Monday, March 17, 2025

அறுந்த செருப்பு!

பசி எடுக்கிறதோ இல்லையோ மாலை நேரமானால் எதையாவது கொறிக்க வேண்டும் என பழக்கப்பட்ட மக்கள் கூட்டம் சிக்கன் பக்கோடா, மீன்வறுவல், போண்டா, சமோசா, பஜ்ஜி கடைகளையும் பானிபூரி கடைகளையும்  மொய்த்துக் கொண்டிருந்தது. டாஸ்மாக்கின் உபயத்தால் சிலரின் கல்லாப் பெட்டிகள் கணக்கின்றன. பலரின் 'பர்சுகள்' மெலிகின்றன. பணம் புழங்கினால் நாட்டு வளம் பெருகிவிட்டதாக சில பொருளாதாரப் புலிகள் சொல்லுவது உண்மைதானோ என்பதை மெய்ப்பிக்கும் வண்ணமாய் மாலை நேரக் கடைகள் காட்சியளிக்கின்றன.

ஸ்ப்ளெண்டர், பேஷன், ஹோண்டா சிட்டிகள் தங்களது எசமானர்களை இறக்கிவிட்டு, 'சைடு ஸ்டேண்டில்' சாய்ந்து கொண்டு ஒய்யாரமாய் ஓய்வெடுக்கலாம் என்றால் வருவோர் போவோருக்கு இடையூறாய் நிறுத்தப்பட்டிருந்ததால் பலரின் வசவுச் சொற்களை சுமந்து கொண்டு சோகமாய்க் காட்சி அளித்தன.

கோப்புப் படம்

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த போது, வேலூர் செல்லும் தனியார் பேருந்து நடத்துனருக்கும், அதற்கு அடுத்துப் புறப்பட வேண்டிய அரசுப் பேருந்து நடத்துனருக்கும் இடையே மிக மூர்க்மாய் சண்டை நடந்து கொண்டிருந்தது. தனது பேருந்து புறப்படுவதற்கு முன்பு அடுத்த பேருந்தில் யாரையும் ஏற்றக் கூடாது என்ற தனியார் பேருந்துக்காரர்களின் எழுதப்படாத சட்டமே சண்டைக்கு அடிப்படை.

எந்தப் பேருந்தில் நாம் பயணிக்க வேண்டும் என்பதையும் அந்த முதலாளிமார்களே தீர்மானிக்கிறார்கள். மீறி அடுத்தப் பேருந்தில் ஏறினால் மிரட்டி இறக்குகிறார்கள். ‘என் பயணம் என் உரிமை’ என்றெல்லாம் இங்கு பேச முடிவதில்லை.

சற்று நேரத்தில் தனியார் பேருந்து புறப்பட, அரசுப் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். காற்றைத் கிழித்துக் கொண்டு வேலூரை நோக்கிப் பேருந்து முன்னே விரைய, கிழிபட்ட காற்றோ சன்னல் இடைவெளிக்குள் புகுந்து முகத்தில் மோதி பின்னே மறைந்தது‌. பேருந்தின் வேகத்திற்கேற்ப காற்றின் வேகம் மாறுபடும் என்பதால் முகத்தைத் தழுவி நழுவும் அளவுக்கு சன்னல் திறப்பை குறைத்துக் கொண்டேன்.

மேற்கே கதிரவன் மறைய, கிழக்கின் இருள் மலைகளைப் போர்த்த, பேருந்தின் வேகத்திற்கேற்ப பக்கவாட்டில் தோன்றிய மலைகளும் பின்னோக்கி விரைந்து மறைந்தன. 

இது பங்குனியின் தொடக்கம். குளிரும் இல்லை, கடும் கோடையும் இல்லை என்பதால், பாலாற்றில் ஓரமாய் ஓடிய மெல்லிய நீரோடையைப் போல, ஜன்னல் காற்று இதமாய் முகத்தை வருட, நெடுஞ்சாலை நடுவே வரிசை கட்டி நின்ற வெண் விளக்குகள் பாதை காட்ட, ஆங்காங்கே சில செவ்விளக்குகள் தடம் மாறும் தடையங்களை சுட்டிக்காட்டி எச்சரித்து பின்னோக்கி மறைந்தன. 'சிவப்பு' எண்ணிக்கையில் குறைவுதான். ஆனால், அதுதானே சேதாரத்திலிருந்து நம்மைக் காக்கிறது.

தவறவிட்ட 'பிரேஸ்லெட்' ஒருமணி நேரத்தில் திரும்பக் கிடைத்ததை, கல்லூரிக்கால நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவில் “எல்லோரும் நல்லோர்களே” என்று கலீல் பகிர்ந்த செய்தியைக் கண்டபோது மற்றொரு கோணத்தில் எனது எண்ணம் ஓட, “நல்லவர்களைக் கெட்டவர்களாக்கும் மிகக்கொடிய 'ஆயுதம்' சொத்து!” என்றொரு செய்தியை முகநூலில் பகிர்ந்த போது, எனது வலது கால் பாதத்தின் மேல் ஏதோ விழுந்ததை உணர்ந்தேன். 

கீழே பார்த்தபோது அது நான்காக மடிக்கப்பட்டிருந்த 200 ரூபாய் தாள். அந்தத் தாள் முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்களுடையதுதான் என்பதை என் மனம் உறுதியாக நம்பியதால், அவர்களிடம் அதை எடுத்துக் கொடுத்தேன். அதைப் பெற்றுக் கொண்டவர், எடுத்துக் கொடுப்பது யார் என்றுகூட பார்க்க விரும்பவில்லை போலும்; மாறாக, 'பாக்கெட்டிலிருந்து செல்போன் எடுக்கும் போது விழுந்திருக்கும்’ என்று அவரது மனைவி அவரிடம் சொல்வது மட்டும் என் காதில் விழுந்தது. சட்டைப் பையில் செல்போனோடு ரூபாய் தாளை வைத்தால், செல்போனை எடுக்கும் பொழுது அதோடு சேர்ந்து அந்தத் தாளும் வெளியே வந்து கீழே விழுந்த அனுபவம் எனக்கு உண்டு. 

இந்த அனுபவத்தைக் கைபேசியில் பதிவு செய்து கொண்டே வந்த பொழுது நேரம் போனதே தெரியவில்லை. வேலூர் பேருந்து நிலையம் வந்துவிட்டது. பேருந்திலிருந்து கீழே இறங்கிய போதுதான் தெரிந்தது இடது கால் செருப்பின் ஒரு வார் அறுந்திருந்தது. இரவு மணி எட்டு, இந்த நேரத்தில் செருப்பை செப்பனிடவும் முடியாது, வேறு செருப்பும் வாங்க முடியாது என்பதால் சற்றே காலை இழுத்தவாறு அடுத்தப் பேருந்தில்  வாலாஜாவுக்குப் பயணித்து, அங்கிருந்து ஒரு ஆட்டோவில் எனது இல்லம் இருக்கும் இடத்தில் இறங்கினேன். 

நான்கடி எடுத்து வைப்பதற்குள் செருப்பின் அடுத்த வாரும் அறுந்து போனது. அதனுடைய ஆயுள் அவ்வளவுதான், இனியும் அதை செப்பனிட முடியாது என்பதாலும், அறுந்த செருப்போடு நடப்பது மேலும் சுமைதான் என்பதாலும், இதுவரை என்னைச் சுமந்த அந்தச் செருப்பைத் தூக்கி எறிந்துவிட்டு வெறுங்காலோடு வீடு நோக்கி நடக்கலானேன். 

இதுவரை நாம் சுமந்த சில எண்ணங்கள்கூட நமக்குப் பயன்பட்டிருக்கலாம்; ஆனால் இனியும் அத்தகைய எண்ணங்கள் பயன்படாது என்று உணர்ந்த பிறகும் அவற்றைத் தூக்கிச் சுமப்பதும் ஒருவிதத்தில் சுமைதானே?

ஊரான்

Sunday, March 16, 2025

நவீன தொழில்நுட்பக் காலத்தில் நாக்கு வழிக்கவா கணினி அறிவியல்? பாவம் சுந்தர் பிச்சைகள்?

வருமான வரி கட்டுகின்ற அளவுக்கு எனக்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யச் சொல்லி அவர்கள் தொடர்ந்து அறிவிப்பு அனுப்புகிறார்கள். என்ன செய்ய?

எனது வங்கிக் கணக்கு  விவரங்கள், தொலைபேசி எண் மற்றும் ஓய்வூதியம், நிரந்தர வைப்பு நிதி வட்டி வருவாய் உள்ளிட்ட அனைத்தும் PAN அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்த்தாலே எனது வருவாய் என்ன என்பது தெரியுமே?



எல்லா வகையான வருவாயையும் வெளிப்படையாகக் காண்பிப்பவர்கள் மிகச் சொர்ப்பமே‌. வருவாயை மறைத்து பொய் கணக்குக் காட்டுவதற்கென்றே தனி படிப்பு வைத்திருப்பது முதலாளித்துவத்தின் 'சிறப்பு'.
ஒருவரின் அனைத்து வகையான வருவாய்களையும் கண்டுபிடித்து, கணக்கிட்டு வரியை வசூல் செய்ய வேண்டியது அரசின் கடமையல்லவா?

அறிவாளிகள்  காய்க்கும் மரங்களைத்தான் உலுக்குவார்கள். ஆனால் இங்கோ, காய்ந்த மரங்களை உலுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சரகுகளுக்காக! நிறுவன ஓய்வூதியம் மற்றும் சேமநல நிதி ஓய்வூதியம் என‌ இரண்டையும் சேர்த்து 'ஐயாயா...யிரம்' ஓய்வூதியம் பெறுபவனிடம் என்ன இருக்கும்? 

அப்படி இருக்க, குற்றவாளிக்கு அழைப்பாணை அனுப்புவது போல எதற்குத் தொடர்ந்து எனக்கு அறிவிப்பு அனுப்புகிறார்கள்?  எதைத் தட்டினாலும் விவரங்களைக் கொட்டும் இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் நாக்கு வழிக்கவா கணினி அறிவியல்? பாவம் சுந்தர் பிச்சைகள்? 

ஊரான்

Thursday, March 13, 2025

பெண்களைப் பாழாக்கும் கவிதைகளை மட்டும் ஒரு போதும் எழுதாதீர்கள்!

ஏன் பெண்கள் என்றால் மட்டும் சிலருக்கு எச்சில் ஊற கவிதைகள் ஊற்றெடுக்கின்றன?  பழங்காலம்தொட்டே,
பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் ஆண்களின் வக்கிரப் பார்வைதான்  பெண்களை வர்ணிக்கும் கவிதை வரிகள்! காமத்தில் திளைப்பவனால் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும்.

அதனால்தான் அன்று பெண்களின் அவயங்களை சிலைகளில் வடித்தார்கள். ஓவியங்களில் தீட்டினார்கள். கதைகளிலும் நாவல்களிலும் காமத்தைத் தெளித்தார்கள். இன்று திரைப்படங்களில் துருத்திக் காட்டுகிறார்கள்! 

விளைவு? கணன்று கொண்டிருந்த காம நெருப்பு, இன்று பச்சிளம் சிறுமி முதல் பல்லுபோன பாட்டிகள் என பலரையும் எரித்துப் பொசுக்கிக் கொண்டிருக்கிறது.


கவிதை எழுத பொருளா இல்லை? 
மக்களின் பாடுகளைப் பாடுங்கள். பெண்களைப் பற்றியும் பாடுங்கள். ஆனால், அவயங்களைத் தவிர்த்து அவர்களின் வேதனைகளை வெளிக்கொணருங்கள்!

இருவருக்கும் இடையிலான காதலை, அந்தரங்க ஆசைகளை, உணர்வுகளை, அனுபவங்களை ஏன் மற்றவர்களுக்குப் பாய் விரித்து பந்தி போடுகிறாய்?
உனது காதலி என்ன, அடுத்தவனின் நுகர்வுப் பொருளா? காதலி பற்றியக் கவிதை வரிகளை அடுத்தவன் படிக்கும் பொழுது உன் காதலியையும் சேர்த்தே அவன் அனுபவிக்கிறான் என்பதை நீ உணரவில்லையா?

கவிதை எழுதித்தான் ஆக வேண்டும், கற்பனைகளுக்கு வடிகால் தேடித்தான் ஆகவேண்டும் என்றால்,

மக்களின் வறுமை வேதனைகளைப் பாடத் தெரியாது என்றால்,

பசுமை நிறைந்த காடுகளையும் பாலை வனக்கங்களையும் 
மலைகளையும் மடுவுகளையும்
ஆறுகள் ஏரிகுளங்களையும் வயல்களையும் தோட்டங்களையும் 
பூத்துக் குலுங்கும் மலர்களையும் 
பறந்து மகிழும் பறவைகளையும்
ஓடி ஆடும் விலங்குகளையும் வானத்தையும், கடலையும்
என, நம் கண்முன்னே பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையைப் பாடுங்கள்! 
இக்கவிதைகளை, பாடல்களைப்
படிப்பவனுக்கும் ஆபத்தில்லை. பாடுபொருளுக்கும் ஆபத்தில்லை!

