Saturday, November 23, 2024

ஊர்தோறும் சாராயபுரங்கள்-விரைவில்!

மரியாதைக்குரிய மதுப்பிரியர்கள்

பயணச் சீட்டு வாங்காமல் பேருந்தின் படிக்கட்டுகளில் பயணித்த ஒரு குடிகாரன்தான் சலசலப்புக்குக் காரணம். 'ஒன்று, பயணிச்சீட்டு வாங்கு, இல்லையேல் கீழே இறங்கு' என நடத்துனர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவன் இறங்கவும் இல்லை, பயணச்சீட்டு வாங்கவும் இல்லை. ஏற்கனவே தான் வாங்கி விட்டதாகவும், 'எங்கே காட்டு?: என்றபோது, 'இறங்கும் போது வாங்குகிறேன்' என்றும் அடாவடித்தனம்‌ செய்ய, வலுக்கட்டாயமாக நடத்துநர் 
அவனை கீழே இறக்கிவிட பேருந்து போளூரை நோக்கி விரைந்தது.

இரவு எட்டு மணிவாக்கில் வீடு வந்து சேர்ந்தேன். பத்து நாட்களாக குவிந்து கிடந்த இந்து தமிழ் திசை நாளேட்டின் சில பக்கங்களைப் புரட்டினேன்.

"திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பார்சனாப்பல்லி ஊராட்சியில், பல்வேறு ஊர்களுக்குச் சென்று வர வசதியாக பார்சனாப்பல்லி சென்னப்ப மலையோரம், ஆம்பூர்-அரங்கல் துருகம் மாநில நெடுஞ்சாலைப் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்தப் பயணிகள் நிழற்கூடம் தற்போது அசைவ உணவுக் கூடாரமாக மாறி உள்ளதால், அசைவ உணவு தேடி வரும் மதுப் பிரியர்களின் சரணாலயமாக அது மாறிவிட்டது.

பயணியர் நிழற் கூடம்

குடியர்கள் குடித்துப் போட்ட காலி பாட்டில்களாலும், தின்று துப்பிய எச்சில் கழிவுகளாலும், அந்தப் பேருந்து நிழற் கூடம் கழிசடைகளின் கூடாரமாக மாறி உள்ளதால், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள், அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், குடியர்களிடம் சிக்கி உள்ள நிழற்கூடத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோருவதாக" இந்து தமிழ் திசை நாளேடு 19.11.2024 அன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

நிழற்கூடத்தை மட்டுமா மீட்க வேண்டும்?

பட்டப் பகலில் சாலை ஓர புளிய மரத்தடி, காடு மேடுகளில் உள்ள மரத்தடிகள், மூத்திரச் சந்துகள், பேருந்து நிலைய கழிவறைகள், கேட்பாரற்றுக் கிடக்கும் குட்டுச்சுவர்கள்; ஆற்றங்கரை,  ஏரிக்கரை, கிணற்றடி, குளக்கரை, இருட்டிய பிறகு சாலையோர பேருந்து நிறுத்தங்கள், கட்டி முடிக்கப்படாத புதிய கட்டடங்கள்,
வீட்டுக் கொல்லைப்புறம், கட்டிலடி என பரந்த வெளி முதல் படுக்கை அறை வரை எங்கும் குடியர்களின் கண்ணாடி பாட்டில்கள் பார்த்தினீயம் போல பரவி விரவிக் கிடக்கின்றன. 

குடிகாரர்கள் எல்லாம், இப்போது மதுப்பிரியர்களாக அவதாரம் எடுத்துள்ளதால், கள்ளுண்ணாமை கண்ட வள்ளுவனுக்கே சவக்குழி தோண்டியாச்சு. மக்களின் உளவியலும் இன்று மாறிப்போச்சு.

எதிர்க் குரல்

வேலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் இருக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகளை அகற்றக் கோரி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மா-லெ), விடுதலை மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் சாராயக் கடைக்குப் பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்து ஊர்வலமாகச் சென்றபோது, அவர்களை வழி மறித்து, அறுபது பேரைக் கைது செய்து, மாலை வரை மண்டபத்தில் அடைத்து வைத்து, ஏழு பேர் மீது வழக்குத் தொடுத்து சிறையில் அடைந்துள்ளது தமிழ்நாடு அரசு.

