Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Thursday, 22 August 2024

பிரபலம் எனும் பாழுங்கிணறு: ஜாக்கிரதை!

பொதுவுடமைக் கோட்பாட்டிற்குக் குறைவான எது ஒன்றும், ஒன்று அது சீர்திருத்தத்திற்கு  வித்திடும் அல்லது பிழைப்புவாதத்திற்கு இட்டுச் செல்லும். திரைத்துறை மூலம் கிடைக்கும் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொண்டோ அல்லது சாதி - மதப் பின்புலத்தைப் பயன்படுத்திக் கொண்டோ கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் என்று பேசிக்கொண்டு சிலர் அரசியலுக்குள் நுழைவார்கள்.

பிழைப்பதற்கு இதுவரை எந்தக் கட்சியிலும் பொறுப்பு கிடைக்காமல் வெளியில் காத்திருந்த புதிய முகங்களும், மற்றபிற கட்சிகளில் நீண்ட காலமாக இருந்தும், பொறுப்பும் பிழைக்க வாய்ப்பும் கிடைக்காதவர்களுமே முதலில் இத்தகையப் புதிய கட்சிகளை நோக்கிப் படையெடுப்பார்கள்


பெரும்பாலும் இவர்களே புதிய கட்சியின் கிளை, வட்ட, ஒன்றிய, மாவட்டப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள். பாமர மக்களும் பிரபலம் எனும் கவர்ச்சியில் மயங்கி பாழுங்கிணற்றை நோக்கி நகருவார்கள்.

அரசு ஒப்பந்தங்களை எடுத்து காசு பார்ப்பது, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட உரிமங்களைப் பெறுவது, தொழில் தொடங்குகிறேன் என்ற பெயரில் வங்கிகளில் இருந்து சுலபமாகக் கடன் பெற்று பிறகு பட்டை நாமம் போடுவது, அரசு புறம்போக்கு நிலம் மற்றும் கேட்பாரற்றுக் கிடக்கும் தனியார் நிலங்களை ஆக்கிரமிப்பது அல்லது அபகரிப்பது, லட்சங்களிலும் கோடிகளிலும் புரளும் கொடுக்கல் வாங்கல்களில் நீதி அரசர்களாக அவதாரம் எடுப்பது உள்ளிட்டத் தொழில்களைச் செய்வதற்கு மேற்கண்ட கிளை-வட்ட-ஒன்றிய-மாவட்டப் பொறுப்புகளே இவர்களுக்கு ஆயுதங்களாகப் பயன்படுகின்றன.  

எங்கேயாவது எக்குத் தப்பாக சிக்கிக்கொண்டால் அதே பொறுப்புகள்தான் இவர்களுக்குக் கேடயங்களாகவும் பயன்படுகின்றன

கஞ்சா-போதைப் பொருள் கடத்தல், பாலியல் அத்துமீறல்கள், தில்லுமுல்லு, மோசடி, ஏமாற்று, அடிதடி, மோதல், கொலை இவைதான் இவர்களின் வழமையானச் செயல்கள். நில மோசடி உள்ளிட்ட கட்டப் பஞ்சாயத்துகளில் நடைபெறும் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் - பொதுவுடமைக் கட்சிகளைத் தவிர்த்து - பிற சர்வ கட்சியைத் சேர்ந்தவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

ஒரு சில ஆண்டுகள் கழித்து இத்தகையப் புதிய கட்சிகள், பாழும் கிணறுதான் என்பதை பட்டுணர்ந்து, மக்கள் இவர்களை நிராகரிக்கும் பொழுது, ஏதோ ஒரு பின்புலத்தைக் கொண்டு மீண்டும் ஒருவர் வருவார்.  வரலாறுகளை விட எதிர்காலமே மக்களுக்கு முக்கியம் என்பதால், மீண்டும் முதலில் இருந்து தொடங்குவார்கள்.

பொதுவுடைமை பேசுவோர் மத்தியில் ஒரு சில குறைகள் இருந்தாலும் அவர்கள் மட்டும்தான் மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம்

களைகளுக்கு உரம் போட்டு வளர்த்தால், பொதுவுடமை எனும் பயிர்கள் எப்படி வளரும்? களைகளை அப்புறப்படுத்தி பயிர்களை 
அரவணைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்குமல்லவோ?