பெண்களைப் பாழாக்கும் கவிதைகளை மட்டும் ஒரு போதும் எழுதாதீர்கள்! உங்களுக்குக் கோடி 'புண்ணியம்'!

ஊரான்

Wednesday, March 12, 2025

பெரியார் மக்களின் மனங்களில் வாழ்கிறாரா?

மக்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் மூடநம்பிக்கைகள் பரவி விரவிக் கிடக்கின்றன. பரிகாரங்களைத் தேடி மக்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மாசிமக புனித நீராடல்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பெரியாரின் தலைமையில் திருமணம் செய்து கொண்ட ஒரு மூதாட்டி, தன் பேத்திக்கு வரன் பார்க்க வருவோரை குளிகை தொடங்குவதற்கு முன் வந்து விடுங்கள் என்கிறார். வரன் குறித்துத் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், ராகு காலம் எனப் பலர் துண்டித்துக் கொள்கின்றனர்.


முற்போக்கு எனும் ஒரு சிறிய வட்டத்திற்குள் இன்று பெரியார் முடக்கப்பட்டிருக்கிறார். தங்களுக்குள்ளாகவே பெரியாரைப் பற்றி பேசி, புலகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள் நம் தோழர்கள். அயல்நாடுகளுக்கெல்லாம் பெரியாரை எடுத்துச் செல்பவர்கள் உள்நாட்டில் எடுத்துச் செல்ல மறந்தது ஏனோ? 

அன்று மக்களையும் தொண்டர்களையும் தேடி கிராமங்களுக்குச் சென்றார் பெரியார். இன்று தலைவர்களைத் தேடி தங்கும் விடுதிகளுக்குச் செல்கின்றனர் தொண்டர்கள்.

செல்லும் இடமெல்லாம் கிராமங்களில் மக்களோடு மக்களாக வாழ்ந்ததோடு அவர்களோடு தங்கிப் பழகியதால், பாமர மக்களால் பெரியாரைப் புரிந்து கொள்ள முடிந்தது. பகுத்தறிவும் அன்று பற்றிப் படர்ந்தது. 

ஆனால் இன்று, பெரியாரை எடுத்துச் செல்பவர்கள் சொகுசுந்துகளிலே பயணித்து, குளு குளு அறைகளில் ஓய்வெடுத்து திரும்பி விடுகின்றனர். மெய்நிகர் உலகில் மட்டும் பெரியாரை மெச்சிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மெய்யுலகில்  பெரியாரைப் போன்று யாரும் இல்லையே?  அதனால், பெரியாரின் சிந்தனைகளும், கருத்துக்களும் மக்களின் மனங்களில் ஆழப் பதியாமல் காற்றோடு காற்றாய் கரைந்து போகின்றன.

மார்க்சியத்திற்கும் இதே நிலைதான். தலைவர்கள் மக்களோடு ஒன்று கலக்காமல் பகுத்தறிவும் மார்க்சியமும் ஒருபோதும் மக்களைச் சென்றடையாது.

வீழ்ந்து கிடப்பவனை உடனிருந்து, கரம் பிடித்து தூக்கி நிறுத்துபவர்களையே மக்கள் நம்புவார்கள்.

ஊரான்

Tuesday, March 11, 2025

காணொளி அலப்பறைகள்!

இன்றைய பெரும்பாலான காணொளிகள் எதற்காக? 

இரும்பு, அலுமினியம், பித்தளைப் பாத்திரங்களில் சமைத்து உண்பது பற்றி ஒரு காணொளியில் உலோகங்களைப் பற்றி கதை அளந்திருந்தார்கள். இரும்புச் சட்டியில சமைச்சா உடம்புக்கு  இரும்புச் சத்து சேருமாம்? என்னமோ சட்டியில உள்ள இரும்பு சூடாகி உருகி (melt) அப்படியே நேரா உணவோடு சேர்ந்து குருதியில் கலக்குற மாதிரி பேசுறாங்க. இந்தக் காணொளியில் ஐயர்ன், அலுமினியம், நிக்கல், குரோமியம் போன்ற உலோகங்களை அலசுவதோடு மட்டுமல்ல,  'ஹெவி மெட்டல்' பத்தி எல்லாம் பேசுறாங்க. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பத்தி எல்லாம்கூட பேசுறாங்க.
Metallurgy படிச்சவனையே மிரள வைக்கிறாங்கன்னா பாத்துக்கங்களேன்!


இவர்களுக்கு அறிவியல் எதுவும் தெரியாது. தெரிந்தது போல காணொளியை வெளியிட்டு அதை நம்மைப் பார்க்க வைத்து அதன் மூலம் காசு பார்ப்பவர்கள்.

இவர்களின் காணொளிப் பார்வைகள் மில்லியங்களைத் தொடும் பொழுது இவர்கள் லட்சங்களில் புரளுகிறார்கள். சவுக்கு சங்கர் அதற்கு ஒரு எடுப்பான உதாரணம். அவன் அரசியலில் கதை அளந்து காசு பார்த்தான். இவர்கள் அறிவியல் என்ற போர்வையில் கதை அளந்து காசு பார்க்கிறார்கள்.

சமையல், உணவு, உடல் நலம், ஜாதகம், ஜோதிடம் என எண்ணற்ற தலைப்புகளில் இவர்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது காணொளிகளைக் காணும் பொழுது நம்முடைய டேட்டா உருவப்பட்டு அவர்கள் காசு பார்க்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் சொல்வதை உண்மை என நம்பி அதை கடைபிடித்து கெட்டுப் போகிறவர்களும் நாம்தான்.

துட்டு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொள்கிறோம்.

அறிவியல் ரீதியாக மக்களுடைய சிந்தனை மட்டம் மிகவும் பின்தங்கி இருப்பதால்தான்.
இத்தகையக் காணொளிகளை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்; அவற்றை நம்பவும் செய்கிறார்கள்.

எனவே, நாம் உண்மையை, அறிவியலை புரிந்து கொள்வதோடு, அடுத்த சந்ததிக்கும் உண்மையைப் புரிய வைத்தால் மட்டுமே காணொளி அலப்பறைகளும், கொள்ளைகளும் குறைய வாய்ப்பு உண்டு.

ஊரான்

Friday, March 7, 2025

பன்னாட்டு மகளிர் நாள் உறுதிமொழி!

ஒரு பக்கம் பெண்கள் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முன்னேறி உயர்ந்த நிலையை அடைந்திருந்தாலும், அவர்கள் வெறும் போகப் பொருளாக சித்தரிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதன் விளைவு ஆண்கள் மத்தியில் வக்கிர எண்ணங்கள் விதைக்கப்பட்டு அன்றாடம் பாலியல் வனப்புணர்வுகள் அரங்கேறி வருகின்றன.

"இதெல்லாம் சாதாரணமப்பா" என்கிற மனநிலைக்கு மக்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சீமான் மீதான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் சிலரின் பார்வை இதை உறுதி செய்வதாகவே உள்ளது. ஏன் நீதிமன்றத்தின் பார்வையும் அப்படித்தான் உள்ளது. 

இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. பாலியல் வன்கொடுமை தாக்குதலில் இருந்து பெண்களை பாதுகாப்பதே இன்றைய உடனடிக் கடமையாக இருக்கிறது. 

எனவே, பாலியல் தூண்டலுக்கு வழிவகுக்கும் சிற்பம், ஓவியம், கதை, கவிதை, திரைப்படம், பாடல், ஆடல், குத்தாட்டம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இணையம் உள்ளிட்ட அனைத்து விதமான  வெளிப்பாடுகளையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்.

பாலியல் தூண்டலுக்கு வழிகோலுபவர்களையும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களையும்  மிகக் கடுமையாக மக்களே நேரடியாக தண்டிக்க வேண்டும்.

அதற்கு வெளியில் இருந்து கொட்டப்படும் பாலியல் தூண்டல் நிகழ்ச்சிகளும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆண்களின் உறுப்புகளும் வெட்டப்பட வேண்டும்.

இதில் பெண்களைவிட நற்சமுகம் அமைய வேண்டும் என்று விரும்புகிற ஆண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். இன்றைய சூழலில் இதுவே பன்னாட்டு மகளிர் நாள் உறுதிமொழியாக இருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

ஊரான்

Tuesday, March 4, 2025

வலை உலகில் எனது எழுத்துப் பயணம்! புதிய புரட்சிகரத் திருமணங்கள்! ---3

மாற்றுத் திருமண வடிவம்!

ஒரு ஆண் உயிரினமும் பெண் உயிரினமும் சேர்ந்து இனப்பெருக்கம் செய்வது என்பது உயிரினத்தின் இயற்கை நிகழ்வு (Natural phenomena). ஒரு உயிரியல் தேவை என்ற அடிப்படையில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறவாழ்வில் ஈடுபடமுடியும் என்ற வகையில் மட்டுமே தனங்களது துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்குச் சமூகம் ஏற்படுத்தியுள்ள சடங்குகள் சம்பிரதாயங்கள் தேவைதானா என்ற கண்ணோட்டத்திலிருந்து மாற்று திருமண முறையைத் தீர்மானிக்க வேண்டும்.

மாற்றுத் திருமண வடிவத்தை யார் நாடுகிறார்கள்? குறைந்த பட்சம் மணமக்களில் ஒருவர், நிலவுகின்ற இந்தச் சமூகத்தில் உள்ள இழிவுகளுக்கு எதிராகச் சிந்திக்கிற, போராடுகின்ற போராளியாக இருப்பவர்கள். இவர்கள் பார்க்கும் பொருத்தம் தன்னுடைய இந்த சமூகப் பணிக்கு இடையூறு இல்லாத வகையில் தங்களது இணையைத் தேடுகிறார்கள். இதுதான் இவர்கள் பார்க்கும் முதல் பொருத்தம்!
இங்கே சாதியோ, மதமோ, குலமோ, கோத்திரமோ தேவைப்படுவதில்லை. ஒரே சாதியில் ஒரே மதத்தில் அமைந்தாலும் இவற்றை மட்டும் பொருத்தமாக எடுத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்வதில்லை.


மணமக்களில் ஒருவர் மற்றவரைத் தேர்ந்தெடுக்கும் போது, அவர்கள் உழைப்பை நேசிக்கிறார்களா, உழைப்பில் ஈடுபடுகிறார்களா என்பதைத் தகுதியாகப் பார்க்கிறார்கள். உழைப்பில் ஈடுபடுபவர்கள் மட்டுமே, உழைப்பை நேசிப்பவர்கள் மட்டுமே உழைப்பாளி மக்களை, சொந்த பந்தங்களை, நண்பர்களை, உறவினர்களை நேசிப்பார்கள் என்ற புரிதலிலிருந்து இந்தத் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.
முக்கியமான, அவசியமான மேற்கண்டப் பொருத்தங்களை மட்டுமே எடுத்துக் கொள்வதால் பிற பொருத்தங்கள் தேவையற்றதாகி விடுகின்றன.

இப்படிப் பொருந்தம் அமைந்து விட்ட பிறகு மணவாழ்க்கையைத் தொடங்கிவிடலாமே, எதற்கு அதற்கு ஒரு விழா என்ற கேள்வி எழுகிறது.

சாதி, அந்தஸ்து, சம்பிரதாயம், சடங்குகள், ஆடம்பரங்கள் போன்ற முகமூடிகளுக்குள் திருமணங்களைப் பார்த்த இந்தச் சமூகம் மாற்றுத் திருமண நிகழ்வை தன்னுடைய உறவினர் செய்யும் போது அங்கீகரிப்பதில்லை.

ஒருவகையில் பழைய திருமண முறை, புதிய மாற்றுத் திருமண முறையின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்த முற்படுகிறது. அதற்கெதிரான போராட்டத்தின் மூலமே புதிய மாற்றுத் திருமணமுறை தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காகவே, ஊர்க்கூட்டி புரட்சிகரத் திருமணங்களை நடத்த வேண்டியுள்ளது. வடிவம் என்ற அடிப்படையில் இத்திருமணமுறையை பிறர் கற்றுக் கொள்ளவும், கடைபிடிக்கவும் வேண்டும் என்பதற்காவே பகிரங்கமாக பலர் முன்னிலையில் செய்ய வேண்டியதாகிவிடுகிறது.