பூட்டுப் போடும் போராட்டம்

இ.பீ.கோ இன்று இல்லை. அது பா.நீ.வி யாக மாற்றப்பட்டு விட்டதால் 126(2), 142, 189(2), 223, 351(2)  (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்துள்ளது கடமை தவறா 'கண்ணியமிக்க' வேலூர் காவல்துறை.

எங்களை விட்டுவிடுங்கள்!

போயஸ் தோட்டத்தில் முளைத்ததை, கோபாலபுரம் உரமிட்டு வளர்ப்பதால் காணும் இடமெல்லாம் கண்ணாடிக் காடுகள். பூமித்தாயின் உடலெங்கும் கண்ணாடிக் கீறல்கள். மண்ணில் கால் வைக்க பாதங்கள் அஞ்சுகின்றன. பாட்டில் சிதிலங்களில் பட்டு தெரிக்கும் கதிரவனின் ஒளிக்கீற்றால் கண்கள் கூசுகின்றன. குடியர்களின் வசவுகளால் காதுகள் செவிடாகின்றன. சாராய நெடி நாசிகளைத்  துளைக்கின்றது. 

"குடிக்காதவன் ஒருமுறைதான் அரசுக்கு வரிகட்டுகிறான், ஆனால் குடிகாரனோ அரசுக்கு இரண்டு முறை வரிகட்டுவதால், அவனுக்குப் பேருந்துகளிலும் இரயில்களிலும் கட்டணமில்லாப் பயணம் வழங்க வேண்டும்" என்று ஒரு அலுவலக நண்பர் சில ஆண்டுகளுக்கு முன்பு வேடிக்கையாய்ச் சொன்னதன் பொருள் புரிகிறது. ஆம்! செல்லப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வது உங்களது கடமையல்லவா?

எங்களுக்குச் சமத்துவபுரங்கள் இப்போதைக்கு வேண்டாம். ஊர் தோறும்  சுற்றுச் சுவருடன்கூடிய சாராயபுரங்களை உருவாக்குங்கள். கட்டணமில்லாப் பேருந்துகளில் குடியர்களை அங்கே அழைத்துச் செல்லுங்கள். வேண்டிய மட்டும் அவர்கள் அங்கே குடிக்கட்டும். அதற்கான காசை அவர்களிடமிருந்து கரந்து கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தேவை காசு, பணம், துட்டுதானே? 

எக்காரணம் கொண்டும் பாட்டில்களை வெளியே எடுத்துவர அனுமதிக்காதீர்கள். அவை வெளியே வந்தால் எங்கள் பாதங்களை குத்திக் குதரும். உள்ளேயே இருந்தால் உங்களுக்குக் கோடிகளைக் குவிக்கும். குடியர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கட்டும். ஆனால், நான்கு மணி நேரம் கழித்த பிறகே அவர்களை அழைத்துச் சென்ற அதே பேருந்துகளில் திரும்ப அழைத்து வந்து, அவரவர் இல்லங்களில் சேர்த்து விடுங்கள். அதற்குள் போதை தெளிந்து விடும். நாங்களும் குடியர்களின் வெறியாட்டங்களிலிருந்து தப்பிப்போம். 

"காட்டோர கூட்ரோடு
பகலில் 
பயணிகளின் நிழற்குடை,
இரவில் 
குடிகாரர்களின் வாழ்விடம். 
பேருந்துக்காகக் காத்திருக்கும் 
பள்ளி மாணவர்களின்
கனவுகளை சிதைக்கும்
காலி பாட்டில்கள்!" 

என்று, சென்ற ஆண்டு ஜூலையில் எனது பாட்டி ஊருக்குச் சென்றிருந்த போது எழுதியிருந்தேன்.

ஆம்! எங்களைப் படிக்க விடுங்கள்! பயணிக்க விடுங்கள்! எங்களது கனவுகளைப் சிதைக்காதீர்கள்! மொத்தத்தில் எங்களை விட்டுவிடுங்கள்! வாழ விரும்புவோரையாவது வாழ விடுங்கள்! 

முற்றும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment