Tuesday, 15 April 2014

தேர்தல் களம்-3: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!


நமது வேட்பாளர் சொல்வது போல இந்தியாவிலும் தேர்தலில் வெற்றி பெற்றுச் செல்பவர்கள் முற்றிலும் சுயேச்சையானவர்களாக, கட்டு திட்டம் ஏதுமற்றவர்களாகத்தானே இருக்கிறார்கள்.

வேட்பாளர்கள் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமது காலைத் தொட்டு இன்று வாக்கு சேகரிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றுச் சென்ற பிறகு இவர்களை சந்திக்க நம்மால் முடிகிறதா? அல்லக்கை(அடியாட்கள்)கள் மனது வைத்தால் மட்டுமே சந்திக்க முடியும். வெற்றி பெற்றவர்களை சந்திப்பதற்கே நாம் சில ஆயிரங்களை செலவிட நேரிடுகிறது.

போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்கிற ஒரே காரணத்திற்காகவே பல ஆண்டுகள் கட்சியில் கொட்டை போட்டவர்கள் அடுத்த நொடியில் வேறு கட்சிக்குத் தாவி அங்கே வேட்பாளராக அறிமுகமாகிறார்கள். இல்லையேல் ஜஸ்வந்த்சிங் போல பார்மரில் சுயேச்சையாகிறார்கள். அதுவும் இயலாத போது தி.மு..வின் ரித்தீஷ் போல .தி.மு. விற்குத் தாவுகிறார்கள்.

போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும் வெற்றி பெறமுடியாது எனத் தெரிந்தால்தோற்போம் எனத் தெரிந்த பிறகும், எதற்காக இருக்கிற கை காசை இழக்க வேண்டும்? அரசியலில்செட்டில்ஆகமுடியாது என்றாலும் வாழ்க்கையில்செட்டில்ஆகிவிடலாம்!” எனக் கணக்குப் போட்டு எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம் கோடிகளை கைமாற்றிக் கொண்டு வேட்பு மனுவையே செல்லாக் காசாக்கும் பா.. வின் நீலகிரி குருமூர்த்திகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்!

பல ஆண்டு காலம் அரசியலுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாக சவடால் அடிக்கும் பேர்வழிகள் தங்களின் அரசியல் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொள்ளவதற்காக ஒட்டியிருந்த கோவணத்தையும் அவிழ்த்துப் போட்டுவிட்டு அம்மணமாய் அலையும் நாஞ்சில் சம்பத்துகள், பண்ருட்டி ராமச்சந்திரன்கள், பரிதி இளம்வழுதிகளும் நம்மிடையேதானே உலாவுகிறார்கள்.

ஆளும் கட்சியில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு மந்திரி பதவியோ அல்லது எதிர்பார்த்த வேறு பதவிகளோ கிடைக்கவில்லை என்றால் எதிர்கட்சிக்குத் தாவி ஆட்சியையே கலைக்க முயல்கிறார்கள். ஆளும் கட்சியில் நீண்ட காலம் பதவியில் இருந்தும் சம்பாதிக்க வழி இல்லை என்றால் ஆட்சிக்கு எதிராக சதிவேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

எதிர்க்கட்சியில் வெற்றி பெற்றவர்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. “வெற்றி பெற்று என்ன பயனைக் கண்டோம்?” என பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு கேப்டனுக்கே கல்தா கொடுத்து விட்டுதாயே உன்னடி சரணம்!” என அருண்பாண்டியன்களைப் போல சரணாகதியடைகிறார்கள்.

சேதுக்கால்வாயை அடையாளம் காட்டியதே தான்தான் என நேற்றுவரை மார் தட்டிவிட்டு இன்று அது சுற்றுச் சூழலுக்குக் கேடானது என அறிவியல் பெருமக்கள் கூறுவதாக நா கூசாமல் வைகோவால் பேசமுடிகிறது. ஒரு நடிகனை அரசில்வாதியாக பார்ப்பது மானக்கேடு என நேற்றுவரை பம்மிவிட்டு இன்று தனது மகனுக்காக அதே நடிகனோடு ராமதாசால் கூட்டணி அமைக்க முடிகிறது. இப்படி அரசியலில் அந்தர் பல்டி அடிக்காத வாக்கு சீட்டு அரசியல்வாதிகள் – இடதுசாரிகள் உள்ளிட்டு – யாரேனும் உண்டா?

