Thursday, August 22, 2024

பிரபலம் எனும் பாழுங்கிணறு: ஜாக்கிரதை!

பொதுவுடமைக் கோட்பாட்டிற்குக் குறைவான எது ஒன்றும், ஒன்று அது சீர்திருத்தத்திற்கு  வித்திடும் அல்லது பிழைப்புவாதத்திற்கு இட்டுச் செல்லும். திரைத்துறை மூலம் கிடைக்கும் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொண்டோ அல்லது சாதி - மதப் பின்புலத்தைப் பயன்படுத்திக் கொண்டோ கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் என்று பேசிக்கொண்டு சிலர் அரசியலுக்குள் நுழைவார்கள்.

பிழைப்பதற்கு இதுவரை எந்தக் கட்சியிலும் பொறுப்பு கிடைக்காமல் வெளியில் காத்திருந்த புதிய முகங்களும், மற்றபிற கட்சிகளில் நீண்ட காலமாக இருந்தும், பொறுப்பும் பிழைக்க வாய்ப்பும் கிடைக்காதவர்களுமே முதலில் இத்தகையப் புதிய கட்சிகளை நோக்கிப் படையெடுப்பார்கள்


பெரும்பாலும் இவர்களே புதிய கட்சியின் கிளை, வட்ட, ஒன்றிய, மாவட்டப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள். பாமர மக்களும் பிரபலம் எனும் கவர்ச்சியில் மயங்கி பாழுங்கிணற்றை நோக்கி நகருவார்கள்.

அரசு ஒப்பந்தங்களை எடுத்து காசு பார்ப்பது, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட உரிமங்களைப் பெறுவது, தொழில் தொடங்குகிறேன் என்ற பெயரில் வங்கிகளில் இருந்து சுலபமாகக் கடன் பெற்று பிறகு பட்டை நாமம் போடுவது, அரசு புறம்போக்கு நிலம் மற்றும் கேட்பாரற்றுக் கிடக்கும் தனியார் நிலங்களை ஆக்கிரமிப்பது அல்லது அபகரிப்பது, லட்சங்களிலும் கோடிகளிலும் புரளும் கொடுக்கல் வாங்கல்களில் நீதி அரசர்களாக அவதாரம் எடுப்பது உள்ளிட்டத் தொழில்களைச் செய்வதற்கு மேற்கண்ட கிளை-வட்ட-ஒன்றிய-மாவட்டப் பொறுப்புகளே இவர்களுக்கு ஆயுதங்களாகப் பயன்படுகின்றன.  

எங்கேயாவது எக்குத் தப்பாக சிக்கிக்கொண்டால் அதே பொறுப்புகள்தான் இவர்களுக்குக் கேடயங்களாகவும் பயன்படுகின்றன

கஞ்சா-போதைப் பொருள் கடத்தல், பாலியல் அத்துமீறல்கள், தில்லுமுல்லு, மோசடி, ஏமாற்று, அடிதடி, மோதல், கொலை இவைதான் இவர்களின் வழமையானச் செயல்கள். நில மோசடி உள்ளிட்ட கட்டப் பஞ்சாயத்துகளில் நடைபெறும் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் - பொதுவுடமைக் கட்சிகளைத் தவிர்த்து - பிற சர்வ கட்சியைத் சேர்ந்தவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

ஒரு சில ஆண்டுகள் கழித்து இத்தகையப் புதிய கட்சிகள், பாழும் கிணறுதான் என்பதை பட்டுணர்ந்து, மக்கள் இவர்களை நிராகரிக்கும் பொழுது, ஏதோ ஒரு பின்புலத்தைக் கொண்டு மீண்டும் ஒருவர் வருவார்.  வரலாறுகளை விட எதிர்காலமே மக்களுக்கு முக்கியம் என்பதால், மீண்டும் முதலில் இருந்து தொடங்குவார்கள்.

பொதுவுடைமை பேசுவோர் மத்தியில் ஒரு சில குறைகள் இருந்தாலும் அவர்கள் மட்டும்தான் மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம்

களைகளுக்கு உரம் போட்டு வளர்த்தால், பொதுவுடமை எனும் பயிர்கள் எப்படி வளரும்? களைகளை அப்புறப்படுத்தி பயிர்களை 
அரவணைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்குமல்லவோ?

பிரபலம் எனும் பாழுங்கிணறு: ஜாக்கிரதை!
 
 ஊரான்

No comments:

Post a Comment