Showing posts with label வெண்மணி கீழ தஞ்சை கம்யூனிஸ்ட் காவிரி திருச்சி. Show all posts
Showing posts with label வெண்மணி கீழ தஞ்சை கம்யூனிஸ்ட் காவிரி திருச்சி. Show all posts

Thursday, 1 January 2026

பணம் புரளும் புறவழிச் சாலைகள்!

ஒரு காலத்தில் புறவழிச் சாலைகளெல்லாம் ஒதுக்குப்புறப் பாதைகளாக பார்க்கப்பட்டன. ஆனால் இன்று அவை காங்கிரீட் காடுகளின் புகலிடமாகிவிட்டன. 

கொள்ளு விளைவதற்குகூட லாயக்கற்ற தகடூர் மண்ணில்கூட இன்று கரன்சி நோட்டுகள் முளைக்கின்றன. நேர்வழியைவிட புறவழிக்குத்தான் எத்தனை மவுசு? பித்தலாட்டக்காரர்களைக்கூட புறவழிகள்தானே கோபுரங்களில் கொண்டு சேர்க்கின்றன.

திருச்சி பால்பண்ணை, ஒரு காலத்தில் வாழைகளின் உறைவிடம். பிள்ளைகளைக் கொன்று புதைத்து அங்கே கோபுரங்களை எழுப்பி அதில் ‘ஆவி’களை வாழ வைத்தானாம் ஒரு சம்சாரி என்பது போல, இன்று  அங்கே ‘டி மார்ட்’டுகளும், ‘ஹோண்டா’க்களும், அப்பல்லோக்களும் முளைத்திருக்கின்றன.

திருச்சி பால்பண்ணை (கோப்புப்‌படம்)

பிற்பகல் மணி 2: 30. சாலையைக் கடந்து நகரை நோக்கிச் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தோம். நிரம்பி வழிந்த கூட்டத்தோடு வந்து நின்ற தனியார் பேருந்தில் நான்கு ‘மெயின்கார்டுகேட்’ பயணச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு தெப்பக்குளத்தை நோக்கிப் பயணித்தோம். காற்றை மட்டுமே அடைத்துக் கொண்டு அரசுப் பேருந்துகள் ஹாயாக ஓடும் பொழுது, தனியார் பேருந்துகளில் மட்டும் மூச்சுமுட்ட கூட்டமிருப்பதேன்?

நின்று கொண்டு பயணிப்பவர்கள், சீட்டுக்கட்டுகளைப் போல முன்பக்கமாக சரியாமல் இருப்பதற்கும், இருக்கைகளில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் முகரைக்கட்டையை பாதுகாத்துக் கொள்வதற்கும் போதுமான பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.  இல்லையேல் தனியார் நகரப் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்ப்பது நலம். 

எமகண்டத்தைக்கூட எளிதில் கடந்து விடலாம். ஆனால் பால்பண்ணையிலிருந்து பேருந்தில் பயணிப்பவர்கள் காந்தி மார்க்கெட்டைத் தாண்டுவதென்பது அவ்வளவு எளிதல்ல. குறுகிய சாலையின் போக்குவரத்து நெரிசலால்,  டிரைவர் அடிக்கடி அடிக்கும் பிரேக்கில் இருந்து உங்களை தற்காத்துக் கொண்டால் வீடுபோய்ச் சேரலாம். இல்லையேல் வீடுபேறுதான்! 

டிரைவர் பிரேக் அடிக்கும் போதெல்லாம்
உடன் வந்த இராவணனுக்கு ஏகக் கோபம். இதுவே வேலூரா இருந்தால் ‘நடக்கிறதே வேற’ என்றார். இராமன் காக்கிறானோ இல்லையோ ‘காக்க நான் இருக்கிறேன்’ என்கிற பாசக்கார இராவணனின் குரல் அது.

மாரியம்மன் கோயிலையொட்டி ஓடும் ஒரு கால்வாயில், காலை நேரங்களில் இளம் சிறார்கள் வரிசையாக அமர்ந்து மலம் கழிப்பதையும், அதே நேரத்தில், அதையொட்டியே ஓடும் மற்றொரு வாய்க்காலில் வெற்றிலைக் கட்டுகளை வியாபாரிகள் முக்கி எடுக்கும் அந்தக் கண்கொள்ளாக் காட்சிகளைக் காண்பவன், தன் வாழ்நாளில் ஒருபோதும் வெற்றிலையைத் தொடமாட்டான்.

காந்தி மார்க்கெட்டை நெருங்கும் போது   அழுகிய காய்கறிகளின் நாற்றமும், தூசுத் துகள்களும் ஒருசேர நம் நாசிகளுக்குள் ஊடுருவி விடும்! ஒரு காலத்தில் பாலக்கரை பிரபாத் தியேட்டர் வரை சென்று வந்த பேருந்துகள், அதன் பிறகு வெங்காய மண்டிக்குள் நுழைந்து செல்வதால் வெங்காய நெடியின் தாக்கம் வேறு. அழுகிய வெங்காய நெடி இருக்கிறதே, அது ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் மறையாத மாநெடி. 