பிரபலம் எனும் பாழுங்கிணறு: ஜாக்கிரதை!
 
 ஊரான்

Sunday, 21 July 2024

கருப்பு ராமனும் தீண்டாமையும்!

நாட்டில் சோத்துக்குப் பஞ்சம் வந்தாலும் ராமன்களுக்குப் பஞ்சமில்லை. உயிரற்ற இந்த ராமன்கள் அவ்வப்பொழுது உயிர்த்தெழுகிறார்கள். அப்படி அயோத்தியில் பாலராமன் உயிர்த்தெழுந்ததை சமீபத்தில் நாடே பார்த்தது.

ராமன் என்றாலே அவன் பிரச்சனைக்கு உரியவன்தான் என்பதாலோ என்னவோ
ராமன் எத்தனை ராமனடி!” என்ற பெயரில் தமிழ்நாட்டுக்காரன் படமே எடுத்திருக்கிறான்.
 
காலாராம்
 
இவன் ஒரு கருப்பு ராமன். புராணங்களின் கூற்றுப்படி, நாசிக் பகுதியில் இவன் தலைமறைவாக வாழ்ந்தானாம். அதன் நினைவாக இவனுக்கு 1782 இல் காலாராம் என்ற பெயரில் ஒரு கோவிலை எழுப்பி இருக்கிறார்கள்.

 
காலா என்றால் கருப்பாம். அதனால்தானோ என்னவோ பா.ரஞ்சித் கூட, காலா என்ற பெயரில் மும்பையை மையமாகக் கொண்டு ரஜினியை வைத்துப் படம் எடுத்தாரோ?
 
இந்துக்களின் கடவுளாக போற்றப்படும் இந்த கருப்பு ராமனின் காலாராம் கோவிலில் வழிபாடு செய்ய, தீண்டாமையைக் காரணம் காட்டி இந்து மதத்தைச் சேர்ந்த மகர் சாதி மக்களை சாதி இந்துக்கள் அனுமதிக்கவில்லை. இந்த இழிவுக்கு எதிராக, இதே மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்த கருப்பு ராமன் கோவிலில் நுழைய வேண்டும் என்று 1930 இல் 15000 பேர் கலந்து கொண்ட ஒரு மாநாட்டைக் கூட்டி தனது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்குகிறார்.

கோவிலில் நுழைவதற்கான பேரணி ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டிருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்க 8000 பேர் பதிவு செய்திருந்தனர்.  500 பெண்கள் உட்பட 3000 பேர் திரண்டனர். இதைக் கண்டு பீதியுற்ற சனாதனிகள், கோவில் வாசல்களை இழுத்து மூடுகின்றனர்.
 
இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்க நாசிக் நகரில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் அதிக அளவில் கலந்து கொண்ட சனாதனிகள், கூட்டத்தில் ரௌவுடித்தனம் செய்கின்றனர். கற்களையும் செருப்புகளையும் வீசி எறிந்தனர். அந்த ராமனே நேரில் வந்து கோவிலைத் திறந்து விடுங்கள் என்று சொல்லி இருந்தால்கூட ராமனையும் அவர்கள் அப்புறப்படுத்தி இருப்பார்கள் என்று அந்த சம்பவத்தை வருணிக்கிறார் அம்பேத்கர்.
 
ஒரு மாத காலத்திற்கு இந்த சத்தியாகிரகப் போராட்டம் தொடர்கிறது. சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மகர்களுக்கும் இடையே ஒரு சமரசம் ஏற்பட்டு அனைவரும் சேர்ந்து தேரை இழுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எங்கே தீண்டத்தகாத மக்கள் தேரைப் பிடித்து இழுத்து விடுவார்களோ என்று அஞ்சிய சாதி இந்துக்கள், முண்டியடித்துக் கொண்டு தேரை தாறுமாறாக இழுத்துக் கொண்டு ஓடினர்.
 
தீண்டத்தகாத மக்கள் மேற்கொண்ட இந்தப் போராட்டம் சனாதன இந்துக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தீண்டத்தகாதவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்; அவர்களுக்கான சாலைகள் மூடப்பட்டன; சந்தையில் இருந்து பொருள்களை வாங்குவதற்கு மறுக்கப்பட்டனர்.
 
இத்தனைத் துன்பங்களுக்கு இடையேயும், நாசிக்கில் போராட்டம் தொடர்ந்தது.
நீதிமன்றத்திற்குச் சென்றால் நீதி கிடைக்கும் என்று தீண்டத்தகாத மக்கள் நீதி மன்றத்தை நாடுகின்றனர். ஆனால் கோவிலில் நுழைய நீதிமன்றம் தடை விதிக்கிறது. மாகாண சட்டசபையில் மசோதா நிறைவேற்ற முயன்ற போதும் மசோதா நிறைவேற மறுக்கப்படுகிறது.
 
தீண்டாமையின் ஆணி வேர்

சாதி மற்றும் தீண்டாமைக்கான அடிப்படை நால்வர்ணத்தில் இருக்கிறது. அதுதான் ஆணிவேர். எனவே, நால்வர்ணத்தை சாஸ்திரங்களிலிருந்து அகற்றி, அதைக் கைவிட வேண்டும்; இதற்குக் குறைவான எதையும் ஏற்க முடியாது என்கிறார் அம்பேத்கர்.
 
கோவில் நுழைவைவிட, அரசியல் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படையான விசயங்கள்தான் தீண்டத்தகாத மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை என்றாலும்கூட, பூனைகளும் நாய்களும்  நுழையும் ஒரு கோவிலில் இந்து மதத்தைச் சார்ந்த மகர் சாதி மக்கள் நுழையக் கூடாதா? மனிதன் என்ற உரிமையை மகர்களுக்கு சாதி இந்துக்கள் அளிக்கிறார்களா? மனிதனை மனிதனாக நடத்த இந்து மதம் விரும்புகிறதா?” என்று சோதிப்பதற்காகவும், தீண்டத்தகாத சாதி மக்கள் தங்கள் நிலையை உணர்ந்து கொள்ளவும், இந்து சமுதாயத்தில் அவர்களது உண்மை நிலை என்ன என்பதை உணர வைப்பதற்காகவுமே இந்தக் கோவில் நுழைவுப் போராட்டத்தை மேற்கொண்டதாகத் தனது குறிக்கோளைத் தெளிவுபடுத்துகிறார் அம்பேத்கர்.
 
ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தீண்டத்தகாத மகர் சாதி மக்களை, இந்து மதத்தைச் சேர்ந்த சாதி இந்துக்கள் அனுமதிக்காததை உணர்ந்து கொண்ட அம்பேத்கர் அவர்கள் 1935 இல் இந்தப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறார். இந்து மதத்தில் இருப்பதனால் பயன் ஏதும் இல்லை; எனவே, இந்து மதத்திலிருந்து விடுபடுவது ஒன்றுதான் இதற்கு ஒரே தீர்வு என்கிற முடிவுக்கு இந்தப போராட்டம் அவரை இட்டுச் செல்கிறது.
 
பட்டியல் சாதி மக்களுக்கான இயக்கம்

சுதந்திர தொழிலாளர் கட்சி. இதுதான் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் சாதி மக்களுக்காக நடத்தி வந்த இயக்கம்.
 
இன்றும்கூட பட்டியல் சாதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் எண்ணற்ற கட்சிகள் செயல்படுகின்றன. சில கட்சிகளில் சாதி இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் கூட அங்கம் வகிக்கின்றனர்.
 
கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் பட்டியல் சாதி மக்களில் கணிசமானோர் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் தீண்டாமை என்னும் விசயத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடந்து விடவில்லை.
 
இன்றும் கூட இந்தியாவின் பல்வேறு கோவில்களில் தீண்டத்தகாத சாதி மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கோவில் நுழைவு உரிமை கேட்டுப் போராடினால், நிலைமையைப் பொறுத்து, ஒன்று கோவிலை இழுத்து மூடுகிறார்கள் அல்லது தாக்கி விரட்டுகிறார்கள் அல்லது எங்களுக்கு இனி இந்தக் கோவிலே வேண்டாம், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சாதி இந்துக்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
 
தொடரும் தீண்டாமை

இதன் மூலம் அவர்கள் உணர்த்துவது ஒன்றுதான். தீண்டாமையை நாங்கள் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்பதைத்தான். தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் தீண்டாமையே நாடெங்கிலும் கோலோச்சுகிறது.
 