அழைப்பதற்கு ஒரு பத்திரிக்கையும், சில நேரங்களில் சுவரொட்டிகளும் தேவைப்படுகின்றன. வருகிறவர்களின் எண்ணிக்கைக்கேற்ப இடம் தீர்மானிக்கப்படுகிறது. வீடோ, மண்டபமோ அல்லது தெருமுனையோ அதற்கேற்ப முடிவு செய்யப்படுகிறது. வருபவர்களுக்கு எளிய உணவு பரிமாறப்படுகிறது. சில நேரங்களில் அது தேநீர், பிஸ்கட் என்ற அளவில் சுருங்கி இருப்பதும் உண்டு. இருந்தாலும் தவறேதும் இல்லையே? வடிவத்தை அறிமுகப்படுத்துவதற்குத்தான் இந்த நிகழ்வேயன்றி, தங்களது பகட்டை பறைசாற்றுவதற்கல்ல.

பட்டாடைகளும், பகட்டாடைகளும் இங்குத் தேவையில்லை. அதாவது, வரவேற்பின் போது மேற்கத்திய கோட்டு சூட்டு போட்ட அமெரிக்கனாகவும் – அது மே மாத வெயிலாக இருந்தாலும் கூட – மறுநாள் காலை தாலி கட்டும் போது, பூணூல் போட்ட புராதன இந்தியனாகவும் வேடம் போடவேண்டியத் தேவை இங்கே இல்லை.

முதலில் புரோகிதப் பார்ப்பானுக்கு பெண்டாட்டியாகி, பிறகு மணமகனுக்கு மனைவியாகும் அற்பங்கள் இங்கே நிகழ்வதில்லை. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பஞ்ச பூதங்களையும் சொந்தங்களையும் சாட்சிக்கழைத்து, நடத்தப்படும் திருமணங்களில் ஆணோ அல்லது பெண்ணோ அவற்றுக்காக பயந்து கொண்டிருப்பதில்லை. அவர்கள் விருப்பத்திற்கேற்ப முரண்பாடுகள் வரும் போது முறித்துக் கொண்டுதானே செல்கிறார்கள்?

ஆனால், புரட்சிகரத் தம்பதியினர் தங்களுக்குச் சமூகக் கடமை இருப்பதனால், தங்களுக்குள் எழும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள். காரணம், தங்களது சமூகப் பணிக்கு இல்லற செயல்பாடு குறுக்கிடக் கூடாது என்ற உயரிய நோக்கமே! மற்ற திருமணங்களில், சில இடங்களில் பேசித் தீர்த்துக் கொள்வதில்லையா என்று கேட்கலாம், அது அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளில் இருந்து, பழைய சமூகம் அவர்கள் மீது திணித்துள்ள மதிப்பீடுகளில் இருந்து முடிவு செய்து கொள்கிறார்கள். இங்கே சமூகத்திற்கான கடமை, பொறுப்பு என்பதெல்லாம் எதுவும் கிடையாது!

புரட்சிகரத் திருமண முறையில் மணமக்கள் உறுதி மொழியும், ஒரு சிலர் உரையாற்றுவதும், கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான கலைநிகழ்ச்சிகள் மட்டுமே இடம் பெறுகின்றன. இதுவும் ஒரு ஒழுங்கில் நடக்கிறது.

சில பதிவர்கள், ”ஏன் மாலை மாற்றிக் கொள்ளவேண்டும்?”, ”பெற்றோர்கள் ஏன் பட்டாடை உடுத்திக் கொள்ள வேண்டும்?” என்பன போன்ற ஒரு சில அம்சங்களை வைத்து கேள்வி எழுப்பி, இந்த மாற்றுத் திருமண முறையையே கேள்விக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள். இதன் மீது ஒருவித  முத்திரையைக் குத்த எத்தனிக்கிறார்கள். மாற்றுத் திருமணங்களை ஆதரிப்பவர்கள் போல வந்து, இது போன்று குறை கூறுவதன் மூலம், அவர்களிடம் பழைய சமூகக் கருத்துக்கள்தான் உள்ளன என்பதைக் காட்டுகிறார்கள்.

ஏற்கெனவே, சொன்னது போல மாற்றுத் திருமண முறையில் பட்டாடைகள் தேவையில்லைதான்! குற்றம் சொல்வதைவிட அவர்களுக்குச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வார்கள்.
மாலை மாற்றுவது என்பது இங்கு சடங்காகத்தான் செய்யப்படுகிறது என்றே கருதவேண்டும். சம்பிரதாயம் என்ற அடிப்படையில் இவையும் தவிர்க்கப்பட வேண்டியவைதான்.

இந்தத் திருமண முறை என்பது கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புத் தோழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருவதோடு அவர்கள் வெற்றிகரமாக தங்களது வாழ்க்கையை நடத்தியும் வருகிறார்கள். அவர்கள் சொந்த பந்தங்களாலும் நண்பர்களாலும் சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டும் இக்ருகிறார்கள்.

இந்த விவாதம் இணைய பதிவர்களுக்குத்தான் புதியதே ஒழிய, வெளியே வாழும் தோழர்கள் மக்களோடு மக்களுடன் விவாதித்தும் தெளிவு படுத்தியும் வருகிறார்கள். மேலும், இந்தத் திருமண வடிவங்களை எளிமைப்படுத்தவும், விரிவுபடுத்தவும் வாசகர்கள் முன்வருவார்களேயானால், அதுவே அவர்கள் இந்தச் சமூகத்திற்கு செய்யும் பெரும் தொண்டாகும்.

வாசகர்கள் முடிந்தால் இது போன்ற திருமணங்களில் பங்கேற்பதன் மூலம், அதைத் தொடர்ந்து தம்பதியரின் வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமும் மட்டுமே, இதுதான் சிறந்த திருமண முறை என்பதை அவர்கள் உணர முடியும்"
***
இதுவே இணையத்தில் பின்னூட்டங்கள் (comments) என்ற வகையல் நான் எழுதிய முதல் பதிவு.

இனி நான் வலைப்பூ தொடங்கியது குறித்தும், அதில் எனது எழுத்து அனுபவம் குறித்தும் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

Monday, March 3, 2025

வலை உலகில் எனது எழுத்துப் பயணம்! பழைய திருமண முறைகள்!---2

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற புரட்சிகரத் திருமணம் குறித்து "உலகின் அழகிய மணமக்கள்!" என்ற தலைப்பில் வினவு தளத்தில் சந்தன முல்லை அவர்கள் 2010 இல் எழுதிய கட்டுரை மீது வாசகர்கள் முன் வைத்த கருத்துக்கள் மீதான எனது எதிர்வினை.
***
"பதிவர்களுக்கு வணக்கம்,

வழக்கமான திருமணத்திலிருந்து இந்தத் திருமணம் மாறுபட்டதாக இருக்கிறது. ஆனால், இதில் சரி தவறு என்ற அறிவு பூர்வமான விவாதத்தை நடத்துவதை விடுத்து பதிவர்கள் பொருளற்ற அல்லது தலைப்பிற்குத் தொடர்பில்லாத கருத்துக்களை முன்வைப்பது, பதிவர்களை எது சரி என்று எடை போடுகின்ற ஆற்றலை வளர்ப்பதற்குப் பதிலாக சலிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் உணர்ந்ததை மட்டுமே, சரியானது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். “People not talk about the world(reality), but about their perception” அதாவது, மக்கள் தாங்கள் உணர்ந்ததைத்தான் பேசுகிறார்களே ஒழிய எதார்த்தத்தை அல்ல; மாறாக எதார்த்தம் என்பதை எதார்த்தமாகவே உணரும் போதுதான் எல்லோரும் ஒரே கருத்தை வந்தடைய முடியும். அந்த எதார்த்தத்தை அல்லது உண்மையைக் கண்டறிவதற்கு, ஜார்ஜ் தாம்சனின் கூற்றுபடி, புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை என்ற இயங்கியல் / அறியவியல் அணுகுமுறைதான் எந்த ஒரு செயல்பாட்டையும் சரியா தவறா என்பதைத் தீர்மானிக்க உதவும்.

இங்கு விவாதம் என்பதே திருமண வடிவம் சார்ந்ததாக அமைந்து விட்டதால் அதனுள் நின்று கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது. திருமணத்திற்குப் பிறகு சந்திக்கவிருக்கின்ற வாழ்க்கைப் பிரச்சனைகள் இங்கு விவாதத்திற்கு வரவில்லை அல்லது அது ஒரு தனியான பிரச்சனை. அதனால், கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, ஒரு பண்பாடு என்ற முறையில் இங்கு திருமண வடிவத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு  பேசுவது சரியாக இருக்கும்.

திருமணத்தை ஏன் ஊர்கூட்டி நடத்த வேண்டும்? பழைய திருமண முறைகள் எல்லாம் ஊர் கூட்டித்தான் நடத்தப்படுகிறது. இங்கே ஆடம்பரமும் சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாத முறையில் புரட்சிகரத் திருமணம் நடத்தப்படுகிறது. இங்கு எளிமை என்ற விசயத்தை ஏன் சொல்லவில்லை எனில், பழைய திருமணமுறையில் நடக்கும் திருமணங்கள்கூட எளிமையுடன்தான் நடத்தப்படுகின்றன. ஆனால், சடங்கு சம்பிரதாயத்தைப் புறக்கணித்து நடத்தப்படுவதில்லை. 

காதலித்து ஓடிபோய் திருமணம் செய்து கொள்பவர்கள்கூட, “கோவில்ல வச்சி தாலி கட்டிட்டுவது” என்ற சடங்கைச் செய்கிறார்கள். ஆனால் இங்கே, ஆடம்பரம், சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றைப் புறக்கணித்து நடக்கிறது என்பதுதான் இந்த புரட்சிகரத் திருமணத்தின் முக்கிய அம்சம்".

***
"பழைய திருமணமுறைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன?


பொருத்தம் 

கருப்பா, சிவப்பா; நெட்டையா, குட்டையா; ஊத்தப்பல்லா, நல்லப்பல்லா; சப்பை மூக்கா; மாறு கண்ணா, நல்ல கண்ணா; காது, நடை, பாவனை, குரல்….. ஆணா இருந்தா 'ஹாண்ட்ஸம்'; பெண்ணா இருந்தா குடும்ப லட்சணம்; இப்படி 'ஜோடி' பொருத்தத்திற்கே ஆயிரம் இருக்கிறது.

வசதி வாய்ப்புகள்

ஆணா இருந்தா என்ன வேலை, கை நிறைய சம்பளம், குறிப்பா 'கவர்மெண்ட்' மாப்பிள்ளையா, பொண்ணை உட்கார வச்சி சோறு போடுவானா, அதாவது, உழைக்காமல் வாழவேண்டும்- உழைப்பை வெறுப்பது; சம்பளத்தோடு மேற்படி வருமானம் (கிம்பளம்) எவ்வளவு (அதாவது மாப்பிள்ளை ஊரை ஏமாற்றத் தெரிந்தவனா); வீடு நிலபுலம் சொத்து, அப்பாவோட சேமிப்பு, வங்கி இருப்பு; ஏழையாக இருந்தால் ஆடு மாடு என வசதி பார்த்து – இதனை பங்கு போட உடன் பிறந்தவர்கள் (நாத்தனார், கொழுந்தனார், மூத்தார்) இருக்கிறார்களா; சாதி சணம், சொந்த பந்தம், பலம் எவ்வளவு (நாளைக்கு ஏதாவது தகராறுன்னா தேவைப்படுமே?) என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே, அடுத்த பொருத்தத்திற்குச் செல்கின்றனர்.

இதே போல பெண்ணைத் தேடுபவர்கள், பெண் 'கலரா' இருக்க வேண்டும். (ஐஸ்வர்யா ராய் போல இது பையனின் எதிர்ப்பார்ப்பு) இதற்குமேல், பையனை பெற்றவர்கள் எதிர்பார்ப்புகள் தனி. மற்ற உருவப் பொருத்தங்கள் மேற்சொன்ன வகையில். முதல் விசயமே, பெண்ணுக்கு உடன் பிறந்தவர்கள் குறிப்பாக ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது (எதிர்காலத்தில் மாமனாரின் சொத்து முழுக்க இவனுக்கு வரவேண்டும். இப்போதைக்கு வாங்குவதையும் விடுவதில்லை).

முன்பெல்லாம், பெண்ணோடு பிறந்த ஆண்கள் நிறைய இருக்க வேண்டும் என்று கருதினர் (மாமன் மச்சான்கள் அதிகமாக இருப்பதை எதிர்ப்பார்ப்பார்கள், காரணம் ஆபத்துக்கு உதவுமே என்று).
சாதாரண வீட்டுப் பெண்ணாக இருந்தால், புகுந்த வீட்டில் வந்து எல்லோருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டும். அதாவது, தொழில் சார்ந்த வேலைகள் மற்றும் துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, ருசியாய் சமைப்பது….மொத்தத்தில் உழைத்துக் கொட்டத் தயாராக இருக்க வேண்டும்.

வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால், சம்பளத்தை கவரோடு மாமியாரிடம் அல்லது கணவனிடம் கொடுப்பாளா? தன்னை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி வேலை வாங்கிக் கொடுத்த பெற்றோர் மற்றும் உற்றார் உறவினருக்கு ஆபத்து காலத்தில்கூட அந்தப் பெண் உதவக் கூடாது.

இதில் வேலை வேறு வேறு இடத்தில் இருந்தால் வேலையை விடக்கூடாது, மாற்றிக்கொண்டு வரவேண்டும். இது எதுவும் பொருந்தாத பட்சத்தில் வேலையை விடத் தயாராக இருக்க வேண்டும்.

வரதட்சணை

அடுத்து நகை. பவுன் கணக்கிலா, கிலோ கணக்கிலா; கார் பங்களா சீர் எவ்வளவு தேறும்? சாதாரண குடும்பத்தில் 'டூவீலரில்' தொடங்கி கோட்டு சூட்டு என நீண்டு, செருப்பைக்கூட விடாமல் வாங்க வேண்டும். 

தனக்குத் தேவைப் படுகிறதோ இல்லையோ 'வாஷிங் மிசின்', 'ஏசி', 'ஃபிர்ட்ஜ்', கட்டில் மெத்தை எனத் தொடங்கி ஊறுகாய்ச் சட்டிவரை எதையும் விடுவதில்லை. இவையெல்லாம் திருமணத்தன்று மேடையின் அருகில், மணமக்களுடன் பொருட்காட்சி வைக்க வேண்டும். சில வசதி படைத்த திருமணங்களில் இந்த பொருட்காட்சிக்கு தனி ஹாலே தேவைப்படுகிறது.

ஜாதகம்

இவற்றை எல்லாம் உறுதி செய்த பிறகுதான் ஐயரைப் பார்ப்பது, ஜாதகப் பொருத்தம் பார்ப்பது; ஜாதகப் பொருத்தம் முன்ன பின்னே இருந்தாலும் மேலே சொன்ன பொருத்தங்கள் பொருந்திவிட்டால் ஜாதகப் பொருத்தத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இதற்கு ஐயரும் துணை புரிவார்.

ஒற்றரை வைத்து உளவு பார்ப்பது

என்ன உளவு? சாதியை உறுதி செய்வது; பையன் (பீடி, சிகரெட், தண்ணி, கிண்ணி, சீட்டு, பொம்பள கிம்பள இத்தியாதி இத்தியாதி) நல்லவனா கெட்டவனா, பெண் நல்லவளா (ஆண்களுடன் இயல்பாகப் பழகுவது ஒரு குற்றம் என்ற வகையில்), குறிப்பாகப் பெண்ணுடைய தாயார் நல்லவளா, சொல்லப்பட்ட சொத்து பத்து உண்மைதானா என உளவு (CIA, RAW, ISI, KGB இவர்களெல்லாம் எம்மாத்திரம்) பார்த்து உறுதி செய்து கொண்ட பிறகே அடுத்த படலம் தொடரும்.

பெண் பார்க்கும் படலம் 

முதலில் நெருங்கியவர்கள் மட்டுமே சென்று பார்ப்பது. இதற்கு நாள், நேரம் அதாவது கிழக்கே போவதா, தெற்கே போவதா, எந்தப் பக்கம் போகக் கூடாது என்பதையெல்லாம் உறுதி செய்து கொண்டுதான் செல்கின்றனர். போகும் போது கண்டிப்பாக பூனையோ, பொட்டு இல்லாத பெண்ணோ கண்ணில்கூட பட்டுவிடக் கூடாது. தப்பித்தவறி கண்ணில் பட்டுவிட்டால் பயணம் ரத்து. போய் உட்கார்ந்த உடன் பஜ்ஜி, போண்டா, அனைத்தையும் ருசி பார்க்கலாம். ஆனால், கைமட்டும் நைனைக்கக் கூடாதாம்! இது என்ன லாஜிக்கோ?

அடுத்து படை பலத்தைக் கூட்டிக் கொண்டு சென்று பார்ப்பது. இதற்கு குறிப்பாக பிற சாதியினர் ஒன்றிரண்டு பேரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இவர்களுடைய அருமை பெருமைகளை பறைசாற்றிக் கொள்ள முடியும். வசதி இருக்கிறதோ இல்லையோ இந்தப் படலத்தில் குறைந்த பட்சம் அம்பாசிடரில் தொடங்கி ஸ்கோர்பியோ வரை (வாடகைக்குத்தான்) வண்டி அமர்த்த வேண்டும். இல்லையென்றால், மரியாதை என்னத்துக்கு ஆவது இது இரு வீட்டாருக்குமே பொருந்தும்.

கை நனைக்கும் படலம்

பொருத்தம் அமைந்துவிட்டால் அடுத்து கை நனைக்கும் படலம். இதற்குப் படைபலம் சற்றே கூடுதல். செல்லும் போது வழியில் ஏதாவது ஒரு கோவிலில் தேங்காய் கட்டாயம் உடைத்தாக வேண்டும். தேங்காய் உடைக்கும் போது எசகு பிசகாக (கோணலாக உடைந்தாலோ, அழுகலாக இருந்தாலோ) ஏதாவது நடந்துவிட்டால், அதற்கு ஒரு NCR (நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்) போட்டுக் கொள்வார்கள்!

இப்போது பெண்ணை அலங்காரம் செய்து அழைத்து வருதல். இதற்கென அழகுக் கலைஞர்களை அழைத்து வந்து அழகு படுத்திக் காட்டுவது உண்டு. ஏற்கெனவே, முதல் படலத்திலேயே பொண்ணும் பையனும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குப் பிடித்ததனால்தான் இந்தப் படலம் தொடர்கிறது. இந்த அலங்காரமெல்லாம், படைபலத்திற்கு பெண்ணை பிடிக்க வேண்டுமே என்பதற்காக. விருந்து மற்ற பிற இத்தியாதி இத்தியாதி சமாச்சாரங்கள் முடிந்த பிறகு நிச்சயார்த்தம் தேதி தீர்மானிக்கப்படும்.

நிச்சயதார்த்தம்

இதை நடத்துவது யார் என்பது இருவீட்டாரில் யார் இளிச்சவாயர் என்பதைப் பொருத்தது. நிச்சயதார்த்தத்திற்குப் பத்திரிக்கை அடிப்பதும் உண்டும். மண்டபம், கார், ஊர்வலம் இவையெல்லாம் வசதியைப் பொருத்து அமையும். இதற்கும் பெரும் படை தேவைப்படும். சில நேரங்களில் பேருந்து வைப்பதும் உண்டு. பலத்தைக் காட்டவேண்டாமா? நிச்சயதார்த்தத்தை நடத்துபவர்கள் சாப்பாடு போடுவதற்கே திண்டாடவேண்டும். இதனைப் பார்த்து, இதுக்கே இப்படின்னா, கல்யாணத்துக்கு எப்புடி?

நாள் குறிப்பது

கல்யாணத்திற்கு நாள் குறிப்பது: இவர்களே முதலில் பஞ்சாங்கத்தைப் பார்த்து தோராயமாக நாள் ஒன்றைத் தீர்மானித்துக் கொள்வார்கள். ஒரு ஐயரைக் கலந்து ஜாதக் பொருத்தப்படி நாள், நேரம் தீர்மானிப்பார்கள். இவர்கள் தீர்மானித்த நாளில் மண்டபம் தேடுவார்கள். வேண்டிய மண்டபம் கிடைக்கவில்லை என்றால் மற்றொரு தேதியில் மண்டபத்தை பதிவு செய்வார்கள். அந்தத் தேதி ஜாதகத்துக்குப் பொருந்தவில்லை என்றாலும், இன்னொரு NCR போட்டுக் கொண்டு தங்களை சமாதானம் செய்து கொள்வார்கள். மண்டபம் கிடைக்காமல் திண்டாடுவதற்குக் காரணம், முகூர்த்த நாள் பஞ்சாங்கப்படி மாதத்தில் மூன்றோ, நான்கோதானே? பிறகு எப்படி ஒரே நாளில் பத்து திருமணங்கள் செய்ய முடியும்? மண்டபம் மட்டுமல்ல, ஐயரும் கிடைக்கமாட்டார். இது அந்தக் காலத்திலேயே வரும்படிக்காக ஐயர்கள் செய்த சூழ்ச்சிகள் போலும்?

முன்பெல்லாம் வீட்டிலேயே திருமணம் நடக்கும். இட நெருக்கடி இருந்தாலும், உணவு பரிமாற இடப் பற்றாக்குறை இருந்தாலும் இருக்கின்ற இடத்தில் ஒருவழியாக சமாளித்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம், கட்டாயம் கோவில் மண்டபமாவது ஏற்பாடு செய்ய வேண்டும். வசதியைப் பொருத்துத் தனிக் கல்யாண மண்டபம்.

பத்திரிக்கை

இதற்கு ஐயரை கன்சல்ட் பண்ண வேண்டும். பிறகு, முன் அட்டையை அலங்கரிக்கப் போவது குலதெய்வமா அல்லது ஐயா, திருமா, வைகோ, அம்மா, கலைஞர், தளபதி மற்றும் சாதித்தலைவர்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பின் அட்டையை தீர்மானிப்பதில் பெரும் சர்ச்சைக்கு பிறகு மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அங்காளி, பங்காளி, சாதி சனம் என்று மொத்த ஊரையே பட்டியலிட வேண்டும். இதில் பெயருக்குப் பின்னால் ஒரு பட்டம் கட்டாயம் இடம் பெறவேண்டும். படித்திருந்தால் படிப்பும், வேலையிலிருந்தால் வேலையும், இவை இரண்டும் இல்லாவிட்டாலும் சாதிப் பட்டம் (கவுண்டர், முதலியார், செட்டியார், நாயுடு எக்ஸ்செட்ரா); கோவணம் அளவே நிலமிருந்தாலும் நிலக்கிழார் பட்டம். இவற்றில் ஏதாவது மிஸ்ஸிங் என்றால் இவர் கல்யாணத்திலும் மிஸ்ஸிங்.

பத்திரிக்கை வீட்டுக்கு வந்தவுடன், அதன் நான்கு மூளைகளிலும் மஞ்சளில் முக்கியாகவேண்டும். இல்லையேல் மங்களம் இல்லாமல் போய்விடும்! பத்திரிக்கை கவருக்குள் நான்கு மஞ்சள் அரிசி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பத்திரிக்கை வைக்கும் போது, நெருங்கிய சொந்தம் என்றால், தட்டில் புடவையோ, நகையோ வைத்து அழைக்க வேண்டும். சற்று தூரத்து உறவு என்றால் பத்திரிக்கையுடன் வெற்றிலை பாக்கு போதும். நண்பர்கள் என்றால் வெறும் பத்திரிக்கை போதும், தட்டு கூடத் தேவையில்லை. தெரிந்தவர், கொடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் இருந்தால், பத்திரிக்கையில் பெயர் எழுதக் கூடத் தேவையில்லை. பத்திரிக்கை வைக்கச் செல்லும் போது கையிலே குங்குமச் சிமிழ், கொஞ்சம் மல்லிகைப் பூ கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் (சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டுமல்லவா?)

புடவை எடுத்தல்

மணப் பொண்ணுக்குப் பட்டுப்புடவை எடுக்க இருவீட்டாரும், அருகில் உள்ள பெருநகருக்குச் சென்றாக வேண்டும். வசதியைப் பொருத்து ஆயிரங்களில் தொடங்கி பல ஆயிரங்களில் முடிவதுண்டு. இதில் ஒரு நாளில் முடிக்காமல் லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டு மறுநாளும் பார்ப்பவர்கள் உண்டு! பொருத்தமான கலர் கிடைக்க வேண்டுமே? பட்டுப் புடவை இல்லாமல் கல்யாணம் ஏது, அதற்குத்தான் இவ்வளவு முக்கியத்துவம்.
சொந்த பந்தங்களுக்கு துணிமணி எடுக்க, செலவு தனித்தனி. எடுத்த துணி சரியில்லை என்று ஒரு சொந்தம் ஆட்சேபித்தாலும் அதற்கு பிடித்தமாதிரி இன்னொரு துணி எடுத்தாக வேண்டும். குறிப்பாக சேலை எடுப்பதில்தான் இந்தப் பிரச்சனை அதிகமாக வரும்.

தாலி வாங்குவது

உரிய கைராசி பொற்கொல்லரைத் தேடுவது; சாதியைப் பறைசாற்றும் முத்திரையைத் தீர்மானிப்பது என இது ஒரு தனிவேலை.