ஜொசோதாபென் என்ற பெண்ணுடன் நடந்த திருமணத்தை மோடி இது வரை ஏன் மறைத்தார்? இப்போது தனக்கு திருமணம் ஆனதை ஏன் ஒப்புக்கொண்டார்? தன்னை நம்பி வந்தவரையே மறந்த போடியிடம் இந்தியாவை ஒப்படைத்தால் என்னவாகும்?” என எதிர்தரப்பினர் சரமாரி கேள்விகள் எழுப்புகின்றனர். மோடியை கேள்வி கேட்கும் யோக்கியவான்களே! கருணாநிதியைப் பாருங்கள்!” என அவரது மூன்று மனைவிகள் மற்றும் வாரிசுகளை எடுத்துக் காட்டுகிறார்கள்.

இவர்கள் பிரபலமான தலைவர்கள் என்பதால் இவர்களின் அந்தரங்கம்வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது. ஆனால், வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகளின் வட்ட - ஒன்றியமாவட்ட - மாநில நிர்வாகிகளின் அந்தரங்க வாழ்க்கை பெரிய தலைவர்களின் அந்தரங்க வாழ்க்கையைவிட மிகக் கேவலமாக இருப்பினும் அவை அவ்வளவாக பேசப்படுவிதில்லை.

இப்படிப்பட்டவர்கள்தான் வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகளில் - அது மாநிலக் கட்சியாக இருப்பினும், தேசியக் கட்சியாக இருப்பினும், சாதிமதக் கட்சிகளாக இருப்பினும் - நிறைந்திருக்கிறார்கள். பரிசுத்தவான்களாக அவதாரம் எடுக்கும் புதிய கட்சிகளின் மக்கள் பிரதிநிகளும் வெகுவிரையில் இன்ன பிற அரசியல்வாதிகளைப் போலவே அம்பலப்பட்டு நிற்கின்றனர். தேர்தலில் போட்டியிட 'சீட்' வாங்கித் தருவற்கு பணம் கேட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அருணா சிங், அசோக்குமார் ஆகிய இரு தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் அங்கம் வகிக்கும் கட்சியில் குறைந்த பட்ச ஜனநாயகத்தையாவது கடை பிடிக்கிறார்களா? கட்சிக்குள் பெரும்பான்மையினரின் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும் என்பதும் மாற்று கருத்து இருப்பினும் பெரும்பான்மையினரின் முடிவையே செயல்படுத்த வேண்டும் என்பதும் ஜனநாயகத்தின் மிக அடிப்படையான அம்சம். ஆனால் வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகளில் இத்தகைய ஜனநாயகம் கடைபிடிக்கப்படுகிறதா? உரிய தகுதி இல்லை என்றாலும் எதிர்கால நலனைக் (தன்நலன்) கருதி தங்களது வாரிசுகளை அரசியலில் நுழைப்பதும், அரசியிலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பண பலம், சாதி - மத பின்புலம், அடியாள் பலம்  என சகல விதமான ஜனநாயக விரோத வழிமுறைகள் அனைத்தையும் கையாள்கின்றனர்.

கட்டு திட்டம் ஏதுமற்ற இத்தகைய நபர்களை, வாக்காளர்களாகிய நாம்  எப்படி கட்டுப்படுத்துவது? இது குறித்து நமது வேட்பாளர் என்ன சொல்கிறார் என்பதை இனி பார்க்கலாம்.

தொடரும்……..

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

 


Sunday, 13 April 2014

தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!



எதைச் சொன்னால் வெற்றிபெற முடியுமே அதை மட்டுமே வேட்பாளர்கள் வாக்குறுதிகளாத் தருகிறார்கள். ஆனால் நமது தேவைகளோ நமது வாழ்நிலைமைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுபவை. .இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றுச் செல்பவர்களிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோருவதா?  அல்லது நமக்குத் தேவையானதை நிறைவேற்றக் கோருவதா? இதில் நாம் எதைக் கோருவது?

இந்தக் கேள்விகளுக்கு விடை காணாமல் வரும் 16 வது மக்களவைத் தேர்தலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாது. இதற்கான விடையை ஒரு வேட்பாளரே சொல்கிறார். அவர் என்ன சொல்கிறார் என இனி பார்ப்போம்.