காலாராம் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்து முடிந்து நூறாம் ஆண்டு நெருங்கவிருக்கிறது. தீண்டாமை எனும் அநீதிக்கு எதிராக, சாதி இந்துக்களில் உள்ள முற்போக்காளர்களையும் ஜனநாயகச் சக்திகளையும் இணைத்துக் கொண்டு போராடுகின்ற, பட்டியல் சாதி மக்களுக்கான தலைவர்கள் தேவைப்படுகின்ற காலகட்டத்தில்தான் பட்டியல் சாதி மக்களிடையே பிழைப்புவாதிகளும் காரியவாதிகளும் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு முடிவு கட்டவில்லை என்றால் தீண்டாமை ஒருக்காலும் முடிவுக்கு வராது.
 
ஊரான்

ஆதாரம்: அம்பேத்கர் நூல் தொகுப்பு: 35
 

Tuesday, 23 August 2011

சூரியன் நிச்சயம் கிழக்கே உதிக்க மாட்டான்!

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் வெளியே செல்லமாட்டேன் என்று அன்னா அசாரே போல சாமான்யன் அடம் பிடித்தால் அனுமதிப்பார்களா? சிறையிலேயே பேட்டி கொடுப்பதும், அதை வீடியோக்களில் பதிவு செய்வதும், அதன் பிறகு ஊடகங்களில் வெளியிடுவதும் போன்ற வசதிகள் பிறருக்கும் நீட்டிக்கப்படுமா? சட்டத்தையே மீறிவிட்டு, நல்ல சட்டம் கொண்டு வருவேன் என்பதுதான் காந்தி காட்டிய வழியா?

டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் 250 பேர், பதினைந்து டிரக்குகள், ஆறு எர்த்மூவர்களைக் கொண்டு இரவோடு இரவாக ராம்லீலா மைதானத்தை அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் அன்னா அசாரேவுக்காக அரசாங்கமே சீர் செய்து சுத்தப்படுத்தி கொடுத்ததைப் போல பிறருடைய போராட்டங்களுக்கும் செய்து தருவார்களா?

ஜன்லோக்பால்காரர்களின் போராட்ட வடிவங்கள் கிரேசி மோகனின் நாடக பாணி நகைச்சுவையையும், மானாட மயிலாட பாணி கோரியோ கிராபர்களின் நடன வடிவமைப்பையும் விஞ்சுகின்றனவா?  மேற்கண்ட போராட்ட வடிவங்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள்,  கிரிக்கெட்டில் இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது நடத்தப்பட்ட அணிவகுப்புகள் மற்றும் இந்தியா பொக்ரானில் அணு குண்டு சோதனை செய்த போது நடத்தப்பட்ட கொண்டாட்டங்களிலிருந்து இரவலாகப் பெறப்பட்டவைகளா?

பட்டினியால் வாடிய மக்களின் பசியாற்ற ஏசுநாதர் மீன்களை பல்கிப் பெருக்கியது போல தற்போது நடத்தப்படும் போராட்டத்தில் ஆயிரங்களில் கூடுவோரை பல லட்சங்களில் ஊடகங்கள் பல்கிப் பெருக்கிக் காட்டுவதேன்?



"இந்தியாதான் அன்னா அன்னாதான் இந்தியா!"

நர்மதா அணைக்காக அப்புறப்படுத்தப்பட்டு வாழ வழியற்று, நிற்கக்கூட இடமின்றி போராடுவோர் மக்களில்லையா? போபால் விஷவாயுப் படுகொலையில் பாதிக்கப்பட்டோர் மக்களில்லையா? நொய்டாவிலும்- புனேயிலும்-ஹரியானாவிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் தங்களுக்கு வாழ்வளித்த நிலத்தை, உரிய நட்டஈடு இன்றி கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மக்களில்லையா? மராட்டியத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் மக்களில்லையா?