பந்தக்கால் நடுவது, நவதானியத்தை முளைவாரி விடுவது (எத்தனை சட்டி என்பதை சாதி தீர்மானிக்கும்) குல தெய்வத்தைக் கும்பிடுவது எல்லாம் அவரவர் குடும்பக் குழு மரபைப் பொருத்தது.

பந்தி

பசிக்கு சோறுபோடுவதை விட பகட்டைக் காட்டுவதற்காகவே பந்தி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு முதலில் மெனுவைத் (ஐயிட்டங்கள்) தீர்மானிக்க வேண்டும். அடுத்து அந்த மெனுவுக்கேற்ற சமையல்காரரைத் தேட வேண்டும். அவர் குஜராத்தில் இருந்தாலும் விடப்போவதில்லை. வந்தவர்கள் மெச்சவேண்டுமே? அதற்காகத்தான் இவ்வளவும்.
முன்பெல்லாம், சோறு, கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார், ரசம், மோர், அப்பளம், வடை அல்லது போண்டா, கொஞ்சம் பாயாசம் இவைதான் இயல்பான மெனு. யாரும் குறை சொன்னதில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் பூரி தோசை ஊத்தாப்பத்தில் தொடங்கி ஐஸ்கிரீம் வரை ஆயிரத்தெட்டு ஐயிட்டங்கள். இலையைப் பார்த்தவுடனே, சாப்பிடச் சென்றவர் மலைத்துப்போய் ஒருசிலவற்றை சாப்பிட்டுவிட்டு மற்றதை வீணக்குவது சகஜமாக நடக்கிறது. இங்கே வயிற்றுக்கு உணவு என்பதைவிட பந்தாவுக்காவே பந்தி நடக்கிறது.

திருமண வைபவம்

முதல் நாள் மாலை வரவேற்பு; கல்யாண மண்டப அலங்காரம்; லைட்டிங், பிரம்மாண்டமான மேடை பின்புறம். முதலில் வாயிலில் அலங்கார வளைவு அமைப்பது தொடங்கி பளபளக்கும் வண்ண வண்ண டிஜிட்டல் பேனரில் மணமக்கள் மட்டுமல்ல மணமக்களின் பெற்றோர்களும் மின்னியாக வேண்டும். ஜானவாசம் என்ற பெயரில் நடக்கும் மாப்பிளை அழைப்பிற்கு அலங்கார வண்டி ஏற்பாடு. அதற்கான நாதஸ்வரம். மண்டபத்திற்கு போகின்ற பாதையில் இருபுறமும் துணிச் சீலைகள் கட்டுவது; மண்டபத்தை முழுவதற்கும் சீரியல் லைட்டுகள் அமைப்பது – பக்கத்தில் மரங்கள் இருந்துவிட்டால் அவையும் வண்ண விளக்குகளால் பூத்து குலுங்கும் – வரவேற்பு மேடை அமைப்பது. குறிப்பாக, மரம் செடி கொடி புல் பூண்டுகளை அத்தனையும் அள்ளி தெளித்து முடிந்தால் புறாக்களை வைத்து, வாய்ப்பிருந்தால் கூடுதலாக சில ஜீவராசிகளையும் உயிரோடு மேடையிலேற்றி பிரமிக்க வைக்கிறார்கள். 

இன்னொரு பக்கம் சைடு மேடையிலே ஆர்கெஸ்ட்ரா குழுவினர் அலறுகிறார்கள் (பாட்டு கச்சேரிதான்).
திருமணத்திற்கு நீண்ட நாட்கள் சந்திக்காத உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். இவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக் கூட இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இடம் கொடுப்பதில்லை. இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கும் இந்தக் காட்டுக்கத்தல் கௌரவமானதுதான். ஆனால், மனம் விட்டு பேசுபவர்கள் கூட இந்தக் கத்தலுக்கு மேல் அதிகமாக கத்திப் பேசி தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

இந்த மேடையில் மணமக்களுக்கு பின்னால் யார் நிற்பது என்பது இரு வீட்டாரின் வல்லமையைப் பொருத்தது.

மறுநாள் காலை திருமண நிகழ்ச்சி என்றால், நண்பர்கள், உறவினர்கள் சிலர் முதல்நாள் இரவு விடியவிடிய ரூம் போட்டு தண்ணியடிப்பது கட்டாயம் செய்ய வேண்டிய கடமை. இது இல்லையென்றால், திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தி இருக்காது.
காலை நான்கு மணியிலிருந்து சடங்கு சம்பிரதாயங்கள் நடக்கும். ஐயர் தீர்மானித்த வகையில் அவருக்கு அடுத்த திருமண நிகழ்ச்சி இருந்தால் அவசரமாகவும், இல்லையென்றால் மெதுவாகவும் மந்திரம் ஓதி சம்பிரதாயப்படி திருமணத்தை முடித்து வைப்பார். அதன் பிறகு இருக்கும் சம்பிரதாயங்கள் பலப்பல. இடம் கருதி இவற்றை விவரிக்கவில்லை.

மொய்

"மொய்யில்லாமல் கல்யாணமா?”, மாமன் வச்ச மொய்யில் தொடங்கி நண்பர்கள் வைக்கும் மொய் வரை, நகையில் தொடங்கி, பண்ட பாத்திரங்களில் தனது பெயரைப் பொதித்து, ரூபாய் நோட்டுகளை கவரிலே திணித்து (கவர் கிடைக்காமல் திண்டாடுவதும் தனது பெயரை எழுதத் தெரியாமாலும் திண்டாடுவதும் தனிக்கதை). ஏற்கெனவே எழுதிய மொய்யை திரும்பப் பெறுவதில் கல்யாணக்காரனின் ‘அக்கறையும்’, மொய்யை வாங்கியவன் திரும்ப தனது கடனை செலுத்தும் ‘கண்ணியமு’ம் இங்கே ஒன்றுபடுகிறது. இதில் இனி நமக்கு வருமா என்ற கவலையுடன் மொய் எழுதுபவர்களும் உண்டு. உயரிய மனித உறவை வெறும் பண உறவாக சிறுமைப் படுத்தும் இதை பழங்காலந்தொட்டே செய்து வருவதற்காக யாரும் வெட்கப்படுவதில்லை! இதற்குத் தலைமுறை தலைமுறையாக தனி நோட்டை பராமரிப்பது, தொல்லியல் ஆய்வுக்குரியது.

மேற்கண்ட எமது விளக்கங்கள் இந்து மத சம்பிரதாயத் திருமண வடிவம் என்ற வகையில் அமைந்தவை. இன்னமும் கூடுதலாகவோ, குறைவாகவோ சம்பிரதாயங்களும், சடங்குகளும் அமையக் கூடும். இதில் இசுலாமிய, கிருத்துவ மதத் திருமண வடிவங்கள் மதம் சார்ந்த சம்பிரதாயங்களில் மாறுபட்டிருந்தாலும் உள்ளடக்கமான நடவடிக்கைகள் பொருந்தக் கூடியவையே".

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Sunday, March 2, 2025

வலை உலகில் எனது எழுத்துப் பயணம்! திரும்பிப் பார்க்கிறேன்! ---1

கணினி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வாசிப்பு என்பது அச்சு ஊடகங்களிலிருந்து வலை உலக ஊடகங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலகட்டம். 2010 இறுதியில்தான், ஊரான் என்ற வலைப்பூவைத் தொடங்கி வலை உலகில் எழுதத் தொடங்கினேன். அப்போது, சுமார் 12000 வலைப்பூக்கள் (blogs) வலை உலகில் பதிவுகளை வெளியிட்டு வந்தன. வலைப்பூக்களில் எழுதும் எழுத்துக்களை வாசிப்பதற்கு ஏற்ப மொத்த வலைப்பூ பதிவுகளையும் ஒருங்கே பார்க்கும் வகையில் தமிழ்மணம் (Blog aggregator)
என்றொரு தளமும் இயங்கி வந்தது.

தமிழ்நாட்டில், தோழர்கள் நாதன் மற்றும் மருதையன் ஆகியோரின் முன்முயற்சி மற்றும் பங்களிப்பால் அன்றைய ஒன்றுபட்ட மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் (ம.க.இ.க) தோழமை வலை உலக ஊடகமாக 'வினவு' என்ற தளம் அறிமுகமாகி, அனைவரின் வரவேற்பையும்  பெற்றிருந்தது. அன்று வினவு தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகிறது என்றால் அது குறித்த எண்ணற்ற கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவது உண்டு.

அரசியல் தலைமைக் குழுவில் இருந்த இருவரின் தவறான அணுகுமுறையால்,
தோழர்கள் நாதன் மற்றும் மருதையன் ஆகியோர் ம.க.இ.க அமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு, மக்கள் கலை இலக்கியக் கழகமும் பிளவுபட்டு, வினவு தளமும் ஒரு சிறு லும்பன்கள் கையில் சிக்கிக்கொண்டு இன்று  சீந்துவாரின்றிக் கிடக்கிறது என்பது தனிக்கதை.

***
நிலவுகின்ற இன்றைய சமூக அமைப்பு, சுரண்டலை அடிப்படையாகக் கொண்டதாகவும், மிகவும் பிற்போக்கான பண்பாட்டு நடைமுறைகளைக் கொண்டதாகவும் இருப்பதனால் இதை மாற்றி அமைப்பதற்காக எண்ணற்ற சுயமரியாதை இயக்கங்களும், பொது உடைமை இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. புதிய சமூகத்தை அமைப்பதற்காகப் போராடுகின்ற அதே வேளையில் பண்பாட்டு தளத்திலும் ஒரு புதிய மாற்றுப் பண்பாட்டை இவர்கள் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.


பார்ப்பன புரோகிதர்களைத் தவிர்த்து விட்டு, சடங்கு சம்பிரதாயங்கள் ஏதுமில்லாத சுயமரியாதைத் திருமணங்கள் பெரியார் காலம்தொட்டே நடைபெற்று வருகின்றன.

கலைஞரின் கதை வசனத்தில், சிவாஜி கணேசனின் சிறந்த நடிப்பில், 1952-ல் வெளியாகி இன்றும்கூட உயிர் ஓவியமாகத் திகழும் பராசக்தி திரைப்படத்தின் கடைசி காட்சியில் குணசேகரன்-விமலா (சிவாஜிகணேசன் - பண்டரிபாய்) திருமணம், மாலை மாற்றிக் கொள்ளும் எளியதொரு சுயமரியாதைத் திருமணமாக  காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 

***
சடங்கு சம்பிரதாயங்களை மட்டுமே புறக்கணித்த போதும், பொருளாதார ரீதியாக சம தகுதியில் உள்ளவர்களையும், ஒரே சாதியில் உள்ளவர்களையும் மணமுடிப்பது என்கிற நடைமுறைதான் பெரும்பாலும் சுயமரியாதை இயக்கங்களில் இருந்து வந்தது; இன்றும் கிட்டத்தட்ட அதே நிலைதான் தொடர்கிறது. அன்றைய பொதுவுடமை இயக்கங்களில்கூட ஒரு சிலர் இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்களை நடைமுறைப்படுத்தினர்.

1970 களுக்குப் பிறகு, மார்க்சிய-லெனினிய நக்சல்பாரி அரசியல் பின்னணி கொண்ட தோழர்கள், சடங்கு சம்பிரதாயங்களை புறக்கணித்த அதே வேளையில், இல்லற வாழ்க்கையில் இணையக் கூடியவர்கள், சமூகத்தின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும் என்பதை லட்சியமாக வரித்துக் கொண்டனர். இதனால் மணமகன், மணமகள் இருவரின் வசதி வாய்ப்புகளை இவர்கள் பெரிதாகப் பார்க்கவில்லை. தங்களது லட்சியத்திற்கு பொருந்தக்கூடியவர் எந்தச் சாதியாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டனர். 

இந்தக் காலகட்டத்தில்தான் அதுவரை சடங்கு சம்பிரதாயங்களை மட்டுமே புறக்கணித்து வந்த சுயமரிதைத் திருமணங்கள், வரதட்சணை, சீர் முதலியவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்த, கைம்பெண்களுக்கு மறுவாழ்வு, சாதி மறுப்பு மற்றும் சமூக விடுதலையை நோக்கமாகக் கொண்ட புரட்சிகரத் திருமணங்கள் என்ற உயர்ந்த கட்டத்தை எட்டின.

ஒரே சாதியோ அல்லது வேறு வேறு சாதியோ எதுவாக இருப்பினும், சமூக விடுதலைக்காக, புரட்சிக்காக மணமக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்று உறுதி ஏற்பதே புரட்சிகரத் திருமணங்களின் மைய நோக்கமாக இருந்தது. அப்படித்தான் 1986 இல் நடைபெற்ற எனது திருமணமும் ஒரு புரட்சிகரத் திருமணமாக அமைந்தது.

