பறை -
இன்றும்கூட பறையர்களைக் குறிக்கும் ஒரு குறியீடாகவேப் பார்க்கப்படுகிறது. சாவு,
திருவிழா, மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும்கூட பறை அடிக்கப்படும் பொழுது
அடிப்பவர்களைப் பறையர்களாகத்தான் பார்க்கிறது பொதுச் சமூகம்.
ஒரு காலத்தில்
ஆண்டைகள் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு அடித்த போதும், தற்போது
கட்டணம் நிர்ணயித்து அடிக்கும் போதும், அடிப்பவர்கள் மீது பறையர் பார்வை மட்டும்தான் விழுகிறது.
திராவிட இயக்க
மற்றும் பொதுவுடமை இயக்க மேடைகளில் அடிக்கும் போதும் இதே பார்வைதான். ஆயிரம்
அடவுகளைப் போட்டு அகிலத்தையே அதிர வைத்தாலும் பார்வை ஒன்றுதான்.
தென்மாவட்டங்களில், பட்டியல் சாதியைச் சேர்ந்த பள்ளர்கள்கூட பறையைத் தொடுவதில்லை என்று
கேள்விப்பட்டேன். அங்கும் பறை என்றாலே அது பறையர்களுக்கானதாகத்தான் தொடர்கிறது.
பறையர்கள்
தவிர்த்து,
பிற சாதியினர் பறை அடித்தால் பறை மீதான பார்வை மாறிவிடுகிறதா? பொதுவுடமை இயக்கங்களில்
வேண்டுமானால் பறையர் அல்லாத ஒருசிலர் பறை அடிக்கக்கூடும். அப்போதும்கூட, அடிப்பவர்
மீதான பார்வையும் அதேதான்.
திரைப்படப்
பாடல்களில் பறையும் ஒரு இசைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டாலும் பார்வை
மட்டும் மாறிவிட்டதா என்ன?
தியாகய்யர் ஆராதனையிலும், மார்கழியில்
மாம்பலக் கச்சேரிகளிலும், பூணூல்
தெரிய பார்ப்பனர்களால் பறை அடிக்கப்பட்டால், ஒருவேளை பறை
மீதான பார்வை மாறக்கூடும். இந்தியா வேண்டுமானால் வல்லரசாக மாறுமே ஒழிய, பறை
ஒருபோதும் பார்ப்பனர் உள்ளிட்ட பிற சாதிக்காரர்களின் கரங்களில் தவழப்போவதில்லை.
உற்பத்தி
முறையும், உற்பத்தி உறவுகளும் மாறும் பொழுது அல்லது வளர்ச்சியடையும் பொழுது பண்பாடும், இசையும், இசை வடிவங்களும்,
இசைக்கருவிகளும், பாப், ஜாஸ், சல்சா, ராக் & ரோல் எனவும், கிதார், கிளாரினெட், டிரம்ஸ் எனவும் மாறிக்கொண்டுதானே இருக்கின்றன?
இசையின் ஓசைகளை கணினிகளே கக்கும் போது, பறைஓசை மட்டும் கீபோர்டுகளில் கிளிக் ஆகாதா என்ன? பிறகு இங்கு மட்டும் ஏன் இழிவைச் சுமத்தும் பறையை ஒரு குறிப்பிட்ட
சாதியினர் மட்டும் சுமக்க வேண்டும்?
இன்றும்கூட பறை ஒருசிலருக்கு வாழ்வாதாரமாகக்கூட இருக்கலாம். வாழ வழியா இல்லையா பூமியில்? பறைக்குப் பாடை கட்டி வாழ்வாதாரத்திற்கு வேறு ஆதாரத்தைதா தேடலாமே?
பறையை, பண்டைய இலக்கியங்களே கொண்டாடும் பொழுது, அதைக் கைவிடுவது தமிழர் மரபைக் கைவிடுவதாகாதா என சிலர் காமுறலாம். பறை, அது வரலாற்றுப் பக்கங்களில் மட்டுமே இருக்கட்டும்; சாதியின் பெயரால் ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கும் பறை, குத்திக் கிழிக்கப்பட்டு கொளுத்தப்பட வேண்டியது.
கட்சிகள், இயக்கங்களின் வரவேற்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் மற்றும் திருவிழாக்கள், எழவு எதுவாயினும் அங்கு பறை மறைய வேண்டும்.
இதைத்தான் அழகிய பெரியவனின்
“வல்லிசை” நாயகன் திருவேங்கடம் உணர்த்துகிறான். நீ வேங்கடத்திற்குப் போகிறாயோ
இல்லையோ, இந்தத் திருவேங்கடத்தை ஒருமுறை தரி(வா)சித்துப் பார்! “வல்லிசை”யின் வலிமை தெரியும்!
ஊரான்
No comments:
Post a Comment