பழங்குடிகளுக்கு எதிராக நடத்தப்படும் காட்டு வேட்டைக்கு எதிராகவோ, சிங்கூர்-நந்திகிராம்-லால்கர்-போஸ்கோ போன்ற இடங்களிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போராடுவோர் இந்தியர்கள் இல்லையா? கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தில் நியாயம் ஏதும் இல்லையா?   "இந்தியாதான் அன்னா அன்னாதான் இந்தியா" என முழங்குவோரும் மேற்கண்ட மக்கள் போராட்டங்களை ஏன் கண்டு கொள்ளவில்லை?

அன்னா ஒரு சனாதனியா?

ஒவ்வொரு கிராமத்திலும் சேவைத் தொழில் செய்யக்கூடிய தோட்டி- வண்ணான்-அம்மட்டன் என சாதிக்கொருவன் கண்டிப்பாக இருக்கவேண்டும்;  இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொழில் அடிப்படையிலான வேலைகளையும் கடமைகளையும் முறையாகச் செய்தால் கிராமம் தன்னிறைவு பெறும் என்பது காந்தியின் கொள்கை; இப்படித்தான் அன்னா அசாரேவின் சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் கடைபிடிக்கப்படுகிறதாமே? 

முன்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிய இளைஞர்கள்தான் அன்னா அசாரேவிற்குப் பின்னால் அணிதிரள்கிறார்களாமே? ஜன்லோக்பால் மசோதாவுக்கான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4 00 000 டாலர் மதிப்புக்கு போர்டு பவுண்டேசன் மூலம் பணம் வந்ததாமே?  ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சில கார்பரேட் நிறுவனங்கள் தற்போது நடக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு நிதி உதவி செய்கின்றனவாமே?

அன்னா அசாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ்சோடு தொடர்பு இருந்ததாமே? மராட்டியத்தின் ராஜ்தாக்கரேவையும், குஜராத்தின் மோடியையும் அன்னா அசாரே புகழ்ந்தாராமே? அப்படியானால் இவரது போராட்டத்திற்கு சங்பரிவாரத்தின் ஆதரவு உண்டா? எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்க்கும் போது ராம்தேவ், ரவிசங்கர் போன்ற பிரபல சாமியார்களும் மற்ற பிற ஏனைய சாமியார்களும் அன்னாவுக்குப் பின்னால் நிற்பது ஏன்?

அரசியல்வாதிகள்தான் ஊழல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் அன்னா அசாரேவின் ஆட்கள் ஏன் பிரச்சாரம் செய்யவில்லை?

இன்று ஜன்லோக்பாலுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட திரைத்துறையினர் அரசுக்கு முறையான கணக்குக் காண்பித்து அதற்குரிய வரியை அரசுக்கு செலுத்துகிறார்களா? இதுவரை செய்யவில்லை என்றால் லோக்பால் வந்த பிறகு இனி செய்வார்கள் என்று நம்பலாமா? தற்போது நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வோரில் அரசு அதிகாரிகள் யாரேனும் இருக்கிறார்களா? அப்படி இருப்பவர்கள் இதுவரை இலஞ்ச ஊழலே செய்யாதவர்களா?

இப்படி அன்னா அசாரேவின் போராட்டப் பின்புலம் குறித்து கேள்விகள் நீள்கின்றன........

மேற்கண்டவாறு கேள்விகள் கேட்பது போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சி மற்றும் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு கேட்கப்பகிறது என்றால் கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றனவே?

ஊழல் ஒரு சட்டப் பிரச்சனையா?

ஜன்லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக அன்னா அசாரே நடத்தும் போராட்டம் இரண்டாவது சுதந்திரப் போராட்டமா? ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் ஊழல் ஒழிக்கப்பட்டுவிடுமா? ஏற்கனவே இருக்கின்ற ஊழல் ஒழிப்புச் சட்டத்தாலோ அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தாலோ ஊழலை ஏன் ஒழிக்க முடியவில்லை? அந்தச் சட்டங்கள் குறைபாடுடையவைகளா? அவற்றில் மேலும் திருத்தம் செய்தால் ஊழல் ஒழிந்துவிடுமா? நடுவண் அரசு கொண்டு வர உத்தேசித்திருக்கும் லோக்பால் மசோதா குறைபாடுடையதா? அன்னா அசாரேவின் ஜன்லோக்பால் எந்த வகையில் நடுவண் அரசின் லோக்பாலைவிட சிறந்தது? 

