தேர்தல் திருவிழா முடிந்து விட்டது. பொதுவாக கோவில் திருவிழா என்றால் தெய்வங்களுக்கு மக்கள் விழா எடுப்பார்கள். ஆனால் இந்தத் திருவிழாவில் மக்கள்தான் தெய்வங்களாக அவதாரம் எடுத்துள்ளார்கள். இந்தத் தெய்வங்களை வணங்கி விழா எடுத்தவர்கள் அரசியல் பக்தர்கள்.
கோவில்களில் ஆரத்தி எடுக்கும் வரை கைகூப்பினால் போதும். ஆரத்தியை தொட்டு விட்டு முடித்துக் கொள்ளலாம். ஆனால் தேர்தல் திருவிழாவில் காலையில் கூப்பிய கைகளை இரவு பத்து மணிக்குத்தான் எடுக்க முடியும்.
கோவில்களில் மனதுக்குள்ளேயே தெய்வத்திடம் முறையிட்டால் போதும். ஆனால் இங்கே உரத்த குரலில்தான் முறையிட வேண்டும். பக்தனால் முடியவில்லை என்றால் 'ஏஜெண்டுகளை'வைத்துக் கொண்டு முறையிடலாம். கோவில்களில் முறையீடு 'சீரியசாக' இருக்கும். இங்கே 'காமெடி' கலந்து முறையிட்டால்தான் முறையீடு சுலபமாக தெய்வங்களைச் சென்றடையும்.
கோவில்களில் தெய்வங்கள் கருவறைக்குள் இருக்கும். பக்தர்கள் வெளியே நிற்பார்கள். தேர்தல் திருவிழாவில் ஆசி வழங்கும் (வாக்களிக்கும்)தெய்வங்கள் தெருவில் நிற்கவேண்டும். பக்தர்கள் வாகனங்களில் வருவார்கள்.
கோவில்களில் மூலவர் ஒருவர்தான். பாதுகாப்பிற்கு முனியன், கருப்பசாமி, ஆஞ்சனேயன் என ஒருசில பாதுகாவலர்கள் மூலவரைச் சுற்றியோ அல்லது எல்லையிலோ வேல் கம்போடு நிற்பார்கள். இங்கே பக்தர்கள் (வேட்பாளர்கள்) ஒரு சிலரே. தெய்வங்களோ (தொகுதி வாக்காளர்கள்) இலட்சக் கணக்கில். அங்கே தெய்வத்துக்கு பாதுகாப்பு. இங்கே பக்தர்களுக்கு பாதுகாப்பு.
அன்றாடம் வழிபடும் தெய்வங்களுக்கு கோவில்கள் ஏராளம். பக்தன் விரும்பினால் புதிதாக ஒரு கோவிலை கட்டிக் கொள்ளலாம். கோவிலை யார் கட்டினாலும் ஆகம விதிகளே அங்கு ஆட்சி செய்யும். அதன்படி கீழ் சாதியினர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படும். ஆனால் தேர்தல் திருவிழாக் கோவில்களில் சாதியைக் காட்டி உள்ளே செல்வதை தடுக்க முடியாது. உள்ளே செல்ல அடையாள அட்டை போதுமானது.
தமிழக தேர்தல் திருவிழாவில்:
மொத்தக் கோவில்கள்: 234
மொத்த பக்தர்கள்: 2 748
ஆண் பக்தர்கள் : 2612
பெண் பக்தர்கள் : 136
மொத்த தெய்வங்கள் : 4 71 16 687
ஆண் தெய்வங்கள் : 2 37 04 802
பெண் தெய்வங்கள் : 2 34 10 716
இதர தெய்வங்கள்: 1 169
ஆசி வழங்கும் கருவறை மையங்கள் : 54 314
கோவிலில் பக்தர்கள் தனக்காக மட்டுமன்றி எல்லோருக்காகவும் வேண்டிக் கொள்வார்கள். இங்கே தேர்தல் திருவிழாவில் பக்தன் தனக்காக வேண்டிக்கொள்ளும் அதே நேரத்தில் பிற பக்தர்களை ஒழித்துக் கட்டவும் வேண்டிக் கொள்கிறார்கள்.