காந்தி மார்க்கெட் வழியாக அன்றாடம் திருவெறும்பூரில் உள்ள ‘பெல்’ (BHEL) ஆலைக்கு வேலைக்குச் சென்று வந்த 1980 காலகட்டத்தில் எனது ஈசினோபில் அளவு எப்பொழுதும் இயல்பைவிட அதிகரித்தே காணப்படும். அவ்வழியாக அன்றாடம் பயணிக்கும் அனைவரின் நிலையும் இதுதான். 

வெங்காய மண்டியைத் தாண்டி கிளைச் சிறையைக் கடந்த போது பழைய அனுபவம் ஒன்று நினைவுக்கு வந்தது.

பயணம் தொடரும்

ஊரான்@தமிழ்மணி

தொடர்புடைய பதிவு


Tuesday, 30 December 2025

உறைபனியில் தகித்த வெண்மணி!

ஊட்டியைத் தொட்ட உறைபனி, நாட்டுப்புறங்களையும் (plains) எட்டி விடுமோ என்கிற அச்சம் நிலவும் மார்கழி மாதக் கடுங்குளிர். எட்டு மணிவரை இழுத்துப் போர்த்தித் தூங்கலாம் என்றால், எதிரில் உள்ள செல்வவிநாயகன் எம்மை நாலரைக்கெல்லாம் எழுப்பி விடுகிறான். 

வாலாஜா 'ஹவுசிங் போர்டில்' உள்ள செல்வவிநாயகனுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளுக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்’ கேட்பது அபச்சாரமன்றோ?

காலை வேளையில், கடுங்குளிரில் நடுங்கியவாறு வெளியே போய் புரோகிதம் பண்ணி பையை நிரப்ப எதுக்கு ஓய் ‘ரிஸ்க்’ எடுக்கணும்? அவாளையெல்லாம் கோவிலுக்கு வரச்சொன்னா, கர்ப்பக் கிரகத்தின் கதகதப்பிலேயே காசு பார்க்கலாமில்லியோ? அதுக்குத்தானே ஓய் மார்கழியை அவாளுக்கு மட்டும் பீடை என்கிறோம். 

புரோகிதம் என்ன ஆக்கத் தொழிலா, அது ஒரு 'புரோக்கர்' தொழில்தானே? ஆலயங்கள் மட்டுமல்ல, இந்த அகிலமும் புரோக்கர்களால்தானே ஆளப்படுகிறது. அதனால்தானே நமது ஆற்றல்கள் அனைத்தையும் இழந்து ஆண்டவனிடமும், அதிகார வர்க்கத்திடமும் இறைஞ்சி நிற்கிறோம்.

கண்ணனுக்காக ஆண்டாள், திருப்பாவையில் நெக்குருகிப் பாடும் பொழுது, ஈசனுக்கும் மட்டும் ஏக்கம் வாராதோ? ஈசனின் ஏக்கம் போக்க, அவனை ஆராதித்து போற்றிப் புகழ, அதிகாலை வேளையில் திருவெம்பாவை பாடிக்கொண்டு கன்னிப் பெண்களைப் போகச் சொன்னால் ‘சீனியர் சிட்டிசன்கள்’ அங்கே முண்டியடிக்கிறார்கள்.  
***

டிசம்பர் 25, 1968 இல் 44 வேளாண் கூலிகள் வெந்து கருகி ஆண்டுகள் 57 உருண்டோடினாலும் பொதுமையர் எல்லாம் வெஞ்சினம் கொள்ளும் வெண்மணித் தியாகிகளின் நினைவு நாள் இது. இது தொடர்பான நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள ஏழு மணிப் பேருந்தைப் பிடிப்பதற்காக வேலூர் நோக்கி விரைந்து சென்றோம்.  கணப்பொழுதில் அதைத் தவறவிட்டதால் அடுத்து வந்த ‘குளுகுளு’ பேருந்தில் அதிகக் கட்டணம் செலுத்தி திருச்சி நோக்கிப் பயணமானோம்.

முழுதும் மூடியப் பேருந்து என்பதனால் காலைப் பனியின் மூடுதிரையையும், ஓடி மறையும் மலைகளையும், எதிரே மோதவரும் 'காங்கிரீட்' காடுகளையும் காண முடியாமல் விழிகள் ஏங்கித் தவித்தன. பக்கவாட்டு திரைச் சீலையின் இடுக்கில் பார்க்க முனையும் போது, நடத்துநரின் ‘இழுத்து மூடுங்க’ எனும் ஓசை மட்டும் காதுகளை முட்டியது.

பிற்பகல் இரண்டு மணி. திருச்சியை நெருங்கி விட்டோமா என அறிய, திரை இடுக்கில் எட்டிப் பார்த்தேன். கதிரவனின் கதிர்கள் பட்டு பளிச்சிட்ட காவிரி, டெல்டாவை நோக்கி சலனமின்றி ஓடிக் கொண்டிருந்தாள். 

நகர இடுக்குகளின் நெரிசலில் சிக்கி மூச்சுமுட்டாமல், அலுக்காய் அடைக்கலத்தை நோக்கிச் செல்ல பேருந்துகள் எல்லாம் இப்பொழுது புறவழியையே நாடுகின்றன. பால்பண்ணையில் நாங்கள் இறங்கிக் கொள்ள, பஞ்சப்பூரை நோக்கி விரைந்தது அந்தப் பேருந்து.

தொடரும்

ஊரான்