புரட்சிகரத் திருமண வடிவம் குறித்த போதிய புரிதல் பலருக்கும் இல்லாத அன்றைய காலத்தில் எமது திருமணம் ஒரு முன்மாதிரியாக அமைந்ததோடு எமது திருமணப் புகைப்படங்கள்கூட புரட்சிகர திருமணங்களுக்கான ஒரு பிரச்சார வடிவமாக அமைந்தது.

***
ம.க.இ.க அமைப்பைச் சார்ந்தவர்களின் புரட்சிகரத் திருமணமொன்று 2010 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில், நடைபெற்றது. முதன்முறையாக இத்தகையத் திருமணத்தைப் பார்த்த சந்தன முல்லை என்பவர், இத்திருமணம் குறித்து எழுதிய உணர்வு பூர்வமான கட்டுரை ஒன்று வினவு தளத்தில் அன்று வெளியானது. அதில் அவர் குறிப்பிட்டிருந்த அம்சங்கள் அனைத்தும் எனக்கு ஏற்கனவே பரிட்சயமானது என்பதனால் எனக்கு அது புதிதாகத் தோன்றவில்லை. ஆனாலும், அக்கட்டுரை மீது இணைய வாசகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். அவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் நான் ஒரு பதிவை அத்தளத்தில் எழுதி இருந்தேன். இப்படித்தான் இணைய உலகில் எனது எழுத்துப் பணி தொடங்கியது.

புரட்சிகரத் திருமணம் செய்து கொண்ட ஒரு சிலர், பின்நாட்களில் சமூகப்பணியில் இருந்து விலகி, சொந்த வாழ்க்கையில் நாட்டம் கொண்டு புரட்சிகரத் திருமணத்தின் லட்சியத்தையே கைவிட்டவர்களும் உண்டு. இதில் சிலர் வேறு சில அரசியல் கட்சிகளில் ஐக்கியமாகி, பண்பாட்டளவில் பக்திமான்களாக மாறியவர்களும் உண்டு. ஆனாலும் பலர் சமூக விடுதலைக்கான போராட்டத்தில் தங்களை தொடர்ந்து ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் புரட்சிகரத் திருமணம் செய்து கொண்ட அந்த இணையர்கள் இன்று என்னவானார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், பார்ப்பனிய மேலாதிக்கமும், மூடநம்பிக்கைகளும் அதிகரித்து  வரும் இன்றைய சூழலில், பண்பாட்டுத்தளத்தில் புரட்சிகரத் திருமணங்கள் அல்லது குறைந்தபட்சம் சுயமரியாதைத் திருமணங்கள் பரவலாக்கப்பட வேண்டி உள்ளதால், நான் வினவு தளத்தில் முன்வைத்த எனது முதல் இணையக் கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதைத்தொடர்ந்து நான் வலைப்பூ தொடங்கியது குறித்தும் அதில் எழுதி வருவது குறித்தும் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

குறிப்பு: ஹைபர்லிங்க் மூலம் தேவையான இணைப்புகளைக் கொடுத்துள்ளேன்.

Saturday, March 1, 2025

பாலியல் குற்றவாளி சீமானை பொதுவெளியில் நடமாட விடலாமா?

மூன்று வயது குழந்தைகள் முதல் மூப்படைந்த மூதாட்டிகள் மீதான காமக் கொடூரன்களின் பாலியல் அத்துமீறல், வன்கொடுமைகள் அதிகரித்து வரும் இன்றைய காலத்தில், பாலியல் சீக்காளி சீமானின் பேட்டிகளும், அவனுக்குப் பின்னாலே நிற்கும் தற்குறித் தம்பிகளும், தங்கைகளும் நடந்து கொள்ளும் விதமும், பாலியல் வன்முறை எல்லாம் மிகச் சாதாரணமான ஒன்றுதான் என்கிற
மனநிலைக்கு மக்களைப் பழக்கப்படுத்துவதாகவே உள்ளது. 


ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான அவனது கதையாடல்களை விடவும், பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய அவனுடைய கருத்துக்களை விடவும், திராவிடம்-தமிழ்த் தேசியம் குறித்த அவனது அரைவேக்காட்டு அரசியலை விடவும், தற்போது அவன் பேசி வரும் பாலியல் தொடர்பான கருத்துக்கள் மிக மிக ஆபத்தானது.

சீமானின் இந்தப் பாலியல் வன்கொடுமையை மிகச் சாதாரண ஒன்றாக, மக்களை உளவியல் ரீதியாக மடைமாற்றும் வேலையை ஊடகங்கள் மிகக் கச்சிதமாக செய்து வருகின்றன. 

லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட ஊழல் பேர்வழிகள் தங்களது கட்சி, சங்கம், சாதி, மதம்  என்ன ஏதோ ஒரு வகையில் தங்களுக்கானவர்களாக இருந்துவிட்டால், அவர்களின் லஞ்ச ஊழல் முறைகேடுகளைக் கண்டும் காணாமலோ அல்லது எதிர்த்துப் போராடாமலோ இருந்ததன் விளைவு, "யார்தான் சார் கொள்ளை அடிக்கல?" என்கிற மனநிலைக்கு மக்கள் மாற்றப்பட்டதால்தான் இன்று லஞ்ச ஊழல் முறைகேடுகள் மிகச் சாதாரண ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் விளைவு, பரப்பன அக்கிரகாரத்தில் வாசம் செய்த ஊழல் பேர்வழிகள் 'அம்மா'க்களாகவும், 'சின்னம்மா'க்களாகவும் வலம் வருகின்ற அவலத்தை நாம் பார்த்து வருகிறோம்.

கருத்தளவில் உருவாக்கப்படும் அளவுமாற்றம், பண்பு மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்பதற்கிணங்க சீமானின் பாலியல் விவகாரத்தில்  பொதுச் சமூகத்தின் இன்றைய  அமைதி இதை நோக்கி நகர்வதாகவே தெரிகிறது.

பொதுச் சமூகம் இதற்கு எதிராகக் களத்தில் இறங்கி இப்போதைக்குப் போராடவில்லை என்றால், பாலியல் வன்கொடுமை நடக்கும் போதெல்லாம், குற்றவாளி தங்களுக்கு வேண்டியவனாக இருந்துவிட்டால், "யாருதான் சார் இதெல்லாம் பண்ணல?" என்கிற மனநிலைக்கு மக்கள் மாறுவதோடு, பாலியல் குற்றவாளிகளை மாலை போட்டு வரவேற்கும் அவலமும் நடக்கும்! நடக்கும் என்ன இன்று சீமானின் விவகாரத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய ஒரு கேடுகெட்ட சமூகத்தில் நாம் வாழுகிறோமே என்கிற குற்ற உணர்வு நமக்கு வருமேயானால், சீமான் போன்ற பாலியல் குற்றவாளிகள் வெளியில் தலை காட்ட முடியுமா? 

ஊரான்

Monday, February 24, 2025

காசுக்காக மேடைகளில் வாயை அவிழ்ப்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளா?

மக்களின் பிரச்சனைகளுக்காக  மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி, சிறை சென்று சித்திரவதைகளை அனுபவித்த ஒரு தியாகியைப் போல, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாளை பூதாகரமாக ஊதிப் பெருக்குகின்றன ஊடகங்கள்.

ஆளும் கட்சியை, அதிலும் குறிப்பாக திமுக மற்றும் திராவிட
அரசியலை, சீமானைப் போலவே, மேடைகள் தோறும் வரைமுறையின்றி திட்டித் தீர்த்து, சிந்தனை ஏதுமற்ற ஒரு லும்பன் இரசிகப் பட்டாளத்தை உருவாக்கிய 'பெருமைக்குரியவர்தான்' இந்தக் காளியம்மாள்.

காளியம்மாள்

இவர் ஊர் ஊராகச் சென்று கூட்டம் பேசியதைத் தவிர வேறு என்ன செய்தார்? சொந்தக் காசை செலவு செய்தா கூட்டங்களுக்குச் சென்று வந்தார்? வாயை விற்று காசு பார்க்கும் கலையை கைவரப் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இன்று தாள்கள் படபடத்தால்தானே இவர்களின் வாய்கள்கூட மேடை ஏறுகின்றன. 

சாக்கடை எங்கு ஓடினாலும் புழுக்கள்தான் நெளியும். காளியம்மாள் எந்தக் கட்சியில் இணைவார் என்று ஆருடம் சொல்வதைவிட, சாக்கடைகளை மூடுவது எப்படி என்பதை யோசிப்பதே அறிவுடமை.

மாமிசப் பிண்டத்தில் நெளியும் புழுக்கள், ஒன்றை ஒன்று விழுங்க முயலும் போது, ஒரு சில புழுக்கள் அங்கிருந்து நழுவ முயல்வது இயல்புதானே?

அரசியலில் காளியம்மாள் ஒரு கவர்ச்சிக்காரி. திரைப்பட ஆட்டக்காரிக்கும் காளியம்மாவுக்கும் என்ன வேறுபாடு? முன்னவர் காசுக்காக திரைகளில் ஆடைகளை அவிழ்க்கிறார். பின்னவர் அதே தேவைக்காக மேடைகளில் வாயை அவிழ்க்கிறார்.


ஊரான்

Sunday, February 23, 2025

பாராஞ்சி: ஒரு வகைமாதிரி சனாதன கிராமம்!

"வேண்டும் பெரியார்! மீண்டும் பெரியார்!" என்ற தலைப்பில் இராணிப்பேட்டை மாவட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராஞ்சி முகாம் சார்பாக, பாராஞ்சி கிராமத்தில் இன்று (23.02.2025) நடைபெறும் தெருமுனைக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்.


பெரியார் குறித்து சீமான் அவதூறாகப் பேசிய பிறகு, சீமான் மறைந்து கொண்டிருக்கிறான்; பெரியார் பிறந்து கொண்டிருக்கிறார். இறந்துபோன ஒரு கிழவன் மீண்டும் அவதாரம் எடுப்பதையும், உயிரோடு உருமும் ஒரு கிடாத்தடியன் புதைந்து போவதையும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் உணர்த்துவதாகவே நான் கருதுகிறேன். 

கூட்டத்திற்குச் செல்லலாமா என்ற எண்ணம் எழுந்தவுடன், கூகுள் வரைபடத்தில் பாராஞ்சியைத் தேடினேன். வரைபடம் விரிவடைய விரிவடைய சோளிங்கபுரம்-அரக்கோணம் நெடுஞ்சாலைக்கு வடக்கே ஊரும், தெற்கே  காலனியும் இருப்பதைப் பார்த்த போது மனுதர்ம சாஸ்திரப்படி கட்டமைக்கப்பட்ட ஒரு கிராமமாக இன்றும் பாராஞ்சி காட்சி அளிக்கிறது.

ஊருக்கு வடமேற்கே பாராஞ்சி ஏரி அமைந்துள்ளது. ஏரியின் உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் தென்கிழக்காக நீள்கிறது. 

சண்டாளர்களுக்கு (பறையர்கள்) வீடு ஊருக்கு வெளியே இருக்க வேண்டியது (மனு: 10.51) என்கிற மனுவின் வரையறைப்படி, பாராஞ்சியிலும் ஊருக்கு வெளியே, பீடை திசையான தெற்கில்தான் சேரி அமைந்துள்ளது. 

பருவ காலங்களில் மேற்கு திசைக் காற்று சேரிக்குள் புகுந்து ஊருக்குள் வரக்கூடாது என்பதற்காகவும், மேற்கும்-வடக்கும் மேடாக இருப்பதனால் ஏரியின் உபரி நீரோ மழை நீரோ சேரிக்குள் வழிந்தோடி ஊருக்குள் வராமல் இருப்பதற்கும் ஏற்பதான் தெற்கு அல்லது தென்கிழக்கு திசையில் பள்ளமான பகுதிகளிலேயே சேரிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராஞ்சி சேரியும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஊர்-சேரி வேறுபாடு மட்டுமல்ல, ஊருக்குள்ளும் இதே கட்டமைப்புதான்
பாராஞ்சியிலும் உள்ளது. கிழக்கு-மேற்காக அமைந்துள்ள ஊர் தெருக்களில், வடக்கே ஐயங்கார் தெருவும், அதற்கு தெற்கே உடையார் தெருவும் அமைந்துள்ளது. உடையார் (அகமுடைய முதலியாரை உடையார்கள் என்பார்கள்)  தெருவுக்குக் கீழேதான் வன்னியர் தெரு உள்ளது. 


இந்து மத சாதியப் படிநிலை அமைப்பில் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்பதனால் அவர்கள் மேலேயும், அதற்கு அடுத்த படி நிலையில் உடையார்கள் இருப்பதனால் அதற்குக் கீழேயும், வன்னியர்கள் இவர்களுக்கும் கீழானவர்கள் என்பதனால் கிழக்கேயும் என  தெருக்கள் அமைந்துள்ளன.