கோவிலுக்குச் செல்லும் பக்தன் இறுதி வரை பக்தன்தான். ஆனால் தேர்தல் திருவிழாவில் பக்தனுக்கு தெய்வங்களின் ஆசி கிடைத்துவிட்டால் ஆண்டவனாக மாற முடியும். நேற்றுவரை தெய்வங்களாக இருந்த வாக்காளர்கள் இனி பக்தர்களாகத்தான் இருக்க வேண்டும். அடுத்தத் திருவிழா வரும்வரை காத்திருக்க வேண்டும்.
கோவில்களில் தெய்வத்தின் ஆசி பெற ஐயர் மூலம் முறையிட வேண்டும். அவர்தான் அங்கே ஆண்டவனின் 'ஏஜெண்ட்'. தேர்தல் திருவிழாவிலும் ஏஜெண்டுகள் உண்டு. இவர்கள் அல்லக்கைகள் எனப்படும் பக்தர்களின் 'ஏஜெண்டுகள்'.
கோவில்களிலும் காணிக்கை செலுத்தினால்தான் காரியம் நடக்கும். காணிக்கையை உண்டியலிலோ ஆராதனைத் தட்டிலோ போடலாம். தட்டிலே போட்டால் ஐயருக்கு மகிழ்ச்சி. 'அப்பிளிகேஷன்' உடனே 'பார்வாடு' செய்யப்படும். உண்டியலில் போட்டால் மனு கிடப்பில் போடப்படும்.
தேர்தல் திருவிழாவிலும் இப்பொழுதெல்லாம் தெய்வங்களுக்கு காணிக்கை உண்டு. அல்லக்கை 'ஏஜெண்டுகளே' இங்கே காணிக்கையை எடுத்து வருவார்கள். கோவில்களில் காணிக்கையை வெளிப்படையாக செலுத்தலாம். ஆனால் இங்கே இரவில் அதுவும் மின் வெட்டு இருட்டில்தான் காணிக்கை செலுத்த வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி காணிக்கை 200 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டதாம். அல்லக்கைகள் தங்களின் திறமைக்கேற்ப ஐப்பதோ நூறோ 'கமிஷனாக' எடுத்துக் கொண்டு மீதியைத்தான் தெய்வங்களிடம் சேர்த்தார்களாம். மன வருத்தத்தோடு ஒரு பெண் தெய்வம் என்னிட்ம் புலம்பித் தீர்த்தது.
அங்கோ காணிக்கை செலுத்துவோரின் பெயர் கல்வெட்டில் பதிக்கப்படும். இங்கோ காணிக்கை செலுத்தினால் கம்பி எண்ண வேண்டும்.
அங்கே தீர்த்தம் தெளித்து ஆசி வழங்குவார்கள். இங்கே பொத்தானை அழுத்தி ஆசி வழங்கவேணடும். அங்கே ஆசி பெற்ற பக்தன் ஆயுள் முழுக்க பக்தன்தான். இங்கே ஆசி பெற்ற பக்தன் இனி ஆண்டவனாய் அவதாரம் எடுப்பான். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவன்தான் ஆண்டவன். நேற்று வரை தெங்வமாய் இருந்த வாக்காளன் இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பக்தனாய் இருக்க வேண்டும். இதுதான் இங்கே ஆகம (ஜனநாயக தர்மம்) விதி.
கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆசி பெறுவார்கள். இங்கே தெய்வங்கள் நீண்ட வரிசையில் நின்று ஆசி வழங்கினார்கள்.
ஒரு இளம் பெண் தெய்வம் தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி அளித்தது. இப்பொழுதுதான் முதன் முறையாக ஆசி வழங்கினாராம். ஆசி வழங்கும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியதில் பெரு மகிழ்ச்சி அடைந்தாராம். ஆதே நேரத்தில் இந்த ஆசி வழங்கும் செயல் 'த்திரிலிங்காக' இருந்ததாம். பயமாகவும் இருந்ததாம். இருக்காதா பின்ன. ஆசி வழங்கும் அதிகாரம் தனக்குக் கிடைத்திருக்கிறது என்றால் சும்மாவா?