தற்போது உள்ள அமைப்பில் ஊழலுக்கு எதிராகக் கொடுக்கப்படும் புகார்கள் மீது காவல்துறையும், நடுவன் புலனாய்வுப் பிரிவும் நேர்மையாகச் செயல்படவில்லையா? லோக்பால் மசோதா நிறைவேறிய பிறகு அதை அமுல்படுத்த அமைக்கப்படும் அமைப்பின் அதிகாரம் என்ன? இந்த அமைப்பும் நேர்மையாகச் செயல்படும் என்பதற்கு உத்தரவாதம் உண்டா? இந்த அமைப்பு தவறு செய்தால் அதை யார் தட்டிக் கேட்பது? தன் பெண்ணின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவதற்காகக் கலால் பிரிவுக்கு மாற்றல் வேண்டி தவம் இருக்கும் காவலர்களும், இலஞ்ச ஒழிப்பு துறை மற்றும் நடுவண் புலனாய்வுப் பிரிவினர் மீதே ஊழல் புகார்களும் மலிந்துவிட்ட இந்நாட்டில் லோக்பால் அமைப்பு மட்டும் தவறு செய்யாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

கீழமட்ட அரசு அலுவலர் முதல் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறையினர், பிரதம மந்திரி என அனைவரையும் லோக்பாலின் கீழ் கொண்டுவரும் போது கார்பரேட் நிறுவனங்கள், ஊடகத்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அன்னா அசாரேவின் ஜன்லோக்பால் மசோதாவின் கீழ் ஏன் கொணடு வரப்படவில்லை? டாடா, ரிலையன்ஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்களுக்கு ஊழலில் தொடர்பில்லையா? ஒரு பிட்டு செய்தி போடுவதற்கே கவரை எதிர்பார்க்கும் ஊடகத்துறையினருக்கு ஊழல் என்றால் என்னவென்றே தெரியாதா? உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கில் பணம் திரட்டும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நேர்மையான முறையில்தான் நிதி திரட்டுகின்றனவா? இவர்கள் தவறே செய்வதில்லையா? 

ஊழல் என்பது வெறும் சட்டப் பிரச்சனையா? அல்லது நிதி முறைகேடு மற்றும் இலஞ்சம் மட்டுமா? அல்லது ஏற்றத்தாழ்வான நமது சமூக அமைப்பில் அன்றாடம் நடக்கும் பணத்தின் மூலமானதொரு சமூகப் பரிமாற்றமா? பெரு நகரங்களில் போலிசாருக்கு கப்பம் கட்டிவிட்டு நடைபாதைகளில் விற்பனை செய்து வரும் நடைபாதை அல்லது தரைக்கடை விற்பனையாளர்கள் இனி லோக்பால் பிரதிநிதிகளுக்கும் சேர்த்துக் கப்பம் கட்ட வேண்டுமா?

கிராம அலுவலரில் தொடங்கி நடுவண் அரசின் துறைச் செயலாளர்கள் வரை அவர்கள் இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை தண்டிக்க நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இலஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் இலஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் வழி இருந்தும் இவர்களின் இலஞ்ச ஊழலை ஏன் ஒழிக்க முடியவில்லை?

ஜன்லோக்பால் வந்து விட்டால் மேல்மட்ட ஊழல்கள் மட்டும் ஒழிக்கப்படுமா? அல்லது கிராம நிர்வாக அலுவலர் வரை நடக்கும் இலஞ்ச ஊழலும் சேர்ந்தே ஒழிக்கப்படுமா? குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழில் தொடங்கி வளர்ந்து வாழ்ந்து மடிந்த பிறகு பெறப்படும் இறப்புச் சான்றிதழ் பெறும் வரை கொட்டப்படும் இலஞ்சம் இனி இருக்காதா?

லோக்பால் வந்துவிட்டால் இனி இலஞ்ச ஒழிப்புச் சட்டமும் அரசு நடத்தை விதிகளில் இலஞ்சம் ஊழல் தொடர்பான விதிகளும் தேவைதானா? அவைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா? லோக்பாலை அமுல்படுத்த தனி அமைப்பு கொண்டுவந்த பிறகு இலஞ்ச ஒழிப்புத் துறை தேவைதானா? அதைக் கலைத்து விடலாமா?