அரங்கத்தினுள் வாக்காளர்கள் நிறைந்திருக்கிறார்கள். வேட்பாளர் மேடை ஏறுகிறார். வாக்காளர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் அவரை வரவேற்கிறார்கள். சில நிமிடங்கள் ஆரவாரம் நீடிக்கிறது. மேடைக்கு முன்னாலிருந்தவர்கள் அனைவரும் எழுந்து அவரை வாழ்த்துகின்றனர். “மகத்தான தலைவர் நீடூழி வாழ்க!” என வாழ்த்தொலிகள் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.

“நன்றாகப் பேசுங்கள் என தலைவர் வேறு சொல்லி விட்டார். எதைப் பற்றி, எப்படி நான் பேசுவது? உப்புச் சப்பில்லாமல் எதைப் பற்றியாவது, ஏதாவது பேசலாம் என்பது உண்மைதான் பேச்சைக் கேட்பவர்களை அது குஷிப்படுத்தலாம் என்பது உண்மைதான். இத்தகையப் பேச்சுகளை பேசக்கூடிய சண்டப் பிரசண்டர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் நான் இப்படி பேசக்கூடிய சண்டப் பிரசண்டர் அல்ல”

இப்படித் தொடங்குகிறது அவரது பேச்சு. மேலும் அவர் தொடர்ந்து பேசுகிறார்.

“நான் ஒன்றும் பிரமாதமாக பேசிவிட முடியாது. இருந்தாலும் நான் என்ன செய்யட்டும்? மேடையில் ஏறிவிட்டேன். ஒரு சில விசயங்களையாவது பேசுகிறேன்.

வாக்காளர்களாகிய நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்காக முதற் கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். தேர்தல் ஆணையம் என்னை வேட்பாளராக பதிவு செய்துள்ளது. என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நம்பிக்கை என்றால் என்ன என்பதை நானறிவேன். இது என் மீது புதிய கடமைகளை - கூடுதலான கடமைகளை, புதிய பொறுப்புகளை - கூடுதலான பொறுப்புகளை அது சுமத்தும் என்பது இயற்கையே. நல்லது. கடமைகளை தட்டிக் கழிப்புது நம்மிடையே வழக்கமில்லை. நான் இந்தக் கடமைகளையும் பொறுப்புகளையும் மனப்பூர்வமாக ஏற்கிறேன்.
 
என் பங்குக்கு உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். என் மீது நீங்கள் தாராளமாக நம்பிக்கை வைக்கலாம். மக்களுக்கான கடமைகளை, தொழிலாளர் வர்க்கத்துக்கான கடமைகளை, விவசாயிகளுக்கான கடமைகளை என்னால் ஆற்ற முடியும். இதை நீங்கள் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் நம்பலாம்.”

குண்டுகல்யாணம் முதல் குஷ்பூ வரை உப்புச் சப்பில்லாமல் பேசி மக்களை குஷிப்படுத்தக் கூடிய ஏராளமான சண்டப் பிரசண்டர்களை நினைவு படுத்துகிறது இவரது பேச்சு.

மேலும் அவர் தொடர்கிறார்.

“ஜனநாயக நாடுகள் என்று கூறப்படும் நாடுகளில் அனைவரும் பங்கேற்கும் தேர்தல் முறை இருக்கின்றது; அங்கு தேர்தல்களும் நடை பெறுகின்றன. ஆனால், எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அங்கெல்லாம் தேர்தல்கள் நடக்கின்றன? முதலாளிகள், நிலப்பிரபுக்கள் இன்னும் பிற முதலாளித்துவ திமிங்கலங்கள் வாக்காளர்கள் மீது நிர்ப்பந்தம் செலுத்தும் சூழ்நிலைகளில் அங்கே தேர்தல்கள் நடக்கின்றன.”

நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களை இவரது பேச்சு நினைவு படுத்துகிறதல்லவா?.

வாக்காளர்களை வாழ்த்திவிட்டு அவர் தனது பேச்சை தொடர்கிறார்.