ஆண்டவன் எப்பொழுதும் கருவறையிலேயே இருப்பதால் கோவில் திறந்திருந்தால் ஐயர் மூலமும், பூட்டியிருந்தால் நேரிடையாகவும் ஆசி கேட்டு முறையிடலாம். ஆனால் இங்கே ஆண்டவனாய் அவதாரம் எடுத்தவர்களை பார்க்கவே முடியாது. இந்த ஆண்டவன் சென்னைக்கும், டெல்லிக்கும் சொகுசு வாகனங்களில் பறந்து கொண்டிருப்பான். அல்லக்கைகள் மனது வைத்தால்தான் ஆண்டவனை தரிசித்து ஆசி பெற முடியும்.
தெய்வத்தின் (வாக்காளன்) ஆசி கிடைக்க பக்தன் (வேட்பாளர்) செலுத்தும் காணிக்கை; வேண்டுதல் நிறைவேற கோவில் தெய்வத்துக்கு செலுத்தும் காணிக்கை;காரியம் கைகூட இனி புதிதாய் அவதாரம் எடுக்கும் ஆண்டவனுக்கும் காணிக்கை.
தெய்வம் நின்னுக்கொல்லும்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.இங்கே ஒரு தெய்வம் எழுதியே கொன்னுடுச்சி.
ReplyDeleteவருக!I-Tek அவர்களே!
ReplyDeleteஎன்னை தெய்வம் ஆக்கிவிட்டீர்களே!
நான் இங்கே பக்தனும் இல்லை. ஆண்டவனும் இல்லை்.
வருக!அருள் அவர்களே!கருத்துகளைப் பகிரலாமே!
ReplyDeleteவித்தியாசமான நடையில், தேர்தல் அறிக்கை. அருமை.
ReplyDeleteநன்றி சித்ரா அவர்களே!
ReplyDeleteகோவிலில் தெய்வம் பக்தன் போடும் காசில்தான் உயிர் வாழ்கிறது. இங்கு தெய்வங்கள் வழங்கிய ஆசியில் தெய்வமமான தெய்வங்களும் பக்தனின் காசில் தான் சுகபோக வாழ்க்கை வாழ்கிறது. ஆனால் பக்தர்கள், தான் போடும் காசில்தான் தெய்வங்கள் உயிர் வாழ்கின்றன என்ற உண்மை தெரியாமலேயே ஆயிரம் ரூபாயை பறிகொடுத்துவிட்டு ஐந்து ரூபா லட்டை வாங்கி கொண்டு தெய்வம் அருள்பாலித்து விட்டதாக நினைத்து கொள்கிறார்கள். பக்தனுக்கு உண்மை தெரியும் போது தெய்வங்கள் தெருவில் வீசி எரியபடுவார்கள். அதுவரை கோவிலில் கடவுள் பேரை சொல்லி அல்லகைகளும், தேர்தலின் பின் அல்லக்கைகளை(அரசியல்வாதிகள் ) கைகாட்டிவிட்டு உண்மை தெய்வங்களும் (முதலாளிகள் ) பக்தன் பணத்தை சூறையாடி கொண்டிருப்பார்கள். அது அறியாத பக்தனும் பிரசாதத்திற்கு கையேந்தி நிற்பார்கள்.
ReplyDeleteசிறந்த கருத்துப் பதிவு.நன்றி பாஸ்கர் அவர்களே!
ReplyDeleteதெய்வம் நின்னுக்கொல்லும்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.இங்கே ஒரு தெய்வம் எழுதியே கொன்னுடுச்சி.
ReplyDeleteI-Tek said...
:)))))))))))
வருக!கக்கு - மாணிக்கம் அவர்களே!
ReplyDeleteஆள்காட்டி விரலால் கண்ணைக் குத்திக்கொள்!
ReplyDelete***
ஆள்காட்டி விரலெனும்
அற்புத விளக்கே,
ஈன்று புறந்தந்த
தாயைச் சுட்டுவாய்.
சந்தேகம் ஏதுமின்றி
தந்தையைச் சுட்டுவாய்.
தோள் சுமக்கும்
தோழனைச் சுட்டுவாய்,
ஆசிரியனைச் சுட்டுவாய்.