லோக்பால் மசோதா மூலம் ஒருசிலர் கையில் அதிகாரத்தைக் குவிப்பது அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்கச் சொன்ன மகாத்மா காந்தியின் சிந்தனைக்கு எதிரானதில்லையா? காந்திய சிந்தனைக்கு எதிரான கருத்தை முன்வைத்துக் கொண்டே தன்னை காந்தியவாதி என்று அன்னா அசாரே சொல்லிக் கொள்வது சரிதானா?

ஜன்லோக்பால் ஒரு கருப்புச் சட்டமா?

ஜன்லோக்பால் மூலம் இலஞ்ச ஊழல் பேர்வழிகள் மீது மட்டும்தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது தனக்குப் பிடிக்காத நேர்மையான ஒரு அதிகாரியை பழிவாங்க நினைத்தால் லோக்பாலின் கீழ் மாட்டிவிட்டு அவரை அலைக்கழிக்க விட்டு வேடிக்கை பார்க்கலாமா? அப்படியானால் இது ஒரு கருப்பு மசோதாவாகவும் செயல்படுமா? அப்படி நேரும் போது அரசு ஊழியர்கள் அதிகாரிக்கு ஆதரவாகவும் லோக்பாலுக்கு எதிராகவும் போராட மாட்டார்களா?

லோக்பாலின் கீழ் புகார் கொடுத்தால் புகார் கொடுப்பவர் தன்னைப் பற்றி தெரிவிக்க வேண்டியதில்லை என்றால் புகாரின் நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாகிறதே? புகார் ஏதும் இன்றி நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்பானதா இது? ஒரு வேளை புகார் கொடுத்தவர் இன்னார்தான் என்று ஏதோ ஒரு வழியில் வெளியே அதாவது ஊழலில் மாட்டிக் கொண்டவனுக்குத் தெரிந்துவிட்டால் புகார் கொடுத்தவனை யார் காப்பாற்றுவார்கள்? இன்று அப்படித்தானே ஊழலைக் கண்டுபிடித்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்,  அதுபோல நடக்காது என்பதற்கு லோக்பாலில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளதா?

இலஞ்ச ஊழல் என்பது தனிநபர் சார்ந்த ஒன்றா அல்லது சமூகம் சார்ந்த ஒன்றா? தனிநபர்கள் திருந்திவிட்டால் இலஞ்ச ஊழல் ஒழிந்து விடுமா? அல்லது திருந்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டால் இலஞ்ச ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடுமா?

ஊழலின் ஊற்றுக் கண் எது? ஊற்றுக் கண்ணை அடைக்காமல் மேல் பூச்சு மட்டும் பூசிவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா? அதிகார வர்க்கமும் முதலாளிகளும்தான் ஊழலின் ஊற்றுக் கண் என்கிறார்களே, அப்படியானால் முதலாளிகள் இருக்கும் வரை ஊழலும் இருக்குமா?

இப்படி ஏராளாமான ஐயங்கள் எழுப்பப்பட்டாலும் அதற்குரிய பதில் கிடைக்காவிட்டாலும் எப்படியோ ஊழல் ஒழிய வேண்டும் என்றல்லவா வேடிக்கை பார்க்கும் பாமரன் நம்புகிறான். இந்த நம்பிக்கை நாளை வீண் போகுமானால் யார் மீது நம்பிக்கைத் துரோக வழக்குத் தொடுப்பது?

இப்படி ஐயங்கள் நீள்கின்றன..... ஜன்லோக்பால் வந்து விட்டால் ஊழல் உண்மையில் ஒழிக்கப்பட்டு விடுமா? அப்படி நிகழ்ந்து விட்டால் ஞாயிறு நிச்சயம் கிழக்கே உதிக்க மாட்டான்.


தொடர்புடைய பதிவுகள்:
தேன் எடுத்தவன் புறங்கையை நக்கமாட்டானா?
http://hooraan.blogspot.com/2011/05/blog-post_14.html
காணிக்கை இல்லை என்றால் காரியம் கைகூடாது!
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_13.html
யாருக்கும் வெட்கமில்லை!
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_24.html
பம்புசெட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு: ரூ.200 கோடி ...
http://hooraan.blogspot.com/2011/02/200.html