“உங்களுக்கு சில அறிவுரைகள் கூற விரும்பகிறேன். இவை வாக்காளர்களுக்கான ஒரு வேட்பாளரின் அறிவுரைகளாகும். முதலாளித்துவ நாடுகளில் ஒரு விசித்திரமான நிலையை நீங்கள் காணலாம். வாக்காளர்களுக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் இடையில் உள்ள விநோதமான உறவுகளைப் பற்றியே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

தேர்தல்கள் நடக்கும் வரையில் வேட்பாளர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? வாக்காளர்கள் மீது அப்படியே பாச மழை பொழிகிறார்கள்; அவர்களிடம் இச்சகம் பேசுகிறார்கள்; விசுவாசமாக இருப்போமென சத்தியம் செய்கிறார்கள்; எல்லா வகையான வாக்குறுதிகளையும் அள்ளித் தெளிக்கிறார்கள். அப்போது, எல்லாம் எப்படித் தெரிகிறது என்றால் வாக்காளர்களின் தயவில்தான் வேட்பாளர்கள் முழுமையாக இருப்பது போலத் தெரிகிறது.

ஆனால், தேர்தல்கள் முடிந்து விட்டால் போதும்; வேட்பாளர் வெற்றி பெற்று விட்டால் போதும், வாக்காளர்களுக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் இடையிலான உறவுகள் தலைகீழாக மாறிவிடுகின்றன. பிரதிநிதிகள் வாக்காளர்களை சார்ந்திருப்பதற்கு மாறாக அவர்கள் முற்றிலும் சுயேச்சையானவர்களாகி விடுகின்றனர். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது அடுத்த தேர்தல் வரும் வரையில், பிரதிநிதிகள் வாக்காளர்களிடமிருந்து சுதந்திரமாக விடுபட்டவர்களாக, மக்களுடன் எந்த ஒட்டுறவுமற்றவர்களாக இருக்கின்றனர்.
  
வெற்றி பெற்றவர் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவலாம்; சரியான பாதையிலிருந்து விலகி பழைமையானதொரு பாதையை மேற்கொள்ளலாம்; எந்த விதமான அரசில் சதிகளிலும்  அவர் ஈடுபடலாம்; எந்த ஒரு குணநலமுமற்றவராக மாறி கெட்டுக் குட்டிச் சுவராகலாம்; அவர் விருப்பம் போல எத்தனை முறை வேண்டுமானாலும் குட்டிக் கரணம் அடிக்கலாம். ஒரே வார்த்தையில் சொல்வதானால், அவர் முற்றிலும் சுயேச்சையானவர்; கட்டு திட்டம் ஏதுமற்றவர்".

இந்தியாவில் நாம் பார்த்து பழகிப் போன வேட்பாளர்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இந்தப் பேச்சாளர்.


தொடரும்……..

தொடர்புடைய பதிவுகள்:


தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

Saturday, 12 April 2014

தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!