ஆறு கடல் நாடு சுற்றி
வானவில்லை வளைத்தெடுத்து
வார்த்தைகளால் கோட்டையிட்டு,
ஆதலினால் காதல் செய்து,
அருமைக் காதலைச் சுட்டுவாய்.
காதலீன்ற
மகவையும் சுட்டுவாய்.
சுடு நெருப்பைச் சுட்டி
சூதும் வாதும் சுட்டி
ஏதிது தீதிது
எனவெலா முணர்ந்து
யாதொன்றையும் புரிந்து
இது அது எனது உனது என
தரம் பார்த்து பிரித்துச் சுட்டி…
யாது எது
ஏது என
கேள்விக் கணைகள் மூட்டி
நான் எனது எனக்கே என
தத்தமது உடைமை காட்டி,
வானிது வளியிது
ஊனிது உயிரிது
அறிவிது ஆற்றலிதுவென
அறிவியல் சுட்டி
யாவும் உணர்ந்து நீ
நல்லன தீயன
வல்லன வலியன
இன்னா இனிய
இன்ன பிற
எத்தனையோ சுட்டுவாய்.
சரிதான்…
நீ ஒரு சுட்டியான
சுட்டிதான்.
நீ திசைகாட்டும் பக்கமே
கண்கள் பாயும்.
கால்கள் நடக்கும்.
இதயம் துடிக்கும்.
நீ சுட்டியவனைத்தும்
சரியெனப் படும்வரை.
உன் விரலில்
சுரணை இருக்கிறது எனச்
சொல்லப்படும் வரை.
ஆனால் இன்று…
திருடர்களுக்குள்
உயர்ந்தவனும்
தாழ்ந்தவனும் உண்டென
ஒருவனைச் சுட்டினாய்.
நீ
வாக்கிட்ட குற்றத்துக்காக
உன் முகத்தில்
ஒரழியாக் கரும்புள்ளி.
உன் கரும்புள்ளிச் சுட்டல்
சாகசங்கள் செய்யும்.
உன் விரலால் உன் கண்கள்
குத்தப்பட்டு குருடாக்கப்படுவாய்.
பிறகு தான் காட்சிகள் மாறும்.
மலையைப் பிடுங்கி
காது குடைந்துகொள்வார்கள்
தண்டகாரண்ய முதலாளிகள்.
நாட்டையே
தோப்புக்கரணம் போடவைப்பார்கள்
அமெரிக்கப் பொருளாதாரவாதிகள்.
ஜன நாயகத்தையே
நிர்ணயிப்பார்கள்
அம்பானிக் கும்பல்கள்.
அட ஆள்காட்டி விரலே…
அவர்களை எங்களுக்கு
ஆள்காட்ட மறுத்து
அவர்களின்
தாள் படிந்தும் வணங்குகிறாய்.
இன்று நீ சுட்டியாதால்
உனக்கு கிடக்கப்போகும்
இலவசக் கோவணங்கள்.
நாளை உன் சோற்றில் மண்.
ஊழலையும் சுரண்டலையும்
கண்ணால் கண்டு
சொன்னபோதும்
சுட்ட மறுத்த விரலே…
உணவைத் திருடி
நீரைத் திருடி,
நிலத்தைத் சுருட்டி
உன் உருவையே
குலைத்துவிட்ட உண்மைகளை
நீ தெரிந்தும்
சுட்ட மறுப்பதேன்?
உண்மைகள் தெரிந்தும்
சுட்ட மறுப்பதால்
இனி நீ
சுட்டும் விரலல்ல…
மூளையிலிருந்து
நரம்புகள் துண்டிக்கப்பட்டு
பக்கவாதம் பீடித்த விரல்.
அறியாமை எனும்
புற்றுனோய் பிடித்த விரல்.
சாதி மத பேதப் புண்களால்
கடவுளெனும் சீழ் கோத்து
சாகக் கிடக்கும் விரல்.
கரங்களால் உழைப்பைத் தந்து
வியர்வையால் உலகம் காக்கும்
மற்ற விரல்களோடு
சேர்ந்து பிழைத்துக்கொள்.
அவ்வுழைப்பின் வலி
உனக்கும் சுரணை கொடுக்கும்!