இங்கேயும் மேடு-பள்ளம், மேற்கு-கிழக்கு என்கிற யுக்தி கையாளப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றாலும், பிராமண தெருவிற்கு மேற்கே அழகிய மணவாள சுந்தர நாராயண பெருமாள் கோவிலும்,  கிழக்கே கிருஷ்ணன் கோவிலும், உடையார் தெருவிற்கு கீழே பாதாளத்தம்மன் கோவிலும் அமைந்துள்ளது. சேரியில்கூட ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது. 

பாதாளத்தம்மனைத்தவிர மற்ற மூன்றுமே பெருமாளின் அவதாரங்கள்தானே? இந்துக்கள் அனைவரும் ஒன்று என்றால் ஒரே கோயில் போதாதா? ஏன் மூன்று கோயில்கள்? மேல் சாதிக்காரன வணங்கும் கோவிலுக்குள் கீழ்சாதிக்காரன்
வந்து விடக்கூடாது என்கிற ஏற்பாடுதான் இது. 

வைசிய வர்ணத்தைச் சேர்ந்த ஒருவன் உபநயனம் (பூணூல் கல்யாணம்) செய்து கொண்டால்தான் அவன் இருபிறப்பாளனாக ஆகி வைசியனாகத் தொடர முடியும். உபநயனம் செய்து கொள்ளாத பார்ப்பன, சத்திரிய, வைசிய வர்ணத்தினரை விராத்திய ஜாதி (மனு: 10: 20-24) என்று வகைப்படுத்துகிறான் மனு. இவர்கள் சாதியில் கீழானவர்கள் ஆகிறார்கள். 

உரிய காலத்திற்குள் உபநயனம் செய்து கொள்ளாத வைசிய வர்ணத்தைச் சேர்ந்தவனின் வாரிசுதான் ஆசாரி என்கிறது மனுதர்ம சாஸ்திரம். என்னதான் இன்று ஆசாரிகள் பூணூல் போட்டுக் கொண்டு தங்களை வைசியர்களாகக் காட்டிக்கொள்ள முனைந்தாலும் அவர்கள் மனுதர்ம சாஸ்திரப்படி கீழான சாதி என்பதனால் ஊரில் அவர்களுக்கு இடம் இல்லை என்பதைத்தான் இந்த ஊரில் தனியாக வெளியே உள்ள ஆசாரித் தெரு உணர்த்துகிறது.

மனுதர்ம சாஸ்திரப்படி, இன்று, விந்திய மலைக்குத் தெற்கே, அதாவது தென்னிந்தியாவில், பார்ப்பனர், சூத்திரர் என இரு வர்ணங்கள் மட்டுமே உண்டு என்பது தனி ஒரு செய்தி.

சேரிக்காரன் ஊர் தெரு வழியாகச் சென்றால் தெரு தீட்டாகிவிடும் என்பதாலும், சேரி வழியாகச் ஊர்க்காரன் சென்றால் செல்பவன் தீட்டுப்பட்டு விடுவான் என்பதனாலும் ஊர்காரர்கள் சேரிக்குள் நுழைந்தோ அல்லது சேரிக்காரர்கள் ஊருக்குள் நுழைந்தோ மற்ற ஊர்களுக்குச் செல்லும் வகையில் பொதுச்சாலை இருக்காது. அவ்வாறு நிகழாமல் இருப்பதற்கான பொதுச் சாலைதான் சோளிங்கபுரம்-அரக்கோணம் சாலை. இது ஊருக்கும் சேரிக்குமான (பை பாஸ்) புறவழிச் சாலை. மனுதான் புறவழிச் சாலைகளின் பிதா மகன்.

ஊருக்குள்ளும் இதுதான் நிலை. பிற சாதிக்காரர்கள் பார்ப்பனர்களின் தெருவுக்குள், அதாவது அக்ரகாரத்திற்குள் நுழைந்து செல்லும்படி பாதை அமைத்திருக்க மாட்டார்கள். அங்கேயும் புறவழிச் சாலைகள்தான்‌. இதை பாராஞ்சியிலும் பார்க்க முடியும். 

சாதியப் படிநிலை ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமையையும் கடைபிடிப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு வகை மாதிரி சனாதன கிராமம்தான் பாராஞ்சி. இந்திய கிராமங்கள் அனைத்தும் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஐயம் இருப்பின், நீங்கள் பயணிக்கும் ஒவ்வொரு கிராமத்தின் வடிவமைப்பையும் பரிசீலனை செய்து பாருங்கள். அவை பாராஞ்சியைப் போலத்தான் இருக்கும்.

இத்தகைய கிராமக் கட்டமைப்புகள் தொடரும் வரை, சாதியப் பிணக்குகளும், தீண்டாமையும், மோதல்களும் நடந்து கொண்டுதான் இருக்கும். மாற்று? தற்போதைய கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட்டு அதற்கு மாற்றாக, நகரிய (town shop), வீட்டு வசதி வாரிய (housing board), சமத்துவபுரம் போன்ற குடியிருப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஊர் சேரி பாகுபாடின்றி அனைவருக்கும் குலுக்கல் முறையில் இங்கே  வீட்டுமனைகளும் / வீடுகளும்
ஒதுக்கப்பட வேண்டும். 

சமூக நீதி ஏணியின் படிக்கட்டுகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையல்ல.

ஊரான்

Friday, February 21, 2025

கோவேறுக் கழுதைகள்!

பள்ளிக் கல்வியில் ஒன்றிய அரசின் தலையீடு இருந்தால் என்னவாகும்?

ஏற்கனவே காவி அடித்து களங்கமாகிப்போன
திருவள்ளுவன், இனி நித்தியைப்போல மற்றுமொரு சனாதன சாக்கடையாக மாற்றப்பட்டு அசிங்கப்படுவான். உலகப் பொதுமறை பார்ப்பன மறையாய் மாற்றப்படும்!

எழுத்துக்களை உருட்டிய தொல்காப்பியன், இனி அகத்தியனாகி கைகளில் ருத்ராட்சக் கொட்டைகளை உருட்டிக் கொண்டிருப்பான். சங்க இலக்கியங்களுக்கு சங்கு ஊதப்படும்.


முற்காலமோ பிற்காலமோ, வாளேந்திய மூவேந்தர்கள் எல்லாம்  கோமியம் குடித்துக் கொண்டிருப்பார்கள்.

கீழடிகள் மேலடியிலேயே கரைந்து போகும். 

மொத்தத்தில் தமிழனின் வரலாறுகள் பார்ப்பனிய புராணங்களாக வடிவமெடுத்து பிஞ்சுகளின் நெஞ்சங்களில்  ஏற்றப்படும்.

தமிழனின் பழம்பெருமை மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, வங்கம் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் பழம்பெருமைகளும் முற்றிலுமாக துடைத்தெரியப்படும்! 

இஸ்ரேலும்-காசாவும், ஆரியமும்-தமிழும் வேறு வேறு அல்ல. ஒண்ட வந்தவன் மண்ணில் மைந்தனாவான். மண்ணின் மைந்தன் இனி ஏதிலியாவான்.  

மாநிலங்களை நோக்கி படையெடுக்கும் கழுதைக்கும் குதிரைக்கும் பிறந்த கோவேறுகளின் கால்களை முடமாக்க, கரங்கள் தயாராகட்டும்!

ஊரான்

Monday, January 27, 2025

வீட்டு வாசலில் மாட்டுச் சாணம் தெளிப்பது ஏன்?

வேளாண் உற்பத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால், ஏர் கலப்பை, கவலைகள், மாட்டு வண்டிகளின் பயன்பாடு அநேகமாக அற்றுப் போனதால் மாடுகளும் குறைந்து போயின. இனவிருத்திக்காகவும், கறிக்காகவும், ஜல்லிக் கட்டு-எருதுக்கட்டுகளுக்காகவும் மட்டுமே காளைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிலரது வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. 

மற்றபடி பாலுக்காக கறவை மாடுகள் எப்பொழுதும் போல வளர்க்கப்படுகின்றன. மொத்தத்தில் மாடுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து போனதால் மாட்டுக் கொட்டகைகளும், எருக்குழிகளும் சின்னதாய் மாறின அல்லது அநேகமாய் காணாமல் போயின.


முன்பெல்லாம் வீட்டுத் தரையும், வாசலும், தெருவும், ஏன் சுவரும்கூட மண்ணால் பூசப்பட்டவை. நெல், கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட களத்து மேடுகளையும் மண் தரையில்தான் அமைப்பார்கள். இத்தகைய மண் தரைகளில் சாணத்தைக் கரைத்துத் தெளித்துப் பூசி மெழுகுவதுண்டு, துடைப்பத்தால் தட்டி தரையில் படிய வைப்பதுண்டு. அது 'பெயிண்ட்' போல தரையில் ஒட்டிக்கொள்வதால் தரை கெட்டியாக இருக்கும்.

கூரை வீடுகளின் மண் சுவர்களில்கூட சுண்ணாம்பு அடிப்பதற்குப் பதிலாக சாணத்தைத்தான் கரைத்துப் பூசுவார்கள். காரணம் சுண்ணாம்பு என்றால் காசு கொடுத்து வாங்க வேண்டும். சாணம் என்றால் தங்களது மாடுகளிடமிருந்தே கிடைக்கும்.

It is an adhesive to the floor and wall, nothing more than that. அதைத் தாண்டி அதற்கு மருத்துவ குணம் வெங்காயம் என்பதற்காக யாரும் தெளிப்பதில்லை, பூசுவதில்லை. சாணம் தெளிப்பதற்கான பயன்பாட்டுக் காரணம் இது ஒன்று மட்டுமே.

சரி, 'அவ்வளவு மருத்துவ குணம்' இருப்பதாகச் சொல்லப்படும் சாணத்தை இன்று ஏன் யாரும் தெளிப்பதில்லை? கிராமங்களில் கூட மொசைக் தரை, சிமெண்ட் வாசல்களுடன் கூடிய காங்கிரீட் வீடுகள் அதிகரித்து விட்டதால் சாணி தெளிப்பது தேவையற்றுப் போனது. களத்து மேடுகளும் எந்திர அறுவடையால் காணாமல் போயின அல்லது காங்கிரீட்டாய் மாறின. 

இதெல்லாம் அக்காவுக்கு எப்படித் தெரியும்? மண் வீட்டில் வசித்து எப்பவாவது சாணி தெளித்திருந்தால்தானே அதைத் தெளிப்பதற்கான காரணம் அக்காவுக்குப் புரிந்திருக்கும். காங்கிரீட் வீட்டிலேயே பிறந்து வளர்ந்தவராச்சே. சரி, இப்பவும் வாய்ப்பிருக்கு. தமிழிசை அக்கா
தனது வீட்டு மொசைக்/கிரானைட் தரைகளிலும், சுவர்களிலும் சாணம் தெளித்து அதன் 'மணம் கமழும் மருத்துவ மகிமையின்' சுகத்தை அனுபவிக்கட்டுமே? யார் தடுத்தது? அதற்கு லட்டி லட்டியாக சாணத்தை அமேசானில்தான் வாங்க வேண்டி வரும். 

சாணம் குறித்த நடைமுறை அறிவு எதுவுமே இல்லாத பஞ்சகச்சங்களும் மடிசார்களும் எடுக்கும் சாண வாந்தியை  அப்படியே இரு கைகளால் ஏந்திக் குடிக்கக் துடிக்கிறார்கள் தமிழிசைகள்‌.  குடிக்கட்டும். அது அவர்களது உணவு, அவர்களது உரிமை. சாணத்தின் பயன்பாடு பற்றித் தெரிந்த நமக்கு அக்காக்கள் வகுப்பெடுக்க வேண்டாம்!

ஊரான்

Monday, January 6, 2025

கட்சிப் பொறுப்புகளுக்குக் கடும் போட்டி! என்ன காரணம்?

மாவட்டச் செயலாளர் தேர்வுக்காக திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் இன்று பாஜக தொண்டர்கள் ஒரு திருமண மண்டபத்தில் ஒன்று கூடியபோது அவர்களுக்கிடையே தள்ளமுள்ளு! 




இங்கு மட்டுமல்ல திமுக, அதிமுக உள்ளிட்ட தேர்தலில் பங்கெடுக்கின்ற எல்லாக் கட்சிகளிலும் கட்சிப் பொறுப்புகளைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. 

மாவட்டச் செயலாளருக்கான போட்டி மிகக் கடுமையாக இருப்பதால், மாவட்டங்கள் வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என இருந்தது போய், இன்று சட்டமன்றத் தொகுதிகளே மாவட்டங்களாய் மாறுகின்றன.

