்புகளும் இருப்பதால் சாக்கடை நீர் அப்படியே தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மழை இல்லாத காலங்களிலும் மக்களை தொல்லைக்கு உள்ளாக்கி வருகிறது. 

கழிவு நீர் வாய்க்கால்களோ, மழை நீர் வாய்க்கால்களோ முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பது மழை பெய்தால் மட்டும்தான் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரிகிறது. ஏன், பொது மக்களுக்கும் அப்போதுதான் புரிகிறது. வயிற்று வலிக்காரனே வலியை உணராமல், நோய் முற்றிய பிறகு, 'ஐயோ வலிக்குதே' எனப் புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை.
கோப்புப் படம்

சரி, ஒரு முறைதான் பட்டு அனுபவிக்கிறோமே, அடுத்த முறையாவது சரி செய்ய வேண்டாமா? தீபாவளி போன்ற ஒரு நாள் கூத்து போல மழைநீர் வெளியேற்றப்பட்டவுடன் அதிகாரிகளும் தேவைக்கேற்ப அவர்கள் வேலைகளைப் பார்க்கப்  போய் விடுகிறார்கள். மக்களும் அவரவர் வேலைகளில் மூழ்கி விடுகிறார்கள். மீண்டும் அடுத்த ஆண்டு, அதே கதை. அதே புலம்பல்.  

அதிகாரவர்க்கம் எதையும் தானாக செய்ததாக வரலாறு இல்லை. மக்களின் கோரிக்கைகளும்,  போராட்டங்களுமே அதிகார வர்க்கத்தை வேலை செய்ய வைக்கிறது. எனவே, மக்கள் போராட்டங்களை முன்னெடுக்காமல் மழைக்கால தத்தளிப்புகளிலிருந்து ஒரு காலம் யாரும் மீளவே முடியாது.

ஒரு பக்கம், பெரும்பாலான அரசியல் கட்சிகளில் துன்பங்களிலும் துட்டு பார்க்கும் ஆல்லக்கைகளை நிறைந்து கிடக்கிறார்கள்.  ஆனால், மறுபக்கம் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றவர்கள் குறைந்தபட்சம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அவை சார்ந்த அமைப்புகளாகத்தான் இருக்கின்றன. இத்தகைய கட்சிகள், அமைப்புகள் வலுப்பெற்றால் மட்டுமே மழைக்கால அவலங்கள் அகல வாய்ப்புகள் உண்டு. 

நடிகர்கள் உள்ளிட்ட பிழைப்புவாத அரசியல்வாதிகள் பின்னால் நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டிருந்தால், மழைக்காலங்களில் நரகல்கள் நடுவீட்டுக்கு வருவதை வருணபகவானே நினைத்தாலும் தடுக்க முடியாது.

ஊரான்

No comments:

Post a Comment