1947 க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகள் தனியாகவும் சில ஆண்டுகள் மாநில கட்சிகளோடு கூட்டணி அமைத்தும், பாரதிய ஜனதா கட்சி பிற உதிரிக் கட்சிகளோடு கூட்டணி அமைத்தும், பல வண்ணக் கூட்டணி அமைத்து ஜனதாக் கட்சியும் இந்தியாவை ஆண்டுள்ளன.  இடது சாரிகள் நேரடியாக நடுவண் ஆட்சியல் பங்கு கொள்ளவில்லை என்றாலும் சில சமயம் மறைமுகமாக காங்கிரஸ் ஆட்சிக்கும் மற்றும் நேரடியாக ஜனதா கட்சி ஆட்சிக்கும் ஆதரவளித்துள்ளனர்.
இவை தவிர காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் அவர்களின் செல்வாக்குக்கு ஏற்ப மாநிலங்களில் மாறி மாறி ஆட்சி நடத்தி உள்ளன. புதிதாகத் தோன்றியுள்ள ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் சில காலமே ஆட்சி நடத்தினாலும் தற்போது அக்கட்சியில் சேர்பவர்கள் ஒன்று ஏற்கனவே பிற கட்சிகளில் பதவி வகித்தவர்களாகவோ அல்லது அதிகாரிகளாக ஆட்சி நிர்வாகத்தில் அங்கம் வகித்தவர்களாகவோதான் உள்ளனர். ஆட்சி சுகத்தை ருசிக்காத தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கும் இது பொருந்தும்.
சுருக்கமாகச் சொன்னால் 16 வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்தியாவை ஆண்டவர்கள்தான். இவர்கள் மாறி மாறி ஆட்சி நடத்தினாலும் 66 ஆண்டுகளுக்குப் பிறகும் குடிக்கத் தண்ணீர் கேட்கிறார்கள் மக்கள். குடிதண்ணீர் கூட கொடுக்க வக்கற்றவர்கள்தான் தாங்கள் வெற்றி பெற்றால் மக்களுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யப் போவதாக கதை அளக்கின்றனர்.
திருப்பூருக்குச் சென்றால் அத்திக்கடவு - அவினாசி என்கிறார்கள். வேலூருக்குச் சென்றால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த்திட்டம் என்கிறார்கள். கரூருக்குச் சென்றால் வெற்றிலை வாரியம் என்கிறார்கள். தெற்கே சென்றால் தென்னை வாரியம் என்கிறார்கள். அங்கே பாலம் - இங்கே பாலம் என்றும், இதோ தொழிற்சாலை அதோ தொழிற்சாலை என்றும் இப்படி ஊர் ஊருக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக வாரி வழங்குகிறார்கள். இந்தக் கூத்தை கடந்த 66 ஆண்டுகளாக நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைவிட ஜனநாயகக் கடமையாற்ற வாக்காளர் என்ற முறையில் நாமும் இந்தக் கூத்தின் கதாபாத்திரமாகவும் ஆகிவிடுகிறோம்.
கல்வி, வேலை வாய்ப்பு, குடி தண்ணீர், சாலை வசதி, மின்சாரம், மருத்துவம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாமல் நாம் தவித்து வருகிறோம். அடிப்படைத் தேவைகளான உணவு - உடை - வசிப்பிடம் கூட இன்றி வாழும் நிலைதானே இன்னமும் இந்தியாவில் நீடிக்கிறது. கிராமங்களிலிருந்து சென்னை திருப்பூர் போன்ற நகரங்களுக்கும், தமிழ் நாட்டிலிருந்து கர்நாடகாவுக்கும், வட மாநிலங்களிலிருந்து தமிழகம் - கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும், பீகாரிலிருந்து மராட்டியத்திற்கும் என மக்கள் பஞ்சம் பிழைக்க செல்வதைப் போல அலை அலையாய் இந்தியாவெங்கும் படை எடுக்கிறார்களே! ஏன் இந்த நிலை?

சொந்த மண்ணில் மக்கள் உயிர் வாழவே வழியில்லாத போது இந்தியாவை வல்லரசாக்குவோம் எனவும், 8% வளர்ச்சியை எட்டியே தீருவோம் எனவும் உதார்விடுகின்றன வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகள். நாம் எதைக் கேட்கிறோமோ அதைச் செய்ய வக்கில்லை; ஆனால் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுகளாக வாரி இறைக்க மட்டும் இவர்கள் தயங்குவதில்லை. இவர்கள் வெற்றி பெற்றுச் சென்ற பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் ஏன் நிறைவேற்றவில்லை? என்று இவர்களை கேள்வி கேட்க முடியுமா? இல்லை நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள் என்று இவர்கள் மீது குற்ற வழக்காவது தொடர முடியுமா?
தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயகக் கடமை என்பதை மட்டும் நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாக்களிக்காமல் இருந்து விட்டால் நாம் நமது கடமையிலிருந்து தவறி விட்டதாக கருதும் அளவுக்கு கடமை உணர்ச்சியோடு இருக்கிறோம். ஆனால் நமது தேவைகளை பூர்த்தி செய்வதுதான் தங்களது கடமை என வெற்றி பெற்றுச் செல்பவர்கள் எவரும் கருதுவதில்லையே, இது அவர்கள் தங்களது ஜனநாயகக் கடமையிலிருந்து தவறியதாகாதா என நாம் கேட்பதில்லையே ஏன்?
சரி! நாம் என்னதான் செய்வது? தேர்தலில் வாக்களிப்பதா? கூடாதா? தேர்தலில் வாக்களிப்பதோடு நமது கடமை முடிந்ததா? தேர்தலுக்குப் பிறகு நமக்கு கடமைகள் ஏதும் கிடையாதா?
எதைச் சொன்னால் வெற்றிபெற முடியுமே அதை மட்டுமே வேட்பாளர்கள் வாக்குறுதிகளாத் தருகிறார்கள். ஆனால் நமது தேவைகளோ நமது வாழ் நிலைமைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுபவை. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றுச் செல்பவர்களிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோருவதா? அல்லது நமக்குத் தேவையானதை நிறைவேற்றக் கோருவதா? இதில் நாம் எதைக் கோருவது?