மக்களுக்குச் சேவை செய்வதற்காகவா இவர்கள் முண்டியடிக்கிறார்கள்? கட்சித் தலைவர்கள் இதை எதைச் சொல்லி நியாயப்படுத்தினாலும், ஆளும் கட்சியினர் அடிக்கும் கொள்ளையில், சிதறும் சில்லுகளைப் பொறுக்குவதற்குத்தான் இந்தக் கடும் போட்டி.  


இதெல்லாம் நமக்குத் தெரிகிறதோ இல்லையோ போட்டியாளர்களுக்கு இது மட்டும்தான் தெரியும். இதன் விளைவுதான் தள்ளுமுள்ளுகள். பதவி கிடைக்கவில்லை என்றால் கட்சி மாறுவதும், புதிதாக யாராவது கட்சித் தொடங்கினால் அதில் நுழைந்து கொள்வதும் நம் கண் முன்னால் நடக்கும் நிஜக் காட்சிகள். 

ஓராயிரம் உள்ளூர் பிரச்சனைகள் இருந்தாலும், அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் இவற்றைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். ஆற்று மணலா,  கல்குவாரியா கொஞ்சம் சில்லறைகளைத் தட்டிவிட்டால் அல்லக்கைகள் அடங்கிவிடும். இதில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே ஓரளவுக்கு விதிவிலக்கு. 

இதுதான் இன்றைய அரசியல். மக்கள் கம்யூனிஸ்டுகளை ஆதரித்து வளர்க்காத வரை, உள்ளூர் அல்லக்கைகளின் கைகளில்தான் அரசியல் சுற்றிக் கொண்டிருக்கும்.

ஊரான்

Friday, January 3, 2025

கவிஞன் என்ன செய்கிறான்?

பெண்களை மட்டும் வருணிப்பதில் சங்க காலம் முதல் நம்ம காலம் வரை எந்தக் கவிஞனும் விதிவிலக்கு இல்லை. 

ஆண்களுக்கு உதடும், மூக்கும்,  கன்னமும், இமையும், மார்பும், தலை மயிரும் இல்லையா என்ன? பெண் என்றால்தான் கற்பனை ஊற்றெருக்கிறது.


ஏன் எவனும் ஆண்களைப் பாட மறுக்கிறான்? கவிஞனின் பார்வையில் பெண் ஒரு போகப் பொருள். கவிஞர்கள்தான் இதை நம்மிடமும் கடத்துகிறார்கள். காமத்தைத் தூண்டி வன்புணர்வுக்கு வழி காட்டுபவர்களும் இவர்கள்தான்.

கலவிக்கு வகுப்பெடுக்கும் கவிஞர்கள்தான் அதிகம். விலங்குகளின் கலவிக்கு வகுப்பா எடுக்கிறார்கள்? கலவி அது பருவத்தின் வெளிப்பாடு. வகுப்பெடுக்கவில்லை என்றாலும் அது இயல்பாய் நிகழும். இனப் பெருக்கம் மட்டுமே அதன் நோக்கம். 
இதற்கு ஏன் ஓராயிரம்  ஒப்பனைகள் கற்பனைகள்?

கவிஞர்களின் சொற்கலவி இல்லை என்றால் குடும்ப வாழ்வு இயல்பாய் நகரும். இடர் செய்து தடம்மாற வழிவகுப்போரும் கவிஞர்களே!

மாறாக, இப்படியும் வருணிக்கிறான் ஒருவன்,

"வாய்நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மையிடுங்கண்
பீ நாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழி வாய்ச்
சீ நாறும் யோனி அழல்நாறும் இந்திரியப் பேறு சிந்திப்
பாய்நாறும் மங்கையர்க் கோஇங்ஙனே மனம் பற்றியதே?"- பட்டினத்தார்-119,

சித்தர் பாடல்கள்: பதிப்பாசிரியர் டாக்டர் சா.மெய்யப்பன், மணிவாசகர் பதிப்பகம், 1993.

காமத்தை விதைப்பதில் சிற்பங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், நாவல்கள், திரைப்படங்கள் எதுவும் விதிவிலக்கல்ல.

ஊரான்

Thursday, January 2, 2025

கோமாதாக்கள் ஜாக்கிரதை?

பரபரப்பான காலை நேரம். வேலூர் செல்வதற்காகப் பயணிகளின் பெருங்கூட்டம், வரும் பேருந்துகளை வலப்பக்கமாக எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. சுற்றிச் செல்லும் பேருந்து என்றால் சற்றே தயங்கி நிற்பதும், 'பைபாஸ் ரைடர்' என்றால் தாவி ஏறுவதும் இன்று வழக்கமாகிப் போனது. 

நிறுத்தத்திற்குப் பின்பக்கம் வாழைப்பழ வியாபாரி, தலை வாழை இலையைத் தனியாகவும், அதன் அடிப்பாகத்தைத் தனியாகவும், மிச்சத்தைக் கழிவாகவும் தனித்தனியே நறுக்க, அவரது மகனோ கழிவுகளை ஓரமாக வீச, மற்றவைகளைத் தனித்தனியே நேர்த்தியாக அடுக்கி வைத்தான். 


பூவன், கற்பூரவள்ளி என கனியா சில வாழைத்தார்களை ஓரமாக அடுக்க, பாதி கனிந்தும் கனியாமல் இருந்த வாழைத்தார்களை
தனித் தனி சீப்புகளாக அரிந்து அடுக்கி வைத்தார் வியாபாரி. குலையின் நுனியில் இருந்த கடைசிச் சீப்புகளில் நசுங்கி, நைந்து போன சில காய்களைக் கத்தரித்து இலைக் கழிவுகள் இருந்த இடத்தில் வீசி எறிந்தார்.

வாழை இலை மற்றும் பழங்களோடு தேங்காய்களையும், எலுமிச்சம் பழங்களையும் அவர் விற்பது உண்டு. வழக்கமான வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்களில் வருவதும் போவதுமாக இருப்பதால் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் ஓரிடத்தில் நிற்காமல் இப்படியும் அப்படியும் நகர்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும். போதாக்குறைக்கு கழிவு இலைகளையும், நைந்து போன வாழைக் காய்களையும் தின்பதற்குத் தேடி வரும் கோமாதாக்களின் ஊடுருவல் வேறு.

வந்தோமா தின்றோமா சென்றோமா என்றில்லாமல் கண்ட இடத்தில் கிடைத்ததை எல்லாம் தின்பதால் உண்டாகும் கழிசலை அங்கே கழிந்துவிட்டு, கொஞ்சம் கோமியத்தையும் இறைத்துவிட்டு, அடுத்தக் கடை நோக்கிப் பயணிப்பது கோமாதாக்களின் வாடிக்கை. மூட்டை முடிச்சுகளோடு வந்திறங்கும் பயணிகளை வளைத்துப் போட வட்டமிடும் ஆட்டோ ஓட்டுநர்கள் மறு பக்கம். 

வாழைப்பழ வியாபாரியின் உழைப்பு என்னை எப்பொழுதும் ஈர்ப்பதனால், அந்த அழகைப் பார்க்காமல் இருக்க முடியாது. அப்படித்தான் வேலூர் செல்வதற்காக, இன்று காலை பேருந்து நிறுத்தத்திற்கு அவரைப் பார்த்தவாறு சென்றபோது, சடார் என ஒருவர் என்னைப் பின்பக்கமாக இழுத்தார். அதற்குள் எனது முதுகு பக்கம் ஏதோ முட்டிவிட்டது.

திரும்பிப் பார்த்தேன், வளைந்த கொம்புகளுடன் கருத்த ஒரு கோமாதா அவ்விடத்தில் கிடைத்ததைக் கவ்விக்கொண்டு அடுத்த இடம் நோக்கி நகரத் தொடங்கியது. நல்லவேளை கோமாதாவின் இரண்டு கொம்புகளும் வளைந்து இருந்ததால், நின்று கொண்டிருந்த பயணி என்னை சடாரென இழுத்ததால் பெரும் முட்டலில் இருந்து இன்று நான் தப்பினேன். இல்லையென்றால் நான் காட்சிப் பொருளாகி, அது ஊடகச் செய்தியாகப் பரவி இருக்கும். 

சாலைகளில் சுற்றித் திரிந்து, பொது மக்களின் உயிருக்கு உலை வைக்கும் இத்தகையத் கோமாதாக்களை நொந்து கொள்வதா அல்லது கோமாதாக்களைக் கட்டவிழ்த்து விடும் மாட்டுக்காரர்கள் மீது கோபப்படுவதா அல்லது மாடுகள் சாலையில் திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு என்பதை தெரிந்தும் வாளாவிருக்கும் நகராட்சி நிர்வாகிகளைச் சாடுவதா அல்லது மிச்சம் மீதிக் கழிவுகளைச் சாலை ஓரங்களில் வீசும் வியாபாரிகளை நொந்து கொள்வதா அல்லது 'இதெல்லாம் இப்படித்தான் இருக்கும், நீதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று என்னை நானே எச்சரித்துக் கொள்வதா என்று கேட்டால், 'நீதான் கவனமாக இருக்க வேண்டும்' என்றுதான் நமக்கு உபதேசங்கள் வரும்.

இந்த ஆபத்துகளை எல்லாம் உணர்ந்து, 03.02.2021 அன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில், வாலாஜாவில்
 "மாடுகளுடன் ஒரு மல்லுக்கட்டு" என்றப் போராட்டத்தைக்கூட நடத்தி விட்டோம். 

தேவை கருதி அன்றைய கோரிக்கையை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன். 

"சாலையின் நடுவே ஒருவன் சண்டித்தனம் செய்தால், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததாக அவன் மீது "இந்திய தண்டனைச் சட்டம்", பிரிவு 289 ன் கீழ் வழக்குத் தொடுப்பது போல, மாடுகளைச் சாலைகளில் திரிய விடும் உரிமையாளர் மீதும், மேற்கண்ட பிரிவில் வழக்குத் தொடுக்க முடியும். தெரிந்தோ, கவனக் குறைவாகவோ மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், கொடுங்காயம் உண்டாக்குதல் ஆகிய குற்றங்களுக்காக உரிமையாளரை ஆறுமாதம் சிறை வைக்கவும், ரூ.1000 தண்டம் விதிக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது. மேலும் மாடுகளால் ஏற்படுத்தப்பட்டக் காயம் மற்றும் சேதத்திற்கு உரிமையாளர் இழப்பீடும் வழங்க வேண்டும்.

உணவுக்காகத்தானே மாடுகளை வெளியே அவிழ்த்து விடுகின்றனர். அப்படியானால் அவர்கள் மாடுகளுக்குப் போதிய அளவு உணவு வழங்கவில்லை என்ற குற்றத்திற்காக "விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960", 11 (I) (j) (h) ஆகிய பிரிவுகளின் கீழ் உரிமையாளர் மீது வழக்குத் தொடுக்க முடியும். 


நெகிழி உள்ளிட்டக் கண்ட கழிவுகளைத் தின்று நோய்க்கு ஆட்படும் பசுக்கள் கொடுக்கும் பாலை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதால் அதன்மூலம் பிறருக்கு நோய் உண்டாவதற்கும் உரிமையாளர்கள் காரணமாக இருப்பதால் "கால்நடைகள் அத்துமீறல் (தமிழ்நாடு) திருத்தச் சட்டம் 1857" ன்படி, கால்நடைகளைக் கைப்பற்றுவதோடு, உரிமையாளர்களைக் கைது செய்யவும் சட்டம் வழிவகை செய்கிறது‌.


"நகரப்பகுதிகளில் விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்படுத்துதல் & ஒழுங்குபடுத்துதல்) தமிழ் நாடு சட்டம் 1997" ன் படி விலங்குகளை வெளியே விடக்கூடாது.


மாடுகள் உள்ளிட்ட விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான சட்டங்கள் உள்ளன. பல்வேறு உயர் நீதிமன்றங்களும் மற்றும் உச்ச நீதிமன்றமும் மாடுகள் உள்ளிட்ட விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏராளமானத் தீர்ப்புகளை வழங்கி உள்ளன.


சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளைக் கட்டுப்படுத்த தவறும் அதிகாரிகள், பணியில் அலட்சியம் காட்டியதாகக் கூறி, விலங்குகளால் ஏற்பட்ட சேதாரம் மற்றும் காயங்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்கி இழப்பீடு கோரி அவர்கள் மீது உரிமையியல் வழக்குத் தொடுக்க முடியும்.


சாட்டைகள் எடுக்கப்படாத வரை சண்டித்தனங்களுக்கு முடிவேது?"


ஊரான்


தொடர்புடைய பதிவு

மாடுகளுடன் ஒரு மல்லுக்கட்டு!